பிற

நீச்சல் குளத்தில் இனவெறி: அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரம் …

கட்டுரையாளர்: பிரிட் பென்னட் ( BRITT BENNETT)

தமிழில் : கபிலன். இல

1948′ ம் ஆண்டு, தனது சகாக்களான தீக்ஸிக்ராட்ஸ் கட்சியினர் இடையே உரையாற்றுகையில் அக்கட்சியின் தலைவர் ஸ்ட்ரோம் தர்மாண்ட் இவ்வாறு குறிப்பிட்டார், “அமெரிக்க ராணுவம் தெற்கத்திய வெள்ளையர்களான எங்களை, கருப்பின மக்களை ‘எங்கள் திரையரங்கினுள்ளோ, எங்கள் நீச்சல் குளத்தினுள்ளோ, எங்கள் வீடுகளினுள்ளோ, எங்கள் தேவாலயங்-களினுள்ளோ’ அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது”.

((Dixiecrats- 1948ம் ஆண்டு “ஜனநாயக கட்சியில்” இருந்து பிரிந்து வந்த “மாகாண உரிமைக்களுக்கான ஜனநாயக கட்சியை” சார்ந்தவர்கள் தீக்ஸிக்ராட்ஸ். அவர்களது கொள்கை என அவர்கள் முன்வைப்பது “தெற்கத்தி-யவர்களின் வாழ்கை முறை” எனும் ஒற்றை வரி ஆகும். இனப்பாகுபாடுகளில் இருந்து அனைத்து வகையான பிரிவு வாதத்தையும் கொள்கையாக அமெரிக்க தெற்கு பகுதியில் முன்வைத்த கட்சி அது)

நீச்சல் குளங்களை இனப் பாகுபாடு- களுக்கான போர்க்களமாக அவர் எடுத்துக் கொண்டதை எண்ணி பலமுறை நான் பாதிப்பு அடைந்ததுண்டு, அத்தகையதோர் உணர்வு தேவை தேவையற்றிருந்த போதும். அனைத்துக்கும் பிறகு, பெரும் செல்வாக்கு செலுத்திய ஜிம் க்ரோவின்(Jim crow) பெரும்பாலான அடையாளங்களில் முக்கியமாக “நீர்”ம் அடக்கம், அது ஒதுக்கப்பட்ட நீரூற்றுக்கள், கழிப்பிடங்களிலிருந்து, நீச்சல்குளம் மற்றும் கடற்கரை வரை.

[* இந்நிலையில் “ஜிம் க்ரோ”(Jim crow) குறித்து தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது. உள்நாட்டு கலகத்தினால் உண்டான தெற்கத்திய அமெரிக்க புனரமைப்புக்கு பிறகு, தெற்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான் “ஜிம் க்ரோ” சட்டம். அனைத்து பொது இடங்களிலும் இன பாகுபாடு என்பதே இச்சட்டத்தின் ஒட்டுமொத்த சாராம்சம். 1890ல் தொடங்கி 1965 வரை தொடர்ந்த இச்சட்டம், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களுக்கான இடம் தனி என “தனித்தனி, ஆனால் சமம்” என்னும் சாரத்தில் வெள்ளை மேலாதிக்கத்தை அதிகாரபூர்வமாக அமெரிக்காவில் பிரகடனப்படுத்த வகை செய்தது*]

வெள்ளிக்கிழமையன்று, டெக்சாஸ் மாகாணத்தில் மெக்கின்னியில் நடைபெற்ற நீச்சல் குள கேளிக்கை பற்றிய youtube காணொளியில், ஓர் வெள்ளை போலிஸ் அதிகாரி, ஆர்ப்பரித்தும், அருகிலிருந்தோரை கைவிலங்கிட்டும், கருப்பின இளைஞர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி மிரட்டியும் காட்சித் தருகிறார். ஒரு கருப்பின பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார், பின் தரையில் தள்ளுகிறார். அந்த பெண் அலறிக் கூச்சலிடும்போது, தன் முழங்காலை அப்பெண்ணின் முதுகில் வைத்து அழுத்துகிறார். மெக்கின்னி (டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகரம்) காவல்துறையை பொருத்தவரை இச்செயல், “அங்கு வாழாத அல்லது அங்கு இருப்பதற்கு அனுமதியற்ற சில சிறார்களால் எழுந்த “தொந்தரவுகளை” தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.

11bennettWeb-articleLargeஇச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதும் அந்த அதிகாரி ராஜினாமா செய்துள்ளார், அவர்மேல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கேளிக்கை நிகழ்வில் கலந்துகொண்ட கருப்பின இளைஞர்கள் அங்குள்ள செய்தியாளர்களிடம் போலீஸ் வருவதற்கு முன்பான நிகழ்வுகளை விளக்கியுள்ளனர், அதில் அங்குள்ள வெள்ளையின பெரியவர்கள் அவர்களை அணுகி கருப்பின குழந்தைகள் குளங்களை விட்டு வெளியேறுமாறும், தங்களது “பிரிவு 8 குடியிருப்பிற்கே” திரும்பும்மாறும் கூறியதாக தெரிவித்தனர்.

[* பிரிவு 8 என்பது (Section 8) 1937ம் ஆண்டு அமலாக்கப் பட்ட அமெரிக்க ‘வீட்டுவசதி சட்டத்தின்’ ஓர் பகுதியாகும். மேலார்ந்த ரீதியில் “சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்றழைக்கப் படும் அமெரிக்கா “பணக்காரர்களின் நாடாக” தெரிந்தாலும் அங்கும் ஏழைகள் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்காக கொண்டு வரப்பட்டதே இந்தச் சட்டம். அதாவது வீடற்ற ஏழைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து சமூக பொருளாதார அமைப்பிலும் பின்தங்கி உள்ளவர்களுக்கான இருப்பிட உத்திரவாதமே இச்சட்டத்தின் நோக்கம். எளிமையாகச் சொன்னால், மானிய விலையில் அவர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தரப்படும் (இங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் பொது விநியோக திட்டத்தின் மூலம் தரப்படுவதைப் போல), அதற்கான மானியத்தை(மாத வாடகையில் அதிகப்படியான தொகையை) அரசு நேரடியாக நில உரிமையாளருக்கு அளித்து விடும். இதற்கு தகுந்த சான்றிதழ்களை (பின்தங்கிய பொருளாதார நிலையை நிறுவும் பொருட்டு) பெற்றுக் கொண்டு, வீட்டு வசதித் துறை & ஊரக வளர்ச்சி துறை-யிடம் சமர்பிக்க வேண்டும். பின் அவர்கள் தரும் ரசீதைக் கொண்டு அவர்கள் ஏற்கனவே வாடகையில் இருக்கும் வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ (குறைந்த வருமான வீட்டுவரி கடன் திட்டத்தின் அடிப்படையில்) குடிபுகலாம். தங்கள் வாழ்கை நிலை மேம்பட்ட பிறகு, பயனடைந்த மக்கள் இத்திட்டத்திலிருந்து விடுவித்து கொண்டு பிறருக்கு வழிவிடலாம். அமெரிக்க வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, சரியாக 2008’ம் ஆண்டு வெளியான கணக்குப்படி 41 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து இத்திட்டத்திற்கு முயன்று வருவதால் செயல்படுத்துதலில் தொய்வு ஏற்பட்டு உள்ளது எனும் குற்றச்சாட்டும் உண்டு*]

அதற்குப்பிறகு, இச்சம்பவம் பூதாகரமாகி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்ததும், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு முன் ஒட்டப்பட்டிருந்த, “எங்களைப் பாதுகாப்பாக வைத்து இருப்பதற்கு நன்றி மெக்கின்னி காவல்துறை” எனும் சுவரொட்டியின் படத்தை பகிர்ந்திருந்தார். ஆயுதம் ஏதுமற்ற இளைஞர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டும் அதிகாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு சமூகத்தில், நீச்சல் குளத்தில் குளிக்க வந்த கருப்பின குழந்தைகளால் என்ன ஆபத்து விளைந்துவிடப் போகிறது?
நமக்கு இன்னும், அல்லது என்றும் கூட, அந்தக் குறிப்பிட்ட நீச்சல் குளத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்று தெரியாதிருக்கலாம், ஆனால் நீச்சல் உடையிலிருந்த கருப்பின குழந்தைகள் மீதான அந்த அதிகாரியின் முரட்டுத்தனமான வெளிப்பாட்டால் நீருக்கான உரிமை மற்றும் அணுகல் யாருக்கு உரிமையுடையது; உரிமையற்றது என்பது குறித்து நடந்த நீண்ட நெடும் போராட்டத்தை நினைவுப் படுத்துகிறது.

இனவாதப் பதட்டத்துக்கான இடமாகவே நீர் நீண்டகாலமாக இருந்து வந்து இருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட நகரக் குளங்கள் பல கலவரங்களுக்கு வழிவகுத்துள்ளது, 1931’ல் நடந்ததைப் போல. அப்போது போலிஸ் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கம் போதே, நீரினுள் இருந்த பிட்ஸ்பர்க்கின் (அமெரிக்க பென்னிஸ்லேவேனியாவில் மாகாணத்தில் உள்ள மாநகரம்) கருப்பின ஆண், வெளியே இழுத்துவரப்பட்டு, வெள்ளையின நீந்துவோர்களால் அடிக்கப்பட்டான். மிஸிஸிப்பின் (அமெரிக்காவின் தென்பகுதி மாநிலம்) ஒருங்கிணைவுக்கு முந்தைய அடித்தளக் களமாக விளங்கியது ஒதுக்கப்பட்ட கடற்கரைகள் தான். நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த நடைபயணம் சென்றபோது, நீளக் குச்சிகளாலும், ஈயக் குழாய்களாலும், சங்கிலியாலும் ஓர் வெள்ளை கும்பலால் தாக்கப்பட்டனர். அந்த தாக்குதலை செய்தி நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும்போது “மிஸிஸிப்பி வரலாற்றில் நடந்த மிக மோசமான இனவாத கலகம்” எனப் பதிவு செய்தது.

ஒதுக்கப்பட்ட தண்ணீர் என்பது வெறும் தெற்கத்திய பாரம்பரியம் மட்டும் அல்ல. கலிஃபோர்னியாவில், “வெள்ளையர்க்கு மட்டுமே”யான உணவகங்களில், பள்ளிகளில், நீச்சல் வகுப்புகளில் மெக்ஸிக-அமெரிக்கர்களுக்கு இடமில்லை. 2010 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’கான நேர்காணலில், திரைப்பட இயக்குனர் சான்ரா ராபீ, ஆரஞ்சு நாடுகளின் சிவில் உரிமை களுக்கான வரலாற்றில் அவர் பார்த்த இடத்தில் இனப் பாகுபாடு எப்படி வளர்ந்து வருகிறது என விவரித்தார். “திங்கட்கிழமை என்பது மெக்ஸிகனுக்கானது”, அவர் தொடர்ந்தார். “அதற்கு அடுத்த நாள் ஒட்டுமொத்த குளமும் வடித்து, முழுவதுமாக சுத்தம் செய்யப்படும், எனவே அடுத்துவரும் வார நாட்களில் வெள்ளையர்கள் அதைப் பயன்படுத்த கூடியதாக இருக்கும்”.

“போட்டியிட்ட தண்ணீர்: நீச்சல் குளங்களின் சமூக வரலாறு” எனும் தன் நூலில் ஜெஃப் விட்சே, ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் குளங்களால் உருவாகும் இனவாத போக்குகள் இருவகையான பெரும் பதட்டத்தை உருவாக்குகிறது: ஒன்று மாசு, மற்றொன்று இனக்கலப்பு என வாதிடுகிறார். முன்பெல்லாம் குளங்கள் வர்க்க வேறுபாடுகளால் தான் பிரிக்கப் பட்டிருந்தன, அங்கே வெள்ளை நடுத்தர வர்க்கத்தினர் புலம்பெயர் ஏழை ஐரோப்பியர்களுடன் நீச்சலை தவிர்த்தனர், அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என்று அதற்கு காரணம் அளித்தனர். பெரும் புலம்பெயர்வுக்கு பிந்தைய சூழலில், இந்த “நோய்” பயம் இனவாதமாக மாற்றப்பட்டது, இப்போது அனைத்து சமூக அடுக்குகளை சேர்ந்த வெள்ளையர்களும், கருப்பினத்தவருடன் சேர்ந்து நீச்சலிட்டால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்தனர். பிட்ஸ்பர்க்கில் 1930’ஆம் ஆண்டு, நகர நீச்சல் குளத்தில் இருந்த கருப்பினத்தவர் மட்டும் வெளியேற்றப்பட்டு, அவர்கள் நோயற்றவற்றவர்கள் என நிரூபிக்கும் வகையில் “நலச் சான்றிதழ்” சமர்பிக்குமாறு ஆணையிடப்பட்டனர். வெள்ளையர்களுக்கு அந்த விதி பின்பற்றப்படவில்லை.

மேலும் இதுகுறித்து தன்னுடைய அழுத்தமான கவலையாக திரு. வில்ட்சே(எழுத்தாளர்) குறிப்பிட்டது, நகரக் குளங்களில் பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக நீச்சலடிக்க அனுமதிப்பது பற்றியதாக இருந்தது. “பொதுவாக வடகத்திய வெள்ளையர்கள்” அவர் எழுதினார். “வெள்ளைப் பெண்களுடன் அத்தகைய நெருக்கமான மற்றும் சிற்றின்ப பொது வெளியில் கருப்பின ஆண்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ளதால் எதிர்ப்பார்கள்”.

பால்டிமாரில் (மேரிலேன்ட் மாகாண நகரம்) பிரவுன்.V கல்விவாரிய ஆட்சியான 1954’ல், நகர வழக்குறைஞர், நீச்சல் குளங்களில் இன, நிறப் பாகுபாடு என்பது தொடரவேண்டும், ஏனெனில் “நீச்சல், ஆண்களையும் பெண்களையும் உடல்சார்ந்த, நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் உள்ளன” என வாதிட்டார். நீதிபதி ரோசல் தாம்சென் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், நகரக் குளங்களில் பாகுபாட்டை தொடரவும் அனுமதித்து உத்தரவிட்டார். அது குறித்து அவர் விளக்கமளிக்கையில், திரு. வில்ட்சே, நீச்சல் குளங்கள் அது வழங்கும் பயனடைவோரின் நேரிடை மற்றும் உடல்ரீதியான தொடர்புகளால், அது “கல்விக் கூடங்களை விடவும் முக்கியமானது” என்றும் குறிப்பிட்டார்.

வெள்ளை மேலாதிக்கவாத கற்பனைகளில், இந்தக் கவலைகள் எல்லாம் ஒற்றை எண்ணம் கொண்டவைதான். அது, பாகுபாடற்ற இன நெருக்கம் என்பது மாசுத்தன்மையுடையது. இனக்கலப்பு என்பது பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

நான் கடற்கரை நகரத்தில் தான் வளர்ந்தேன், ஆனால் என்னால் நீந்த முடியாது. என் பெற்றோர் என்னை சிறுவயதிலேயே நீச்சல் வகுப்பில் சேர்த்தனர். ஆனால் நான் அதில் ஒவ்வொரு பகுதியையும் வெறுத்தேன்: நீருக்குள் தலைமூழ்குவது ஆகட்டும், க்ளோரினை முகர்வது ஆகட்டும், தலைமுடியை நினைத்து கொள்வது ஆகட்டும். தண்ணீர் எனக்கு எப்போதும் இயற்கையானதும், அன்னியமானதுமாகவே இருந்திருக்கிறது, ஆபத்தான தாகவும், தவிர்க்க முடியததாகவும் கூட.

என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத்தான் சென்றாள், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த ஒதுக்கப்பட்ட ஜபக்கூட்டங்களில் தான் கலந்து கொண்டாள். அந்த ஒதுக்கப்பட்ட தேவாலயத்தின் மயானத்தில் வெள்ளை மற்றும் கருப்பின ஒதுக்கப்பட்ட பிரேதங்கள் சாம்பலாய் தூர்ந்து காய்ந்து கிடந்தது.
என் தாயும் ஒதுக்கப்பட்ட கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள். கட்டி எழுப்பப்பட்ட கட்டிடங்களை பிரிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் நீரை, சமுத்திரத்தை நீங்கள் எப்படி தனியாக பிரித்து ஒதுக்குவீர்கள்?

“இது முட்டாள்தனமானது”, என் தாயார் சொல்வார். “ஏனெனில் தண்ணீர் கலக்கும். எந்த திசையில் செல்ல வேண்டுமென்று தண்ணீரால் முடிவு செய்ய முடியாது”.

பல தசாப்தங்களாக, வெள்ளை இன நீந்துவோர் கருப்பின மக்களுடன் நீச்சல் குளத்தை பங்கிட்டுக் கொள்ள பயந்தனர், அது தங்களை நோய் பயக்கும் என்னும் கவலையை தெரிவித்தனர், இருந்தும் தங்களது உணவை சமைக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதியாகவும் கருப்பினத்தவரைத் தான் பணி அமர்த்தினர். திரு. தர்மாண்ட் (முன்னர் குறிப்பிட்ட “மாகாண உரிமைக்கான ஜனநாயக கட்சியின்” முக்கியமான தலைவர்) இனக்கலப்பை எதிர்த்து பேரணி சென்றார், ஆனால் அவரது மறைவு பிறகு தான் அவருக்கும் அவரது வீட்டில் வேலை செய்த கருப்பின பணிப் பெண்ணிற்கும் உண்டான உறவில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இனவாதத்துக்கும், நீருக்கும் இடையே ஓர் விநோத தொடர்பு தொடர்நது இருந்து வந்திருக்கிறது, பின்னது இதன் தவிர்க்க முடியாத நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நீர் என்னை தொடுகிறது, பின் உன்னை தொடுகிறது.

## New York Times (opinion) 10/06/15
நியுயார்க் டைம்ஸில் 10/06/15 வெளியான கட்டுரை
(http://mobile.nytimes.com/2015/06/10/opinion/who-gets-to-go-to-the-pool.html?)

Related Posts