இதழ்கள் இளைஞர் முழக்கம்

நீங்கள் கலகக்காரர்கள்… எப்போதும் கலகம் செய்யுங்கள் – பிடல் காஸ்ட்ரோ

2488de0e00000578-0-image-a-43_1420803385854

புரட்சிகரமான எனது இளைய தோழர்களே!

புரட்சிகரச் சிந்தனைகளுக்கு வித்திட்ட இந்த மாபெரும் ஹவானா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக நான் நுழைந்து 60 வருடங்கள் ஆகின்றன. எனது பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறேன். அது புதிய புதிய சிந்தனைகளை தேடித் திரிந்த காலம். அனைத்தையும் கற்றுக் கொள்ளும் ஆவலுடன் படித்த காலம். எதையும் கேள்வி கேட்கிற, கலகம் செய்கிற சிந்தனை கொளுந்து விட்டு எரிந்த காலம். எங்களது கண்கள் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் அவற்றை புரட்சிகரமான கனவுகள் என்று வர்ணிக்க முடியாது; ஆனால் உறுதியாகச் சொல்வேன், அநீதிக்கு எதிராக கோபாவேசம் பொங்கி எழுந்த கனவுகள்.

விளையாட்டில் தீவிரமாக இருந்தேன். மலையேறுவதில் தீவிரமாக இருந்தேன். சாரணர் இயக்கத்தில் தளபதி போல செயல்படும் வாய்ப்பு கிட்டியது. மேல்நிலைப்பள்ளியில் படித்த போது, நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். இன்றைக்கு உலகில் சிலர் எனக்கு நல்ல மதிப்பெண் வழங்க மறுக்கிறார்கள் (சிரிக்கிறார்). பிறகு, ஒரு புரட்சிகரப் படையின் கமாண்டர் ஆனேன். அந்தப் படையை உருவாக்கும் போது, கமாண்டர் என்பதைத் தவிர வேறில்லை. 82 பேர் கொண்ட அந்தச் சிறிய படைக்கு பல கமாண்டர்களை உருவாக்கினோம். அதனால் என்னை தலைமைக் கமாண்டர் என்றார்கள்.

1956 டிசம்பர் 2 ஆம் தேதி, கிராண்மா என்ற மகத்தான படகில் சாண்டியாகோவில் நாங்கள் வந்து இறங்கியபோது, அந்த மகத்தான கொரில்லா படையின் தலைமைக் கமாண்டர் என்ற பொறுப்பு என்னை சிலிர்க்க வைத்தது.
நினைத்துப் பார்க்கிறேன்….

இன்று உங்கள் முன்பு பேசும்போது, இதைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், வேறு ஒரு சிறந்த தருணம் கிடைக்காது என்றே கருதுகிறேன்.

சிறுவயதிலிருந்தே ஒரு கலகக்காரனாக வளரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப் பெற்றுவிட்டது. நான் ஒரு தொழில்முறைக் கலகக்காரனாகவே வளர்ந்திருக்கிறேன்.

கலகக்காரர் என்றாலே இலக்கு இல்லாதவர்கள் என்று பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கலகம் செய்வதற்கு பல காரணங்கள் வேண்டும். நான் கலகக்காரனாக வளர்ந்ததற்கு பல காரணங்கள்-பல லட்சியங்கள் இருந்தன. இன்று வரையிலும் நான் கலகக்காரனாகவே இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஏனென்றால், நான் கலகக்காரனாகவே தொடருவதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. போராட்டங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நேசிக்கும் இந்த நாட்டை, இந்த உலகை மேலும் மேலும் சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்காக கற்றுக் கொண்டே இருக்கிறேன். உலகமயம் ஆக்கப்பட்டுவிட்ட இந்த புவிக் கோளம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கி கால வெளியில் பயணப்படுகிறது என்பதை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.

இந்தப் பூவுலகம் அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. பூவுலகின் வரலாறு மிகமிகச் சிறியது. இப்பூவுலகில் உயிரினங்கள் நாகரீகமாக வாழக் கற்றுக் கொண்டதே அதிகபட்சம் சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி நடந்திருக்கிறது. இப்பூவுலகில் ஆண்டாண்டு காலமாக பிறந்து வளர்ந்த கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒரு துளி உயிரிதான் நாம்.
நான் ஏன் இப்போது இதைப்பற்றி பேசுகிறேன்? ஏனென்றால், பூவுலகின் உயிரிகள் உண்மையிலேயே மிகப்பெரும் அச்சுறுத்தலில் சிக்கியிருக்கின்றன. இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், பூவுலகின் ஒட்டுமொத்த உயிரிகளும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

நம்மைப் போன்ற உயிரினங்கள் இந்த உலகில் தொடர்ந்து வாழ முடியுமா என்ற பிரச்சனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் கூட விவாதித்திருக்கிறார்கள். ஒருநாள் இந்த உலகம் அழிந்து விடும் என்று அப்போதே அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில், மார்க்சிஸ்ட்டுகளும் அதைத்தான் சொல்கிறோம். மாமேதை ஏங்கெல்ஸ் எழுதிய ‘இயக்கவியல்’ என்ற நூலை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர் சொல்கிறார், ஒரு நாள் சூரியன் இருண்டு விடும்; இந்த உலகிற்கே ஒளியை அள்ளித்தரும் அந்த மாபெரும் நட்சத்திரம் நெருப்பாக எரிந்து கொண்டிருப்பதற்கு உதவுகிற எரிபொருள் தீர்ந்துவிட்டால் சூரியனே இருக்காது என்கிறார். என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது; அந்தக் கேள்வி உங்கள் மனதிலும் எழலாம்; வேறொரு சூரியக் குடும்பத்திற்கு நம் உயிரினங்கள் எல்லாம் இடம்பெயர்வதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா, சாத்தியமாகுமா? என்ற கேள்விதான் அது.

மார்க்சிஸ்ட்டுகளும் விஞ்ஞானிகளும் ஒரே பாதையில் சிந்திப்பார்கள். அதிலும் புரட்சியாளர்களான மார்க்சிஸ்ட்டுகள், விஞ்ஞானிகளை விட இன்னும் வேகமாகச் சிந்திப்பார்கள். வேறொரு சூரியக் குடும்பத்திற்கு நாம் எல்லோரும் இடம்பெயர முடியுமா; அந்த சூரியக் குடும்பத்தில் நம்மைப் போன்றே உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? இன்று நமக்கு எட்டியுள்ள அறிவின்படி, தற்போதைய நமது சூரியக் குடும்பத்திலிருந்து நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சூரியன் இருக்கிறது; அதற்கும் அப்பால் நூற்றுக்கணக்கில், பல நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சூரியன்கள் இருக்கின்றன. பிரபஞ்ச வெளி எல்லையற்றது. முடிவற்றது.
நாம் வாழும் பூமியில், ஒட்டுமொத்த உயிரினங்களின் வாழ்க்கை சில டிகிரிகள் வெப்பநிலைக்கு இடையில்தான் இருக்கிறது. புவியிலுள்ள நீரின் வெப்பநிலை சற்றுக் கூடினால் போதும்; அதுவே 60 டிகிரியாக கூடிவிட்டால், ஒட்டுமொத்த புவியின் உயிரினங்களும் வெந்து மடிவதற்கு 20 நொடிகளே அதிகம். வெப்பத்திற்கு பதிலாக குளிர் அதிகரித்தாலும் புவியின் மரணத்தை எவராலும் தடுக்க முடியாது.

உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் பேசுகிறோம். நமது பல்கலைக்கழகங்கள் எல்லாம் இதைப் பற்றி பேச வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு மாணவனும் இதைப் பேச வேண்டும். ஏனென்றால், நாம் அழிவதற்குப் பிறக்கவில்லை.

ஆனால், ஒவ்வொரு நாளும் அழிவை மட்டுமே முன்னிறுத்துகிற பயங்கரம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நான் படித்து வளர்ந்த காலக் கட்டத்தில் நடந்த யுத்தங்கள் சுமார் ஐந்து கோடி உயிர்களை பறித்துவிட்டன.

இந்த விசயங்களை ஒவ்வொரு நாளும் நான் இளைய தலைமுறையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பார்க்க வருகிற இளைஞர்களிடம், மாணவர்களிடம், மருத்துவர்களிடம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகிற்கு நிறைய மருத்துவர்கள் தேவை. நான் பெருமிதத்தோடு சொல்வேன். உலகிலேயே பிற நாடுகளுக்கு அதிகமான மருத்துவர்களை அனுப்பிய பெருமை கியூபாவைத் தவிர யாருக்கும் சொந்தமில்லை. வலியிலும் வேதனையிலும் துடிக்கிற மனிதர்களைக் காப்பதை விட இந்த சிறிய பூமியில் வேறு என்ன முக்கியம்?

ஆனால் இந்த சிறிய பூமி, மனிதர்கள் மீது அக்கறையற்று இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் ஒருபுறம் உழைத்துக் கொட்டுகிறார்கள்; அவர்களது உழைப்பினைச் சுரண்டி, மறுபுறம் டிரில்லியன் டாலர் கணக்கில் இராணுவ வியாபாரம் – மரண வியாபாரம் நடக்கிறது. போர்கள் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளன. லட்சக்கணக்கான மனிதர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கானவர்கள் கைகளையும், கால்களையும் இழந்து துடிக்கிறார்கள்.
நாம் இன்று வாழும் உலகம் இப்படித்தான் இருக்கிறது. அது முழுவதும் நல்லவிதமாக இல்லை. நீதி நிறைந்ததாக இல்லை. சுரண்டலும் கொடூரங்களும் நிறைந்ததாக உள்ளது. குழந்தைகளைக் கூட இந்த உலகம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

என்ன உலகம் இது? 70க்கும் மேற்பட்ட நாடுகள் காட்டுமிராண்டிகளின் பேரரசில் சிக்கித் தவிக்கின்றன. காட்டுமிராண்டிகளின் பேரரசு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆயுதங்களை நிலைநிறுத்தி, மனிதர்களைக் கொல்லும் தொழிற்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்கள் மனிதர்களின் உயிர்களைக் குடிக்க காத்திருக்கின்றன. இந்தப் போர் வெறியும், ஆயுத வெறியும் இன்னும் 30 வருடங்கள் நீடித்தால், உலகின் பெரும்பாலான உயிரிகள் அழிந்து விடும்.

இன்னும் 30 வருடங்களில் உலகம் முழுவதும் இருக்கிற பெட்ரோலிய வளம் கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு விடும். இன்றைய நிலையில், உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 80 சதவீதம் மூன்றாம் உலக நாடுகளிடம் உள்ளன.
காட்டுமிராண்டிகளின் பேரரசுக்கு (அமெரிக்கா) அந்த எண்ணெய் தேவைப்படுகிறது. காட்டுமிராண்டிகளின் பேரரசு அந்த எண்ணெய்க்காக மக்களைக் கொல்லத் தயங்காது. காட்டுமிராண்டிகளின் பேரரசிடமிருந்து, மனிதர்களை, இந்த பூமியை காப்பாற்ற வேண்டியுள்ளது.

நான் இன்னும் நிறைய உங்களிடம் பேச வேண்டும். இது 1945 அல்ல. 1950 களில் இதே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற போது, நிலவிய காலக்கட்டம் அல்ல. ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தருணம் முதல் எழுந்த கலக உணர்வு, நீதிக்காக உரத்துக் குரல் கொடுக்கும் உணர்வு ஒருபோதும் மாறவில்லை. உலகெங்கிலும் உள்ள கலகக்காரர்களிடம் அந்த உணர்வு மாறவில்லை.

நான் இன்னும் கலகக்காரனாகவே இருக்கிறேன். நான் இன்னும் புரட்சியாளனாகவே இருக்கிறேன். ஏனென்றால், நான் மார்க்சிஸ்ட்டாக இருக்கிறேன். நான் லெனினிஸ்ட்டாக இருக்கிறேன்.

நான் ஒருபோதும் தலை வணங்கமாட்டேன். கலகக்காரர்கள் ஒருபோதும் தலை வணங்கமாட்டார்கள்.
கலகக்காரர்கள், எந்தவொரு காட்டுமிராண்டிப் பேரரசும் இந்த உலகை அழிக்க, கோடானுகோடி மக்களை அழித்தொழிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

எனது இளம் தோழர்களே, நீங்கள் கலகக்காரர்கள். உலகை காக்க எப்போதும் கலகம் செய்யுங்கள்.
(2005 நவம்பர் 17 அன்று ஹவானா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய மிக நீண்ட உரையின் சுருக்கம்)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Related Posts