இதழ்கள் இளைஞர் முழக்கம்

நிலத்தையும், நீரையும் பாதுகாக்க கரம் கோர்ப்போம் – பெ.சண்முகம்

“வயிற்றுக்குச் சேறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” – என்ற மிகப்பெரும் சமூக கடமையை நிறைவேற்றி வருபவர்கள் விவசாயிகள் அதனால்தான் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று ஏற்றி போற்றி புகழப்படுகின்றனர். இந்திய நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் என்றும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உற்பத்தி திறன் மேம்படுத்தப் பட வேண்டும். விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது அவசியம். 2025 ஆம் ஆண்டில் நானூறு மில்லியன் டன் உணவு பொருள்கள் தேவைப்படும் என்று நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன?

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு காலத்தில் 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. வீட்டுமனை தொழிலுக்காக, கல்வி வளாகங்கள், தொழிற்சாலைகள், பெரும் மருத்துவ மனைகள் என பல்வேறு தேவைகளுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை நம்பியிருந்த விவசாயிகள் என்ன கதிக்கு ஆளானார்கள்? விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பறிபோய் விட்டது. வேளாண் உற்பத்தி குறைவு என பலவிதமான சரிசெய்ய முடியாத பாதிப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நஞ்சை நிலங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொருத்தவரை நெல்உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டால் வாங்குபவர் விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், நிலங்கலெல்லாம் கான்கீரிட் காடுகளாக மாறி, பெரும்பான்மையாக இருக்ககூடிய விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, வேளாண்விளை நிலங்கள் பாதுகாக்கப்படுவது முதல் தேவை.

மத்திய பி.ஜே.பி அரசு “வளர்ச்சி” என்ற பெயரில் விவசாயிகளுக்கு பரம்பரையாக சொந்தமான பட்டா நிலங்களையே அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே கையகப்படுத்தும் அடாவடித்தனமான சட்டத்தை, அவசரசட்டமாக நிறைவேற்றியதை நாடறியும். அனைத்து விவசாய சங்களின் ஒன்றுபட்ட தொடர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரமாக, சட்டமாக்கும் முயற்சியை தற்போது கைவிட்டுள்ளது மத்திய அரசு. நில அபகரிப்புக்கு எதிராக, விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒன்றுபட்ட போராட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். அன்னிய நாடுகள், மற்றும் கம்பெனிகளின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியும் அரசு மத்திய ஆட்சி பொறுப்பிலிருக்கும் நிலையில் இது அவசியம். மத்திய சட்டத்திற்கு பதிலாக மாநில அரசுகளே, நிலம் கையகப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பி.ஜே.பி. அரசு கூறிவிட்டது.

அரசுக்கு சொந்தமான 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களையே தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க தயாராக இருந்தது அ.தி.மு.க. அரசு. விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, அதை அப்போதையை அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. ஆனால் 1997 ஆம் ஆண்டே, நிலம் கையகப்படுத்துவதற்கான ஒரு சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களிலும், இச்சட்டத்தை பயன்படுத்தித்தான் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் “சிட்கோ” தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு கையகப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிலத்தை கையகப்படுத்துவது தடுத்து நிறுத்தப்பட்டு திட்டங்கள் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கில்லாத நிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசு திட்டமிட வேண்டும். ஆனால், தமிழக அரசுக்கு “நிலப் பயன்பாடு கொள்கை” என்பதே இல்லை.

நிலத்தை போலவே, விவசாயத்திற்கு அடிப்படையான தேவை பாசனம். வறட்சி, வெள்ளம் இரண்டையும் விவசாயிகள் எதிர்கொண்டுதான் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 925 மி.மீட்டர். சராசரியாக இந்த மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. கர்நாடக, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகம் தண்ணீரை பெறுகிறது.

தமிழ்நாட்டில், கூடுதலாக மழை பெய்யும் காலங்களில் அதை சேமித்து பாராமரித்து பயன்படுத்துவதில் தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகிற தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே கடுகளவும் அக்கறை செலுத்தவில்லை. ஆற்றுபாசனம் பிரதானமாக இருந்ததுமாறி 55 சதவீதம் நிலத்தடி நீர்ப்பாசனம் என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு இந்த கட்சிகளின் பொருப்பற்ற நடவடிக்கைகளே காரணம். தற்போது ஆண்டுதோறும், 260 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. கடந்த டிசம்பரில் பெய்த அபரிமிதமான மழை தனி.

நீர் நிலைகளை வேறு தேவைகளுக்கு வரன் முறையற்ற வகையில் பயன்படுத்தியது மாபெரும் தவறு. ஏரிகளில்ங அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலக வளாகங்கள், நீதிமன்றங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள். வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அரசே ஏரிகளை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்வது என மாபெரும் குற்றத்தை செய்தவர்கள் திமுக. அதிமுக ஆட்சியாளர்கள். 39,202 ஏரிகள் இருந்த தமிழகத்தில் இன்று மிச்சமிருக்கிற ஏரிகளில் கணக்குகள் கூட இல்லை.

“ நீரிலிருந்து பூமிக்கு வந்தோம்

நீரையும் பூமியையும் – அழித்துக்கொண்டிருக்கிறோம்”

கவிஞர் கௌதமனின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன

ஒரு பக்கம் நீர் நிலைகளை அழிப்பது மற்றொரு பக்கம் நிலத்தடி நீர்வளத்தை சூறையாடுவது, இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளிலிந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அண்டை மாநிலங்களுடன் சண்டை போடுவது என்பதுதான் இந்த ஆட்சியாளர்களின் நடைமுறையாக இருக்கின்றது.

தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் காலங்களில் சேமித்து வைப்பதற்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். காவிரியில் கதவணைகள் அமைப்பது, காட்டாறுகளில் தடுப்பணைகள் உருவாக்குவது, ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்துவது, ஏற்கனவே உள்ள நீர்த்தேக்கங்களை தூர் வாரி முழுகொள்ளளவு திறனுள்ளதாக மாற்றுவது, மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நிலத்தடி நீர்வளத்தை பெருக்குவதற்கு திட்டமிடுதல் என அடுக்கடுக்கான பணிகளை செய்வதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்கமுடியும். இது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். நதி நீர்ப் பிரச்சனைகளில், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீதி மன்ற தீர்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் நமது மாநிலத்திலுள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மிச்சமிருக்கும் நீர் நிலைகளையாவது பாதுகாக்கப்பட அரசை வற்புறுத்தும் வகையில், வெகு மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். நீர் அனைத்து உயிர்களுக்கும் தேவையானது “ நீரின்றி அமையாது உலகு” என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

நிலத்தையும் – நீரையும் பாதுகாக்க, அக்கறையுள்ள அனைவரும் கரம் கோர்ப்போம்.

 

-பெ.சண்முகம்

Related Posts