ஜூன் 2015 புதிய ஆசிரியன்

நியாயங்களோ பொதுவானது..!

– எஸ்.வி. வேணுகோபாலன்

நவீன தாராளமய காலத்தில் நீதிமன்றமும் ஒரு தினுசாகத்தான் தீர்ப்பு வழங்கும் என்பதை எந்தத் தத்துவமும் அறியாத பாமர மக்களே புரிந்து கொள்கிறார்கள்.

மாளிகை வாசலில் ஆடிக் காற்றும்கூட வாலைக் குழைக்குதடா, பக்தியில் மரியாதை செய்யுதடா, நம்ம மண்ணுக் குடிசையைக் கண்டுப்புட்டா மட்டும் மாடாக முட்டுமடா, கூரையை மல்லாக்கத் தள்ளுதடா…

என்ற பாடல் வரிகளை முற்போக்கு எழுத்தாளர் சங்க கலை இரவு மேடைகளில் நீங்கள் கேட்டிருக்கக் கூடும். மிக எளிய மனிதர்கள் மீது பாய்ந்து குதறும் சட்டம், வேறு சிலரது விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம், ஜனநாயகத்தை பழிப்பதுபோல் இருக்கிறது. நீதி கிடைக்கும் என நம்பி, தெரியாத்தனமாக வழக்கு பதிவு செய்து விட்டு அன்றாடம் நீதிமன்ற வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் நகராமல் பல்லாண்டுக் கணக்கில் அலைந்து கொண்டிருக்கும் அற்பஜீவிகள் சிலரை எந்த நீதிமன்றத்திலும் காண முடியும்.

எண்ணெய் மறந்த தலை, அழுக்குச் சட்டை, வேட்டி, ஒட்டிப் போன வயிறு, தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய், மனநிலை திரிந்து போன கதியில் வெறித்த பார்வையோடு அலையும் அவர்களை இதை விட இழிவு செய்ய முடியாது. மும்பை திரைப்பட உலக நாயகர்களில் ஒருவர் சல்மான் கான்! செப்டம்பர் 27, 2002 நள்ளிரவைக் கடக்கும் நேரத்தில், அவர் ஓட்டிச் சென்ற காரை பிளாட்பாரத்தில் ஏதுமறியாது உறங்கிக் கொண்டிருந்தவர் கள் மீது ஓட்டியதில், ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

காலாவதியாகிப் போயிருந்த ஓட்டுநர் உரிமம், போதை யில் இருந்தது, தாறுமாறாக ஓட்டி உயிர்ச்சேதம் விளைவித்தது இன்னபிற குற்றங்கள் மீதான 13 ஆண்டு வழக்கில்,செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தார். மேல் முறையீடு செய்ய 2 நாள் பெயில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அடுத்த நொடியிலிருந்து உலகின் எல்லா திசையிலிருந்தும் ஒலித்த குரல் கள் சல்மான் தண்டனையைக் குறித்துக் கண்ணீர் பெருக்கியதாகவே தொலைக்காட்சி அலைவரிசைகள் துடிதுடித்துக் கொண்டிருந்தன. இன்னும் தங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காதது குறித்து அந்த விபத்தில் கடுமையாக பாதிப்புற்ற அப்துல்லா ஷேக் கதறிக் கொண் டிருந்தது, யார் காதிலும் விழ வில்லை.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திப்சே, தண்டனையை இடை நிறுத்தம் செய்ததோடு, 7 ஆண்டு களுக்குக் குறைவான தண்டனை களுக்கு பெயில் வழங்குவது இயல் பான நடைமுறைதானே என்று சொல்லி தீர்ப்பு அளிக்க, சல்மான் கான் நிம்மதியாக வீடு திரும்பி னார். அவருக்காக அந்த 48 மணி நேரமும் உறங்காத ரசிக உள்ளங் களின் துடிப்புகளை முகநூல், வாட்ஸ் அப் சமூக ஊடகங்கள் பதிவு செய்தபடி இருந்தன. நியாய வானாக அறியப்பட்டிருக்கும் அமீர்கான் முதல் ஒற்றை ஆளும் விடுபடவில்லை. சல்மான் கானுக்கே தண்டனையா என்பது அவர்களது துயரப் பெருமூச்சாக இருந்தது. பிரபல பாடகரான அபிஜித் பட்டாச்சார்யா என்பவர், முத்தான வாக்கியத்தைமொழிந்தார். பிளாட்பாரத்தில்நாய்களைப் போல் உறங்குபவர்கள், தெருவில் அடிபட்டுச் சாகும் நாய்கள்போல் இறக்கத்தக்கவர்கள்..!

பல விருதுகளை வாங்கியிருக்கிறா ராம். எத்தனை விருதுகள் வாங்கி என்ன? முதலில் மனிதனாக அவர் நடந்து கொள்ளவில்லையே?
அன்று இரவு உறக்கத்தில்கூட சல்மான் கானுக்கு ரவீந்திர பாட்டில் என்ற அப்பாவியின் முகம் நினைவுக்கு வந்திராது. 25 வயதில் கட்டிளங்காளையாக கமாண்டோ ஃபோர்ஸ் குழுவில் காவல்துறை அதிகாரியாக சல் மான் கான் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டவர்அவர்.அந்த மோசமானஇரவில் தாறுமாறாகக் காரை ஓட்டி விபத்தின் கோர தருணத்தில் அங்கிருந்து சல்மான் கான் தப்பி ஓடிய அடுத்த நிமிடம், பாந்த்ரா காவல் நிலையத் திற்குச் சென்று முதல் தகவல் அறிக்கை பதிந்தகுற்றத்தை ரவீந்திர பாட்டில் செய்துவிட்டார். அதன் கொடுமையான பலனை அதன் அடுத்த நொடியிலிருந்து சந்தித்தவர் அவர். குற்றத்தின் சாட்சி துரத்தப்படுவதும், மிரட்டப் படுவதும், வாக்குமூலத்தை மாற்ற நிர்ப்பந்திக்கப்படுவதும் இயல்பான தேசத்தில், இந்த விதி முறைகள் அறியாத முட்டாள் பாட்டில்,வேலையைப் பறி கொடுத்து,குடும்பத்தைத் தொலைத்து, மன அமைதியைத் தொலைத்து,இறுதியில் தன் னையே தொலைத்து, வேலைக்கும் செல்லாது, ஓடி ஒளிந்து, சிக்கி, சிறையிலிடப்பட்டு, கிரிமினல் குற்றவாளிகளோடு சேர்த்து வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல ஐம்பது ரூபாய் பிச்சையும் எடுத்து, காச நோயின் காரணமாக இறுதி யில் அக்டோபர் 4, 2007 அன்று மரித்தும் போனார்.

தொலைக் காட்சி அலைவரிசைகளுக்கு அப் போது வேறு முக்கியமான வேலை கள், வேறு ப்ரேகிங் செய்திகள் இருந்திருக்கக் கூடும். ஜெயலலிதா தீர்ப்பு பற்றி `லட்சக்கணக்கான’தாள்களில் எழுதப்பட்டாகிவிட்டது. சுப்பிர மணியசாமி போட்ட வழக்கின் குற்றப் பட்டியலை நீதிபதி குமார சாமி தவிடுபொடி ஆக்கிவிட்டார். 10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை முன்மொழிந்திருக்கிறது. அந்தக் கணக்குகளில் பிசகு இருப்பது பற்றி விவாதங்கள் நடந்து கொண் டிருக்க, இதனிடையே மக்களின் முதல்வர் மாநில முதல் வராகவே ஆகிவிட்டார், மீண்டும்!

மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, முதுகில் கம்பி மாட்டித் தேரிழுத்து, காவடி எடுத்துப் பெற்றிருக்கும் நீதி இது என்பதால், தீர்ப்பைப் பற்றிப் பேசுவது தெய்வக் குத்தம்’ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. இந்த பேரிடி முழக்கத்தின் ஊடே, ஓசைப்படாமல் இன் னொரு வழக்கும் ஒரு திசையில் முடிந்துவிட்டது. சத்யம் கம்ப்யூட் டர்ஸ் ராமலிங்க ராஜு வழக்கு! இங்கிலாந்தின் தங்க மயில் விருது பெற்ற நிறுவனம் அது. சந்திரபாபு நாயுடுவின் நவீன ராஜ்ய பரி பாலனத்தின் தூண் அவர். பல்லா யிரம் கோடி மோசடி வழக்கு அது. 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அவருக்கும், வேறு சிலருக்கும். 53.5 கோடி அபராதம் அவருக்கு. தலா 25 லட்சம் அந்த வேறு சிலருக்கு. மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்டனை இடை நிறுத்தம் செய்யப்பட்டு, அபராதத் தொகையில் 10 சதவீதம் செலுத்தி,பெயில்பெற்றுக் கொள்ளஉத்தரவிட்டதுநீதி மன்றம். சத்தியவெளிச்சத்தின் புன்னகையோடு ராமலிங்க ராஜு இல்லம் திரும்பிவிட்டார்.

மாருதி சுசுகி நிறுவனத்தில் தொழில் தகராறு மூண்டிருந்த நெருக்கடி நேரத்தில் உயரதிகாரி அவினேஷ் தேவ் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப் படையில் 147 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. நெடிய போராட்டத்தை அடுத்து, மார்ச் 2015ல், 77 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன், பலமுறை தாக்கல் செய்யப் பட ஜாமீன் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இப்படியான வழக்கில் ஜாமீன் வழங்கினால், அந்நிய நிதி மூலதன வரத்து பாதிக்கப்படும் என்று அதிர்ச்சியளிக்கும் கருத்தைத் தெரிவித்தது. தனது நிலம் பறிக்கப்பட்ட வழக்கு, வேலை பறிபோன துயரக் கதை, நிவாரண மறுப்பு, உயிர்ச் சேத நஷ்ட ஈடு, கருணை நிய மனம்… என்பது போன்ற பல்லா யிரக்கணக்கான வழக்குகளில் நீதி கேட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்கி பசியும், பிணியும், நோயுமுற்று மரித்தும் போய்விட்ட எளிய மக்களது வலிமையற்ற குரல்கள் எல்லா நீதிமன்ற வளாகங் களிலும் ஒட்டடை படிந்து போயிருக்கும் கேஸ் கட்டுகளுக் கிடையே அமுங்கிக் கிடக்கின்றன. நவீன தாராளமய காலத்தில், ஆதிக்க சக்திகளுக்கான நீதி தனி வாசல் திறந்து வழங்கப்படுவது நிதர்சனமாகத் தெரிகிறது. எல்லோ ரும் சமம் எனக் கூறப்பட்டாலும், எல்லோரும் சமம் அல்ல என்பது மீண்டும் மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது. முன்னேற் றம், வளர்ச்சி போன்ற மாயை புழுதிப் படலத்தில், இந்த விஷ யங்கள் நுட்பமாக மறைக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. இதுதான் நியதி என்று உடன்பட வைக்கவும் நியாயங்கள் பேசப்படுகின்றன.

பன்னீர்ப் புஷ்பங்களே என்ற (அவள் அப்படித்தான்) திரைப் படப் பாடலில், கங்கை அமரன் எழுதிய வரிகளே நினைவில் நெளிகின்றன: நியாயங்களோ பொதுவானது… புரியாமல் போனது!
புரிபடும் காலம் வராமல் போய்விடாது!

Related Posts