இதழ்கள் இளைஞர் முழக்கம்

நாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்

நாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்

 தமிழகத்தில் சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் பெரியாரின், அண்ணாவின் பெயரைச் சொல்லியே தி.மு.கவும், அ.தி.மு.கவும் கொள்ளையடித்து (ஆண்டு) விட்டார்கள். கொள்ளை தொடர்ந்திட யார் பெயரைப் பயன்படுத்துவது என்று தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளும் தன்னுடைய சுயநலனுக்காக பெரியாரையும், அண்ணாவையும் வியாபாரப் பொருளாக மாற்றி லாபகரமாக வியாபாரத்தையும் நடத்தி வருகிறார்கள். இரண்டுபேரும் நான் அடிப்பதைப்போல் அடிக்கிறேன் நீ அழுவதைப்போல் அழு என கனகச்சிதமாக நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.கவிற்கு அ.தி.மு.க தான் பரம எதிரிபோல் பேசுவார்கள். ஆனால் 25 ஆண்டுக்காலம் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தையும், சொத்துக்களையும் ஏன் பறிமுதல் செய்யவில்லை. அதேபோலத்தான் அ.தி.மு.கவிற்கு தி.மு.க தான் பரம எதிரி என்கிற மாதிரி ஜெயலலிதா அவர்கள் பேசுவார்கள். உலகையே ஆளக்கூடிய வல்லமை படைத்த ஜெயலலிதா அவர்கள் கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்த சொத்துக்களையும் பணத்தையும் என்றைக்காவது பறிமுதல் செய்தாரா? இல்லையே ஏன். இதுதான் இவர்கள் இருவரின் நாடகம். நாம்தான் மாற்றி மாற்றி வாக்களிக்கிறோமே ஒழிய அங்கே திருடுவதில் ஆண், பெண் வித்தியாசம் தவிர வேறு என்ன?

நாடு விடுதலை அடைவதற்கு முன் சென்னை ராஜதானியில் 1916 ல் உருவான தென்இந்திய நல உரிமைச் சங்கம் பின் நாளில் திராவிடர் கழகமாக உருமாறியது. திராவிடர் கழகம் சாதி, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்விடுதலை, மதுவிலக்கு, சுயமரியாதை சிந்தனை, இந்தி  எதிர்ப்பு, திராவிட நாடு போன்ற கொள்கையோடு அதே நேரத்தில்  திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது எனவும் கூறியது. திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்பது பல பேரை திராவிடர் கழகத்திற்கு எதிராக திருப்பியது. அந்த சூழலில் தான் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் உருவானது.

1947 துவங்கி இருபது ஆண்டுக் காலம் தமிழகத்தை ஆண்டது காங்கிரஸ் அரசாங்கம். மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். சுதந்திரம் அடைந்தால் தேனாறும் பாலாறும் பெருக்கெடுத்து ஓடும், நாட்டில் பஞ்சம் போகும் பணம் பெருகும் சொர்க்கபுரியாக மாறும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருந்தது. இதை பயன்படுத்திட தி.மு.க திட்டமிட்டது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, கூலி கேட்டான் அத்தான் குண்டடிபட்டு செத்தான், டாட்டா பிர்லா கூட்டாளி, காங்கிரஸ் பாட்டாளி பகையாளி, ஒன்றே குலம் ஒருவனே தேவன், ரூபாய்க்கு மூனு படி அரிசி இப்படி கவர்ச்சிகரமான முழக்கங்களோடு தமிழகத்தை வலம் வரத் துவங்கினார்கள்.

பெரியாரின் கருத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக கவர்ச்சியான கோஷங்களை மட்டுமே உச்சரித்தனர். ஆனால் சாதி மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் உரிமை, சுயமரியாதை எல்லாம் மறந்து போயின. கட்டாய இந்தி திணிப்பு 1937 ஆம் ஆண்டு நடந்த மாகாண தேர்தலில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை ராஜதானியில் முதல்வரானார் அப்போது இந்தி கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தார். இதற்கு எதிராக சுயமரியாதை இயக்கம் போன்ற அமைப்புகளால் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அன்றைக்கு கண்மூடித்தனமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியபோது கம்யூனிஸட்டுகள் அறிவியல்பூர்வமாக கோரிக்கையை முன்வைத்தனர். மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும், தாய்மொழியில் கல்வி பெறும் உரிமை வேண்டும், நிர்வாக மொழியாக மத்தியில் இந்தி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை அதே நேரத்தில் விருப்பமொழியாக யார் வேண்டுமானாலும் எந்தமொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசு மீண்டும் 1948 ஆம் ஆண்டு 1952 ஆம் ஆண்டு, 1959 ஆம் ஆண்டு 1965 ஆம் ஆண்டு என பல முறை நடைமுறைப்படுத்திட முயற்சி செய்தது. இயல்பாகவே மக்களிடம் இருந்த கோபத்தை தி.மு.க இன உணர்வாக மாற்றி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது. மொழி உணர்வை கிளப்பி அரசியல் செய்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க 48 ஆண்டுகாலம் ஆண்ட பிறகும் தமிழ்நாட்டில் “நீதிமொழியாக தமிழ் கொண்டு வரப்பட்டதா” இவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே இந்தி எதிர்ப்பு போராட்டம் பயன்பட்டதே ஒழிய மக்களுக்கு ஓரு மண்ணும் கிடையாது. மொழி மட்டும் அல்ல தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் கல்வி தனியாரிடம் முழுமையாக  ஒப்படைத்து அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கும் தொழிலாக மாறியது.

சாதி, மத ஒழிப்பும் திராவிடம் பேசிய அரசுகளின் லட்சணமும். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியில் நிர்வாகிகள் நியமிக்கும் போது எந்த பகுதியில் எந்த சாதியினர் பலமாக இருக்கிறார்கள் என்பதை வைத்துதான் நியமிக்கப்படுவார்கள். எந்த தொகுதியில் எந்த சாதிக்கு ஓட்டு அதிகமாக உள்ளதோ அந்த தொகுதியில் அந்த சமூகத்தினர்தான் வேட்பாளர்கள். அதேபோல் மந்திரிசபை என்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மந்திரி என்பதுதான் எழுதப்படாத விதியாகும். இதுதான் சாதி மறுப்பை பேசிய திராவிட சிந்தனை ஆட்சி செய்த தமிழ் நாட்டில் 7000 கிராமங்களில் தீண்டாமை உள்ளதாம். நீதிமன்றம் சொன்னால் கூட தலித் பிணம் பொதுவழியில் போக முடியல அதுமட்டும் அல்ல சட்டத்தை பாதுகாக்கவேண்டிய காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளே அந்த வழியில்தான் கொண்டு செல்கின்றனர் என்றால் அரை நூற்றாண்டு காலம் ஆண்ட அரசுகளின் லட்சணம் தான் என்ன?

சாதி மறுப்பு சீர்திருத்த திருமணத்திற்கு சட்டம் இயற்றிய அரசாங்கத்தின் லட்சணம். இந்த காலத்தில் மட்டும் வேறு சாதி பெண்ணையோ அல்லது ஆணையோ காதல் செய்து திருமணம் செய்ததற்காகவும், செய்யமுற்பட்டதற்காகவும் 73 உயிர்கள் (கௌரவமாக) ஆணவக்கொலைகள் செய்யப்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டிய அரசு சட்டத்திற்கு எதிராக நியாயப்படுத்தும் அரசு. எங்கே போனது இவர்களின் சாதி மத ஒழிப்பு கொள்கை. அரசு அதிகாரத்திற்காக பதவி மோகத்திற்காகவும் மனுதர்மத்தை எதிர்த்த தி.மு.கவும், அ.தி.மு.கவும் பார்ப்பன சிந்தனையோடு ஆர்.எஸ்.எஸ்சுக்கு கொடை பிடித்து மாறி மாறி தோளில் தூக்கி சுமந்து மத்திய அமைச்சரவையிலும் பங்குவாங்கியவர்கள் தான் இவர்கள். அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழிற்சாலைகளை உருவாக்கவும் எடுத்த முயற்சிகள் என்ன? 48 ஆண்டுகள் ஆண்ட தி.மு,க மற்றும் அ.தி.மு.க  அரசில் தமிழகத்தில் எங்காவது பொதுத்துறை ஆலைகள் உருவாக்கப்பட்டதா? மக்களின் போராட்டத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறையான போக்குவரத்து துறையைகூட தனியாரிடம் ஒப்படைக்க படிப்படியாக கொடுத்துவருகின்றனர். மின்சாரத்துறையை பகுதி தனியாராக மாற்றினார்கள். புதிய பொருளாதார கொள்கையை ஊருக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இவர்கள்தான் கொண்டுவந்தனர். ஆனால் மக்களுக்கு மட்டும் ஒரு சுக்கும் செய்யவில்லையே ஒழிய ஊரின் சொத்துக்கள் களவாடப்பட்டு அனைத்து தொழிலும் இவர்களின் குடும்பத் தொழிலாக மாறின பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதிகளானார்கள்.

ஊழலில் திளைக்கின்றனர் ஆனந்தவிகடன் பத்திரிகை அ.தி.மு.க மந்திரிகள் உள்ளிட்டு முதல் மந்திரி வரை அனைவரின் முறைகேடுகளையும் எழுதியபோது அந்த பத்திரிகை மீது தனக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி வழக்கு போட்டார்களே ஒழிய நாங்கள் யோக்கியர்கள் என்று ஒருவரால் கூட சொல்ல முடியவில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்து ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இன்னொரு நீதிமன்றம் நிரபராதி என்கிறது வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. தி.மு.க வோ சொல்லவே வேண்டாம் மஸ்ட்ர்ரோல் துவங்கி  2ஜி அலைக்கற்றை, எஸ் பேண்டு உள்ளிட்டு குடும்பமே திகார் ஜெயிலுக்கும் நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ க்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஊரில் சொல்லுவார்கள் நல்லவன் வர்றான் சொம்ப எடுத்து உள்ளவை என்று அப்படிதான் இவர்கள்.

பெரியார் அவர்கள் காங்கிரசின் சென்னை ராஜதானி காரியதரிசியாக இருந்தபோது காங்கிரஸ் கட்சி கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டத்தை நடத்திட முடிவெடுத்தார்கள். அப்போது பெரியாரின் மனைவியும்,சகோதரியும் சென்னை ராஜதானி முழுவதும் சென்று கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள். சாராயப் பானைகளை உடைத்தனர். பெரியார் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்தினார். அண்ணா முதல்வராக பொறுப்பெடுத்தபோது ராஜாஜி அவர்கள் அண்ணாவை பார்த்து சாராயம் காய்ச்ச அனுமதியுங்கள் என்றாராம்.அப்போதுதான் நீங்கள் கூறி இருக்கிற வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியும் எனவே சாராயத்தை அனுமதியுங்கள் என்றபோது அண்ணா என் தமிழச்சிகள் தாலி அறுத்துதான் அரசாங்கம் நடத்தமுடியும் என்றால் அந்த அரசு அழிந்தொழியட்டும் என்றாராம் .

இவர்களின் சுயமரியாதையும் கொள்கையும் அடமானம் வைக்கப்பட்டு தன்மானத்தை எல்லாம் அதிகாரத்திற்காகவும்,பதவிக்காகவும் விற்றுவிட்டார்கள். பணமும் அதிகாரமும் கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். இவர்கள் தான் நாங்கள் திராவிட இயக்கம்,திராவிட இயக்கம் என்று வடிவேல் மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அரை நூற்றாண்டு ஆண்டவர்கள் தங்கள் கால சாதனைகளை சொல்லமுடியாமல் இதுதான் எனக்கு கடைசிதேர்தல் இந்த முறை வாய்ப்பைத்தாருங்கள் என்று ஒருவரும். மற்றொருவர் எனக்கு குழந்தையா குட்டியா குடும்பமா எனக்கு எல்லாம் நீங்கள்தான், நான் உங்கள் சகோதரி எனக்கு வாக்களிப்பிர்களா செய்வீர்களா என கெஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு இவர்கள் சாதித்ததுதான் என்ன?

 

இனியும் தமிழகம் விழிக்க வில்லை என்றால் நம்மை காப்பாற்ற யாராலும் முடியாது.

சாதி மத பேதமில்லாத,

ஊழல் இல்லாத,

இலவசக் கல்வியும், சுகாதாரமும்,

சமூகபாதுகாப்பான வேலையும்,

கனிம வளங்களை பாதுகாத்திடவும் மாற்றம் காண்போம், நாளை நமதென்று முரசுகொட்டுவோம்.

Related Posts