வரலாறு

நாம் அடிமைப்பட்ட கதை – ச.தமிழ்ச்செல்வன்

கி.பி.1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி கள்ளிக்கோட்டை கடற்கரையில் ஒரு கப்பல் வந்து இறங்கியது. அது ஐரோப்பாவிலிருந்து வந்த கப்பல். துருக்கி அரசனால் சுருக்கமான கடல்வழி அடைக்கப்பட்ட காரணத்தால், புதிய கடல்வழி தேடி ஆப்பிரிக்கக் கண்டத்தை முழுமையாகச் சுற்றி, நன்னம்பிகை முனையைத் தொட்டு இங்கு வந்து சேர்ந்த கப்பல் அது. போர்ச்சுகீசிய நாட்டின் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து 1497 ஆம் ஆண்டு ஜூலை மாதம் புறப்பட்டு வந்த கப்பல்.வாஸ்கோடகாமாவும் அவனுடைய கூட்டத்தாரும் வந்து இறங்கிய கப்பல் அது,

அதற்கு முன்னால் எத்தனையோ கப்பல்களில் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் அந்தக் கடற்கரையில் வந்து இறங்கியிருக்கிறார்கள்.குறிப்பாக அரேபிய வணிகர்கள்களின் எண்ணற்ற வணிகக் கப்பல்கள் வந்துள்ளன. ஆனால் இந்த ஐரோப்பியக் கப்பலின் வருகைதான் இந்தப் பரந்த தேசத்தின் கால்களில் அடிமைச்சங்கிலியைப் பிணைத்த கதையின் முதல் அத்தியாயம்.

வாஸ்கோடகாமா வந்து எந்த வணிக ஒப்பந்தத்தையும் செய்யாமல் 1499யில் நாடு திரும்பினான். அரேபிய வணிகர்களின் எதிர்ப்பின் காரணமாக.காமா வந்த கப்பலை விடப் பெரிய கப்பலில் அவனை அடுத்து போர்ச்சுகீசிய மண்ணன் பெட்ரோ அல்வாரிஸ் கப்ரால் என்பவனை அனுப்பினான்.அவன் வந்து கோழிக்கோட்டின் கடற்கரையில் நின்ற அரேபியர்களின் 10 வணிக்க் கப்பல்களுக்குத் தீயிட்டு எரித்து 600 முஸ்லிம் மாலுமிகளைக் கொன்று குவித்துக் கோழிக்கோட்டு அரசனைக் கத்தி முனையில் வணிக ஒப்பந்தம் போட வைத்தான். அடிமைச் சாசனத்தின் முதல் வரிகளாக அவை பின்னர் மாறின.

அதுகாறும், சமத்துவ முறையில் இயங்கி வந்த வணிக நடவடிகைகள் அடாவடித்தனத்தின் உச்சத்துக்குச் சென்றன.பண்டமாற்று என்கிற அடிப்படையில் நடந்த அரேபிய-இந்திய வணிகம் ஐரோப்பியரின் பகற்கொள்ளை மைதானமாக மாறியது.

போர்ச்சுகீசியரைத் தொடர்ந்து, பிரஞ்ச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என ஒவ்வொரு கொள்ளைக்காரனாக நம் கடற்கரைகளில் வந்து இறங்கினர்.அப்போது இந்தியா என்கிற ஒரு தேசம் உருவாகியிருக்கவில்லை. 560 சிறு சிறு நாடுகளாக இந்நிலப்பரப்பு இருந்த்து.அவைகளை சிறு குறு மன்னர்கள் ஆண்டு வந்தனர்.அம்மன்னர்களின் முழு நேரத் தொழிலாக அந்தப்புரங்களில் அடைபட்டுக்கிடக்கும் அவர்களின் உடமையான பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்கிற ஆராய்ச்சியும், தர்பார் மண்டபங்களில் நடக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சிகளுக்கு மார்க் போடுவதுமே இருந்தது.ஆகவே வந்தார்கள் வென்றார்கள் என்பதாக ஐரோப்பிய வணிகக் கம்பெனிகளின் வெற்றி அமைந்தது.

வணிகம் செய்து பிழைக்க வந்த பல்வேறு நாட்டுக்கம்பெனிகள் இந்தியாவைத் தமக்குள் பங்கு போட்டுக்கொள்ள கடுமையான யுத்தங்களைத் தமக்குள் நடத்தின.அந்த யுத்தங்கள் இந்திய மண்ணில்தான் நடந்தன.படைவீரர்களாக நம் இந்திய மக்களே இருந்தனர்.போரிட்டுச் செத்து மடிந்தனர்.எவனோ வந்து நம்மை அடிமை கொள்ள, எவன் நம்மை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய நடந்த போர்களில் நாமே செத்து மடிந்த கதைதான் நாம் அடிமைப்பட்ட காதையின் இரண்டாம் அத்தியாயம்.

1757 ஆம் ஆண்டு வங்கத்தில் நடந்த பிளாசிப்போரில் மண்ணன் சிராஜ் உத்தௌலாவைத் தோற்கடிக்க அந்நிய ராபர்ட் கிளைவுக்குக் கோட்டை வாசலைத் திறந்துவிட்ட நம் உள்ளூர் தளபதி மீர் ஜாப்பர் நாம் அடிமைப்பட்ட கதையின் முக்கிய அம்சமான துரோகத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தான்.1757 துவங்கி, அடுத்த நூறாண்டுகளும் சதிகளும், துரோகங்களும், போர்களும், உடன்படிக்கைகளுமென நீண்டது நம் அடிமைச் சங்கிலிகளின் கிண்கிணி ஒலி.

1857யில் இனியும் பொறுக்க முடியாதென விவசாயிகளும் கம்பெனி ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த அந்த விவசாயிகளின் பிள்ளைகளும் கிளர்ந்தெழுந்தனர்.அது சிப்பாய்க்கலகம் என அவர்களால் சொல்லப்பட்ட்து. இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என கார்ல் மார்க்ஸால் குறிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வரிக்கொடுமையாலும் அவுரியும், பருத்தியும் மட்டுமே விளைவிக்க வேண்டுமென்ற கட்டாயத்தாலும் பாழான இந்திய நிலங்களின் மீது கொடும் பஞ்சங்கள் வந்து கவிந்தன.ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இந்திய சிப்பாய்கள் தம் ஊர்களில் பஞ்சத்தால் செத்து மடிந்த தம் பெண்டு பிள்ளைகளின் சவங்களையே பார்த்துத் திரும்பினர்.1857 கிளர்ச்சிக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணியாக விளங்கியது என்பார் தோழர் பி.சி.ஜோஷி.அந்தக் கிளர்ச்சியும் 22 நாட்கள் டெல்லியில் நடந்த சிப்பாய்களின் ஆட்சியான ஜல்சாவும் ஆங்கிலேயர்களால் ரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டன.டெல்லித்தெருக்களில் ரத்த ஆறு ஓடியதை கவிஞர் மிர்ஸா காலிப் தனது புகழ்பெற்ற உருதுக்கடிதங்களில் துயர்த்தும்பும் வரிகளில் பதிவு செய்திருக்கிறார்.இந்த அடக்குமுறையில் குவிந்த இந்தியப்பிணங்களின் மீது 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி வந்து அமர்ந்தது.விக்டோரியா மகாராணியின் அடிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

நாம் அடிமைப்பட்ட கதை முழுமை பெற்றது 1858இல் என்று சொல்லிக் கதையை முடிக்கலாம்.ஆனால் அவ்வளவு சுருக்கமானதல்ல நாம் அடிமைப்பட்ட கதை.

உலகின் பல்வேறு நாடுகளை அடிமை கொண்ட ஆங்கிலேயர்கள் அங்கெல்லாம் மேலே சுருக்கமாகக் குறிப்பிட்டதைப்போன்ற ராணுவ வெற்றிகளின் மூலம் மட்டுமே அதைச் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியா என்கிற இந்நிலப்பரப்பு பண்பாட்டிலும் மரபுத் தொடர்ச்சியிலும் கலைகளிலும் இலக்கியங்களிலும் தத்துவத்திலும் ஐரோப்பிய மரபுகளுக்கு மாறுபட்டதாகவும் அதைவிட உயர்ந்ததாகவும் இருந்ததை ஆங்கிலேயர்கள் கண்டனர். ஆகவே வாள் முனையில் மட்டுமே இந்தியாவை ஆண்டுவிட முடியாது எனக்கண்டனர்.

அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்கிற மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் அடிமை விலங்குகளைப் பூட்டாமல் இந்த ராணுவ வெற்றியால் பலன் இல்லை என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு,அதற்கான வேலைகளைத் துவக்கினர்.பொருளாதார ரீதியாக புதிய தொழில்கள் எதையும் இந்திய மண்ணில் துவங்காமல், இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப்பொருளை உற்பத்தி செய்யும் விளைநிலமாக இந்தியாவை மாற்றி இந்திய மண்ணைப் புழுதிக்காடாக ஆக்கினர். செயற்கையான பஞ்சங்கள் உருவாகி மக்களை வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்க வைத்துக் கஞ்சித்தொட்டிகளுக்குள் தள்ளின, சொந்தக்காலில் இந்தியா நிற்கும்படியான தொழில்களை அனுமதிக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள், சுரங்கங்கள் போன்றவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர். ஹார்வி மில் போல ஆங்காங்கே அவர்கள் துவக்கிய பஞ்சாலைகளில் இந்திய மக்கள் கொத்தடிமைகள் போல 14 மணி நேரம் 15 மணி நேரம் வேலை வாங்கினர்.

பண்பாட்டுத் தளத்தில் இந்திய மனங்களைத் தகவமைக்கப் பல்வேறு அடுக்குளில் பணிகளை முடுக்கி விட்டனர்.இந்திய மொழிகள் எல்லாவற்றையும் அவர்கள் ஆழ்ந்து கற்றனர்.ஆளுமை பெற்றனர்.ஆனால் ஆளும் மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவந்தனர்.1835 இல் மெக்காலே என்பவனால் முன் மொழியப்பட்ட ஐனேயைn ஞரடெiஉ ஐளேவசரஉவiடிn ஹஉவ எனப்படும் கல்விச்சட்டம் உடம்பாலும் ரத்தத்தாலும் இந்தியர்களாகவும் ஆனால் அறிவாலும் உணர்வாலும் ஆங்கிலேயர்களாகவும் இருக்கக் கூடிய ஒரு புதிய படித்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதன் அவசியத்தைப் பேசியது.இந்தப் புதிய வர்க்கமே ஆங்கில ஆட்சிக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் பாலமாக நின்று ஆங்கில ஆட்சியை மனப்பூர்வமாக இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குவார்கள் எனத் திட்டமிட்டனர்.ஆங்கிலக்கல்விமுறை பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. (காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சாதிகளுக்கும் கல்விக்கதவு திறந்த ஒரு நேர்மறை அம்சமும் இதில் உண்டு.அது தனியே பேசப்பட வேண்டியது.)

அடுத்த கட்டமாக ,இந்தியாவின் வரலாற்றை இந்தியர்களுக்குச் சொல்லிக்கொடுத்தனர் ஆங்கிலேயர்.இந்திய வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து இந்து காலம்,இஸ்லாமிய காலம்,பிரிட்டிஷ் காலம் என வகைப்படுத்தி ஜேம்ஸ் மில் போன்ற ஓரியண்டல் வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாறே உங்கள் வரலாறு என்று இந்தியர்கள் மண்டையில் ஏற்றப்பட்ட்து. இந்திய வாழ்க்கையின் பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்யக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒட்டு மொத்த இந்திய வாழ்வும் வரலாறும் மரபும் கலாச்சாரமும் இதுதானய்யா என்று அவர்களின் பார்வையில் வகுத்தும், தொகுத்தும் இந்திய மூளைகளில் ஏற்றினர். உங்களுடையது எல்லாம் பழசு. அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டியதுதான் உங்களின் வரலாறும் பண்பாடும்.ஆனால் ஐரோப்பியப் பண்பாடு நவீனமானது, விஞ்ஞானப்பூர்வமானது உங்களுடையதை விட உயர்வானது என நமக்கு அவர்கள் பாடம் நடத்தினர்.அதனால் கடுப்பாகிப்போன பாரதி போன்ற விடுதலைக் கவிஞர்கள் மன்னும் இமய மலை எங்கள் மலையே என்றும் ஆரிய நாடெங்கள் நாடென்றும் ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி என்றும் மண்ணின் பெருமை பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இது போதாதென,1871 யில் ஒரு சோதனையாகவும் 1881 முதல் அதிகாரபூர்வமாகவும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பைத் துவக்கினர்.அதன்மூலம் திரட்டிய தகவல்களைக் கொண்டு இந்தியர்களே நீங்க இவ்வளவுதான் இப்படித்தான் என சில டப்பாக்களில் அடைத்தனர்.கல்விச்சாலைகளில் பாடத்திட்டங்களின் மூலமும் கற்பித்தல் முறைமையின் மூலமும் இளம் இந்திய உள்ளங்களை தமக்கேற்ற உளவியல் அடிமைகளாகத் தகவமைத்தனர். இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகள் மூலம் இந்திய நடுத்தர வர்க்கத்தையும் அதன் மூலம் இந்திய மக்களையும் மன ரீதியாக அடிமைப்படுத்தினர். சாதி என்னும் இழிவையும் மத ரீதியான பழமைவாத ஏற்பாடுகளையும் தொந்தரவு செய்யாமல் தொடர வழி வகுத்தனர்.சமூகத் தளத்தில் சாதியும் மதமும் அப்படியே தொடர்வது அடிமைப்படுத்தலுக்கு கைகொடுக்கும் என நம்பினர்.அடிமைப்படுத்தும் வரலாற்றை இவ்விதமாக முழுமையாக்கினர்.

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் ஜோசியர் சொன்னபடி சுதந்திரம் பெற்று பாராளுமன்றத்தில் நேருஜி ஆற்றப்போகும் முதல் உரையைக் கேட்க ஒட்டுமொத்த இந்தியாவே வானொலிப்பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தது.12 சதவீத எழுத்தறிவு மட்டுமே நிலவிய அன்றைய தேதியில் நாட்டு மக்களுக்கு முதல் சுதந்திர உரையை நேரு ஆங்கிலத்தில் ஆற்றினார்.மக்களுக்குப் புரியாத அந்நிய பாஷையில் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தது.இன்று வரை அது புரியாத பாஷையில்தான் பேசிக்கொண்டிருக்கிறது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்.

Related Posts