இதழ்கள் இளைஞர் முழக்கம்

நான் நாத்திகன் ஏன் ?- மாவீரன் பகத்சிங்

 

அடிமை இந்தியாவின் விலங்குடைக்க தூக்கு கயிற்றை 23 வயதில் முத்தமிட்டு இந்திய இளைஞர்களுக்கு விடுதலை உணர்வை, தேசப் பற்றை, தியாகத்தை, வீராவேசத்தையும் கற்றுக் கொடுத்தான். சுதந்திர இந்தியாவில் அவனை பயங்கரவாதியாக, தீவிரவாதியாக சித்தரிக்க முயற்சி செய்தவர்களை அன்றே சின்னாபின்னமாக்கிட மாவீரன் பகத்சிங் அன்றே கூறிய வார்த்தைகள்…

“நான் பயங்கரவாதியல்ல, புரட்சியாளன்.
தெளிவான எண்ணமும், தேர்ந்த இலட்சியமும்,
நெடிய செயல் திட்டமும் உடையவன்.”

ஒரு புரட்சிகாரனாக, போராளியாக, இந்திய இளைஞர்களின் ஈர்ப்பு மையமாக, தலைவனாக, தேசத்தின் அடையாளமாக, தியாகத்தின் சின்னமாக மாறியுள்ள மாவீரன் பகத்சிங் அறிவுபூர்வமாக, எளிய உதாரணங்களோடு, கேள்விகளோடு, அறிவியல் விளக்கத்தோடு, அறிஞர்கள், விஞ்ஞானிகளின் வார்த்தைகளை வாதத்திற்கு எடுத்துக் கொண்டு கடவுள் குறித்தும், நாத்திகம் குறித்தும் தர்க்கம் செய்து நிறைவாக நான் நாத்திகன் ஏன் ? என்பதை இப்புத்தகத்தில் விளக்குகிறார்.

“நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்ச்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்றதில்லை. ஆனால் மனிதனுடைய கடமை இடையறாது முயற்சிப்பதே.”

இப்புத்தகம் தமிழில் பகுத்தறிவு பகலவன், சுயமரியாதையை தமிழனுக்கு அறிமுகப்படுத்திய தந்தை பெரியார் தனது விடுதலை பத்திரிக்கையில் வெளியிடுகிறார்.

இதை மொழிபெயர்த்த காரணத்திற்காக ஆங்கிலேய அரசால் வீதியில் அடித்து, துவம்சம் செய்து கைது செய்யப்பட்டார். “காலுக்கு செருப்பில்லை, கால் வயிற்றுக்கு கஞ்சியில்லை” என தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டலை, வறுமையை தனது பாடல்கள் மூலம் போராட்டமாக மாற்றிய இடதுசாரி இயக்க தலைவரான தோழர். ஜீவானந்தம். “ஆராய்ச்சித்திறனும் சுயேச்சையாக யோசிக்கும் மனப்பான்மையும் புரட்சிகாரனின் இன்றியமையாத மிகமிக அவசியமான இரு பெருங்குணங்கள்.”

இப்புத்தகத்தில் பகத்சிங் சில தலைப்புகளாக தனது விளக்கத்தை, தர்க்கத்தை செய்கிறார். கடவுளை ஏற்பவரும், மறுப்பவரும் கற்றுணர வேண்டிய மிக அரிய சிறிய நூல். மேலும் பகத்சிங் வியாக்கியானம் மட்டும் செயவ்து சரியல்ல என்ற எண்ணத்தோடு தன்நிலையில் இருந்து தர்க்கத்தை துவங்கி வாசகர்களுக்கு எண்ணங்களில் எழும் கேள்விகளுக்கு வாசிக்கும் போதே பதில் வசப்படும் வண்ணம் விவாதித்துள்ளார்.

கடவுள் மறுப்புக் கொள்கை, நடவடிக்கை என்பதோ, நாத்திக கருத்துகளை பேசுவதோ தற்பெருமைக்காகவோ, அகங்காரம் கொண்டோ அல்ல மேலும் நான் ஆழமாக, விரிவாக, நுணுக்கமாகப் பரிசோதனை செய்து அறிவியல் பூர்வமாக, தனக்குள் விவாதித்து பின்தான் நாத்திகம் என்ற வழியில் பயணம் செய்திட முடிவு செய்ததை தன் இளம்பருவ கடவுள் நம்பிக்கையில் துவங்கி இப்பாதை மாற்றம் குறித்து விரிவாக விவாதிக்கிறார்.
அன்றைய விடுதலை இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்களில் பகத்சிங்கின் முன்னோடிகளாக, தலைவர்களாக இருந்த பலரையும் அவர்கள் கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு குறித்து எந்த தயக்கமும் காட்டாது விவாதத்திற்கு உட்படுத்தி விடை தேடுகிறார்.

மதங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள், கொள்கைகள், புராண கட்டுக்கதைகள் குறித்து தெளிவான பார்வையில் அறிவியல் பூர்வமாக கேள்விகளை தொடுத்து பதில் கூற சவால் விடுகிறார். அனைத்து மதங்களிலுமுள்ள ஏற்றத்தாழ்வு, போலி விசுவாசம், மறுபிறப்பு, முன் ஜென்ம கர்மம், பாவ புண்ணியம், மனிதர்கள், உலகம் உருவானது குறித்தும், எல்லாம் கடவுள் செயல், திருவிளையாடல், லீலை என பிதற்றுபவர்களையும் கூர்மதியால், கூர்மையான விமர்சனங்களையும், அறிவுக்கு விரோதமான பழங்கதைகளை ஏராளமான ஆதாரங்களோடு விளக்கியும். கடவுள் நம்பிக்கை உடைய எவர் ஒருவரும் தனக்குள் பகத்சிங் எழுப்பும் கேள்விகளை எழுப்பி விடைதேட முனையும் போது கடவுள் காணாமல் போவார்,

“பின்னால் மிக மிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து அரிய இனிய சிகிச்சையால் நோயைக் குறைத்து நோயை சுகப்படுத்துவதற்காக தற்போது உடம்பில் படுகாயம் பண்னுகிறோம் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா.?”

நாத்திகத்தை விரும்புகிற அல்லது பின்பற்றுகிறவர்கள் பகத்சிங்கின் தர்க்கத்தை உள்வாங்கி அனைத்து தளங்களிலும் கொண்டு சென்றால் மட்டுமே இன்று ஆதிகவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு அதிகார வெறிபிடித்த அரசாங்கத்தை அடித்து நொறுக்கிட முடியும்.

பகத்சிங் வெறும் பேச்சு மட்டும்தான் என்று எவரும் குறைகூற முடியாதபடி. நாத்திக வாதம் என்பது துன்ப துயரங்கள், கஷ்ட நஷ்டங்கள், நெருக்கடிகள் வராதவரை சரிப்படும் வாழ்வதற்கான, உயிர்பிழைப்பதற்கான இக்கட்டான வேளையில் கடவுள் நம்பிக்கை தானாக வரும் என்று பலர் வைத்த விவாததிற்க்கு பதிலாக, தான் கொண்ட நாத்திக நடைமுறை வறட்டு தந்திரம் அல்ல சுயமாக வாழ்வதற்கான வாழ்க்கை சூத்திரம் என பேசியது மட்டும் அல்லாமல் வாழ்ந்து காட்டியவர் தான் மாவீரன் பகத்சிங்…

நூல் அறிமுகம் – மீ.சிவராமன்

மாநில செயற்குழு உறுப்பினர் (DYFI)

Related Posts