இதழ்கள் இளைஞர் முழக்கம்

‘நாக் அவுட் நாயகர்’ முகமது அலி – கமலாலயன்

060316_Muhammad_Ali_PI1.vadapt.664.high.14

பன்னிரெண்டே வயதான ஒரு சிறுவன் அவன். பெயர் கேசியஸ் மார்செலஸ் கிளே. அவனுக் கென்று தரப்பட்டிருந்த ஒரு சைக்கிளில்தான் போவதும், வருவதும். ஒரு முறை அவன் தெருவில் சைக்கிளை நிறுத்தி விட்டு பக்கத்தில் ஏதோ வேறு வேலையில் கவனமாயிருந்தான். அந்த நேரம் பார்த்து, கிளேயின் சைக்கிளைத் திருடிக் கொண்டு போவதற்கு ஓர் ஆள் முயன்றான். தற்செயலாகத் திரும்பிப் பார்த்துவிட்ட கிளே, புலி போலப் பாய்ந்தோடி திருட முயன்றவனை மடக்கினான். சரமாரியாக வெறுங்கைகளால் திருடனைத் தாக்கினான். சிறுவனாயிருந்தாலும் அவனுடைய அறச்சீற்றமும், ஆக்ரோஷமும், காற்று வேகத்தில் சுழன்று தாக்கிய கைகளும் சுற்றிலும் நின்றவர்களின் கவனத்தை ஈர்த்தான். அங்கு குழுமிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு நடப்பது என்னவென அறிவதற்குச் சென்றார் ஜோ-மார்ட்டின் என்ற காவல்துறை அதிகாரி. கேசியஸ் கிளேயின் ஆக்ரோஷமும், அவன் விட்ட சரமாரிக் குத்துகளும் ஜோ மார்ட்டினைக் கவர்ந்தன. சிறுவனைத் தட்டிக் கொடுத்தவாறு பேச்சுக் கொடுத்து அவனை அமைதிப்படுத்தினார். அப்போதே சிறுவனிடம் ஒரு கேள்வி கேட்டார் : “குத்துச் சண்டை வீரனாக விரும்புகிறாயா, நீ ?” கிளே உற்சாகத்துடன் தலையசைத்தான்.

இப்படித்தான் தொடங்கிது ‘நாக்அவுட் நாயகராக’ உலகப்புகழ் பெற்று விளங்கி, சமீபத்தில் அமரரான முகமது அலியின் வெற்றிப் பயணம். அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள லூயிஸ்வில்லே நகரில் 1942, ஜனவரி 17 அன்று பிறந்தவர் அவர். இயற்பெயராயிருந்த கேசியஸ் மார்செலஸ் கிளே என்பதை, 1964 இல் முகமது அலி என்று முஸ்லிம் பெயராக மாற்றிக் கொண்டார். அந்த ஆண்டுதான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பட்டம் வென்றார்.

பன்னிரெண்டு வயதில் ஜோ-மார்ட்டினின் ஆதரவினால் குத்துச்சண்டை பயிலத் தொடங்கிய கேசியஸ் கிளே, 1960 இல் நடைபெற்ற ரோம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். அப்போதிருந்தே தொழில்முறை குத்துச்சண்டை வீரராகப் புகழேணியில் கால்களைப் பதித்து ஏறத் தொடங்கினார். தொடர்ந்து ஏறு முகமாகவே விளங்கிய பயணம் அவருடையது. 1982 ஆம் ஆண்டு வரையிலும் கொடி கட்டிப் பறந்தவர் அவர். ஹெவி வெயிட் குத்துச்சண்டைப் போட்டிகளில் 61 முறை பங்கேற்றவர். அவற்றில் 56 போட்டிகளில் வென்றவர். 5 முறைதான் தோற்றிருக்கிறார். வென்ற போட்டிகளிலும் பெரும்பான்மையாக ‘நாக் அவுட்’ முறையில் அதிரடியாக எதிரிகளை வீழ்த்தி வாகை சூடியிருந்தார் என்பதே இவரின் தனிச்சிறப்பு.

ஹெவி வெயிட் பிரிவில் மூன்றுமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் முகமது அலி. நான்கு தலைமுறைக் காலம் குத்துச்சண்டைப் போட்டிகளில் நாயகனாகப் பிரகாசித்தவர். பார்க்கின்சன் நோயினால் பாதிப்புக்குள்ளான பிறகு, கடந்த 32 ஆண்டு காலமாக அந்த நோயுடன் தொடர்ந்து சண்டையிட நேர்ந்து விட்டது. எனவே 1981 ஆம் ஆண்டுக்குப் பிறகு குத்துச் சண்டைப் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளாகவே நிம்மோனியா பாதிப்பு, சீறுநீரகத் தொற்று பாதிப்பு, பார்க்கின்சன் என ஒன்று மாற்றி மற்றொன்றாக விடாமல் நோய்களின் குத்துகள் முகமது அலி மீது விழுந்து கொண்டேதான் இருந்தன. ஆனால், எந்த நோயினாலும் அவரை ‘நாக் அவுட்’ செய்துவிட முடியவில்லை. அந்த அளவிற்கு மன வலிமையுடன் போராடி வந்தார் அவர்!

குத்துச்சண்டைப் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாரே தவிர, பொது வாழ்க்கையை விட்டு அவர் விலகி விடவில்லை. பொதுவாக விளையாட்டுத் துறை வீரர்களுக்குத் தங்களின் விளையாட்டுகள் தொடர்பான விஷயங்கள் தவிர மற்றவிவகாரங்களில் ஈடுபாடு ஏற்படுவதென்பதுமிகவும் அரிதாக நிகழ்வதாகும். முகமது அலி கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதிலும், சமூக சேவைகளில் ஈடுபடுவதிலும் முன்வரிசையிலேயே நின்றவர்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் சமூகப் பிரச்சனைகளுக்காக நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டியதில்லை என்று தமிழ்ச் சமூகத்தில் புகழ்பெற்ற பலரும் கூறுவதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு போராடுவது கலைஞர்களின் வேலையல்ல என்றுகூட சிலர் கூறுவதுண்டு. கலைப்படைப்புகளிலும் கூட, இத்தகைய அன்றாட அரசியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை காலத்தை வென்று நிற்கும் வலிமையற்றவை என்று கூறுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், முகமது அலி முற்றிலும் வேறுபட்டவர்!

முகமது அலியை உலகம் வெறும் ‘நாக் அவுட் நாயக’ ராக மட்டுமே பார்த்திருந்தால், 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருமுறைகூட குத்துசண்டைப் போட்டிகளில் இறங்காமல் ஓய்வு பெற்று வந்த அவரை எப்போதோ மறந்து புறக்கணித்து ஒதுக்கித் தள்ளியிருக்கும். ஆனால், கருப்பின மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அவற்றை எதிர்த்து வலிமையான குரலை எழுப்பியவர் அவர். மக்களின் பொதுக்கருத்தை சரியான திசையை நோக்கியதாக உருவாக்குவதில் அவர் விட்ட ‘நாக் அவுட்’ டுகள் குறிதவறாமல் போய்விழுந்து வடித்தன. பார்க்கின்சன் நோய்க்குச் சிகிச்சை நிதி திரட்டும் பொருட்டு, ‘செலிபிரிட்டி ஃபைட் நைட் டின்னர்’ என்றொரு நிகழ்வில் கடைசியாக முகமது அலி கலந்து கொண்டிருக்கிறார். அதுதான் அவருடைய இறுதி பொதுநிகழ்ச்சி. 2016, ஏப்ரலில் நடைபெற்றது அது. சுவாசக் கோளாரினால் பாதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் (ஜூன், 2016) அமெரிக்காவின் அரிஸோனா மனித குலத்தின் மேன்மைக்காகக் குரல் கொடுத்து வந்த முகமது அலி (74 ம் வயதில்) மறைந்த பிறகு உலகம் முழுவதும் அவருக்குக் கிடைத்தது வரும் புகழஞ்சலிகள் வியப்பளிப்பதாக அமைந்துள்ளன. 31 ஆண்டு கால இடைவெளியையும் தாண்டி மிக வலிமையாக முகமது அலி மீண்டுமொரு முறை ‘நாக் அவுட்’ விட்டிருக்கிறார்!

Related Posts