அரசியல்

விருதை திரும்பக் கொடுத்த நயன்தாரா சாகலின் கடிதம் …

நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய  அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பு குறித்தும் பேசி வந்துள்ளார்.

இன்று அக்டோபர் 6, 2015- இந்திய பண்பாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் தோல்வியுற்ற அரசைக் கண்டித்தும், ஆளும் ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு மாறான மாற்றுக் கருத்தாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அதற்கெதிரான போராட்டமாக 1986’ம் ஆண்டு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

       பிளவுபடுத்தப்படும் இந்தியா

தனது சமீபத்திய உரையில், இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் “கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கான முழு சுதந்திரத்தையும்”  உறுதியளித்துள்ளது என்பதை நமக்கு நினைவுபடுத்துவது தேவை என கருதியிருக்கிறார். அதற்கு காரணமேதும் இல்லாமல் இல்லை.

ஏனெனில் இந்திய பண்பாட்டின் பன்முகத் தன்மையும், அது சார்ந்த விவாதங்களும் கொடூரமான தாக்குதலுக்கு தற்போது ஆளாகி வருகின்றது.

மூடத்தனத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவாளரனாலும், இந்து மதத்தின் ஆபாசமும், ஆபத்தும் நிரம்பிய பகுதியான ஹிந்துத்துவாவின் ஏதேனும் ஒரு அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தும் யாராயினும் – அது அறிவுத் தளமாயினும், கலைத்துறையாயினும் சரி அல்லது உணவு பழக்கத்தை பற்றியதானாலும், வாழ்கை முறையைப் பற்றியதானாலும் சரி – ஒதுக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

தனித்துவமிக்க கன்னட எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான எம்.எம்.கல்புர்கி, மஹாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என மூடத்தனத்தனங்களுக்கு எதிரான செயல்பாட்டாளர்களான மூவரும் துப்பாக்கிகளுக்கு இரையாகியுள்ளனர்.

மேலும் பலர் “அடுத்து அவர்கள்தான்” எனும் அச்சத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். மிகச் சமீபமாக, டெல்லிக்கு வெளியே பிசாரா எனும் கிராமத்தில், மொஹம்மத் அக்தக் எனும் அந்தக் கிராம கொல்லர், தனது வீட்டில் மாட்டுக் கறி சமைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தால், விசாரனையின்றி மூர்க்கமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த எல்லா வழக்குகளிலும், நீதி தன் நிலை தவறி விட்டது. இத்தகைய தொடர்ச்சியான பயங்கர செயல்கள் குறித்து பிரதமரும் அமைதி காத்து வருகிறார். அவரது சித்தாந்தத்தை ஆதரிப்போரில் இத்தகைய தீய செயல் புரிவோரை அவர் விலக்கி விடப் போவதில்லை என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

எனினும், துக்கமளிக்க கூடிய விஷயமென்பது சாகித்ய அகாடமியின் மௌனம் தான். இந்த அமைப்பு நிறுவப்பட்டதே, படைப்பாக்கத்தின் பாதுகாவலராக செயல்படவும், கலை,இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் சிறந்த படைப்புகளை ஊக்கப் படுத்துவதற்காகவுமே ஆகும்.

கல்புர்கி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஹிந்தி எழுத்தாளர், உதய் சங்கர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.  ஆறு கன்னட எழுத்தாளர்களும் தங்களது விருதுகளை கன்னட சாகித்ய பரிஷத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.

           கொலையுண்ட இந்தியர்களின் நினைவாகவும், கருத்துரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து இந்தியர்களுக்காகவும், அச்சத்திலும் நிலையாமையிலும் வாழ்ந்து வரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் ஆதரவாக, நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறேன்.

நயன்தாரா சாகல், டெஹ்ராடூன், அக்டோபர் 6, 2015.

Related Posts