சமூகம்

நயன்தாராவை பகடி செய்வோருக்கு சமர்ப்பணம்…

பெண்களுக்கு ஒழுக்க பாடம் எடுப்பதில் ஆரம்பித்து, காசு கொடுக்கிறேன், உடையை கம்மியாதான் போடணும் என சொன்ன இயக்குனரின் ஆணவத்துக்கு பதிலடி கொடுத்த நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழியென அவர் மாடர்ன் உடை அணிந்த படத்தை பகிர்ந்து, பகடி செய்வது வரை, உடை குறித்த சரியான புரிதல் இல்லாததனம் நம் ஊரில் உண்டு!

இன்னார் இதைத்தான் உடுத்த வேண்டுமென்பதில்லை, comfortablenessதான் உடைக்கு பிரதானம்! வெள்ளைக்கார பெண்மணிகள் புடவையை அணியும்போது, முந்தானையை எப்படி விடவேண்டும், எங்கே சொருக வேண்டும் என்கிற புரிதலில்லாமல் ஒரு மாதிரி புடவையை அணிவார்களே அதே கதைதான் எல்லா உடுப்புக்கும்!

நீங்கள் அணிகிற உடை மீது உங்களுக்கு அதீதமான நம்பிக்கை இருக்க வேண்டும். இது நமக்கு பொருந்துமா என்கிற அரை மனதோடு ஒரு உடையை அணியக் கூடாது. நீளமான காட்டன் கவுன் அணியும்போது காற்றில் பறந்து உடம்பில் ஓட்டும்போது, அங்கே இங்கே நெளியக் கூடாது. So what என்பதை போல இருக்க வேண்டும், ஏனெனில் அந்த உடையின் அமைப்பே அதுதான்.

துப்பட்டா போடாமலே, எந்நேரமும் துப்பட்டாவால் மூடி இருப்பதைப் போல துப்பட்டா இல்லாத உடையை சிலர் அணியும்போது ஒருவித insecurityயோடு அணிவார்கள். அதுவும் வேண்டாம், கவலைப்படாமல் துணிந்து அணியுங்கள். இல்லையேல் சுடிதாரில் இருந்து கொஞ்சமாக முன்னேறி வர வேண்டுமென்றால், துப்பட்டா இல்லாத குர்தா உடையில் இருந்து ஆரம்பிக்கலாம்! அது உங்களுக்கு முதல் கட்ட நம்பிக்கையை கொடுக்கும்!

அதுபோல ஒரு உடுப்பு உங்கள் நடையை மாற்ற கூடாது, கம்பீரத்தோடு, மிடுக்காக நடக்க வேண்டும், அந்த comfortableness உங்களுக்கு வரவில்லை என்றால், உங்களுக்கு அந்த உடை பொருந்தி இருந்தாலும் அது பொருந்தாதாகவே இருக்கும்!

அடுத்து, நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு திடீரென கிடைத்த சமூக சுதந்திரத்தில், முன்னேறி வருகிற நமக்கு திக்கு முக்காடி போகும் அளவு நவீன உடைகள் வந்து சேரத்தான் செய்யும், உடையோடு சேர்த்து மேற்கத்திய கலாசாரத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, “எங்கே எந்த உடை அணிய வேண்டுமென்கிற அறிவு”.

நம்மூர் பெண்கள் இன்னமும் ஆண்களைப் போல நீச்சல் குளத்தின் மீது அதீத பிரியம் இருந்தாலும், இன்னமும் புடவையோடும், சுடிதாரோடும் நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்க்கலாம். அவ்வளவு எளிதில் swimsuit போட முடியாது என்றாலும், நீச்சலுக்கு என்றே வசதியான உடைகள் உண்டு. முட்டிக்கு மேலே, முட்டிக்கு கீழே என எல்லா வகையான உடைகளும் கிடைக்கிறது. இதற்கெல்லாம் கொஞ்சம் மெனக்கிட வேண்டி இருக்கிறது, அவ்வளவுதான்.

உங்கள் நெருங்கிய வட்டத்தோடு, நண்பர்களோடு பார்ட்டிக்கு போகும்போது நீங்கள் நினைத்ததை அணியலாம். ஆனால் அதே உடையை சாலையை கடக்கும் போது அணிந்தால், அந்த பார்ட்டி கலாசாரம் என்னவென்றே தெரியாதவர், எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையை நீங்கள் எளிதாக கடக்கும் மனோபாவம் உங்களுக்கு இருக்க வேண்டும்! அந்த இடத்தில் “பொறுக்கி எப்படி பாக்குது பார்” என்றெல்லாம் மனசுக்குள்ள திட்டக்கூடாது. இவையெல்லாம் சுதந்திரம் என நீங்கள் நினைக்கிற அதே நேரத்தில், ஆண், பெண் பாலின செயற்பாடுகள், உளவியல் எப்படி செயல்படும் என்கிற புரிதலும் சேர்த்து வளர்வதுதான் வளர்ச்சி!

அப்புறம், சாலையில் இருப்பவன் பொறுக்கி அல்ல. உங்களோடு பார்ட்டியில் நடனம் ஆடி கொண்டிருக்கும் உங்கள் அந்த நட்பு வட்டத்தில் கூட பொறுக்கிகள் இருக்கலாம். அவனுக்கும் சாலையில் இருப்பவனுக்குமான வித்யாசம் என்னவென்றால், உங்களை எப்படி அணுகுவது என்கிற நாகரீக சூட்சமத்தை அறிந்த பொறுக்கி உங்களோடவே இருக்கலாம். அவன் அந்த சூட்சமம் தெரியாமல் சாலையில் இருக்கிறான் அவ்வளவுதான்!

மற்றபடி ஒழுக்கத்துக்கும் உடைக்கும் துளியும் சம்மந்தமில்லை! காசு கொடுக்கிறேன், கம்மியா போடுன்னா, போட்டுத்தான் ஆகணுமென்பது ஆதிக்க அதிகார திமிர், ஆதிக்கம் செலுத்தினாலே எதிர்மறையான நிலைப்பாடு உருவாகும், அந்த நிலைப்பாடுதான் இன்று நயன்தாராவுக்கு உருவாகி இருக்கிறது. அந்த நிலைப்பாடுதான் எல்லா பெண்களுக்கும் உருவாகும், அவர்களுக்கான Space கொடுங்கள், அவர்களாக புரிதலுக்கு வருவார்கள்.

நூற்று கணக்கான வருஷமா தலைமேல காலை வச்சி தண்ணிக்குள்ள அழுத்திட்டு, வெளியே வரும்போது ஜென் நிலையில் “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்று வர வேண்டுமென்றால் என்ன தியரி இது? அந்த அடிப்படையில்தான் நாம் மௌனம் காக்க வேண்டி இருக்கிறது. திமிறி கொண்டுதான் வருவார்கள். ஆசுவாசப்படுத்த கொஞ்சம் நேரம் எடுக்கும், பெண்ணியத்தை கிண்டல் செய்வதற்கான காலத்தை நாம் எட்டிவிட்டதாக நான் கருதவில்லை!

எந்த ஒரு ஒடுக்கப்படுகிற இனமும், பாலின ஒடுக்குமுறைகளிலும் சிக்குவோரும் மீண்டு எழும்போது, உங்கள் பார்வைக்கு நடைமுறையில் இருந்து மாறி வருவதை போலத்தான் இருக்கும்!

அத்தகைய பிரச்சனைகளில் சிக்குபவர் யார் என நீங்கள் கவனித்து இருக்கலாம். நம் ஊரில் உடை ஒரு அரசியல். எங்கள் வீட்டு பெண்களை ஜீன்ஸ், டி சர்ட், கூலிங் கிளாஸ் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்று கூட கதறுவதை பார்த்து இருப்பீர்கள். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை காப்பதாக நினைத்துக் கொண்டு பழிக்கும் இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னே, தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைதான் அவர்கள் கலங்க படுத்துகிறார்கள் என்பதை அறிமயாமலேயே செய்கிறார்கள்.

வெறும் கூலிங் கிளாஸுக்கும், ஜீன்சுக்குமா, டி சர்ட்டுக்கும் மயங்குகிற விதத்திலா நீங்கள் பிள்ளைகளை வளர்ந்து இருக்கிறீர்கள்? அது சலித்து போக வேண்டுமென்றால், உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு ஜீன்ஸ், டி சர்ட்டை ஆணியில் அடித்து துணிக்கடை போல தொங்க விட்டுத்தான் பாருங்களேன்!

காரணம் அதுவல்ல, இங்கே உடை ஒரு முக்கிய அரசியலாக இருப்பதுதான் பிரச்சனை, அதன் தாக்கம் இப்படித்தான் இருக்குமென பொது புத்தியில் படிய வைத்து, ஒழுக்கமற்றவர்களும், சமூகத்தில் திருந்தவே முடியாதவர்களும் அதைத் தங்களுக்கு சாதகமாக, தங்களுக்கு கீழ் நிலையில் இருந்தவர் எழவே முடியாத வண்ணம் ஒரு கருத்தை நிறுவு முயற்சி செய்கிறார்கள்!

உடை கிளர்ச்சியைத் தூண்டி தவறு செய்ய முனைய செய்ய வேண்டுமானால், பிரிட்டிஷ் ஆண்டபோது கவுன் அணிந்த வெள்ளைக்கார பெண்மணிகள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதிகாரத்துக்கு முன்னே துளைகள் அனைத்தும் மூடி இருந்ததைபோல, இந்திய அரசு அதிகாரத்துக்கு மட்டும் திறந்து கொள்ளுமா? ஆக பிரச்சனை, நம்மை ஆண்ட வெள்ளையன் பெரும்பாலும் நமக்கு பொது எதிரியாக இருந்து நம்மை எல்லோரையுமே கட்டுக்குள் வைத்து இருந்தான். ஆனால் அவன் போன பிறகு நாம் சொந்த அரசுக்கு பயப்படாமல், அல்லது அந்த அரசே சமூகத்தின் நீட்சியாக பாரபட்சத்தோடு இருப்பதால், சமூக பாகுபாடு அறிந்து, பாலின பேதத்தை அறிந்து, ஒருவரை இகழ்வதற்கும், ஆதிக்கம் செலுத்துவதற்கும், சீண்டுவதற்கும் இன்னார் இப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக சட்டங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம்!

எல்லாமே mindsetதான், மாறலாம், மாறலாம், முயற்சி பண்ணுங்க! அது அது அப்படித்தான் நடக்கும், ஒழுக்கமா இருக்க வேண்டியது நம்மதான்!

– வாசுகி பாஸ்கர்

Related Posts