இதழ்கள் இளைஞர் முழக்கம்

நமது நீர் – நமது உரிமை- நக்கீரன்

தண்ணீர் அரசியல் பேசுவோம்நக்கீரன்

  1. நமது நீர்நமது உரிமை

2000ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தி ஹேக் நகரில் நடத்தப்பட்ட இரண்டாவது உலக நீர் மன்ற மாநாட்டில், ‘நீர் ஒரு வணிகப் பொருள்’ என்ற கருத்து அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று வருத்தப்பட்டது உலகவங்கி. இக்கூட்டத்தில்தான் நீரானது ‘உரிமை’ என்பதற்கு மாறாக அது ஒரு ‘தேவை’ என்று வரையறை செய்யப்பட்டது. உரிமை என்றால் நீரை மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமையாக மாறிவிடும். தேவை என்றால் அந்த கட்டாயமில்லை.

பிறகு கியாட்டோ நகரில் நடந்த மூன்றாவது மாநாட்டின் ஓர் அறிக்கையை  சர்வதேச நிதி நிறுவனத் தலைவர் மிச்சேல் காம்டெஸ்ஸஸ் கொண்டுவந்தார். அவ்வறிக்கை, ஒரு நாட்டில் தனியார் வணிகத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஈடுப்பட்டிருக்கும்போது அந்த நாட்டின் அரசியல் சிக்கல்களாலொ, வேறு ஏதாவது காரணங்களாலொ அந்நாட்டின் பணமதிப்பு குறையும்போது தங்களுடைய இலாபத்தை உறுதிப்படுத்த டுக்ஷகு வேண்டும் என வலியுறுத்தியது. (பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டும் நிறுவனத்தின் வாங்கப்படாத பங்குகளை வாங்கிக் கொண்டு திரட்ட வேண்டிய தொகையைப் பெற உதவும் வசதி) அதாவது பொதுநிதியை பயன்படுத்தாமல் இத்தனியார் தண்ணீர் நிறுவனங்கள் இயங்காது எனபதுதான் செய்தி. மொத்தத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் இறையாண்மையை அடிமைப்படுத்திக் கொள்வதே இதன் நோக்கம்.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக மேம்பாட்டு இயக்கம்  ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் நான்கு முதன்மையான பொது நீர் விநியோக அமைப்புகளில் இரண்டாவதாக தமிழ்நாடு இடம் பெற்றிருந்தது. இத்தகையப் பெருமையை இன்று தமிழ்நாடு இழக்க விரும்புகிறதா என்பதுதான் கேள்வி. ‘இல்லை, நாங்கள் உலக வங்கியின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

இலத்தின் அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது.  இந்த ஒப்பந்தத்தின்படி பார்த்தால் கடல்நீரைத் தவிர மற்ற நீர் அனைத்தும் வணிகப்பொருளாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நாஃப்டாவிலுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் மற்ற நாட்டின் நீரை வணிகரீதியில் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமையுண்டு. அதேபோல் ஒரு நாடு மற்றொரு உறுப்பு நாட்டுக்கு நீரை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று தெரிந்தாலும்கூட அந்த ஏற்றுமதியை நிறுத்தும் உரிமை அதற்கு கிடையாது. அவ்வாறு நிறுத்திவிட்டால் நீர் ஏற்றுமதியை நிறுத்தும் நாடு இறக்குமதி செய்யும் நாட்டுக்கு இழப்பீடு தர வேண்டும். இங்கு பெரும்பானமையான நீரை இறக்குமதி செய்யும் நாடு அய்க்கிய அமெரிக்காதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவ்வளவு கடுமையான விதிமுறைகள் கொண்ட இந்த ஒப்பந்தத்திலிருந்துக்கூட மே 2007ஆம் ஆண்டு மூன்று நாடுகள் விலகும் முடிவை அறிவித்தன. பொலிவியா, வெனிசுலா, நிகரகுவா ஆகியவையே அந்த நாடுகள்.

இந்த நாஃப்டா ஒப்பந்தத்தின்படி நீர்க்குறித்த எந்த சிக்கலும் நீதிமன்றத்துக்கு செல்லாது. மாறாக இந்த உலக வட்டிக்கடை அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு கட்ட பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை வைத்திருக்கிறது. அதற்கு முதலீட்டு சிக்கல் தீர்வைக்கான உலக வங்கியின் சர்வதேச நடுவம்என்று பெயர். தனியார் தண்ணீர் விநியோக ஒப்பந்தங்களை ரத்து செய்த நாடுகளிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரும் தனியார் தண்ணீரி நிறுவனங்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொண்ட முறையை பார்த்து அதிலிருந்து விலகுவதாக இந்த நாடுகள் அறிவித்தன. உண்மையிலேயே உலக வரலாற்றில் இது ஒரு துணிச்சலான முடிவு.

இந்த புரட்சிகரமான முடிவை எடுத்த வெனிசுலா நாட்டுக்கு துணிவுமிக்க `ஹியூகோ சாவேஸ் என்ற தலைவர் இருந்தார். துணிச்சல், புரட்சி என்பதெல்லாம் வெறும் சொல்லொ, பெயருக்கு முன்னாலான அடைமொழியோ கிடையாது. அது செயல். இந்தச் செயலை செய்யும் ஆட்சித் தலைமைகள் நம்மிடம் கிடையாது. அப்புரட்சியை மக்கள்தாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆந்திர உழவர்கள். நீர் தனியார்மயத்துக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உலகவங்கியின் தலைவராக இருந்த n

ஜம்ஸ் கூல்ஃபென்சோன் ஆந்திராவுக்கு வந்தபோது அந்த உழவர்கள் அவரை விரட்டியடித்தனர். ஆனால் புறநானூற்று வீரம் பேசுகிற தமிழர்க் கூட்டமாகிய நாம் இன்னும் புண்ணாக்கு மூட்டையாக கிடக்கிறோம்.

தண்ணீர் குறித்த முடிவுகள் என்பது உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி இன்று உலகவங்கியால் எடுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது. இந்நிலைத் தொடர்ந்தால் நமது நீரையெல்லாம் தொழிற்சாலைக் கழிவுகளால் பாழாக்கிவிட்டு சாக்கடை நீராக்கி விடுவார்கள். பிறகு அந்த சாக்கடை நீரை தூய்மைச் செய்து அதை நம்மையே குடிக்க வைப்பார்கள் இது மிகைப்படுத்தப்பட்ட சொற்கள் அல்ல. ஆஸ்திரேலியாவில் நடக்கும் அப்பட்டமான உண்மை.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பிரதமர் பீட்டர் பீட்டி கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தபோது அவர் ஆணவமாக, “ இவை அசிங்கமான முடிவுகள்தான், வேறு வழியில்லை; நீங்கள் குடிக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்” என்றார். ஆனால் இதே பிரதமர் தான் அருந்துவதற்கு சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புட்டிநீரை பயன்படுத்துகிறார். இதுதான் அரசியல்.

இந்த அரசியலை பொது மக்கள்தான் மாற்ற முடியும். கொச்சபம்பாவில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியான ஒலிவேரா தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியதுப் போல் குயின்ஸ்லாந்தில் குழாய் பழுது பார்ப்பவரான லொரி n

ஜான்ஸ் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

இன்று நம்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் தண்ணீர் ஓர் உரிமை என்பதை வலியுறுத்தும் போராட்டங்களும் சட்டத்திருத்தங்களும் தேவைப்படுகின்றன. இது ஒன்றும் நடக்கவே இயலாத ஒன்றல்ல. உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான உருகுவே நாடு இதனை சாதித்துக் காட்டியுள்ளது. 2004 அக்டோபர் 31, தண்ணீர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் உருகுவே நாடு உலக நாடுகளிலேயே முதலாவது நாடாக தண்ணீர் என்பது ஓர் உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் அந்நாட்டிலிருந்த தனியார் தண்ணீர் நிறுவனங்கள மூட்டைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியதாயிற்று. உலக வட்டிக் கடையால் வெறுமனே வேடிக்கப் பார்க்கத்தான் முடிந்தது.

இவ்வெற்றிக்கு அந்நாட்டு மக்களே அடிப்படைக் காரணம். அவர்கள் ஒன்றுப்பட்டு எழுப்பிய கோரிக்கைகள் மக்களின் இயக்கமாக மாறி இதை செய்துக்காட்டியது. தமிழக மக்களாகிய நாமும் இப்படி ஒன்றுப்பட வேண்டிய காலம் கனிந்திருக்கிறது. ஒன்றுப்படுவோம். ஒரே குரலில் முழங்குவோம்.

‘நமது நீர் – நமது உரிமை’

Related Posts