சமூகம்

நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

343208-rape-woman-violence-domestic-murder

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.

            உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் தலைகுனிய வைத்துள்ள சம்பவம்.

இந்தியத் தலைநகரை குலுங்க வைத்த நிர்பயாவை பின்னுக்குத் தள்ளி நிறுத்திய  கொடூர சம்பவம். நிர்பயாக்கள் உருவாக, ருத்திராட்சப் பூனைகள் முதல் அரசியல்வாதிகள் வரை பெண்களின் உடை, தோற்றம் என தேடித்தேடி காரணம் கற்பிக்கும் சூழலில் தான் சத்தமில்லாமல் அரியலூரின்  திருகாம்பூர் கிராமத்தில் ஏதுமறியா அப்பாவி சிறுமி நந்தினியின் கொடூரக் கொலையும் நடத்தப்பட்டிருக்கிறது.

            அவள் செய்த தவறு காதல் எனும் பெயரில் காதலனின் கொடூர குணம் அறியாமல் அவன் விரித்த வலையில் வீழ்ந்தது. 16 வயதே நிறைந்த ஒரு சிறுமி சம்மதித்து திருமணம் நடந்தாலே சட்ட அங்கீகாரம் இல்லை என்னும் போது அவளை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததை எந்த வகையில் சேர்ப்பது?

            திருமணத்தை வற்புறுத்தியதால் கிடைத்த பரிசு, நம் கற்பனைக்கு எட்டாதது .    திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வரவழைத்து, வலி தாங்க இயலாமல் கத்துவதற்கான வாய்ப்பு கூட இல்லாத வகையில் வாயில் துணியை திணித்து காதலன் மணிகண்டன்,  திருமுருகன், வெற்றிச் செல்வன், மணிவண்ணன் ஆகிய நால்வர் கூட்டணி கொடூரமான முறையில் நிகழ்த்திய பாலியல் வல்லுறவுக் கொடுமை.

            அடுத்து அவள் வயிற்றில் உள்ள சிசு குற்றவாளியை அடையாளம் காட்டி விடுமே என அவள் பிறப்புறுப்பை கிழித்து ஆறு மாத கருவை வெளியே எடுக்கும் முயற்சி ஈரம் உள்ள எந்த மனிதனாலும் எண்ணுவதற்கே இயலாதது. இந்தக் கொடுமைகள் தாங்காமல் அவள் இறந்த பிறகு அவள் உடலை கல்லைக் கட்டி கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

            இத்தனைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேறு யாருமல்ல! 2002ல் குஜராத்தில் இந்துப் பெண் இஸ்லாமிய ஆடவனை மணந்து அவன் கருவைச் சுமந்ததால் கர்ப்பிணிப் பெண் வயிற்றை உயிருடன் கீறி கருவை எடுத்து தீயில் வீசியெறிந்த இரக்கமற்ற கும்பலின் தமிழக வாரிசுகளான இந்துமுன்னணிக் கயவர்களே!

            காதலன் மணிகண்டன் இந்து முன்னணி செந்துரை ஒன்றியச் செயலாளர் .   மேற்கண்ட கொடூரக் குற்றங்களை நிகழ்த்த வழிகாட்டி”பெண் அதிலும் தலித் பெண் அனுபவிக்கும் பொருளன்றி வேறல்ல, அந்தக் கரு குழந்தையல்ல வெறும் பிண்டமே ” என்ற எண்ணத்தை இதன் மூலம் நிலைநாட்ட அனைத்து வகையிலும் உதவியவன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர்.

            எந்த அட்டூழியமும் தட்டிக் கேட்க ஆளில்லாத போதுதான் தலைவிரித்தாடும்.     இது உண்மை என்று நிரூபித்தது இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இரும்புலிக்குறிச்சி காவல்நிலைய காவலர்களின் செயலற்ற தன்மை.

            டிசம்பர் 28 அன்று காணாமல் போன ‘தன் மகளை மணிகண்டன் கடத்திச் சென்றுள்ளான் ‘என தந்த புகாரைC3aIbhCUMAAh1bX ‘காணாமல் போன தன் மகள் நந்தினியை தேடித் தருமாறு மாற்றி எழுதி ‘வாங்கி அலைக்கழித்துள்ளனர். ஜனவரி 14 அன்று கீழமாளிகையில் ஒரு கிணற்றில் வீசிய துர்நாற்றம் காட்டிக் கொடுக்க, பார்த்தவர் மனம் பதைக்கும் வகையில் நிர்வாணமாக அழுகி புழு ஊறிய நிலையில் இருந்த பெண் உடலை ‘பாப்பா என தான் செல்லமாய் அழைத்த தன் மகளின் உடலே’ என தாய் ராஜகிரி அடையாளம் காட்ட அன்றே அதில் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் , பகுஜன் சமாஜ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து போராடிய பிறகு குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப் பட்டனர். இப்போது மணிகண்டன், மணிவண்ணன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூளையாக செயல்பட்ட ராஜசேகர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

             இதில் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்ட நந்தினி ஆதரவற்ற ஏழை தலித் சிறுமி. இது இங்கு மட்டுமல்ல! இந்த பிரச்னையில் கள ஆய்வு செய்து பல உண்மைகளைக் கண்டறிந்த மாதர்சங்கமும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் இணைந்து அதன் பிறகு கடலூர் மாவட்டத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டு கண்ட உண்மை அங்கும் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வரும் குழந்தைகள் பெரும்பாலும் தலித் சிறுமிகள் என்பதே!

திட்டக்குடி புடையூர் கிராமத்தில் ஐந்து பேரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாகியுள்ள கொடுமை செய்த முக்கிய குற்றவாளிகள்  தீபக் மற்றும் பிரபு. இதில் தீபக்  தனியார் பொறியியல் கல்லூரி நடத்தும் பிரமுகரின் மகன் என்பதால் அவரை தப்புவிப்பதில் தான் அங்குள்ள காவல்துறை தொடர்ந்து ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் நிலை உள்ளது.

            பாதிக்கப்பட்டவர்கள் மேல்சாதியினராகவும் வசதி படைத்தோராகவும் இருக்கும் போது தானாகவே வாய் திறக்கும் நீதிமன்றங்களும், செயல்படும் காவல்துறையும், பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களும் இது போன்ற பாதிப்புகள் குறித்து இது வரை கள்ள மௌனம் சாதித்தன. இப்போது பேசத் துவங்கிய நிலையிலும் அரசும் காவல்துறையும் ஏதோ தானாகவே செயல்பட்டது போல ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தவும், குற்றவாளி மணிகண்டன் நீக்கப்பட்டதை மட்டும் கூறி சம்பந்தப்பட்ட அமைப்பின் புனிதம் காப்பாற்றவும் முயற்சிக்கின்றன. இருப்பினும் குற்றம் செய்பவனைவிட அதைத் தூண்டுபவனுக்கு தண்டனை  அதிகம் என சட்டம் சொல்லும் நிலையில் இதை வழிநடத்திய இந்து முன்னணி மாவட்ட செயலாளர்  ராஜசேகர் மீது கைது நடவடிக்கை தேவை என்பதை தீக்கதிர் தவிர ஊடகங்கள் எவையும் அடையாளம் கூட காட்டவில்லை.

      ஜல்லிகட்டு போராளிகளை ஃபிரீசெக்ஸுக்கு கூடத்தான் கூடுவாங்கன்னு கொச்சைப்படுத்தின இந்து முன்னணியின் ஒரு அங்கமாக அதை ஏற்று செயல்படும் ராதாராஜன் இது பத்தின விளக்கமா ‘ஒரு குழந்தையை அம்மா லேசா அடிச்சா கூட தலையிடுவேன்’னாங்க. அத்தனை இளகின மனம் கொண்டவங்க மனசுல ஒரு இந்துப் பெண்ணுக்கு நேர்ந்த இது போன்ற மிகப் பெரிய கொடுமைகள் லேசா தட்டின மதிப்பைக் கூட பெறலை!

             தேசிய குற்ற ஆவணங்கள் காப்பக பதிவுப்படி 2010-ல் தலித் மக்களுக்கெதிராக 32,712 குற்றச் சம்பவங்களும் அதன் பிறகான ஐந்தாண்டுகளில் 44 % அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டும் 1,782 என்ற கணக்கை இந்து தலையங்கம் பதிவு செய்துள்ளது. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக மிதிபடும் இம்மக்களுக்கு நியாயம் கிடைக்க, இது போன்ற சூழலில் ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பலரும் ராஜசேகரின் கைது நடவடிக்கையை வலியுறுத்துவதை அலட்சியமாக கடந்து செல்ல முடியாது.

            இந்த பிரச்னைகளில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், வழக்கை முறையாக விசாரிப்பதும், தண்டனையை உறுதிப்படுத்துவதும் மிக அவசியம் . இதை வலியுறுத்துவது மனிதநேயம் கொண்ட நாகரிக சமூகம் புறந்தள்ள முடியாத கடமை.

        எனவே துவக்கம் முதல் பாதிக்கப்பட்ட சிறுமி நந்தினி குடும்பத்தினருடன் இருந்து அவர்களின் மனநிலையை நன்கு புரிந்து செயல்படுகின்ற அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளான

  1.  சிபிசிஐடி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட வேண்டும்.
  2. முக்கிய குற்றவாளியான இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.
  3. நந்தினி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  4. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 8லட்சத்து 25000 வழங்க வேண்டும்
  5. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை அனைவரும் முன்னெடுப்போம்.

            இதில் வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் சிபிஐஎம் மாநில செயலாளர்          ஜி.ராமகிருஷ்ணன் நேரடியாக அம்மக்களை சந்தித்ததையும் முதல் உதவியாக ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் ரூ 25000 தந்ததையும் வரவேற்போம்!

அதே நேரம் சமூக மனசாட்சி தனக்கு விடப்பட்ட சவாலை சுலபமாக ஒதுக்கித் தள்ளாமல் சாதீய மற்றும் பெண்ணடிமைத்தன கொடுமைகளை வேரறுக்கத் துணை நின்றும், கயவர்கள் யாராயினும் பொது சமூகத்திலிருந்து தள்ளி வைத்தும் எதிர்கொள்வோம்!

– ஆர்.செம்மலர்.

Related Posts