பிற

நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் – ந.கோபி.

பேராசான் காரல் மார்க்சின் ஆசியபாணி உற்பத்தி முறையென்கிற தத்துவப் புலத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய இலக்கியப்பிரதி இது. “சாதி-வர்க்கம்-நிலவுறவுகள்” தொடர்பான அத்துனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு மிக எளிமையாகவும் அதேவேளை மிகச் சுறுக்கமாகவும் வட்டார வழக்காடலுடன் கூடிய விளிம்புநிலை வாழ்வியலையும், அதன் உள்ளார்ந்த பிரச்சனை பாடுகளையும் கூர்மையாக பதிவுசெய்கிற அதே வேளை, கதைக்களத்துக்கு கொஞ்சமும் தேவையில்லாத பதட்டத்தோடு மிக அவசரமாக நாவல் முடிவடைந்திருக்கிறது. அத்தகைய அவசரம் இக்கதைகளத்துக்கு தேவையில்லாதவென்று என்பது என்னுடைய விருப்பம்.

நாவலின் முதல்மூன்று சாப்டர்கள் தான் இக்கதைகளத்தின் அடித்தளம்.அதே பகுதிகள் தான் மிகவிரிவானதொரு நாவலுக்கான தோற்றுவாயாகவும் இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றதொரு வாழ்வியல் எதார்த்தத்தை போல நீண்டிருக்கவேண்டிய கதை…. ஏன் அதையும் விஞ்சக்கூடிய வகையில் ரத்தமும் சதையுமாக தெறிக்கவிட்டிருக்க வேண்டிய நாவல் என்றும் சொல்லலாம். அப்படி சொல்வது பிழையாகாதென்றே நினைக்கிறேன். ஏனோ அப்படியேதும் நிகழாமல் கதையின் இறுதியில் ஊடாடும் தேவையில்லாத பதட்டம் இந்நாவலை சற்று குலைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது என்றே நினைக்கிறேன்.

நிலமான்ய உறவுகளின் தோற்றுவாயிலிருந்து, நிலவுடமையின் ஆதிக்கம், காலவளர்ச்சியின் வேகத்தில் வீழ்ச்சியுற்று அதன் மேலான இறுக்கம் குத்தகையென்கிற புதுவடிவில் மறுகட்டுமானம் அடைவது வரையிலான நீட்சியையும் படிநிலை மாற்றத்தையும் மிகச்சரியாகவே பதிந்திருக்கிற அதேவேளை “கொத்தடிமை-கூலி-பொருள்-பண்ட மாற்றம்” என்பதான நிலவுறவுகளின் அடிப்படையை தினக்கூலி என்றும் ‘பொருளுக்கு பதிலாக பணம்’ என்பது வரையிலான நிலவுடமைசார் பொருளாதார அபிவிருத்தியையும் ஒருங்கே பதிவுசெய்திருப்பது சிறப்பு.

மருதம், நெய்தல் என இருவகை நிலங்களின கூட்டணியாக கதைகளத்தின் பாடுகள் பயணப்பட்டாலும் இருவேறு உற்பத்தி முறைகளையும் அது சார்ந்த உணவு பழக்கத்தையும் கொண்ட மக்களின் பண்பாட்டையும் அதற்கேவுரிய வாழ்வியல் முறைகளையும் இதன்வழியே கண்டடைய முடிகிறது.

அம்பேத்கரிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான தேவையற்ற விரோதம் களத்துக்கு ஒருபோதும் ஒவ்வாது என்பதை மிகத்தெளிவாக சொல்லியிருப்பதோடு கொத்தடிமையாகவிருந்து தினக்கூலியாக மாறியதிலும் குறிப்பாக பொருளுக்கு பதிலாக பணம்(கூலி) என்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை பதியவும் தவறவில்லை.

பொதுவாக வட்டார மொழி இலக்கியம் என்கிற போது அது வாசிப்பை தாமதப்படுத்தும், இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வதற்கு ஒன்றுக்குமேற்பட்டமுறை அதை வாசித்து உணரவேண்டியிருக்கும் என்பது இந்த புத்தகத்தின் மூலம் நிதர்சனமாகியிருக்கிறது.

– மதுசூதன் ராஜ்கமல்.

 

Related Posts