அரசியல்

நண்பன் யாரென்று சொல்லுங்கள் சமஸ் . . . . . !

எதிரியை பற்றி பேசும் போது நண்பன் யார் என்று சொல்ல வேண்டாமா-?

அன்புள்ள சமஸ் அவர்களுக்கு, தங்கள் எழுத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவன் என்ற அடிப்படையில் தங்கள் மீதுள்ள அன்பின் தூண்டுதலில் எழுதுகிறேன்.

எளிமை, நேர்மை, தியாகம், போராட்டமே வாழ்க்கையாக உள்ளவர்கள் இடதுசாரிகள் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆனால் ஒன்றை (மதவாதம்) எதிர்க்கிறேன் என்று சொல்லும் தாங்கள் அதற்கான மாற்றாக தொடர்ந்து மற்றவர்களை விட கூடுதலாக களத்தில் இடதுசாரிகள்தான் நின்றார்கள் என்ற உண்மையை ஏன் நீங்கள் உரைக்கவில்லை., இதைச் சொல்லும் போது தங்களது கட்டுரையில் பல நேரங்களில் சொல்லியுள்ளோமே என்பீர்கள்., கட்டுரையில் ஒரிரு வார்த்தைகளால் கடந்து செல்வது எளிது. உண்மையை கட்டுரையாக்கி சொல்லும் போது மாற்று யார் என்று தெரியும்., எதிரியை பற்றி பேசும் போது நண்பன் யார் என்று சொல்ல வேண்டாமா-?

களத்தில் நின்றது யார்-? கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக

ரோமபுரி சாம்ராஜ்யத்தில் அடிமைகளின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையும், கொடூரத்தையும் விட கடுமையாக அடக்கப்பட்டவர்கள் நம்முடைய தஞ்சை தரணி விவசாய பண்ணையடிமைகள் என்பது இன்றைய தலைமுறையில் எத்தனைப்பேருக்கு தெரியும்.  பண்ணையடிமைகள் சந்தித்த கொடுமைகள் வரலாறு சொல்லும். கூழாங்கற்கள் சொருகப்பட்ட வைக்கோல் பிரி சவுக்கை கொண்டு அடித்தால் இரத்தம் உடலெல்லாம் கொப்பளிக்கும். இந்த சாட்டை மட்டுமல்லாது புளியமாரை கொண்டு அடித்து விளாசுவார்கள்.  எதிர்த்துக்கேட்டால் சாணிப்பாலை வாயில் ஊற்றி தொண்டையையும், வயிற்றை புண்ணாக்குவார்கள். உழவுக்கு உதவும் வீட்டு மிருகங்கள் கூட வேலை முடிந்தால் ஒய்வெடுக்கும். அது கூட இல்லாமல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று தண்டிக்கப்பட்டவர்கள்தான் தஞ்சை தரணியின் விவசாயிகள். அதனால் தான் இன்றும் அங்கே ஒரு பாட்டு பிரபலமாக பாடப்பட்டு வருகிறது ”தஞ்சை மக்கள் அழுத கண்ணீர் காவிரி என்பார்” என்று.,

உழைத்த உழைப்பெல்லாம் நெல்மணியாக களத்துமேட்டுக்கு வந்து சேரும்போது அங்கே ஜமீன்தாரும், இனாம்தாரும், நிலப்பிரபுக்களும், மேல்தட்டினரும் வந்து நின்று குத்தகை விவசாயிக்கு மூன்றில் ஒரு பங்கு, ஐந்தில் இரண்டு பங்கு கொடுத்துவிட்டு மீதி பங்கை  கொள்ளையடித்தவர்கள்தானே, அதுமட்டுமா? கொடுக்கும் பங்கிலும் கை வைத்தார்கள் பல செலவுகளை சொல்லி நீராணிக்கன், தலையாரி, ஊர்பொதுவுக்கு, கங்காணம், மானியம், மேல்வார சுதந்திரம், அலுப்பு சலுப்பு, வெற்றிலைப்பாக்கு என பல பெயர்களில் பிடித்தம் செய்வார்கள்.  இத்தோடு நின்றார்களா? பாவிகள்  இனாம்தார் வீட்டில் குத்தகை விவசாயி வைக்கோல் போர் மேய்தல், கொல்லை சுவர் வைத்தல், விறகு வெட்டுதல், பெண்கள் என்றால் வீட்டில் சாணம் தெளித்தல், வீடு சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்தல், நெல்குத்துதல், அரிசி புடைத்தல், வெந்நீர் காயவைத்தல் போன்ற வேலைகளை கூலி இல்லாமல் இலவசமாக செய்து தர வேண்டும்,

கலங்கி நின்ற மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி நீயும் மனிதன், பண்ணையும் மனிதன்தான், அதனால் அடித்தால் திருப்பி அடி என்று ஆவேச உணர்வூட்டிய  பி. சீனிவாசராவும் கம்யூனிஸ்டுகளும் உருவாக்கிய செங்கொடி விவசாய சங்கத்தால் அடக்கப்பட்டவர்கள் எரிமலையாய் கொதித்து எழுந்தனர், அடித்தவர்கள் நொறுங்கிப் போயினர். பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் வந்தது. இதற்கு இறுதி விலை வெண்மணியில் எரிந்துபோன 44 உயிர்களில் 4 வயது வாசுகியும், 70 வயது தங்கய்யனும் இருந்தனர். இன்றும் அவர்களின் தியாகம் வீண்போகாமல் போராட்டங்கள் வார்த்தெடுக்கப்படுகின்றன. அன்று தஞ்சையில் மட்டுமல்ல, வத்திராயிருப்பு சுத்தவாரப் போராட்டம், ஆயக்குடி போராட்டம், அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவுதான் ஜமீன்கள் ஒழிக்கப்பட்டது.

இன்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைமக்களின் உரிமைக்களுக்காக தொடர்ந்து போராடுவது யார்?  ஆளும் அரசுகளின் அக்கிரமமான நடவடிக்கைகளால் மானியங்கள் குறைக்கப்படுவதும், பயிர்கடன் வட்டிவிகிதம் கூட்டப்படுவதும், இடுபொருட்கள் விலை உயர்த்தப்படுவதும், உற்பத்திப் பொருட்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததும் விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்றி வருகிறது. ஒரு புறம் வசதியான நிலவுடைமையாளர்கள், கிராமப்புற கந்துவட்டி மற்றும் ரியல் எஸ்டேட்காரர்கள், ஆதிக்கம் செய்பவர்கள் மண்ணையும், நீரையும், உழைப்பையும் திருடுகிறார்கள். இன்றும் மோடியின் ஆட்சியிலும் சரி, இரு திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் சரி கிராமப்புற விவசாயிகளின் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தையும் பிடுங்குவதற்கு சட்டம் போட்டு பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளிடம், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு என வர்த்தகத்திற்கு, வியாபாரத்திற்கு கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள்.

இதனால் கிராமப்புற ஏழைகள் மேலும் ஏழைகளாகவே இருக்கின்றனர். 79 சதம் விவசாயக்கூலிகளுக்கு நிலம் கிடையாது, 75 சதம் மக்கள் 5000 ரூபாய் வருமானத்திற்கு குறைவாக கொண்டே வாழ்க்கை நடத்துகிறார்கள். வருமானத்தில் 40 சதத்தை மருத்துவத்திற்கே செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய கிராமப்புறங்களில் உள்ளது. 70 சதம் பேர் வைத்தியத்திற்கு கடன் வாங்கித்தான் செலவு செய்யும் நிலை. படிக்க வைக்க முடியாத நிலை. இவைகளுக்கு எதிராக கவுரவத்தோடு வாழ நினைக்கும் விவசாயி முடியாமல் தற்கொலைக்கு தூண்டப்படுவதும், இறந்தால் வேறு காரணங்களை சொல்லி எக்காளமிட்டு ஏளனம் செய்து வருகிறார்கள் திமுக, அதிமுக, பாஜக, காங் கட்சியினர். இதற்கு எதிராக விவசாயிகளை, விவசாயத் தொழிலாளிகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருவது யார் கம்யூனிஸ்ட்கள் இல்லையா-? ஏன் திட்டம் போட்டு உங்கள் ஊடகங்களில் மறைக்கிறீர்கள்,. அமரர்.ஜீவானந்தம் பாடுவார், “காலுக்கு செருப்புமில்லை, கால்வயிற்றுக்கு கூழுமில்லை, பாலுக்கு உழைத்தோமடா, பசையற்று போனோமடா” இதுதான் ஏழைமக்களின் வாழ்க்கை.

கிராமப்புறங்களில் இன்றும் நீடித்து நிற்கும் சாதிய வன்மங்களும், ஆதிக்கங்களும் உழைப்பு சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வர்க்கப்போராட்டம் ஒரு  கால் என்றால் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மறுகால் எனவே இரண்டு கால்களிலும் நின்றுதான் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்தமுடியும் என்பது கம்யூனிஸ்ட்களின் பாலப்பாடம். அதனால்தான்

தூத்துக்குடி கொடியங்குளம், நாலுமூலைகிணறு, முருகன் குறிச்சி போன்ற இடங்களில் தலித் மக்களின் மீது காவல்துறையின் அத்துமீறல் கொலை வெறித்தாக்குலை எதிர்த்து களத்தில் நின்றது யார்? உத்தபுரம் துவங்கி கோவை, சேலம் வரை தமிழ்நாட்டின் தீண்டாமைச்சுவர், ஆணவக்கொலைகள், ஆலயநுழைவுபோராட்டம், இரட்டை டம்ளர் ஒழிப்பு, முடிவெட்டுதல், சமமாக பள்ளிக்கு செல்லுதல், பொதுச் சொத்தை பயன்படுத்துதல் என்று மாற்றத்திற்கான திறவுகோலை அனைத்துப்பிரிவினரையும் உள்ளடக்கி நடத்திய போராட்டங்களின் விளைவாக சாத்தியப்படுத்த முடிந்தா? இல்லையா?  இன்றைக்கு நகர்புற தொழிலாளர்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு பல தரப்பட்ட சாதி, மதம், இனம், நிறம், மொழி என்று பார்க்காமல் தீண்டாமை ஒழிப்பு முதல் கடமை, சாதி ஒழிப்பு இறுதி இலட்சியம் என முழக்கமிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை உருவாக்கி போராட்டங்களை நடத்தி வருவது யார் ?  அந்த தலித் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, குடிநீர், வங்கிகடன் வசதி, சமத்துவமான வாழ்க்கை என்று மாற்று முழக்கங்களை முன்னிறுத்தி போராடி வருவது யார்?

பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டம் காலம் துவங்கி இன்றுவரை ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என மக்களுக்காக போராடி வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களின் நேர்மையின் மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்காதீர்கள். பொதுவுடைவாதிகளை மறைக்க நீங்கள் காக்கும் மௌனத்தின் பின்னால் உள்ள அரசியல் என்ன ? என்னை பொறுத்தவரை நடுநிலையான ஏடு, நடுநிலை ஊடகம், நடுநிலையாளர் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரச்சனை குறித்து பேசும் போது எப்படி நடுநிலையாக இருக்க முடியும் ? ஒன்று சரியின் பின்னால், அல்லது தவறின் பின்னால் இரண்டு வாய்ப்புகள்தான் இருக்க முடியும். சரியை ஆதரிக்காமல் நடுநிலை என்று சொன்னால் தவறின் பின்னே ஒளிகின்றீர்கள் என்றுதானே அர்த்தம்.  அன்புள்ள சமஸ்க்கு மட்டுமல்ல ?  நடுநிலை என்ற பதத்தை முன்வைக்கும் அனைவரையும் நான் கேட்க விரும்புவது நீங்கள் யார் பக்கம் ? சரியின் பக்கமா? தவறின் பக்கமா ?

கிராமப்புற விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு மட்டும் தானா ? 

இறுதி சொட்டு ரத்தம் போனாலும் அது தொழிலாளிவர்க்கத்தின் நலனுக்காகத்தான் போகும் என்று கத்தியில் குத்தப்பட்டு மரணப்படுகையில் இருந்த விபிசி போன்றவர்கள் நகர்புற உழைப்பாளிகளின் உரிமையும், உதிரத்தையும்  பாதுகாத்தவர்கள் அல்லவா-?

1990 களுக்கு பின் வந்த இளைஞர்களுக்கு இந்தியா நாட்டின் சுதந்திரப்போராட்டத்தின் உண்மையான வரலாறு தெரியுமா -? சங்கரய்யா, நல்லகண்ணு பெயரல்ல பிரச்சனை, அவர்களின் தியாகத்தை எப்போது பட்டியலிட்டீர்கள் ? இதை விடுங்கள் தீண்டாமைக்கெதிராக, வேலையின்மைக்கு எதிராக, சமச்சீர் கல்வி அமலாக்கத்திறகு, கட்டாய நன்கொடை மற்றும் கல்விநிலைய அவலங்களுக்கு எதிராக, பாலியல் வன்முறைக்கு எதிராக, மதுக்கடைக்கு எதிராக, கார்ப்ரேட் நிறுவனங்களின் சதிகளுக்கு எதிராக, உழைப்பு சுரண்டலுக்கு எதிராக, இயற்கை கனிம வளக்கொள்ளைக்கு எதிராக, நீர் திருட்டுக்கெதிராக, அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க, மலை வாழ் மக்களுக்கான போராட்டம் என பட்டியலிட்டால் தினமும் பல போராட்டங்கள், இதையெல்லாம் நடத்தியவர்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் அதன் வெகுஜன அமைப்புகள் என்பதை என்றாவது தங்களுடைய பத்திரிக்கையில் வெளியிட்டது உண்டா- ?

மேற்படி கோரிக்கைகளுக்காக 4000 கி,மீட்டர் தமிழகத்தின் 8 முனைகளில் இருந்து வாலிபர்கள் நடைபயணம் மேற்கொண்டது, கல்விநிலையங்களில் சாதி வெறிக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டபோது காவல்துறையின் தடியடி அடக்குமுறை கண்டித்து எழுத உங்கள் பேனாவில் மை தீர்ந்துவிட்டதா -? அல்லது காகிதம் கிடைக்கவில்லையா? தாங்கள் தான் சொல்ல வேண்டும். இப்போதும் சொல்கிறேன், மதவெறிக்கு எதிராக என்றால் நீங்கள் மதசார்ப்பற்றவர்களின் பக்கம்தான் எள்ளலளவும் சந்தேகமில்லை, மதச்சார்பற்றவர்கள் வலுப்படாமல் எப்படி மதவெறியை எதிர்ப்பது, நீங்கள் கேட்கலாம் வைகோ, விஜயகாந்த் நேற்று வரை எங்கிருந்தார்கள் என்று, ஏன் அவர்கள் திருந்தி வரக்கூடாதா-? அப்படி இருப்பவர்களை மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அணியின் பக்கம் சேர்ப்பது அவ்வளவு பெரிய குற்றமா-? புரியவில்லை,. அன்பே மனிதம் என்பது எங்கள் தத்துவம். உங்களுக்கும் தெரியும், அதை ஏன் எழுத மறுக்கிறீர்கள் -? உங்களின எழுத்தில் ஆதங்கம் இருக்கலாம் -? ஆனால் இப்போது உள்ள பிரச்சனைக்கு என்ன தீர்வு.

இப்படியே வடையை திருடிய காக்காய் ஏமாந்ததா? நரி ஏமாந்ததா ? என்ற பட்டிமன்றத்தை நடத்திக்கொண்டு இருக்க போகிறோம், உழைத்து வடையை பெற வேண்டும் என்று சொல்லும் இடதுசாரிகளை அல்லவா இதுகாறும் தாங்கள் சொல்லியுருக்க வேண்டும், இப்போதாவது எழுதுங்கள் சிபிஎம் இன் மாநில மாநாட்டில் எதிரி யார் என்பதை அவர்கள் தீர்மானித்ததை, அதிமுக, திமுக, காங்ககிரஸ், பிஜேபி, பாமக ஆகியோர் தான் என்று,. இந்த தீர்மானம் தவறு என்று கூட நீங்கள் விவாதிக்கலாம். ஆனால் இத்தகைய முடிவை அமலாக்க நண்பர்களை இணைத்துக்கொள்வதில் தவறில்லை.,

அரவிந்தன்

smkanna2007@rediffmail.com

94437 79100

Related Posts