சமூகம் நிகழ்வுகள் பிற

தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை … கசப்பிலிருந்து தொடங்குவோம்…!

(தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை இது. 2 நாட்களுக்கு முன்பு இந்தக் கட்டுரையைக் கொடுத்து சிரித்துப் பேசிய நீலவேந்தன். 25 ஆம் தேதி அதிகாலை தன் உயிரை ஈந்தார். சமூக விடுதலைப் போராட்டத்தை ஓரடி முன் நகர்த்த வேண்டுமென, வாழ்க்கையையே தத்தம் செய்திருந்த அந்தத் தோழன் மறைவுக்கு – ‘மாற்று’ தனது அஞ்சலியை செலுத்துகிறது.)

தோழர்.நீலவேந்தன்

தோழர்.நீலவேந்தன்

சமூகத்தையும் சக மனிதர்களையும் உளமாற நேசிக்கிற ஒரு தலித்துக்கு வருடத்தின் 365 நாளுமே துக்க நாட்கள்தான் என்றாலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 24 மட்டும் துக்கத்திலும் துக்க நாளாகும். ஆம், அன்றுதான் பள்ளிப்பாடத்திட்டத்தின் வரலாற்றுப்புத்தகங்கள் காந்திக்கும் அம்பேத்கருக்கும் பூனா எரவாடா சிறையில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டதாக பெருமை பேசுகிறது.

காந்திக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் ஆச்சர்யமில்லை, அம்பேத்கருக்கும் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஆனால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் ஏன் ஒப்பந்தம் ஏற்படவேண்டும்? அதுவும் ஏன் சிறைச்சாலையில் ஏற்பட வேண்டும்? ஒப்பந்தம் முடிந்தவுடன் ராஜாஜி தன்னுடைய பேனாவை அம்பேத்கருக்கு கொடுத்துவிட்டு அம்பேத்கரின் பேனாவை வாங்கிக்கொண்டார் என பெருமை பேசிய வரலாற்றுப் புத்தகங்கள் ஏன் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை?

அவற்றுக்கான பதிலை நாம் தேடிப்போவோமேயானால், புரட்சியாளர் அம்பேத்கரின் ஒட்டுமொத்த வாழ்வையும் அவர்தம் நோக்கத்தையும் முழுமையாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் கூட ஒரு மாணவர் வெளிநாடு போய் படிப்பது அதிசயமாகவும் பெருமைப்படத்தக்க மகிழ்வாகவும் பார்க்கப்படுகையில், 1913லேயே வெளிநாடு சென்று அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். தன்னுடைய படிப்பை வைத்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மட்டும் சிந்தித்திருந்தால் ஒப்பில்லாத சொகுசு வாழ்க்கை அவருக்கு கிடைத்திருந்திருக்கும்.

ஆனால், “நான் கற்ற கல்வி என் மக்களின் விடுதலைக்குப் பயன்படவில்லை என்றால் என்னை நானே சுட்டுக்கொள்வேன்” எனும் அளவு பக்குவப்பட்ட அர்ப்பணிப்பும் தியாக உணர்வும், சமூக உணர்வும் மிக்கவர் என்கிற பின்புலத்தோடு, புரட்சியாளர் அம்பேத்கர் தலித் மக்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை முன்வைத்து வந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு கோரிக்கை மனு மட்டும் 420 பக்கம் இருந்தது என்பது, புரட்சியாளரின் மாறா மக்கள் நேசிப்பின் அடையாளமாகும்.

புரட்சியாளர் அம்பேத்கரின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் பேரில், தலித் மக்களுக்கு என்னென்னெ உரிமைகள் வழங்கப்படலாம் என்பதை ஆராய பிரிட்டிஷ் அரசாங்கம் சர் ஜோன் சைமன் தலைமையிலான ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சைமன் குழுவில் இந்தியர் யாரும் இல்லை எனச்சொல்லி, காங்கிரஸ் சைமன் கமிஷனே திரும்பிப்போ எனும் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தியர் யாரும் இல்லை என்பதால்தான் அந்தக்குழுவை வரவேற்கிறோம் என்று தந்தை பெரியார் துணிச்சலுடன் அறிவித்தார். புரட்சியாளர் அம்பேத்கர் சைமன் குழுவின் முன்பாக ஆஜராகி சாட்சியமளித்தார். சைமன் கமிஷன் பரிந்துரைகளை ஆராய முதலாம் வட்டமேசை மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்ட போது, அதைப் புறக்கணிப்பதாக அறிவித்த காங்கிரஸ் புரட்சியாளர் அம்பேத்கருக்கு பிரிட்டிஷ் கைக்கூலி என்ற பட்டத்தையும் வழங்கியது.

ஆனால், அதன் தொடர்ச்சியாக, லண்டனில் 1932ம் ஆண்டு நடந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக காந்தி கலந்து கொண்டார். முதலாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கான விளக்கத்தை அளிக்காத காங்கிரசின் அறிவு நாணயத்தை நாம் கட்டாயம் பாராட்டியாக வேண்டும்.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் ராம்சே மக்டொனால்டு தலைமையில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில்தான் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்குவதென அறிவிக்கப்பட்டது.

இரட்டை வாக்குரிமை என்பதை எளிதான சொற்களில் விளக்குவதென்றால், ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிக்கும் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு உறுப்பினர், தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் அவர் என்ன சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு உறுப்பினர் அந்த தொகுதியில் உள்ள தலித் மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார் அவர் தலித்தாக மட்டுமே இருக்க வேண்டும். ஆக, இந்தியா முழுதும் உள்ள தலித்துகளுக்கு இரண்டு வாக்குகள் அளிக்கிற உரிமை இருக்கும். இதுவே இரட்டை வாக்குரிமை.

இந்தியாவில், வாழிடம் இரண்டாக இருக்கிறது, தேநீர்க்கடைகளில் குவளை இரண்டாக இருக்கிறது, முடிவெட்டுகிற கடைகளில் கத்திரிக்கோல் இரண்டாக இருக்கிறது, குளங்களில் படித்துறை இரண்டாக இருக்கிறது, உணவகங்கள் இரண்டாக இருக்கிறது, எல்லாவற்றுக்கும் கடைசியாக சுடுகாடு கூட இரண்டாக இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒன்றாக்க தலித்துகளுக்கு வாக்குரிமை தற்காலிகமாக இரண்டாக இருக்க வேண்டுமென்பது, புரட்சியாளரின் கோரிக்கை. கோரிக்கையின் நியாயத்தையும், புரட்சியாளரின் வாதப்பிரதிவாதங்களையும் ஏற்றுக்கொண்ட வட்டமேசை மாநாடு இரட்டை வாக்குரிமையை வழங்கியே விட்டது.

அளப்பரிய சாதனை நிகழ்த்திய புரட்சியாளர் இம்மண்ணுக்கு வரும்முன்பே, அவருக்கான சோதனை காந்தியின் வடிவத்தில் காத்திருந்தது. வட்டமேசை மாநாட்டில் நேரடியாகப் பங்கு கொண்டு இரட்டை வாக்குரிமை தரப்படுவதை எப்படி எல்லாமோ தடுத்துப்பார்த்தும் முடியாத காந்தி இரட்டை வாக்குரிமையை ரத்து செய்யக்கோரி செப்டம்பர் 20 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து தொடங்கிவிட்டார். கைது செய்யப்பட்டு பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

இரட்டை வாக்குரிமை வழங்கப்படுவது இந்து மதத்திலிருந்து தலித்துகளைப் பிரிக்கிற சதி என்றும், இரட்டை வாக்குரிமை திரும்பப்பெறப்படுவது தவிர எந்த நிவாரணத்துக்காகவும் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என காந்தி அறிவித்து விட்டார். காந்தியின் உயிரைக்காப்பாற்ற வேண்டும், என்ற கோரிக்கை இப்போது, அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையைக் கைவிட வேண்டும் என்பதாக பரிணமித்தது.

ஒரு காந்தியின் உயிரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், இரட்டை வாக்குரிமையை கைவிட வேண்டாம் என தந்தை பெரியாரிடமிருந்து மட்டுமே ஆதரவுக்குரல் வந்தது. மூதறிஞர்களும் இரும்பு மனிதர்களும் அம்பேத்கருக்கு எதிராக வரிந்து கட்டி நின்றார்கள். காந்தியின் மனைவி நேரடியாக புரட்சியாளரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அம்பேத்கரை நெருக்கடிகள் சூழ ஆரம்பித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்காங்கே அப்பாவி தலித் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகினர். மகாத்மா என்ற மகத்தான சக்தி நிராயுதபாணியான அம்பேத்கரோடு விளையாடியது.

4 நாட்கள் புரட்சியாளர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதை உணர பெரிய அறிவு தேவை இல்லை. தராசின் ஒரு தட்டில், மூவாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு முதல்முறையாக பெறப்பட்ட தலித்துகளின் சிறு உரிமையும், தராசின் இன்னொரு தட்டில், இந்தியா முழுமைக்கும் ஆளுமை செலுத்தக்கூடிய ஒரு தலைவனின் உயிரும் வைக்கப்பட்டது இரண்டும் எந்தவகையிலும் இணையில்லாதது என்பதும் இந்தக் குறிப்பிட்ட சிக்கல் காந்தியோடு அல்ல என்பதும் வெகு எளிதாக புறம்தள்ளப்பட்டது.

எந்த மக்களுக்காக உரிமையைப் பெறுகிறோமோ அந்த மக்களின் உயிர் வாழ்தல் கேள்விக்கு ஆளானபோது, அம்பேத்கர் கையறு நிலைமைக்குப்போனார். கூடுதல் வேதனையாக சில தலித் தலைவர்கள் கூட காந்தியின் பக்கமே நின்றார்கள்.
எதிரிக்கும் கூட வரக்கூடாத விரக்தி நிலைமைக்குப்போன புரட்சியாளர், இந்தபேனாவில் ஊற்றப்பட்டிருப்பது மையல்ல! மாறாக என் கண்களில் இருந்து வழிகிற ரத்தம் என்று கூறிக்கொண்டு ஒப்பந்ததில் கையெழுத்துப்போட்டார்.

81 ஆண்டுக்கு முன்னால் புரட்சியாளரிடம் பெறப்பட்ட கையெழுத்தின் கசப்பிலிருந்து நாம் இன்னும் விடுபட முடியவில்லை. இரட்டை வாக்குரிமை இந்தக்காலத்துக்கு சாத்தியமா? போராடிப்பெற முடியுமா? இப்போதுள்ள தேர்தல் நடைமுறையில் இரட்டை வாக்குரிமையே கிடைத்தாலும் கருங்காலிகளும் துரோகிகளும்தானே போவார்கள்? என்கிற கேள்விகள் அர்த்தமுள்ளவை. மீட்டெடுக்கப்பட வேண்டிய இரட்டை வாக்குரிமை ஒரு குறியீடுதான்.

ஆனால், தலித் ஒருவனை (மனிதன் ஒருவனை) கல்யாணம் செய்து கொண்டாள் என்பதற்காக உடன்பிறந்த தங்கையை இரண்டு அண்ணன்களும் சேர்ந்து வலுக்கட்டாயமாக துடிக்கத் துடிக்க வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து தூக்குக்கயிற்றில் தொங்கவிடுமளவு மனிதத்தை கொன்ற சாதியத்தை அழித்தொழிக்க தலித்துகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, எழுச்சி, போராட்டம் ஆகியவைதான் முதலில் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

அத்தகைய மீட்புக்கு இந்தக்கசப்பை துப்பி விடாமல், ஒதுக்கி விடாமல் மென்று விழுங்கி உரிமையை மீட்டெடுப்போம்….!

Related Posts