சமூகம் புதிய ஆசிரியன்

தேர்வு மோசடிகள்… அறத்தின் வீழ்ச்சி!

எஸ்.வி. வேணுகோபாலன்

ஏதோ கட்டுமான வேலை நடப்பது மாதிரியும், சாரம் கட்டாமலே ஆள் ஆளுக்கு பூச்சு வேலைக்காக ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தின் மீது ஏறிக் கொண்டிருப்பது போலவும் புலப்பட்டது. அல்லது, விபத்தில் சிக்கிய மனிதர் களை யாராவது தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றக் குவிந்திருப்பார்களோ? அப்புறம் என்னவென்று படித்தால் அராஜகச் செய்தி அம்பலமாகிறது! பீகார் பள்ளிகளில் பட்டவர்த்தனமாக தேர்வு மையங்களில் மாணவர்களுக்குக் கள்ளத்தனமாக உதவி செய்கிற ஏற்பாடு அது! மேன் மேலும் உயரங்களை எட்டவேண்டும் என்று வாழ்த்துவதற்கு இப்படி கட்டிடம் கட்டிடமாக ஏறி இந்த மாதிரி திருட்டு வேலைகள் செய்வதுதான் பொருளா என்று மனம் கசந்து போகிறது. தேசம் முழுக்க தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தை ஓர் எளிய புகைப்பட நிருபர்தான் உலகின் முன் எடுத்து வைத்தார். ஆனால் இப்படி ஆகும் என்று அவருக்குத் தெரியாது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஓர் இந்தி பத்திரிகைக்காக அவர் எடுத்து அனுப்பிய அந்தப் புகைப்படம் ஒரு பெருந்தீயைப் பற்றவைத்துவிட்டது. உள் ளூரில் தலைகாட்டாமல் மறைவாக இருக்கவேண்டும்போல் இருக்கிறதே என்று எச்சரிக்கையோடு பேசிக் கொண்டிருக்கிறார் செய்தியாளர் ராஜேஷ்குமார். ஊர் முழுவதும் பற்றி எரிகிறபோது, மாநிலக் கல்வி அமைச்சர் பி.கே. ஷாஹி, “இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாதுங்க.. 1100 மையங்களில் 14.26 லட்சம் பேர் தேர்வு எழுதறாங்க…. காப்பி அடிக்கறதை நிறுத்தறது எங்க கையில் இல்ல….பெற்றோர், மாணவர் எல்லோரும் ஒத்துழைக்கணும்” என்று சொல்லி நழுவிக்கொண்டார். அதை நோக்கித் தங்கள் கவனம் ஈர்க்கப் பட்டவுடன் பாட்னா உயர்நீதிமன்றம் அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு வெட்கப்பட வேண்டியது என்று கடுமையாகச் சாடியது. மாநில முதல்வர் நிதிஷ் குமார் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி பள்ளி வளாகத்தில் – குறிப் பாக இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள மஹனர் என்னும் ஊரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் கட்டிடத்தின் மேல் சர்க்கஸ் வேலை கள் செய்து உள்ளே சென்று மாண வர்களுக்கு உதவியது யார் யார் என்பதுதான் இன்னும் வேதனை அளிக்கும் செய்தி. அந்தந்த மாணவ ரின் நெருங்கிய உறவினர்கள்! மாயி அண்ணன் வந்திருக்காஹ, மாப் பிள்ளை மொக்கச்சாமி வந்திருக் காஹ, மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காஹ… என்கிற மாதிரி சமூகமே திரண்டு வந்து அந்தத் திருப்பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பது இன்று நேற்று அல்லவாம். அநாதி காலம் தொட்டு நடக்கிறது என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுக் கின்றனர். காவல் துறை ஆட்கள் உள்பட கையூட்டு பெற்றுக் கொண்டு காப்பி அடிக்க அனைத்து உதவி களும் செய்வதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
இது ஏதோ ஒரு மாநிலம், ஒரே ஓர் ஊர், ஒரு பள்ளி என்று இல்லை, தேசம் முழுக்க அவரவர் திறமைக் கும், வாய்ப்பு வசதிக்கும் ஏற்றமாதிரி தேர்வுகளில் மோசடி செய்வது என்பது நீண்ட காலமாக நடந்து கொண்டிருப்பதுதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். பெங்களூரு பற்றி ஆங்கில இந்து நாளிதழ் எடுத்த கள ஆய்வு, தொழில்நுட்ப மாநகரில் காப்பி அடிப்போர், பீகாரில் நடப்பது மாதிரி சாகச வேலைகளுக்கு எல் லாம் போக வேண்டியதே இல்லை என்கிறது. எந்திரன் படத்தில் சிட்டி எனும் ரோபோ எந்திரத்தை கதா நாயகி காப்பி அடிக்கப் பயன்படுத்தி யது மாதிரி சிறப்பு ஏற்பாடுகள் வைத்திருக்கின்றனர். மின்னணு சாதனங்களை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படி அப்படி! மருத்துவக் கல்லூரி மாண வர் ஒருவர் லட்ச ரூபாய் செலவழித்து வித்தியாசமான சட்டையை அணிந்து தேர்வு எழுதச் சென்றாராம். நண்பர் ஒருவர் வேறு ஏதோவொரு நகரத்தில் உட்கார்ந்து கொண்டு இவரது கேள்விகளுக்கான விடையை உடனுக்குடன் “டிரான்ஸ்மிட்” செய்து கொண்டிருந்தாராம். காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார் மகாகவி. அத்தகையோர் கனவு கண்ட அறிவியல் நோக்கம் இதுவாக இருந்திருக்க முடியாது!
நமது மாநிலத்திலும் இதே காலத் தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னி ரெண்டாம் வகுப்பு தேர்வுகளும் நடந்து கொண்டிருந்ததால் இங்கும் காப்பி அடித்தல் பிரச்சனை பெரிய விவாதத்திற்கும், நடவடிக்கைக்கும் உட்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய மாநிலம் என்ப தால், பிட் அடிப்பது போன்ற பாரம்பரிய முறைகள் இங்கு காலாவதியாகி விட்டன. வாட்ஸ் அப் மூலம் கேள்வித் தாளை அனுப்பி விடைகளைப் பெற முயற்சி செய்ததாக ஓசூர் ஆசிரியர் கள் சிலர் கைது செய்யப்பட்டிருக் கின்றனர். அதையடுத்து குறிப்பிட்ட பள்ளி நிறுவனங்கள் 100ரூ தேர்ச்சி பெற தாங்களாகவே முறைகேடுகளை ஊக்குவித்து வருவதும், அந்த வலை யில் கல்வி அதிகாரி உள்பட சிக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு நட வடிக்கைகள் சில எடுக்கப்பட்டிருக் கின்றன. தேர்வு அறைக் கண்காணிப் பாளர்கள் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
100ரூ தேர்ச்சி என்ற விளம்பரங் களை வைத்து பம்மாத்து செய்து கொண்டிருக்கும் தனியார் கல்வித் தொழிற்சாலைகள் பலவற்றின் உண்மை முகம் இன்னும்கூட மொத்த மாக வெளியே கொண்டுவரப்பட வில்லை. தரமற்ற கல்விக்கு விலை வைத்து விற்பதோடு, அடிப்படை பண்பாக்கங்களையும் சிதைத்து வாழ்க்கையில் வெல்வதற்கு என்ன வும் செய்யலாம் என்ற கீழ்த்தரமான போதனையையும் செய்து கொண்டி ருக்கும் இவர்களைப் பற்றி தனியே விவாதிக்க வேண்டி இருக்கும். இப்படி யான மோசடி வேலைகைச் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படும் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகத் திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விசாரணை, நடவ டிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளது. மாநிலம் முழுவதும் சீரிய முறையில் தேர்வெழுதும் பல லட்சம் மாணவர்களைச் சிறுமைப்படுத்தும் வேலை இது என்கிறார் வாலிபர் சங்க நிர்வாகி வேல்முருகன். “பிட்” அடித்தல் என்ற சொல் தமிழ்ச் சொல்லாக மாற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகின்றன. இதை ஒரு கலையாகவே மாணவப் பருவத்தில் தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இருக்கவே செய்தனர். ஆனால் சமூக ரீதியாக அருவருப்பாக அது பார்க்கப் பட்ட காலமும் இருந்தது. நவீன தாராளமய காலத்தில் ஆட்ட விதிகள் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டன. பறக்கும் படைக்கு போக்கு காட்டி விட்டு, கதவை வெளியே இழுத்துப் பூட்டு போட்டுவிட்டு, உள்ளே மாணவர் களுக்கு விடைகளை வரிசையாக வாசித்து எழுத வைத்த பள்ளிகள் குறித்து புதிய ஆசிரியன் இதழில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்…’ என்ற திருக்குறளை ‘காப்பி’ அடித்து எழுதுவதை அய்யன் திருவள்ளுவர் அறிய நேர்ந்தால், குமரி முனை சுனாமியில் நாம் கரைந்து போயி ருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொள்ள மாட்டாரா! அது சரி, காந்தி திரைப்படத்திற்கே ‘பிளாக் கில்’ டிக் கெட் விற்ற தேசமாயிற்றே!
அறங்கள் வீழ்ச்சி அடையும் கால மாயிருக்கிறது சம காலம். அராஜகம் செய், ஆனது ஆகட்டும்… என்று புதிய ஆத்திச்சூடி கூட புனையப்படக் கூடும். எல்லோருக்குமான கல்வி மறுக்கப் படுவது, வசதியை வைத்து வாய்ப்பு களை அளந்து கொடுப்பது, எந்த நெறிகளுமற்ற விதத்தில் மாணவர் களை உருவாக்குவது.. என இந்தப் போக்கு உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மனித மாண்பு களை உடைத்துப் போட்டுக் கொண்டி ருக்கிறது. கல்வி, காசு பண்ணுவதற்கான உரிமச் சீட்டாகப் பார்க்கப்படும் வரை யில் காப்பி அடித்தலைத் தடுத்து நிறுத்த முடியாது. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தி, கற்றல் பின் னுக்குத் தள்ளப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் தேர்வு மோசடி களை ஒழிக்க முடியாது. உலகமயத் தின் தாக்கம் பெற்றோரது கனவு களை ஊதிப் பெருக்குகிறது. வர்த்தக சீமான்கள் இதில் வேட்டை நடத்த ஆசிரிய சமூகத்தையும் உட்படுத்தும் போது நிலைமைகள் புரிந்து கொள்ள முடியாத மாயச் சுழலில் கொண்டு ஆழ்த்துகிறது. அதனால்தான், பீகா ரில் தேர்வு மோசடிகளைத் தடுக்கப் போனவர்களை உறவினர்கள் தாக்கி யது. இங்கேயும், நியாயமான கல்வி முறைக்கான போராட்டங்களில் தன்னெழுச்சியாக மக்கள் வந்து கலக்காததில் இந்தக் காரணியும் ஒன்றாக இருக்கக் கூடும். கல்விக்கு உரிய சமூக – பொருளாதார மதிப் பினை உருவாக்கித்தர வேண்டியது அரசின் கடமை. வகுப்பு வெளியில் சுதந்திரம், ஜனநாயக உரையாடல் ஆகியவை உறுதி செய்யப்படுவது கல்விச் சூழலுக்கு முக்கியமானது, ஆரோக்கியமான எதிர்காலத்திற் கான அடிப்படை, உருப்படியான கல்விமுறை. அதில் ஓட்டைகள் விழுவது மன்னிக்க முடியாத குற்றம் என்று உணரும் சமூகம் தவறான முறைகளைத் தகர்க்கப் போராடும்! இப்படி, ஸ்பைடர்மேன் மாதிரி பள்ளிக் கூடக் கட்டிடத்தின் மீதேறி மோசடி வேலைகளுக்கு உடந்தையாக நிற் காது.
(sv.venu@gmail.com
94452 59691)

Puthiya Aasiriyan's photo.
Puthiya Aasiriyan's photo.
3 people reached

Related Posts