தேநீரில் தீராத பேச்சு – மாதங்கி

சிந்து, சென்னைக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே ‘கேம்பஸ் இண்டர்வியு’வில் தேர்வாகி வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அவளுக்கு இரவுப்பணி புராஜெக்ட்தான் கிடைத்தது. பிக்கப்-டிராப் வசதி இருந்தது. முதலில் பெற்றோர் தயங்கினாலும் பின் ஒத்துக் கொண்டார்கள். ஆனால், சிந்துவின் அப்பா அவளுடைய ஏ.டி.எம். கார்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

ரத்னாவிற்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் வேலைபார்க்கிறார். கணவர் இந்தியாவில் வனத்துறை உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறார். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வாழ்வதற்குச் சில வருடங்கள் ஆகும். ஏனெனில் இருவரும் அவரவர் துறையில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள். ரத்னாவின் கணவரோ தன்னுடைய வருமானமே போதுமானது என்று சொல்லி ரத்னாவை வேலையை விடச்சொல்கிறார்.

கல்லூரியில் இறுதியாண்டு மாணவன் சுமன். சுமனின் அம்மா தபால் அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவர் 17 வயதில் திருமணம் செய்து, 20 வய
தில் கைக்குழந்தையுடன் தனித்து விடப்பட்டவர். சுய விருப்பங்களைத் தவிர்த்துவிட்டு, குழந்தையை வளர்ப்பதற்காகத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக அம்மாவுடன் சுமன் பேசுவதில்லை. அம்மா சக அலுவலகப் பணியாளருடன் வண்டியில் போவது அவனுக்குப் பிடிக்கவில்லை.

மீனா-பாஸ்கர் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்திருக்கிறார்கள். இது நான்கவது அபார்ஷன். இந்தமுறை உதிரப்போக்கு அதிகமாகி மீனா இறந்துவிட்டார். துக்கம் தாளாமல் பாஸ்கர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவையும் சித்ராவும் முற்போக்கு இயக்கத்தில் இணைந்து பணியாற்றி, பின் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். திரு இப்போது மாவட்ட அளவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். சித்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார்.
சிந்தியா பிளஸ் டூவில் 1,027 மதிப்பெண். அவள் தினமும் 5 கிலோ மீட்டர் பயணித்துத் தான் பள்ளி செல்லவேண்டும். இப்போது திருமணம் செய்துகொடுக்க அவள் அப்பா முடிவெடுத்துவிட்டர். சிந்தியா தினமும் அழுதுகொண்டேயிருக்கிறாள்.

கடந்த ஏப்ரல் மாதத்தின் ஒரு ஞாயிறு இரவு 10.15 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பிராட்வே பஸ்ஸூக்கு நான் காத்திருந்தபோது கடலைவிற்பவர், மிக்சர்கடைக்காரர், ஆங்காங்கே நிற்கும் பயணிகள் என எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். நான் பதற்றத்துடன் இரண்டு, மூன்று பேர் நிற்கும் இடமாகப் பார்த்து அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தேன்.

இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரிந்த பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள். இந்த அனுபவங்களைப் படிக்கையில் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்கள் என்ன? அந்த எண்ணங்கள் எதன் அடிப்படையில் ஏற்பட்டன? நமக்கும் இந்த அனுபவங்களுக்கும் எண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?

இந்தியா, 21-ம் நூற்றாண்டில் உலகளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடு. ஆனால், 2017-ம் ஆண்டின் பாலின இடைவெளி குறித்த தரவரிசைப்படி 144 நாடுகளில் இந்தியா 114-வது இடத்தில் உள்ளது. இந்தத் தரவரிசையின் முக்கியத்துவம் என்ன? இதற்கும் இன்றைக்கு இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு?

பேசுவோம்… மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாம்.

About இளைஞர் மு‍ழக்கம்