இதழ்கள் இளைஞர் முழக்கம்

தேச விரோதிகள் – சம்சுதீன் ஹீரா . . . . . !

201492994248472734_20

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் எதாவது ஒரு பகுதியில் இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கலாம், அல்லது தாக்குதலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டு இருக்கலாம், உ.பி யின் ‘காப்’ மகா பஞ்சாயத்து போல, ஹரியானாவின் திங்கர்ஹெரி மகா பஞ்சாயத்து போல, சாதி இந்துக்களின் மகா பஞ்சாயத்துகளில் இஸ்லாமிய மக்களுக்கெதிரான விஷம் கக்கப்பட்டுக்கொண்டு இருக்கலாம். கலவரங்களுக்கான வரைபடங்களைக் கையில் வைத்துக்கொண்டு நாக்பூர் மூளைகள் திட்டமிட்டுக்கொண்டு இருக்கலாம். ஏதாவதொரு இஸ்லாமியக் குடும்பம், அல்லது குடியிருப்பு, அல்லது கிராமம் அச்சத்தின் பிடியில் உரைந்திருக்கலாம். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட நரக நிமிடங்களை அவர்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கலாம்.

இன்றைய நிலையில் இஸ்லாமியர்களைக் கொல்லவும், இஸ்லாமியப் பெண்களை பாலியல் வண்புணர்வு செய்யவும், அவர்களின் வாழ்விடங்களை, பொருளாதார மையங்களைச் சூரையாடவும் ஒரு பொய்யோ, ஒரு வதந்தியோ, அல்லது ஒரு சந்தேகமோகூடப் போதுமானதாக இருக்கிறது.

உத்திரப்பிரதேசம் தாத்ரியில் அக்லக் கொல்லப்படுவதற்கோ, ஹரியானாவின் திங்கர்ஹெரி கிராமத்தில் இப்ராஹீமும் ரஷீதாவும் கொல்லப்படுவதற்கோ, குஜராத்தின் அகமதாபாத்தில் முகமது அய்யூப் கொல்லப்படுவதற்கோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக எழுந்த சந்தேகமே போதுமானதாக இருக்கிறது. குண்டர்களைப் பாதுகாப்பதிலும் கொல்லப்பட்ட குடும்பத்தினர் மீதே வழக்கு பதிவு செய்வதிலும் அந்தந்த மாநில அரசுகள் வெட்கமின்றிச் செயல்படுகின்றன. விலைபோன ஊடகங்களும் உண்மையைச் சொல்லாமல் மென்று விழுங்குகின்றன.
உ.பி.யின் பேடா கிராமத்தில், சில பொருக்கிகள் தன் தங்கையைக் கிண்டல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு கொலையாளிகள் யாரென்றே தெரியாத நிலையில் ஒரு மிகப்பெரிய கும்பல் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் கோவையில் குவிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டம் ஆடப்பட்டுள்ளது. இரவோடு இரவாகத் திட்டமிட்டு இரண்டு மாவட்டங்களை முற்றிலும் முடக்கிப்போடும் அளவிற்கு அவர்களின் வலைப்பின்னல் இருக்கிறது. இந்து முன்னணி மாநிலத்தலைவர் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று ஊடகங்களில் பேசி வெறியூட்டியபோதும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவை ஏதோ உணர்ச்சிவசப்பட்ட சிலர் செய்த கொலைகளென்று இதைச் சுருக்கிப் பார்க்க முடியாது. தொழில்முறைப் பயிற்சிபெற்ற வன்முறைக் கும்பல்களால் துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் சிறுபான்மை மக்களுக்கெதிரான வன்முறைகள் இவை.

பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரிலான தொழில்முறைப் பயிற்சிபெற்ற வன்முறைக் கும்பல்களும், லெட்டர்பேடு இந்துத்துவ அமைப்புகளும், இந்துத்துவ அடியாட்களும், திடீர் தேசபக்தர்களும் நாடு முழுவதும் புற்றீசல் போல கிளம்பியுள்ளதை பார்க்க முடியும். இவை ஏதோ தானாகத் தோன்றிய கும்பல்கள் அல்ல. தேசவிரோதமாகப் பாயும் கார்ப்பரேட் நிதியும் கான்பூர் மூளையும் இனைந்து உருவாக்கிய, உருவாக்கிக்கொண்டு இருக்கிற தொழில்முறை அடியாட்கள் இவர்கள். இந்தச் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால் அரசும் காவல்துறையும் வன்முறைக் குண்டர்களும் ஒரு துல்லியமான வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.

கடந்தாண்டு செப்டம்பர் 29 தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கிளப்பி விடப்பட்ட வதந்தியால், திடீரென பசுப்பாதுகாவலர்கள் என்கிற பெயரில் ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான இந்துத்துவ வன்முறைக் கும்பலால் முகமது அக்லக் என்ற முதியவர் அடித்தே கொல்லப்படுகிறார். வன்முறையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு அந்த இறைச்சியைக் கைப்பற்றி அது மாட்டிறைச்சியா இல்லையா என்று தடயவியல் சோதனைக்கு அனுப்புகிறது. நாடுமுழுதும் எதிர்ப்பு கிளம்பியதும் பெயருக்கு சிலரைக் கைதுசெய்து கடமையை முடித்துக்கொள்கிறது. மீண்டும் கூட்டப்படும் பஞ்சாயத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டு, கொலை செய்யப்பட்ட அக்லக் வீட்டுப் பெண்களை வன்புணர்வு செய்யவில்லை என்று கலவரக்காரர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியதோடு, கைதுசெய்யப் பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டுமென்று அரசுக்கு எச்சரிக்கையும் விடுகின்றனர். காவல்துறையோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அக்லக் குடும்பத்தினர் மீதே வழக்கு பதிவு செய்தது.

ஹரியானாவில் திங்கர்ஹெரி கிராமத்தில் ஆகஸ்ட் 2 நள்ளிரவில் ஜக்ருதீன் என்கிற ஏழை விவசாயியின் வீட்டுக்குள் நுழைந்து பசுப்பாதுகாப்பு இயக்க குண்டர்கள் இப்ராஹிம், அவரது மனைவி ரஷீதா ஆகிய இருவரைக் கொன்றதோடு அந்த வீட்டிலிருந்த 14 வயது சிறுமி உட்பட இரு பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திலும் காவல்துறையால் யாரும் கைது செய்யப்படவில்லை. செப்டம்பர் 3ம் தேதி பக்ரித் பண்டிகையன்று இந்த மகா பஞ்சாயத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. திங்கர்ஹெரி கிராமத்தைச் சுற்றிலும் 200 கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் திங்கர்ஹெரி கிராமத்தில் கூடிய மகா பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்பகுதி எம்.எல்.ஏ தேஜ்பால் தன்வார் தலைமையில் நடைபெற்ற இந்த மகா பஞ்சாயத்திலும் இஸ்லாமியர்களுக்கெதிரான வெறியூட்டும் பேச்சுகள் மூலம் பதட்டத்தை ஏற்படுத்தினர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் செப்டம்பர் 13இல் முகமது அயூப், ஷமீர் ஷேக் ஆகிய இருவர் சென்ற வாகனத்தை மறித்து பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் கும்பல் தாக்குதல் நடத்தி முகமது அயூபை அடித்தே கொல்கிறது. இந்தச் சம்பவத்திலும் பசுமாமிசம் வைத்திருந்ததாக அயூபின்மீதே வழக்குப் பதிவு செய்த காவல் துறை, பசுப்பாதுகாப்பு இயக்கத்தினரை அடையாளம் தெரியாத நபர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடுகிறது. இவை ஊடகங்களில் வெளிவந்த சில நிகழ்வுகள். இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் வெளிவராமலே மூடி மறைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த அனைத்து நிகழ்வுகளிலுமே பெரும் எண்ணிக்கையிலான வன்முறையாளர்கள் குறுகிய நேரத்தில் அணிதிரட்டப்பட்டு தாக்குதலை நடத்தியதைப் புரிந்துகொள்ளலாம். எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த, சமூக அமைதியைக் குலைக்க ஒரு வலிமையான அடியாட்கள் படையை பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஆர்.எஸ்.எஸ் தயாராக வைத்துள்ளது. மேலும் மேலும் தன் அணிக்கான அடியாட்களைத் தொடர்ந்து திரட்டிக் கொண்டே இருக்கிறது. ஒரு மாபெரும் அழிவுசக்தியைத் தயாராக வைத்துள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சமூக விரோதிகளை, பொறுக்கிகளை, ரவுடிகளை கட்டப்பஞ்சாயத்து நபர்களை,இரண்டாம்தர தொழில் செய்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகர, மாவட்ட, மாநில அளவிலான சில பொறுப்புகளைக் கொடுப்பதன் மூலம் தொழில்முறைக் கிரிமினல்களாலான தனது அணிகளை கட்டுகிறது. மக்களிடமிருந்து அந்நியப்பட்ட, அச்சுருத்தக்கூடிய, முற்றிலும் சமூகவிரோத சக்திகளைக் கொண்ட அணிகளாகவே இந்த அடியாட்கள் படை அமைந்திருக்கிறது. சமயங்களில் இந்த அணிகள் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்ட்டேட், பெண் விவகாரம் போன்ற காரணங்களால் தமக்குள்ளேயே மோதிக்கொண்டு கொல்லப்பட்டாலும் அந்த பலியை முஸ்லிம்களின் மீது போடுவது, அதன்மூலம் கலவரத்தை ஏற்படுத்துவது என்பதை தங்களது பொது விதியாக இவை கொண்டுள்ளன.

இந்தச் சமூகவிரோத அணிகள் இந்துக்களின் பெயரில், பக்தர்களின் பெயரில் பாதுகாப்பாக இருந்துகொள்கின்றன. காலம் காலமாக நடைபெரும் சபரிமலை யாத்திரையிலோ, பழனி யாத்திரையிலோ எந்த கலவரங்களோ, பதட்டங்களோ நடைபெறுவதில்லை. ஆனால் பிள்ளையார் ஊர்வலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு பதட்டமும், மோதலும், கலவரங்களும்.? ஏனெனில் முன்னதில் பக்தர்கள் யாத்திரை செல்கிறார்கள். பின்னதில் பக்தர்கள் போர்வையில் இந்த அணிகள் ஊர்வலம் செல்கின்றனர்.

1973 இல் இஸ்ரேலுடனான அரபுநாடுகளின் யோம் கிப்பூர் யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த அமெரிக்காவுக்கு m48_tank_wrecks_at_suez_canal_1981அரபு நாடுகள் எண்ணெய் தர மறுத்தது. எண்ணெய் இல்லாமல் நிலைகுலைந்துபோன அமெரிக்கா எண்ணெயின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டது. எண்ணெய் நாடுகளின் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வகையான அரசியல் சூழ்ச்சிகளைச் செய்து, அந்த நாடுகளைத் தனது பிடியில் வைத்துக்கொண்டது. தனது ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்த நாடுகளின் மீது போர் நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையும் அதற்கு இருந்தது. சர்வதேச சமூகத்தில் தனது போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு கருத்தியல், பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெரும் நிதிச்செலவில் உலகமெங்கும் பரப்பப்பட்டது. பல இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை உருவாக்கியும் தீனிபோட்டு வளர்த்தும் வந்தது.

அந்தக் குழுக்களின் மூலம் இரண்டு ஆதாயங்களை அடைகிறது.

  1. உலகின் பலபகுதிகளில் போர்கள் கலவரங்கள் நடந்துகொண்டே இருப்பதன் மூலம், தமது ஆயுதவிற்பனை தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும்,
  2. தனது நீண்டகால செயல்திட்டமான இஸ்லாமிய எதிர்ப்புணர்வு சர்வதேச அளவில் நீடிக்கச் செய்வது என்கிற இரட்டைச் சக்கரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபாரம் எண்ணெயைப்போல வழுக்கிக்கொண்டு செல்கிறது.

இந்தியாவில், ஏற்கனவே இஸ்லாமிய எதிர்ப்பை தனது கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஐ தனது செல்லக்குழந்தையாக ஏற்றுக்கொள்வதில் அமெரிக்காவுக்கு எந்த தயக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்து வெள்ளமெனப் பாயும் நிதி, இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்தியலுக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகம் முழுவதும் நிதிமூலதனம் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருந்த நேரத்தில் வளரும் நாடுகளைக் கபளீகரம் செய்தால் ஒழிய தம்மைக் காத்துக்கொள்ளும் வாய்ப்பில்லை என்று ஏகாதிபத்தியங்கள் வெறிகொண்டு அலைந்துகொண்டிருந்த நிலையில் பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்கு இந்தியாவின் ஜன்னல்களைத் திறந்துவிடும் அரசைவிட கதவைத் திறந்துவிடும் ஒரு கார்ப்பரேட் அடியாளைத் தேர்வுசெய்யவேண்டிய கட்டாயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இருந்தது. கூடவே தமது நீண்டகாலத் திட்டமான இஸ்லாமியோ போபியாவுக்கும் இது வலுசேர்க்கும் என்பதால் மோடியை தனது தெற்காசிய அடியாளாகத் தேர்வுசெய்துகொண்டது.

modi_sl_05_05_2011மோடி முதல்வராக இருந்தபோது 2002 இல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலைகளுக்காக விசா தர மறுத்த அமெரிக்கா மோடியைப் பிரதமராக்க முனைந்ததற்கும், பின்பு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததற்கும் பின்னுள்ள ஆதாயக் கணக்குகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மோடி, தன்னைப் பிரதமராக்கிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்தியாவின் கதவுகளை மட்டுமல்லாது சுவர்களையும் உடைத்து வழியேற்படுத்திக் கொடுத்து தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறார். தனது குருபீடமான ஆர்.எஸ்.எஸ் சுக்கு விசுவாசத்தைக் காட்ட அதற்கேற்ற தயாரிப்புகளைச் செய்துகொண்டு இருக்கிறார். சோதனைக் களமாக குஜராத்தில் பரீட்சித்துப் பார்த்து வெற்றிகண்ட வழிமுறையை நாடுமுழுதும் விரிவுபடுத்த நாக்பூர் மூளைகள் இரவும்பகலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு சரியான தருணம் மட்டுமே.

குஜராத் படுகொலைகள் ஒரேநாளில் திடீரென்று நடந்து முடிந்த கலவரமல்ல. “குஜராத் என்பது மாநிலமல்ல.. அது ஒரு சித்தாந்தம்” என்பார் குல்தீப் நய்யீர். அதுபோல மிகத் துல்லியமாக திட்டமிட்டு ஒரு மாநிலத்தையே ஃபாசிசக் கண்ணோட்டத்தோடு கூடிய சித்தாந்தமயமாக்கி நடத்திமுடித்த இஸ்லாமியப் படுகொலைகள். மக்கள், காவல்துறை, ஊடகங்கள், நிர்வாகம், அரசு ஆகிய எல்லாத் துறையும் காவிமயமாக்கப்பட்ட பின்னரே அப்பேரழிவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடிந்தது. அதுபோன்று இந்தியா முழுவதையும் சித்தாந்தமயப்படுத்தும் முயற்சிகள் வேகமாக நடைபெறுகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் யீயனை அநனயை வாக விலைபோய் விட்டன, இராணுவத்தில், காவல் துறையில், நிர்வாகத் துறையில், அரசுத்துறையில், பண்பாட்டுத் துறையில், கல்வித்துறையில் என எல்லாத்துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களோ, அல்லது ஆதரவாளர்களோ நிரப்பப்படுகின்றனர். ஜனநாயகத்துக்கு விரோதமாக எல்லா அதிகாரமும் ஒற்றை நபரைநோக்கிக் குவிக்கப் படுகிறது. அந்த ஒற்றை நபரை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த இரண்டாவது வாரமே பத்திரிக்கைகளில் ஒரு பெட்டிச் செய்தி வந்திருந்தது. துப்பாக்கிகளுக்கு உரிமம் பெருவதற்கான வழிமுறைகள் தளர்த்தப்படுவதாக அந்தச் செய்தி சொல்லியது. (குஜராத் படுகொலைகளின் போது வன்முறையாளர்களின் கைகளில் துப்பாக்கிகள் சரளமாகப் புழங்கியதை கவனத்தில் கொள்ளவேண்டும்) அடுத்த சில மாதங்களிலேயே எழுத்தாளர்களும் பகுத்தறிவாளர்களும் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுகிறார்கள். சமீபத்தில்கூட மதுரா ஜவஹர் பார்க் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் குருஜீ ராஜீவரால் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு கும்பல், ஜெய்தேவ் அறக்கட்டளை என்ற பெயரில் ஆக்கிரமித்திருந்த 288 ஏக்கர் நிலத்தை மீட்கவந்த போலீசாருடன் துப்பாக்கியேந்திச் சண்டை போடுகிறது. நாடு முழுதும், இந்து அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் ரகசியமாக குண்டு தயாரிக்கும்போது வெடித்து இறந்ததாக ஆங்காங்கே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நாடு முழுதும் சாகா வகுப்புகள் (ஆயுதப் பயிற்சி) நூறுமடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி சொல்கிறது.
அமைச்சர்களும், இந்துத்துவ தலைவர்களும் பகிரங்கமாக இஸ்லாமியர் களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கைகள் விடுகிறார்கள். அதை விவாதப் பொருளாக்குகிறார்கள். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து தொலைக்காட்சிகளில் இந்து, முஸ்லிம் என்று நேரடியான வார்த்தைகளில் மக்களைப் பிளவுறுத்தும் வகையிலான விவாதங்கள் நடைபெற்றதைப் பார்த்தது இல்லை. இப்போது இந்துத்துவவாதிகள் தொலைக்காட்சிகளில் அமர்ந்து வெளிப்படையாகப்பேசி வெறியூட்டுகிறார்கள். இதைப்பார்க்கும் எந்தக் கருத்துமற்ற சாமானிய மக்கள்கூட ஏதோ ஒரு நிலைப்பாடு எடுக்கத் தூண்டுதலாகவே இந்த விவாதங்கள் அமைகின்றன. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஊடகமும் காவிமயமாக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தையும் கண்ணோட்டத்தையும் வெளிக்காட்டுவதைப்போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க முடியவில்லை .

நாஜிக்களின் பிடியில் வாழ்ந்த யூதர்களின் உளவியலுக்கும், இந்துத்துவ அதிகார மையத்தின் பிடியில் வாழும் இஸ்லாமியர்களின் உளவியலுக்கும் அப்படியென்ன பெரிய வேறுபாட்டை நாம் கூறிவிட முடியும்? தாம் கொல்லப்படும்வரை, இப்பூமிப்பரப்பில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் போனஸ் வாழ்க்கையாகக் கருதியபடி வாழும் அச்ச உணர்வை தம் சொந்த மக்களின் ஒரு பிரிவினருக்கு வழங்கியிருக்கிற அரசின் ஃபாசிச மனோபாவத்தின் வெளிப்பாடு இது.

வளர்ச்சி, சீர்திருத்தம் என்ற கவர்ச்சிகர முழக்கங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த இந்த அரசு. தனது தவறான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளால், நிர்வாகம், பாதுகாப்பு, அயலுறவு ஆகிய எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து மக்கள் மத்தியில் அம்பலமாகி கேலிப்பொருளாகி நிற்கிறது. இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க இப்போது இந்த அரசுக்கு ஒரு போரோ, கலவரமோ, அவசரநிலைப் பிரகடனமோ தேவைப்படுகிறது. அதைநோக்கியே இந்த அரசு வேகமாகச் சென்றுகொண்டு இருக்கிறது.

இடதுசாரிகளும், சமூக ஜனநாயக சக்திகளும் இந்த சக்திகளுக்கெதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களோடு தோள்கொடுத்து ஃபாசிசத்துக்கெதிரான வலுவான ஐக்கியம் அமைத்துப் போராடுவதே நிகழப்போகும் பேரழிவிலிருந்து நம் சமூகத்தைக் காக்க நமக்கிருக்கும் ஒரே வழி.

Related Posts