இதழ்கள் இளைஞர் முழக்கம்

தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு அறிக்கை – ஓவியா

cju2itiukaecrrj

பா.ஜ.க அரசு தற்போதைய கல்வி அமைப்பை சீர்திருத்த வேண்டும் என்று நவம்பர் 2015ல் ஒரு குழுவை அமைத்தது. டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென்பதே இக்குழுவின் பணியாகும். இதன் பொருட்டு இக்குழு அமைக்கப்படுவதற்கு முன்னரே பரவலாக கல்வித்துறையிலுள்ளவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக மனிதவள மேம்பாட்டு துறை தெரிவிக்கிறது. அக்குழு அதன் பரிந்துரைகளை மே 2016 ல் அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த முழு அறிக்கையை வெளியிடாத மத்திய அரசு அந்த பரிந்துரைகளின் அடிப்படையிலான தனது தேசிய கல்விக் கொள்கையின் வரைவை மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துக்காக வெளியிட்டது, அதாவது வரைவு அறிக்கை என்று கூட சொல்ல முடியாது. வரைவு அறிக்கைக்கான உள்ளீடுகள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் தேசியக் கல்விக் கொள்கை 2016 ன் படி இந்த அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று அந்த அறிக்கை முன்வைக்கிறது.
புதிய கொள்கையின் தேவை

அதற்கு முன்னதாக நாம் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திட விரும்புகிறோம். இப்போதிருக்கும் நிலையில் கல்வியில் பிரச்சனைகளே இல்லை என்றோ எந்த மாற்றங்களுமே கொண்டு வரப்படக் கூடாது என்பதோ நமது நிலைப்பாடு இல்லை. கூடி வரும் கல்விக் கட்டணங்கள் தனியார் கல்விக் கூடங்களில் தரமற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ள கடமையுணர்வு இல்லாத ஆசிரியர்கள் அந்தந்த ஊரில் நிலவும் சாதிய படிநிலைக்கு துணை போகும் கல்விக் கூடங்கள் உயர்கல்வி கற்ற பின்பும் சுயமாக ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு திறனில்லாமல் உருவாகும் மாணாக்கர்கள். இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சனைகளை முகாந்திரமாக வைத்து இந்த ஆர்.எஸ்.எஸ் ஆட்சி செய்ய விரும்புவது உண்மையில் என்ன என்பதுதான் நமது ஆய்வுக்குரிய பொருளாக இன்று இருக்கிறது.

சுப்ரமணியம் அவர்கள் தனது குழுவின் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்று அரசை கேட்டு வருவதோடு அரசு அறிவித்திருக்கும் கொள்கையை விட கடுமையான பரிந்துரைகளை தான் தந்திருப்பதாக நாளேடுகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். மேலும் இப்போதிருக்கும் கல்வி அமைப்பு இந்த சமுதாயத்தை சீரழித்திருக்கிறது என்பதான குரலில் அவர்கள் வெளிப்பாடுகள் அமைந்திருக்கின்றன. எனவே கல்வியில் மிகப் பெரிய மாற்றங்கள் வேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள். இங்கு அடிப்படையிலேயே நமக்கு முரண்பாடு தோன்றி விடுகிறது. கல்வித் துறையில் நாம் மேலே சுட்டிக் காட்டிய பிரச்சனைகள் இருக்கிறது என்று நாம் சொல்லுகின்ற அதே நேரத்தில் சாதிய மதக் கருத்துக்களால் தாழ்ந்து கிடந்த இந்த சமுதாயத்தை இந்த அளவுக்கு உயர்த்த காரணமாக இருந்தது, அனைத்து மக்களுக்குமாகக் கல்வி மாற்றப்பட்ட காரணத்தினால்தான் என்பதை நாம் மறுத்து விட முடியாது. அவர்கள் இந்த உண்மையை தலைகீழாக மாற்றி எழுதத் துடிக்கிறார்கள். வேத காலத்தில் குருகுலக் கல்வி நிலவிய காலத்தில் உயர்ந்திருந்த இந்த நாடு தாழ்ந்ததற்கான காரணம் மதம் சார்ந்த கல்விக்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் குறைந்ததுதான் என்ற கருத்து சுப்ரமணியம் குழு அறிக்கையில் பட்டவர்த்தனமாக முன்வைக்கப் படுகிறது. அவரது அறிக்கை இப்போது கல்வித் திட்டம் மற்றும் மேலாண்மைக்கான தேசிய பல்கலைக்கழக இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.

கல்வி கட்டமைப்பு:

கல்வி முறையில் கணிணியை பயன்படுத்துவதும் ஆசிரியர்களை கடுமையாக ஒழுங்குபடுத்துவதும் முக்கியமான சீர்திருத்தங்களாக இக்குழுவால் முன்வைக்கப் படுகின்றன. உலகிலேயே இளைஞர்கள் அதிகமாக இருக்கும் நாடு என்று பெருமிதம் தெரிவித்து விட்டு அவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம் பற்றி பல பத்திகள் எழுதி விட்டு பள்ளிக் கூடங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே அவற்றை இணைத்தல முறை மூலமாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய இவர்களால் எப்படி முடிந்தது என்று நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மத்திய அரசின் கொள்கை முனைவு அதனைக் கீழ்காணுமாறு பரிந்துரைக்கிறது. 4,4 மாணவர் வருகை குறைவாக இருக்கும் பள்ளிகள் அருகருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

இதனால் மீண்டும் கிராமங்களில் பள்ளிகள் இல்லாத சூழலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு பழைய காலங்கள் போல் நீண்ட துரம் நடந்து செல்ல வேண்டிய அல்லது பேருந்தில் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படும். இதனால் மீண்டும் கல்வியில்லாத தலைமுறை உருவாக நேரிடலாம். முக்கியமாக மீண்டும் பெண் குழந்தைகள் வீட்டுக்குள் முடக்கப் படுவார்கள்.

இருக்கின்ற கல்விக்கான நிதி ஒதுக்கீடை ஜிடிபியில் அதாவது நாட்டின் வருமானத்தில் 6 சதவீதம் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்ற ( உண்மையில் இது மிகவும் பழைய கோரிக்கையாகும். நமது நாட்டின் கல்வியாளர்கள் இதனை நீண்ட காலமாக முன்வைத்து வருகிறார்கள்) இந்தக் குழு உயர்கல்வி நிறுவனங்கள் தனது நிதியாதாரத்தை தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. எனில் அவர்கள் அதனை எப்படி திரட்டுவார்கள் என்று நமக்கு தெரியாதா அது மட்டுமின்றி கல்வித் துறையில் வெளிநாட்டு மூலதனமும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் அனுமதிக்கப் படும் என்றும் கூறுகிறது. ஒருபுறம் இந்த நாட்டு பள்ளிக் கல்வியை அதன் அருகிலிருக்கும் ஆசிரமங்களுடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிற இந்தக் குழு உயர்கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இங்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறது. இவர்கள் கொள்கை என்று நாம் எதை புரிந்து கொள்வது….? இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியைத் தடுப்பதற்கான வேலைகளையும் கல்வி கற்று மேலே வரும் கூட்டத்தாருக்கு உலகளவிலான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதையும் ஒருங்கே முன்வைக்கிறது இந்தத் திட்டம்.

மொழிக் கொள்கை:

பல்வேறு தேசிய இனக் குழுக்களின் இணைப்பான இந்த நாட்டில் கல்வியில் மொழித் திணிப்பு என்பது ஆதிக்கவாதிகளின் செயல் என்பதோடு நமது நாடு இதற்கான நீண்ட போராட்டங்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறது என்பதையும் நாடறியும். ஆனாலும் இந்தித் திணிப்பை கல்வியிலிருந்துதான் நாம் விரட்டியிருக்கிறோமே தவிர அரசியல் சட்டம் அதற்கு இந்தியாவின் இணைப்பு மொழியாக வழங்கியிருக்கும் மதிப்பை நாம் விட்டு வைத்ததால் அதனை கேடயமாக எடுத்துக் கொண்டு இக்குழு மும்மொழித் திட்டத்தை தனது பாடக் கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது. ஆனால் மத்திய அரசின் கொள்கை வரைவு இந்த விசயத்தில் கள்ள மவுனம் சாதித்து இந்தியைப் பற்றி ஒன்றும் பேசாமல் அமைதி காக்கிறது. ஆனால் ஒளித்து வைக்கப் பட்ட திட்டமாக மும்மொழிக் கொள்கை வர வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறது. நேர்மையற்றவர்கள் இவர்கள்.

மேலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் என்று சொல்லப் பட்டிருப்பதுடன் சமஸ்கிருதத்தை வளர்க்க முயற்சி எடுக்கப் படும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. கல்வியை கணிணிமயமாக்குவதற்கும் கற்றல் திறனை மேம்படுத்தவதற்கும் சமஸ்கிருதம் எதற்கு? இந்தியை திணிப்பதற்கும் சரி சமஸ்கிருதத்தை துவக்கி வைப்பதற்கும் சரி இக்குழு ஆதாரமாக எடுத்துக் கொள்வது அரசியல் சட்டப் பிரிவுகளையே ஆகும். நாம் சில அடிப்படையான பணிகளை விட்டு வைத்திருக்கிறோம்.

சுப்ரமணியம் குழு அறிக்கையையும், மத்திய அரசின் கொள்கை வரைவையும் சேர்த்து வாசிக்கும் போது 6ம் வகுப்பிலிருந்து நமது மாணவர்கள் மும்மொழித்திட்டத்துக்குள் கொண்டு வரப் படுவார்கள் என்பதும் இந்தி கட்டாய பாடமாக்கப் படும் என்பதும் தெளிவாகிறது.

மேலும் பள்ளி பருவம் முடிந்ததும் அனைத்து மாணவர்களும் உயர் கல்விக்கு அனைத்திந்தியத் தேர்வுகளையே சந்திக்க வேண்டும் என்பதும் தாய்மொழியில் படிக்கும் கல்விக்கு இத்திட்டத்தில் 5ம் வகுப்புக்கு மேல் இடமில்லை என்பதும் புரிகிறது.

கல்வி அனைவருக்கும் தேவையில்லை:

மழலையர் வகுப்பை துவக்கப் பள்ளி கல்வியுடன் இணைப்பதன் மூலம் அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்றலுக்குள் கொண்டு வர பெருவிருப்பம் இருப்பதாகக் காட்டும் இந்த அறிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கும் திட்டங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. 6 ம் வகுப்பில் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு மேலும் இரண்டு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப் படும். அதிலும் அக்குழந்தை தேர்ச்சி பெறாவிட்டால் அக்குழந்தைக்கு வேறு ஏதாவது தொழில் கல்வி கற்றுத் தரப்படும் என்று இந்தக் குழு அறிக்கை சொல்கிறது. மத்திய அரசின் கொள்கை முனைவு இதில் பாதியை முழுங்கி விட்டு 6ம் வகுப்பிலிருந்த கட்டாய தேர்ச்சி முறை கொண்டு வரப்படும். தோல்வியடையும் மாணவர்களுக்கு மாற்று வழிகள் தரப்படும் என்று மட்டும் சொல்லியுள்ளது. அந்தப் பிரிவு கீழ்வருமாறு

4.3.3 இப்போது நடைமுறையில் இருக்கும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் பெயிலாக்காமல் அடுத்த வகுப்புக்கு கடத்தி விடுகின்ற முறை மாற்றப் பட்டு அந்த வசதி 5ம் வகுப்புடன் நிறுத்தி கொள்ளப் படும். 5ம் வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்ல தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் கட்டாயமாக்கப் படும்
இத்தோடு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை இவர்கள் ஏற்கனவே திருத்தி வைத்திருப்பதையும் நாம் இணைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அதாவது பெற்றோர் தொழிலைக் குழந்தைகள் செய்தால் அது குழந்தைத் தொழிலாளர் சட்டப் படி குற்றமாகாது என்று ஏற்கனவே அந்த சட்டம் திருத்தம் செய்யப் பட்டிருக்கிறது. இவர்களின் ஒரு செயலின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொள்ள நாம் தொடர்ச்சியாக இவர்களின் செயல்பாடுகளை ஆய்வுக்குட் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

கடந்த காலத்தில் இடைநிற்றலை குறைப்பதற்காகத்தான் 8ம் வகுப்பு வரை ஒரு மாணவரை பெயிலாக்கக் கூடாது என்ற நடைமுறை அறிமுகப் படுத்தப் பட்டது. இப்போது அதனால் கல்வித் தரம் பாதிக்கப் படுகிறது என்று இவர்கள் கூறி இம்முறையை மீண்டும் புகுத்தினால் பெருவாரியான முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறையாக கல்வி கற்கும் குடும்பங்களில் பிள்ளைகள் இடைநிற்றல் மீண்டும் அதிகமாகும். ஆக இந்த அறிக்கை கூறுகிற வேதகாலக் கல்வி அதாவது குலக்கல்விக்கு மக்களை திருப்புவதும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மலிவு விலையில் வேலைக்கு சிறார்களை தயார்படுத்துவதும்தான் கல்விக் கொள்கையா? மேலும் மத்திய அரசின் கொள்கை முனைவு தெளிவாகக் கூறுகிறது, தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை 2015 ல் கண்டுள்ளபடி திறன் வளர்க்கும் கல்வி இந்த பொதுக் கல்வித் திட்டத்துடன் இணைக்கப் படும்.

தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை அடிப்படையான தொழிலாளிகளின் தேவை பற்றி பேசுகிறது. உதாரணமாக செங்கல் சூளையில் வேலை செய்வது அழகு நிலையங்களில் வேலை செய்வது கட்டிடத் தொழில் மரத் தொழில் புகைப்படத் தொழில் இது போன்ற தொழில் பற்றிய படிப்புகளை பள்ளி அளவில் இணைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்? யாரிந்த படிப்புகளுக்காக தேர்வு செய்யப் படுவார்கள் என்ற கேள்விகளெல்லாம் நம் அடிவயிற்றில் கை வைக்கின்றன.

இதில் 6 வது முனைவு இவ்வாறு முடிகிறது

6. மாணவர்கள் ஊதியம் பெறும் வேலை வாய்ப்பைப் பெற அல்லது சொந்த நிறுவனங்களைத் தொடங்க துறைத் திறன் மன்றங்களும் பள்ளி கல்லுரி நிறுவாகமும் இணைந்து வழங்கும் சான்றிதழ்கள்
பள்ளிக் கல்வி முடிந்ததும் குறிப்பிட்ட அளவில் மாணவர்கள் இது போன்ற வேலைகளுக்கு சென்று விட வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டமிடல் தெளிவாகத் தெரிகிறது.

மத்திய அரசின் பிடியில் கல்வி:

1976 ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போது எந்த சனநாயக முறைமையையும் பின்பற்றாமல் கல்வியானது மாநிலங்களின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்து செல்லப் பட்டது. இப்போது இக்குழு உயர்கல்வி முழுமையாக மத்திய அரசின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப் பாட்டுக்குள் வர வேண்டும் என்று வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கொள்கை முனைவு வகுக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக

4.5 பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் பொறுப்பு சூஊநுசுகூ எனப் படும் தேசிய அளவிலான பாடத் திட்டக் குழுவிடம் விடப்பட இருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது பாஜக அரசு தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்புவதற்காக செய்து கொள்ளும் ஏற்பாடே தவிர வேறு அல்ல. இந்த பாடத்திட்டக்குழுவிற்குக் கீழ் உள்ள பள்ளிகளில்தான் அறிஞர் அம்பேத்கரை அவமதிக்கும் விதமான பாடங்கள் இருந்ததையும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பாடத்திட்டங்கள் இருந்ததையும் நாம் நினைவு படுத்திக் கொள்வது நல்லது. தமிழ்நாட்டிலிருந்த சிலர் கூட மாணவர்களின் ஆய்வுத் திறனை வளர்ப்பதற்காக இவ்வாறு தரப்படுகிறது என்று சொன்னார்கள். நல்லது. எனில் காவேரிப் பிரச்சனை வடகிழக்கு மாகாணப் பிரச்சனை பற்றியெல்லாம் இந்தியாவின் இந்த மய்ய அளவிலான பாடத்திட்டம் என்ன மாதிரி கருத்துக்களை அனைத்து மாநில மாணவர்கள் முன்னிலும் வைக்கும் என்ற கேள்வி அபாயச் சங்கு ஊதுகிறது.

4.10 இதில் ஆசிரியர் பயிற்சியும் மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்லுவதற்கான பல அறிகுறிகள் காட்டப் படுகின்றன.

இதன் அடுத்த படிநிலையாக ஆசிரியர் நியமனமும் மத்திய அரசின் பிடிக்குள் செல்லலாம். ஒரு வேளை இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்கள் நம் குழந்தைகளுக்கு ஆசிரியராக வரும் நிலை வரலாம். அதனாலென்ன இந்தி டியுசன் போங்கள் என்று சொன்னால் நம் பெற்றோர்கள் போக மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள்?

சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள்:

4.6 இதில் 3 வது முனைவு கல்விக்கான உதவித் தொகை 10 இலட்சம் மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு பொருளாதார அடிப்படையில் வறிய நிலையிலுள்ளவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கிறது.

சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் மற்றும் உதவித் தொகை பற்றி மவுனம் காக்கிறது. எனவே சாதி ரீதியான ஒதுக்கீடுகளை எடுத்து விடுவதற்கான அடித்தளமாக இந்த கல்விக் கொள்கையை பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
காவி மயமாகும் கல்வி

இதில் 4 வது முனைவு பள்ளிகள் அருகாமையிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து தங்களுக்கான வழிகாட்டுதலை பெற்றுக் கொள்ளும் என்று கூறுகிறது.

ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இது போன்றதொரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதில் உள்ள தவறு உறுத்தாத அளவிற்கு இவர்கள் மனசாட்சி மோசமானதாக இருக்கிறது. மேலும் ஆசிரமங்கள் நாட்டில் எத்தகைய கேவலமான குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளன என்பதை மக்களறிவார்கள். தங்கள் குழந்தைகளை அந்த சாமியார்களிடம் ஒப்படைக்கவா அவர்கள் பள்ளிக்கு அனுப்ப போகிறார்கள்?

இப்படியெல்லாம் போனால் கல்வி காவிமயமாவது முக்கியமல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி கூறியது போல கல்வி காலியாகிவிடும் என்பதுதான் முக்கியம். இக்கொள்கையின் மீது தங்கள் கருத்துக்களை செப்டம்பர் 30க்குள் அனுப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே மேற்காணும் அபாயங்களை உணர்ந்து இக்கொள்கையை திரும்பப் பெற அரசை வலியுறுத்தி அல்லது வேறு ஒரு கல்வியாளர் குழு அமைத்து பணியாற்றிட வேண்டி மக்கள் அனைவரும், பெரும்பாடுபட்டு பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோர் பெற்றுத் தந்த கல்வி உரிமையை காப்பாற்றிட சனநாயகக் கடமையாற்றிட அனைவரும் முன்வாருங்கள்.

Related Posts