பிற

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகள் . . . . . . . . . .!

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகளை உருவாக்கி, அதற்கு உள்ளே வாழும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வெறுமனே எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமே தேசபக்தி என்று நம்பவைத்தது ஏமாற்றுவேலையன்றி வேறில்லை.
உலகம் உருவான காலத்திலே தேசம் என்கிற கருத்தியலே இருக்கவில்லை. தேசம் என்கிற வரையறையும் அதன் எல்லைக் கோடுகளும் ஒட்டுமொத்த கருத்தியலும் மிகச்சமீபத்தில் 200-300 ஆண்டுகளாகத்தான் உருவாகியிருக்கின்றன. அதற்கு முன்னர் நாடு என்றால் மன்னர் குடும்பத்தின் அதிகாரம் என்பதாக மட்டும்தானே இருந்தது. குடியுரிமை என்கிற ஒன்றே அப்போதெல்லாம் இல்லை. அரசியலமைப்பு சட்டங்கள் ஏது? எல்லாமே மன்னர் குடும்பம் வச்சதுதானே சட்டம். தொடர்ந்து எப்போதும் தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே இருப்பதுதான் மன்னரின் நாடுபிடிக்கும் வெறி. ஆக நிரந்தரமான எல்லையும் எந்த நாட்டிற்கும் இருந்ததில்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டே தான் வந்திருக்கிறது.
ஒரு சின்ன உதாரணத்திற்கு, இந்தியா என்கிற பெயரில் ஒரே நாடும், கொடியும், தேசியகீதமும், இராணுவமும், அரசியலமைப்புச் சட்டமும் கடந்த 100 ஆண்டுகளுக்குள் தானே உருவானது. அதற்கு முன்னர் ஒரு டெல்லி மன்னர் தென் தமிழகத்தின் ஏதோவொரு மன்னரிடம் போர் தொடுக்க வந்திருந்த வேளையில், தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள். “டெல்லி ஒழிக, டெல்லி ஒழிக” என்றுதானே. அதைச் சொல்லாதவர்கள் தேசவிரோதிகள் என்றுதானே அழைக்கப்பட்டிருப்பார்கள். சரி, அதேபோல இன்று “டெல்லி ஒழிக” என்று சொன்னால், நம்மை தேசவிரோதி என்பார்கள். இதுவே, தேசம் என்பதும், தேசப்பற்று என்பதும் மாறிக்கொண்டே இருக்கிற ஒன்று என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம். ஆக மக்களுக்கு எதிரான எதையும் எதிர்க்கவேண்டுமே தவிர, செயற்கையான ஒன்றாக இருக்கக்கூடிய தேச எல்லைகளுக்கு குரல் கொடுப்பது எவ்விதத்திலும் இயற்கையானது இல்லை.
அதேபோல சொந்த நாட்டில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் காவல்துறை. அதேபோல அந்த நாட்டின் எல்லையை எல்லையில்லாமல் விரிவுபடுத்தி ஆக்கிரமிக்கவும், அதற்காக அண்டை நாட்டு மக்களை துன்புறுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது தான் இராணுவம். ஆக, தேசம் என்கிற எல்லைக்குள் வாழும் மக்களை துன்புறுத்த காவல்துறையும், அந்த எல்லைக்கு அப்பால் வாழும் மக்களை துன்புறுத்த இராணுவமும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால், தேசபக்தர்கள் சண்டைக்கு வருவார்கள் தான். ஆனால் என்ன செய்வது, உண்மையை சொல்லித்தானே ஆகனும்.
உலகில் இராணுவமே இருக்கக்கூடாது, ஆயுதங்களே தயாரிக்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டவன் நான். அது சாத்தியமா என்றெல்லாம் கேட்பீர்கள்.
உலகின் முதலிரண்டு உலகப் போர்களும் எங்கே நடந்தன? ஐரோப்பாவில் தானே. 1945 வரையிலும் எல்லைகளை கூட்டியும் குறைத்தும் ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடும் இராணுவத்தை வைத்துக்கொண்டு அடித்துக்கொண்டன. ஆனால் அதன்பின்னர் ஏன் இதுவரையிலும் ஐரோப்பாவில் எந்தப் போரும் நடப்பதில்லை? அவ்வளவு ஏன் எல்லைப் பாதுகாப்பு கூட எதற்காக இல்லை. நேருக்கு நேர் எதிரியாக குண்டுமழை பொழிந்துகொண்டிருந்த பிரான்சும் ஜெர்மனியும் இன்று சர்வசாதாரணமாக சாலைகளை எல்லாம் திறந்துவிட்டு கிட்டத்தட்ட எல்லைகளே இல்லாதது போல் மாறிவிட்டன.
கால்பந்து விளையாட்டு தான் ஐரோப்பாவின் மிகப்பிரபலமான விளையாட்டு என்பதை நாம் அறிந்திருப்போம். உலகக் கோப்பை கால்பந்து நடக்கிற நாட்களில், ஐரோப்பாவில் தங்கள் வீடுகளின் முன்பு அவரவர்க்கு பிடித்த கால்பந்து அணியின் தேசியக் கொடியை பறக்கவிட்டிருப்பார்கள். பிரான்சில் வசிக்கும் ஒருவருக்கு இத்தாலி கால்பந்து அணியைப் பிடித்திருந்தால், அவர் வீட்டின் முன்பு இத்தாலியின் தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருப்பார். பெல்ஜியத்தில் வசிக்கும் ஒருவர் ஜெர்மன் அணி தான் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்று விருப்பப்பட்டால், ஜெர்மனியின் தேசியக்கொடியை அவர் வீட்டு முன் பறக்கவிடுவார். பல வீடுகளின் முன்பு அர்ஜெண்டைனா, பிரேசில் போன்ற நாடுகளின் கொடிகளையும் கால்பந்து போட்டிகள் நடக்கிற காலகட்டத்தில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். இதே சூழலை இந்தியாவில் நினைத்துப் பாருங்கள். இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் போட்டியின் உலகக்கோப்பை நடக்கிறபோது, பாகிஸ்தான் கொடியை யார் வீட்டு முன்பாவது கட்டிவைத்தால், அவர்களுக்கு தேசத்துரோகி பட்டமளித்து கட்டிவைத்து உதைக்கும் இந்த சமூகம். அதே நிலைமை தான் பாகிஸ்தானில் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டாலும் என்பதையும் தனியாகக் குறிப்பிடவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

இது எப்படி சாத்தியமானது?

மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, உலகின் மிகப்பெரிய இரண்டு போர்களை நேரடியாகப் பார்த்து, அதன் கோரத்தை அனுபவித்துவிட்ட ஐரோப்பிய மக்களுக்கு போரின் மீது மிகப்பெரிய வெறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற பழைய புகைப்படங்களின் பின்னே ஒரு துயர போர்க்கதை ஒளிந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுடைய மூதாதையர்கள் போரினால் பாதிக்கப்பட்ட கதைகளை சுமந்துகொண்டு தான் வாழ்கின்றனர். ஆக, போர் எதிர்ப்பு மனநிலை என்பது இயல்பாகவே தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு கடத்தப்பட்டே வருகிறது.
இரண்டாவது காரணம், போரினால் இலாபமடைந்து வந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்கான போரில் ஒருவருக்கொருவர் தங்கள் விட்டுவாசலிலேயே அடித்துக்கொள்வதன் மூலம் அதிக இழப்பை சந்திக்க ஆரம்பித்தனர். அதனால் போர் நடக்கிற நிலப்பகுதியை தங்கள் விட்டுக்குள் வைத்துக்கொள்ளாமல் வேறெங்காவது திருப்பிவிடலாம் என்று முடிவெடுத்தனர். மத்திய கிழக்கிற்கு போர்ச்சூழல் திருப்பப்பட்டது. ஆக, ஏகாதிபத்திய ஐரோப்பிய நாடுகளின் ஆயுத வியாபாரங்களும் தடையின்றி நடக்கும், ஐரோப்பாவிலும் தங்களுக்கு இழப்பு ஏற்படாது என்பது தான் அவர்கள் வந்துசேர்ந்த புள்ளி. போரினால் வருகிற இலாபமும் குறையவில்லை, அதேவேளையில் போரினால் உண்டாகிற இழப்பும் வரவில்லை.
மூன்றாவதாக, போரை விடவும் இலாபகரமான தொழில்களை ஐரோப்பாவில் கண்டறிந்துவிட்டனர். ஐரோப்பாவை எல்லைகளற்ற வியாபார பரப்பாக மாற்றி, உற்பத்திக்கான இடமாகவும், அதனை தடைகளற்று விற்பதற்கான இடமாகவும் மாற்றினர். இதன்மூலம் போர் தரும் இலாபத்திற்கு மாற்றாக சந்தைப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்க்கப்பட்டது. குறைந்தகூலி கொடுத்து சில ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்வதும், அதிக தொழிற்நுட்பம் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் அதிநவீன பொருட்களை தயாரிப்பதும், இவையிரண்டும் இல்லாத நாடுகளில் அவற்றை விற்பதுமாக சந்தை விரிவாக்கப்பட்டது. எல்லைகள் எளிதாகத் திறந்துவிடப்பட்டதற்கு முக்கியமான காரணமே, உழைக்கும் மக்களை எல்லைகளின்றி நடமாடச்செய்து எல்லையில்லாமல் அவர்களது உழைப்பை சுரண்டுவதற்குத் தான்.
போரைத் தன் நிலத்திலிருந்து துரத்திய ஐரோப்பிய நாடுகள்,  முற்றிலுமாக அழித்து ஒழித்துவிடவில்லை. அதற்கு பதிலாக ஐரோப்பாவை வெறுமனே போர் உற்பத்தித் தளமாக மாற்றி, மூன்றாமுலக நாடுகளில் குழப்பங்களை விளைவித்து போர் ஆயுதங்களை மட்டுமில்லாமல் போரினையும் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டன. அமெரிக்காவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. முதலிரண்டு உலகப்போர்களிலேயே அதனை வெற்றிகரமாக செய்து முயற்சித்துவிட்டது அமெரிக்கா. எந்த உலகப்போராக இருந்தாலும் தன் நிலத்தில் மட்டும் சிறுகுண்டு கூட வீசப்படாமல் பார்த்துக்கொண்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போரிலேயே கூட, ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிரான அணியில் இருந்தபோதும், ஹிட்லருக்கும் போர் ஆயுதங்களை தயாரித்து விற்று காசு பார்த்தது அமெரிக்கா. ஒருவேளை போரில் ரஷ்யா தோற்று ஜெர்மனி வெல்வதுபோல் இருந்தால், அப்படியே தடாலடியாக அணிமாறி ஹிட்லருடன் சேருவதற்கான திட்டங்களையும் தயாராகவே வைத்திருந்தது அமெரிக்கா. நாம எல்லாரும் அடிச்சிக்கனும். இவர்களோ ஆயுதங்கள் செய்து, நம்மைப் பிளவுபடுத்தி, சண்டைக்கு நிற்கும் இருவருக்கும் ஆயுதங்களையும் விற்று பணம் சேர்க்கும் வேலையைத் தான் அந்த பணக்கார நாடுகள் செய்துவருகின்றன.
உலகிலேயே அதிகமாக இராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒட்டுமொத்த தேசமும் போருக்குள் மாட்டிக்கொண்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத்தினால் தவித்துக்கொண்டும் இருக்கும் சிரியாவா? இல்லை.
மத்திய கிழக்கின் இருபெரும் பயங்கரவாத நாடுகளான இஸ்ரேலோ சவுதி அரேபியாவுமா? இல்லை.
உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துவரும் சீனாவா? இல்லை.
உலகில் பல நாடுகளிடம் தினந்தோறும் சண்டைக்குப் போய்க்கொண்டிருக்கும் அமெரிக்காவா? இல்லை.
இவையெதுவுமே இல்லை. பாகிஸ்தானுடனான எல்லையில் மட்டும் முரண்பாடு கொண்டிருக்கும் இந்தியா தான் உலகிலேயே அதிகளவில் இராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு. இந்தியா வேறெந்த நிரந்தர போர்களிலும் ஈடுபடவில்லை. எந்த பயங்கரவாத இயக்கங்களும் தினந்தோறும் குண்டுவெடிப்புகளும் இந்தியாவில் நிகழ்வதில்லை. ஆனால் உலகில் இன்று இருக்கும் எல்லா நாடுகளை விடவும் இந்தியா தான் அதிகளவில் ஆயுதங்கள் வாங்கிக்குவிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து தான் இந்தியா பெரும்பாலும் ஆயுதங்கள் வாங்கிக்குவிக்கிறது. இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பதற்கு முன்னர், அந்த நாடுகள் எல்லாம் தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களை வேறு சில நாடுகளில் முயற்சித்து அதனைக் குறிப்பிட்டே நம்மிடம் “பரிசோதிக்கப்பட்ட ஆயுதங்கள்” என்ற முத்திரையுடன் விற்கின்றன. இஸ்ரேல் அரசு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் இராணுவ ஆயுதக்கண்காட்சியில், “பாலஸ்தீனத்தில் பரிசோதிக்கப்பட்டவை” என்று சொல்லியே விற்கிறது இந்தியாவுக்கு. அதேபோலத்தான் பிரான்சும், சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்டவை என்று பெருமையோடு சொல்லி அவற்றை இந்தியாவுக்கு விற்கின்றன. அமெரிக்காவோ தான் தயாரித்த ஆயுதங்களை ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பரிசோதித்தவையாகச் சொல்லி இந்தியா தலையில் கட்டுகிறது. ஆக, உலகிலேயே அதிகளவில் ஆயுதங்கள் வாங்குவதற்கு மறைமுகமாக பல நாடுகளில் போரைத் தூண்டுவிடுகிறது இந்தியா என்று சொன்னால் தேசபக்தர்களுக்கு கோபம் வரலாம். ஆனால் அதுதான் உண்மை.
போர் என்பது வெறும் பகைமையின் விளைவு என்று நாம் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அது ஒரு தொழில், அது ஒரு பெரிய வியாபாரம், அது ஒரு இலாபமீட்டும் மூலதனம். இந்தியாவும் பாகிஸ்தானும் இனி எந்த நாட்டிலிருந்தும் எந்த போர் ஆயுதங்களும் வாங்கமாட்டோம் என்று கூட்டாக அறிவித்தால், இன்று மாலையே உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் திவாலாகிவிடும். நாளை காலையே அந்த நாடுகள் ஒன்றிணைந்து இந்தியா மீதும் பாகிஸ்தான் மீதும் போர் தொடுக்க வந்துவிடுவார்கள்.
ஆக, “போர் அற்ற அமைதியான உலகமாக நாம் வாழும் உலகை மாற்ற வேண்டும்” என்று நாடுகள் என்கிற எல்லையை எல்லாம் கடந்து இவ்வுலகின் குடிமக்களாகிய நாம அனைவரும் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமேயொழிய, அண்டை நாட்டுடன் “போருக்கு போ” என்று சொல்வது யாருக்குமே பயன் அளிக்காது. அமைதிக்கு ஆதரவு கொடுக்காத அரசியல் கட்சிகள் தேர்தலில் மட்டுமல்ல, இங்கே இயங்குவதைக் கூட நாம் அனைவர ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். மக்களிடமிருந்து வரும் அழுத்தத்திற்கு செவிசாய்க்காத அரசுகள் வீழ்ந்து காணாமல் போவதைத் தான் வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் தானே…
– இ.பா.சிந்தன்.

Related Posts