சினிமா தமிழ் சினிமா

“தெறி”க்க விட்டாரா அட்லீ . . . ?

1454589289-0122

அஜித், விஜய் படம் என்றால் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்பார்ப்பு தான். படத்தின் பெயர் வெளியாவதில் தொடங்கி, அடுத்தடுத்து படத்தைப் பற்றிய செய்திகள், உண்மைகள், புரளிகள், வதந்திகள் என ஒவ்வொரு நாளும் விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்…. தான்.

போதாக்குறைக்கு அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில், மாறி மாறி அடித்துக்கொள்வது படங்களை இன்னும் பிரபலப்படுத்தும்.

தெறி, படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே, பலவகையான எதிர்பார்ப்புகள். “ராஜா ராணி” என்கிற சென்டிமென்டல் சென்சேஷனல் வெற்றிக்குப் பின் அட்லீ இயக்கும் படம், கலைப்புலி தாணு தயாரிப்பாளர்… என தொடங்கியது அந்த எதிர்பார்ப்பு.

விஜய் நடித்த புலி படத்தில், விஜய் வேதாள இனமாக நடித்திருப்பார். அந்தப்பெயர் அஜித் படத்தின் தலைப்பானது. சரி அதோடு முடிந்ததா? அஜித்தின் வேதாளம் படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது, வேதாளம் படத்தின் டீஸர், மற்றும் டிரெய்லர்களில் அஜித் மிரட்டிய “தெறிக்க விடலாமா?” வசனம். அட… அந்த வசனம் தான்…. தலைப்பே வைக்காமல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அட்லீ-விஜய் பட தலைப்பானது. அது ஊரெல்லாம் இந்த படத்தைப் பற்றி பேச வைத்தது.

அதோடு நிறுத்திக்கொண்டாலும் பரவாயில்லை… அடுத்தகட்டத்திற்கும் சென்றனர், அட்லீயும் விஜய்யும். வேதாளம் படத்தில், குழந்தைகளின் விளையாட்டுப்பாடல், “கண்ணாமூச்சி ரே ரே”வைப்பாடி அதிரடிப்பார் அஜித்.

விஜய் தெறி படத்திற்கான விளம்பர வீடியோக்களில், தன் பங்குக்கு “ட்விங்கிள் ட்விங்கிள்” லிட்டில் ஸ்டார் பாடலைப் பாட… ரசிகர்களோ, “அடங் கொய்யால, இதைக்கொண்டாடுவதா கும்மியடிப்பதா” என குழம்பியே விட்டார்கள். ஆனா, பரபரப்பு பத்திக்கிச்சே.

விஜய்க்கு 3 கெட்டப், மீனாவின் மகள்… விஜய்யின் மகளாக நடிக்கிறார்…. இயக்குநர் மகேந்திரன் தான் தெறியின் வில்லன்.. விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் கதைதான் தெறி கதை, என… தெறி விளம்பரங்கள்.. தெறிக்கவிட்டன…

எனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் தான் தியேட்டருக்கு செல்கிறார்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள்.

சரி… தெறி… என்ன கதை…. எப்டி இருக்கு?

“தெறி” தலைப்பு மட்டுமே தமிழ் சினிமாவுக்கு புதுசு. மற்றபடி தமிழ்சினிமா காலங்காலமாக கொண்டாடிக் கூழ் ஊத்துகிற அதே ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பிரச்சினை… என்ற பஞ்ச பாண்டவர் காலத்து கதைதான்.

ஆனாலும் அட்லீ அதில் தன் பிராண்டை கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அதென்ன அட்லீ பிராண்ட்னு கேட்காதீங்க. பழைய கதையை எடுத்துக்கொண்டு…. அதில் கதாபாத்திரங்கள் மாற்றி அங்கங்கே, புது சுவாராஸ்யங்கள் சேர்த்து பரிமாறுவது. அப்படித்தான் மௌன ராகத்தை மாற்றி “ராஜா ராணி”யாக்கினார், என்று கோடம்பாத்தின் குறுக்குச்சந்துகள் கூட கற்பூரம் ஏற்றியது. அதில் தவறொன்றுமில்லை என்றுதான் நான் சொல்வேன். ஆனால் அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், ரசிக்கும் வகையில் செய்ய வேண்டும், அவ்வளவே.

சத்ரியன் படம் முழுக்கதையும் எனக்கு நினைவில்லை என்றாலும், சத்ரியன் படத்தை “தெறி”யோடு ஒப்பிடுகிற “வெறி”யை நிறுத்திக்கொள்ளுங்கள் மக்கழே. அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு சின்சியர் காவல்துறை அதிகாரி…. அவருக்கு ஒரு அரசியல் வில்லன். சின்சியர் ஆபிசர், அரசியல்வாதியின் மகனை, ஒரு அப்பாவிப்பெண்ணுக்காக அடித்துப்பிரித்து கொன்று கட்டித்தொங்கவிடுகிறார் ஹீரோ. விடுவாரா வில்லன்… சின்சியர் ஆபிசரின் குடும்பத்தை பழிவாங்குவார் என்பதும் அந்த குடும்பம் மிக மிக அழகான குடும்பமாக இருக்கும் என்பதும் உங்களுக்கே தெரிந்திருக்கும்.தொடங்கும்போது பாட்ஷா படத்தை நினைவுபடுத்துற மாதிரி தொடங்கி, இடையில் சில பல படங்களை ஞாபகப்படுத்தி முடியும் போது என்னை அறிந்தால் படத்தையும் தொட்டு முடிகிறது, தெறி.

படத்தின் ஆகப்பெரிய பலமாக, அள்ளிக்கொள்கிற அழகாக இருப்பது, நிவேதிதாவாக வரும் நைனிகா. ச்சுட்டி ச்சுட்டி சுவாரஸ்யங்களால், க்குட்டி க்குட்டி பேச்சுக்களால் தெறியின் திரையை நனைக்கிறார் நைனிகா.

விஜய்க்கு… அப்பாவாக, மகனாக, காதலனாக, கணவனாக, ஐபிஎஸ் அதிகாரியாக… நடிக்கும் வாய்ப்பு, அட்டகாசமாகவே நடித்திருக்கிறார்.

உன்னாலே எந்நாளும் பாடலின் காட்சியமைப்பு, தெறியின் அழகான மென்மைப்பகுதி. ஜீவி.பிரகாஷ் இசையில் நா.முத்துக்குமார் எழுதி விஜய் சைந்தவி பாடியுள்ள அந்த பாடலில் சமந்தா அழகாக இருக்கிறார்.

படத்தின் முன்பாதியில் நமக்குத் தெரிந்த விசயங்களை, ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த விசயங்களை வைத்து நம்மை கலங்கடிக்கிறார், அட்லீ. தமிழ் சினிமாவுக்கு இப்படி சென்டிமெண்டும் ஆக்சனும் கலந்துகட்டி கலங்கடிக்கும் டைரக்டர்கள் தேவை தான் என்று நினைக்க வைக்கிறார். அம்மா ராதிகாவுக்கும் மகன் விஜய்க்கும் காமெடி கெமிஸ்ட்ரி சிறப்பாக செட்டாகிறது.

இயக்குநர் மகேந்திரனை, வில்லனாக பார்க்க முடியவில்லை… போதாக்குறைக்கு அவர் அநியாயத்திற்கு சினிமா வில்லனாக வேறு இருக்கிறார். தன்னுடைய உத்தமபுத்திர மகனுக்காக செவ்வாய் கிரகத்துக்கு போய் கூட ஹீரோவை பழி வாங்குவார் போல. அட போங்கப்பா… உங்களுக்கு வேற வேலையே இல்லையா என கேட்கத் தோன்றுகிறது.

கேரளா என்று திரையில் போடுகிறார்கள்… ஆனால் அந்த பகுதியை டாப் ஆங்கிள்ல காட்டுகிறார்கள். அது ஏதோ பருத்திவீரன் லோகேஷன்ல போய் எடுத்துட்டு பாடாவதியா கிராபிக்ஸ் பண்ண மாதிரி இருக்கு. ஒரு பஸ் காட்சியை எடுக்க கூடவா… நெருக்கடி இல்லாத பிரைவேட் இடம் இல்ல.. இதெல்லாம் கிராபிக்ஸ் தான் என்று கட்டக்கடைசில விஜய்யும் ராஜேந்திரனும் பேசின் பிரிட்ஜ்ல பேசுற காட்சியை போடாம இருந்தாலாவது புண்ணிமா போயிருக்கும்.

மொட்டை ராஜேந்திரன், காளி வெங்கட், சௌந்திரராஜா எல்லாரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பிரபு காளி வெங்கட் காட்சியில், தான் ஒரு பிரமாதமான குணச்சித்திர நடிகர் என்பதை காளி மீண்டும் ஒரு முறை உறுதி செய்கிறார்.

எல்லாமே சிறப்பாக இருந்தாலும்… கதை மட்டும் உரைப்பாக இல்லாததால்… தெறி முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது திருப்தியின் அளவு ரொம்பவே குறைந்து போகிறது.

போதாக்குறைக்கு பேய் பட சீஸனா இருக்கிறதுனால, அங்கேயும் ஒரு துண்டைப்போடுவோம் என்று க்ளைமாக்ஸை பேய்க்குள் தள்ளி இருக்கிறார்கள்… நல்ல வேளை விஜய் பேயா வரல. விஜய்யாவே வரார்.

விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்… படம் தப்பிச்சிரும்…. பிரமாண்ட ஓப்பனிங்க… வசூல் அள்ளிருவாங்க…. என்பதை எல்லாம் தாண்டி… தெறியின் கதைக்காக இன்னும் கூடுதல் வெறியோடு அட்லீ உழைத்திருக்கலாம் என்பதே மெஜாரிட்டி கமெண்ட்.

அதோடு, அட்லீ அடுத்த படத்திலாவது அவிக்கிற இட்லியை புதுசா அவிப்பாராக அல்லது புது குண்டானில் அவிப்பாராக என்பதும் ரசிக மகா ஜனங்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.

– முருகன் மந்திரம்

Related Posts