தமிழ் சினிமா

தீரன் அதிகாரம் ஒன்று – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . !

தீரன் திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. வடிவ ரீதியாகவும் -அரசியல் ரீதியாகவும் தீரன்..  எனது பார்வையில்.

வடிவம்

கொடூர கொள்ளையர்களை பிடிக்கும் போலீஸ் படை என்கிற இந்த உண்மைச் சம்பவ ஒன் – லைனருக்கு சுவாரஸ்யமாக சம்பவங்கள்  அமைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.

கொள்ளை கூட்டட்தை மோப்பம் பிடிப்பது – கொள்ளை கூட்டத்தை தேடிப் பிடிப்பது என படத்தில் 2 பவர் ப்ளேக்கள் .இந்த 2 பவர் ப்ளேக்களில் தலா 2 சீக்வென்ஸ்கள் . இந்த சீக்வென்ஸ்கள் படு சுவாரஸ்யமாக நகர்கிறது.

இந்த சுவாரஸ்யத்திற்கு காரணமென்ன ? பக்காவான டீடெய்லிங்கும் , வலுவான காட்சியமைப்புகளும் தான். காட்சியமைப்புகளை எப்படி தாக்கம் மிக்கதாய் ஆக்குகிறார் வினோத் ? ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம்..

கொள்ளை கும்பலின் இன்பார்மர்கள் வீதியில் வீடுகளை நோட்டமிடுகிறார்கள் , வீட்டு நாய் குரைக்கிறது , 2 ஷாட்டாக அவர்கள் நடையை தொடர்கிறது கேமரா.. இதற்கு அடுத்த ஷாட் அப்படியே ஹெலி கேம் ஷாட்டாக கிராம வனப்பகுதியினூடே பாய்ந்து ஒரு குவாரியில் போய் நிற்கிறது. ஒரு சாதாரண காட்சியை தன் திரைமொழி லாவகத்தால்.. நம் மனதில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும் காட்சியாக மாற்றுகிறார் இயக்குனர். சினிமாவின் சாத்தியங்கள் இது தான். இது போல இன்னும் சில காட்சிகளை சொல்ல முடியும்.

அதே போல்.. காவல் உயரதிகாரி டி.எஸ்.பி தீரனின் நியாயமான கோரிக்கை ஒன்றை நிராகரிக்கிறார். அச்சமயத்தில் தீரன் ஃபோகஸ் அவுட் ஆக.. ஃபோகசில் இருக்கும் டம்ளருக்குள் சொட்டு சொட்டாக நீர் விழுகிறது. பல அவமானங்களை எதிர்கொள்ளும் நேர்மையான காவல் அதிகாரியின் அசாத்திய பொறுமையை அழகியலாக – சுருக்கமாக விளக்குகிறது இந்த ஒரு ஷாட்.

அதே போல் , கொள்ளை கூட்டத்தின் முக்கியஸ்தன் பனேர்சிங்கை பஸ்ஸில் வைத்து பிடிக்கிறது காவல் படை. இந்த சீக்வென்சில் வினோத்தின் திரைமொழி அபாரம் வெளிப்படுகிறது. மிக கச்சிதமாக தேர்வு செய்யப்பட்ட  ஷாட்டுகளை கூர்மையான வெட்டி – கோர்த்து பார்வையாளர்களை சீட் நுனிக்கு வரவழைக்கிறார் இயக்குனர். திரைமொழியில் பயிற்சி பெற வேண்டிய அவசியத்தை பிரச்சார தொனியில் படமெடுக்கும் முற்போக்கு இயக்குனர்கள் சிலர் உணர வேண்டும்.

வரவாற்று காட்சிகளிலும் , வன்முறை காட்சிகளிலும் கார்ட்டூன்களை பயன்படுத்தியது பலம்.

கச்சிதமான திரைக்கதை கட்டுமானத்தை – லாவகமான திரைமொழி மூலம் வலிமை மிக்கதாக்குகிறார் இயக்குனர்.  இதில் சில பிழைகளும் உண்டு. உதாரணமாக.. கொள்ளைக் கூட்டத்தின் முக்கியஸ்தர்கள் இருவர் சிறையில் சந்திக்கும் போது நடக்கும் நாடகத்தை தயவின்றி தவிர்த்திருக்கலாம். அதே போல் , நிறைய விஷயத்தை சொல்ல வேண்டியிருப்பதால் அனைத்தையும் காட்சியாக உருவகிக்காமல், நிறைய வசனமாக சொல்ல வேண்டிய நிலையும் இயக்குனருக்கு ஏற்பட்டிருக்கிறது.  ஆனால் , சில இடங்களில் காட்சியாக வருவதின் மீது அதே உணர்வுகள் வசனமாக வருவதை தவிர்த்திருக்க வேண்டும். உ.ம். தீரன் தன் மனைவியை பார்க்கச் செல்லாமல் கொள்ளை கூட்ட தலைவனை தேடி புறப்பட முடிவெடுக்கும் காட்சி.

அரசியல்

தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தான் படம் பேசியுள்ளது மறுப்பதற்கில்லை. இந்த கொடூர கொள்ளையர்கள் யார் ? அவர்கள் நவீன மாஃபியாக்கள் அல்ல.. வரலாற்று ரீதியாக புறக்கணிக்கபட்ட பழங்குடியினர்.

ஒரு பழங்குடி சமூகமே – அவர்கள் ஊரே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்களென்றால் அவர்கள் இந்த அரசமைப்பினால் சமகாலத்தில் எவ்வளவு புறக்கணிப்பட்டிருக்கிறார்களென்பதையும்.. வரலாற்று ரீதியாக சாதிய சமூகம் அவர்களை எவளவு புறக்கணித்திருக்கிறது என்பதையும் இன்னும் ஆழ்ந்து – அழுத்தமாக பேசியிருக்க வேண்டும். பழங்குடி மக்கள் மீது பொதுபுத்தி என்ன மாதிரியான புரிதலை கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இச்சமயத்தில் அவர்களை வரலாரற்று ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மேம்போக்காக மட்டுமே தொட்டது கண்டிக்கத்தக்கது.

ஆனால் , சமகால நிகழ்வுகளை நல்ல கதையாடல் மற்றும் திரைமொழியோடு சொல்வதில் வல்லவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத். மக்களுக்கான அரசியலை அவர் விரிவாக கற்கும் பட்சத்தில்.. தமிழுக்கு மிகச்சிறந்த படைப்புகள் அவரிடமிருந்து வரக்கூடும்.

– அருண் பகத்

Related Posts