இதழ்கள் இளைஞர் முழக்கம்

திரைமறைவில் இருக்கும் உழைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் – சுசீந்திரா

Indian colleagues working around a laptop

Indian colleagues working around a laptop

ஒருவனின் பொருளாதார நிலையே அவனது இருப்பை தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ். ஆம் இருப்பு என்பது பாலின ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்களுக்கு எவ்வகையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சற்று விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்களின் பலவித பிரச்சனைகளை விவாதத்திற்கு உட்படுத்திய நாம் அவர்களின் இருப்பை பற்றிய பிரச்சனைகளை புறந்தள்ளிக் கொண்டு வருகிறோம். நாட்டின் வளர்ச்சி என்ற முழுக்கங்கள் எழும் போதெல்லாம், வர்க்க நலன்கள், தொழிலாளர் நலன்கள் அவைகளின் சாதக, பாதகங்கள் யாவும் விவாதிக்கப்படுகிற வேளையில் பெண்கள் பொருளாதார அமைப்பில் எவ்விதத்தில் பங்களிப்பு செய்கிறார்கள் என்கிற மதிப்பீட்டை பதிவு செய்யாமலேயே இருந்து வருகிறோம்.

வருடா வருடம் பெண்களுக்கு இழைக்கப்டும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு எப்படி சில புள்ளி விவரங்கள் வெளியாகின்றனவோ அதேபோல் பொருளாதார அமைப்பில் பெண்கள் எவ்வாறு உள்ளனர் என்பதையும் உணரவும்/அறியவும் சில புள்ளிவிவரங்கள் அவ்வப்போது இந்திய அளவிலும் உலக அளவிலும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. காலம் காலமாக பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், நசுக்கப்படுகிறார்கள், பாதுகாப்பின்மையால் பலவித பாலியல் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது நமது அரசின் கடமை என முழக்கமிடும் நாம் சற்று முன்னே சென்று ஆராய வேண்டிய தருணமிது.

ஒரு பாலினம் காலம் காலமாக புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்றால் நாம் இன்னும் அவர்களிடத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றும் அவர்களை அரசு/அரசியல் அமைப்பில் பங்கெடுக்க வைக்கவோ அல்லது மதிப்பீடு செய்யவோ இன்னும் முனையவில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.

பொருளாதார ஆய்வுகளுக்கு தேசிய அளவிலான தரவு ஆதாரம் (Database Sources) என்று மத்திய புள்ளியியல் அமைச்சகம் கருதும் NSSO (National Sample Survey Office) வெளியிடும் சில புள்ளிவிவரங்களின் துணையோடு இந்த திரைமறைவு உழைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சிக்கலாம்.

இந்திய அரசாங்கம் வெளியிட்ட 68 வது NSSO (2014) அறிக்கை கிராமப்புறங்களில் 62 சதவீத பெண்களும் நகர்புறங்களில் 67 சதவீத பெண்களும் வீட்டின் நிர்வாக வேலைகளில் (குழந்தை வளர்ப்பு, முதியவர் பராமரிப்பு உட்பட) ஈடுபடுகின்றனர் எனக் கூறுகிறது. எனில், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் பெண்கள் அதிக அளவில் வீட்டு நிர்வாக வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர் என்பதை நமது தேசிய ஆய்வுகளின் புள்ளிவிவரங்களே ஒப்புக்கொள்கின்றன.

நமது அரசாங்கம் மேற்கொள்ளும் தேசிய ஆய்வுகள் பெரும்பாலும் Productive works எனப்படும் நாட்டின் உற்பத்திக்கான பணிகள் என ஒருவர் மேற்கொள்ளும் பொருளாதார அடிப்படையிலான பணிகளின் தன்மை குறித்தும், அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் குறித்தும் மட்டுமே கணக்கெடுப்புகளையும் ஆய்வறிக்கைகளையும் தயார் செய்கின்றன. இதன் அரசியலை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள சில உதாரணங்களை பார்ப்போம். ஒரு கிராமப்புறத்தில் விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்டும் ஒரு குடும்பத்தில் ஆண் ஏர் உழுதல், சாகுபடி செய்தல் போன்ற நேரடி விவசாயப்பணிகளில் ஈடுபடுகிறார் என்றால்; அக்குடும்பத்தில் உள்ள பெண், கால்நடைகளை பராமரித்தல், மாட்டுத் தொழுவங்களை சுத்தம் செய்தல் போன்ற கூடுதல் பணிகளை மறைமுகமாக செய்வார். இங்கு அப்பெண் மேற்கொள்ளும் பணிகள் உதவிப்பணிகள் (Assisting work) அல்லது Service work என வகைப்படுத்தப்பட்டு Non-Productive work அதாவது நேரடியாக உற்பத்திக்கான வேலை அல்ல என முடிவு செய்யப்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

அதே போல் நகர்புறத்தில் 8 மணி நேர அலுவலகப் பணி மேற்கொள்ளும் பெண்ணாக இருந்தாலும் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு நிர்வாகப்பணிகளில் ஈடுப்படுவதும் அவரே. ஆனால், அவரது 8 மணி நேர பணி மட்டுமே Productive work என நமது தேசிய ஆய்வறிக்கைகள் வகைப்படுத்துகின்றன.

சற்று இப்படி யோசித்து பார்ப்போம்; அந்த விவசாய குடும்பத்தில் கால்நடை பராமரிப்பு பணியை அப்பெண் மேற்கொள்ளவில்லை எனில் அதற்கென ஓர் உதவி ஊழியர் நியமிக்கப்படுகிறார் என்றால் அவருக்கென ஒரு குறிப்பிட்ட ஊதியமோ/ சன்மானமோ வழங்கப்பட்டு அது பொருளாதார கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதே போல் தான் நகர் புறத்திலும். எனில் “பெண்” என்பதாலேயே வீட்டு நிர்வாக வேலைகளை அவர்களிடத்தில் ஒதுக்குவதும் பொருளாதாரத்தில் எவ்விதத்திலும் பங்கெடுப்பதில்லை ஆதலால் இவை வெட்டி வேலைகள் என முடிவு செய்வதும் எவ்வளவு பெரிய பாலின அநீதி என நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும், இந்திய நாட்டில் 27 சதம் பெண் தொழிலாளர்கள் பொருளாதார சந்தையில் ஓர் உற்பத்தி அங்கமாக உள்ளனர் என உலக பெண்கள் அறிக்கை (World Women Report -2015) கூறுகிறது. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக ஒரு நாளில் ஊதியமில்லாமல் 400 நிமிடங்கள் உடல் உழைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை.

எனில் ஓர் பெண் தொழிலாளரின் மொத்த உழைப்பும் பொருளாதார சந்தையில் உற்பத்தி கணக்கில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது எனலாம். அதே போல் உலக அளவில் 50 சதம் பெண்கள் மட்டுமே உழைக்கும் வயதுடையோர் என்ற அடிப்படையில் உலக தொழிலாளார் சந்தையில் (Global Labour Market) கணக்கில் கொள்ளப்படுகின்றனர். உலக அளவில் பெண் தொழிலாளர்கள் மற்றும் ஆண் தொழிலாளர்கள் இருவருக்கும் வழங்கப்படும் சம வேலை வாய்ப்பு மற்றும் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து தான் இது கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியா 145 நாடுகளில் 143 வது இடத்தையும் உலக பாலின இடைவெளியில் (Global Gender Gab) 145 நாடுகளில் 108 வது இடத்தையும் அடைந்துள்ளது. (Source: World Economics Forum- 2015)

மேலும் இந்தியாவில் ஓர் நாளில் 400 நிமிடங்கள் ஒரு பெண் வீட்டு நிர்வாக வேலைகளில் ஈடுபடுகிறார். அதே ஓர் ஆண் வெறும் 42 நிமிடங்கள் மட்டுமே ஒரு நாளில் வீட்டு நிர்வாக வேலைகளுக்கென செலவிடுகிறார் எனவும் உலக அளவில் நடத்திய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக காலம் காலமாக Invisibility of Women Work அதாவது பெண்களின் உடல் உழைப்பை திரை போட்டு மறைத்து அங்கீகரிக்க மறுக்கும் நிலையே தொடர்ந்து வருகிறது. வெற்று பேச்சுகளும், கணக்குகளும் மட்டுமே பெண் முன்னேற்றத்திற்கான வழி என்று கருதுகின்றனரோ நமது அமைச்சர்களும் அரசு நிர்வாகமும். அரசுகள் பொருளாதாரத்தில் பாலின சமத்துவ நிலை என்பதற்கு அடித்தளமாக அறிமுகப்படுத்திய அம்சங்களில் முக்கியமான ஒன்று “பாலின பட்ஜெட்” (Gender Budget). அதாவது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள மொத்த திட்டங்களில் எத்தனை திட்டங்கள் பாலின சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து, நம் நாட்டில் மொத்த வரவு செலவு பாலின சமத்துவத்திற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது/ செலவிடப்படுகிறது என்பதை கூறுவதாகும். இந்த பாலின பட்ஜெட் என்பது முறையான ஆய்வுகளின் தரவுகளை கொண்டு தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது இதனை நமது அரசு ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்காமல் அதற்கென ஒரு தனி அமர்வு ஏற்பாடு செய்து அனைத்து மாநில மகளிர் ஆணையங்களின் ஆய்வறிக்கையையும், மகளிர் நலனுக்காக போராடும் அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டறிந்து பாலின பட்ஜெட்டின் உண்மையான நோக்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். இது வரை இந்தியாவில் 18 மாநிலங்களில் மட்டுமே இந்த பாலின பட்ஜெட் மாநில சட்டமன்றங்களில் சமர்பிக்கப்படுகிறது. பெண் முதலமைச்சராக இருக்கும் தமிழகத்தில் இது வரை ஒரு முறை கூட இம்முறையை கடைப்பிடிக்காமல் இருப்பது வேதனைக்குரியதாகும். இவைகளை செய்திட அரசியல் உறுதியும், பெண்ணடிமை தனத்திற்கு எதிரான மாற்று கொள்கையும், சிந்தனையும் அவசியமாகும்.

வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் உழைப்பை எவ்விதத்திலும் கணக்கில் கொள்ளாமல் வெட்டி உழைப்பாக கருதுவது பிற்போக்குத்தனமானதாகும். இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த வெட்டி உழைப்பிற்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டு வெட்டி உழைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது இல்லங்களில் வீட்டு வேலை என்ற பெயரில் பெண்களை வெட்டி உழைப்பிற்கு உள்ளாக்கி வருகிறோம். இவைகளை நியாயப்படுத்திட மதக்கோட்பாடுகளையும், சம்பிரதாயங்களையும் காரணம் காட்டி வீட்டு வேலை செய்வது பெண்களின் கடமை என்று உயர்த்தி பிடித்து வருகிறோம். இதற்கு மாற்றாக குடும்ப அமைப்பு முறை என்பது பொதுவாக்கப்பட்டு வீட்டு நிர்வாக பணிகளில் ஆணையும், பெண்ணையும் சமமாக ஈடுபடுத்திட வேண்டும். மேலும் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் போது Time Use Surveys Methods அதாவது நேர அடிப்படையிலான புள்ளி விவரங்கள் உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு பெண் ஒரு நாளில் காலை எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரையிலான ஒவ்வொரு மணி நேர உடல் உழைப்பையும் உற்பத்திக்கான வேலை என்று வகைப்படுத்த இயலும்.

இறப்பும், பிறப்பும் எவ்வாறு மனிதனாக பிறந்த ஒவ்வொருக்கும் உரிமையோ, அதே போல் தான் இருப்பும். பாலின பேதமில்லாமல் அதனை உறுதி செய்ய வேண்டுமெனில் ஒவ்வொரு அமைப்பிலும் திரைமறைவாக இருக்கும் பெண்களின் உழைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விவாதத்தை உருவாக்கி உடைத்தெறிய வேண்டும்.

Related Posts