இதழ்கள் இளைஞர் முழக்கம்

திராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்

திராவிட இயக்கத்திற்கு 1940 ஆம் ஆண்டுகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய காலமாக அமைந்தன. 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. இந்த மாற்றங்களால், விரிந்த மக்கள் செல்வாக்கை திராவிட இயக்கம் பெற்றது.

திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னதாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மிகவும் பலவீனப்பட்டு, தேய்ந்து கொண்டிருந்த நீதிக்கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் நடந்தன.

சட்டரீதியாக பல சீர்திருத்த நடவடிக்கைகளை ஆட்சியிலிருந்த போது கொண்டு வந்தபோதும், நீதிக்கட்சி தனது செல்வாக்குத் தளத்தை விரிவாக்கிட இயலவில்லை. சமூகத்தின் மேல்தட்டு செல்வந்தர்கள், நிலவுடைமையாளர்கள் , ஜமீன்தார்கள் போன்றவர்களைக் கொண்ட கட்சியாக இருந்ததால், அடித்தட்டு மக்களை அது கவர இயலவில்லை.

இந்தக் குறைபாடு நீடித்த நிலையில், ஆங்கிலேய ஆட்சி மீதான விசுவாசத்தையும், நேசத்தையும் நீதிக்கட்சியின் தலைமை கைவிடவில்லை. தமிழகத்திலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விடுதலைக்கான போராட்டம் தீவிரமான நிலையில், நீதிக்கட்சி ஆங்கிலேய அடக்குமுறை அரசுடன் நட்பும், நெருங்கிய உறவும் கொண்டிருந்தது. இந்த நிலைபாடும் மக்களிடமிருந்து நீதிக்கட்சி, தனிமைப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நீதிக்கட்சி தோல்வி

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, அதுவரை தேர்தல்களை புறக்கணித்து வந்த காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. மொத்தம் 215 இடங்களில் காங்கிரஸ் 159 இடங்களைப் பெற்று சட்டசபையில் வலுவான கட்சியாக மாறி, ஆட்சி அமைத்தது. நீதிக்கட்சி வெறும் 17 இடங்களை மட்டும் பெற்றது.

1920 ஆம் ஆண்டுகளிலிருந்து 1937 வரை இடையில் மூன்று ஆண்டுகள் தவிர்த்து, இதர காலம் முழுவதும் நீதிக்கட்சியே ஆட்சியில் இருந்தது. இந்த அளவில் அதிகாரத்தை வலுவோடு பற்றி நின்ற நீதிக்கட்சி தோல்வியடையக் காரணம் என்ன? இதற்கான காரணமாக, நீதிக்கட்சித் தலைவர்கள் கிராமப்புற மக்களுடன் தொடர்பற்று போய்விட்டனர் என்ற உண்மையை பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் தொடர்பு அறுபடுவதற்கு நீதிக்கட்சியின் செயல்பாடுதான் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒருபுறம், நீதிக்கட்சி வசதி படைத்தவர்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் தேசிய விடுதலை இயக்கத்தை தலைமைதாங்கி நடத்தி வந்தது. இதுவே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணம்.

நீதிக்கட்சியின் தோல்வி அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சி மீதான வெறுப்பு மேலொங்கி இருந்ததையே எடுத்துக்காட்டுகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிற ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டல் கொள்கைகளையும் அதனை ஆதரிக்கும் நீதிக்கட்சியையும் மக்கள் ஏற்கவில்லை.

ஆனால், இதே காலக்கட்டத்தில் சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையில் கிராமப்புறங்கள் உள்ளிட்டு மக்கள் செல்வாக்குக் கொண்ட இயக்கமாக வளர்ந்து வந்தது.

சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.

நீதிக்கட்சியின் பிராமணரல்லாத இயக்கக் கருத்தியலைக் கொண்டதாக சுயமரியாதை இயக்கம் இருந்த நிலையிலும்கூட சாதிய ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு போன்ற சமூக இலட்சியங்களில் உறுதியாக இருந்தது. இதனால், நீதிக்கட்சிக்கு ஏற்பட்ட சரிவு பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்படவில்லை.

காங்கிரசோடு சமரசம்

எனினும், காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்தில் முன்னின்றதால் அது பெற்ற மாபெரும் மக்கள் செல்வாக்குக்கு இணையான செல்வாக்கு சுயமரியாதை இயக்கத்திற்கு இல்லை. எனவே ஒரு கட்டத்தில் பெரியார் கங்கிரசோடு இணைந்து சமூக சீர்திருத்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஆலொசித்தார். இதனையொட்டி பெரியார், ராஜாஜி சந்திப்பு குற்றாலத்தில் நடந்தது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொள்ளாத கட்சியாக காங்கிரஸ் தலைமை இருந்தது. அன்று காந்தி பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாதி ஒழிப்பு, நால்வருண முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற இலட்சியங்களை அழுத்தமாக காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை. ஏனெனில் அன்றைக்கு சமுதாயத்தில் குறிப்பாக கிராமப்புற சமுதாயத்தில் மேட்டுக்குடியினராக இருந்த நிலவுடமையாளர்களின் கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. இந்த நிலவுடமை பகுதியினர்தான் சாதிய ஒடுக்குமுறைக் கருத்தியலை இயக்கும் சக்திகளாக இருந்தனர்.

எனவே காங்கிரசோடு சேர்ந்து சமூக சீர்திருத்ததை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற பெரியாரின் திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் நீதிக்கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. பெரியார் மீண்டும் நீதிக்கட்சிக்கு வந்து அதற்கு தலைமையேற்றார். இது தமிழகத்திற்கு அன்று பின்னடைவாகவே கருத வேண்டியுள்ளது.

சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த இயக்க நடவடிக்கைகள், இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் கிடைத்த மக்கள் செல்வாக்கு நீதிக்கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற கணிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தன. ஆனால், ஜமீன்தார்கள், ராஜாக்களின் கட்சி என்ற பிம்பமும், ஆங்கிலேய ஆட்சியின் செல்லப்பிள்ளை என்ற கறையும் நீதிக்கட்சியிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன.

அரசியல் தளத்தில் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை, சமூகத்தளத்தில், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற இரண்டு தேவைகள் அன்றைய சென்னை மாகாண மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் இருந்தன. நாட்டு விடுதலை பேசிய காங்கிரஸ் சமூக விடுதலையை கண்டுகொள்ளவில்லை. சமூக சீர்திருத்தம் பேசிய பிராமணரல்லாதவர் இயக்கம் நாட்டு விடுதலை பற்றி அக்கறை கொள்ளவில்லை.

இந்நிலையில் இரண்டையும் முன்னெடுத்துச் சென்றது கம்யூனிஸ்டு இயக்கம். அன்று அவர்கள் வளர்ச்சி பெற்று வந்தாலும் ஆங்கிலேய அரசின் அடக்குமுறை காரணமாக அமைப்புரீதியாக வளர்ச்சி பெற இயலவில்லை.

பெரியார் தலைமை

பெரியார் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சூழலில் நீதிக்கட்சியின் மீது இருந்த அத்தனை கறைகளும் பெரியாருக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் வந்து சேர்ந்து பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் நிலை உருவானது. பிராமணரல்லாதவர் இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்படும் நிலை உருவானது.

இதனை உணர்ந்த, அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் நிலைமையை சமாளிக்க முயன்றனர். வெகுமக்கள் செல்வாக்கினை தக்க வைக்கவும், விரிவாக்கவும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினர்.

ஜமீன்தார்கள், நிலவுடமையாளர்கள் மற்றும் தரகு முதலாளிகள், வர்த்தகர்களுக்கான கட்சி அல்ல என்பதனை நிலைநாட்ட நீதிக்கட்சி என்ற பெயரை அகற்றிட முடிவெடுத்தனர்.

1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாடு இந்த மாற்றங்களுக்கான களமாக அமைந்தது. ஆங்கிலேய அரசிடம் பாசமும், நேசமும் கொண்டிருந்தோரை விலக்கிடும் ஒரு முயற்சியாக ஒரு தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேய அரசு அமைத்த பல குழுக்களில் அன்று நீதிக்கட்சியின் பல தலைவர்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். அவற்றிலிருந்து விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல நீதிக்கட்சித் தலைவர்கள் ஆங்கிலேய அரசு கொடுத்த ‘சர்’, ‘திவான் பகதூர்’ போன்ற கௌரவப்பட்டங்களை பெற்றுக்கொண்டு சமூகத்தில் மிடுக்குடன் வலம் வந்து கொண்டிருந்தனர். அவற்றையும், துறக்க வேண்டுமென்று ஒரு தீர்மானத்தை மாநாட்டில் அண்ணா கொண்டு வந்தார். இவை அனைத்தும் இயக்கத்தின் கறைகளைப் போக்கி வெகுமக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான சாதுர்யமான நடவடிக்கைகளாக அமைந்தன. நீதிக்கட்சி சார்பு கொண்ட பலர் இதனால் விலக நேர்ந்தது.

இயக்கத்திற்கு “திராவிடர் கழகம்” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. பெரியார் தலைவராகவும், அண்ணா பொதுச் செயலாளராகவும் செயல்படத் துவங்கினர். அண்ணா நீதிக்கட்சித் தலைவர்களை “பட்டு வேட்டிகள்”, “ஜரிகை ஜிப்பாக்கள்” என்று கிண்டல் செய்திருந்தார். இத்தகைய மேட்டுக்குடி செல்வாக்கிலிருந்து விடுபட்டு பெருந்திரளான நடுத்தர வர்க்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களை சென்றடையும் வியூகம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டது.

பெரியார், அண்ணா தலைமையிலான “திராவிடர் கழகம்” முழு மூச்சாக செயல்படத் துவங்கியது. பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக, திராவிடக் கருத்தியல் முன்வைக்கப்பட்டது. இதில் தமிழ்மொழி, தமிழ் இன மேன்மை, தொன்மை முக்கியமான வாதங்களாக முன்னெடுக்கப்பட்டன. இந்தி, சமஸ்கிருதம், ஆரியம், அனைத்தும் திராவிடத்தின் மீது பிராமணியம் தொடுக்கும் தாக்குதல்களாக விமர்சிக்கப்பட்டது.

காங்கிரசின் சமரசப் போக்கு, காந்தியின் வர்ணாசிரம ஆதரவு நிலை, அனைத்தும் திராவிடர் கழகப் பிரச்சாரங்களில் அங்கம் வகித்தன. சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு, பெண் சமத்துவம் போன்ற கொள்கைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றன.

திராவிட நாடு கோரிக்கை

இந்தியாவிற்கு விடுதலையை ஆங்கிலேய அரசு அளித்தால் “திராவிட நாடு” தனியாக அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது “திராவிட நாடு” கோரிக்கையை பெரியார் எழுப்பினார். திராவிடர் கழகம் என்று புதிய வடிவம் எடுத்த நிலையில் திராவிட நாடு கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டது.

அப்போது ஆங்கிலேய ஆட்சி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில் பலவீனப்பட்டு இருந்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமும், தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர், விவசாயிகளின் மக்கள் இயக்கங்களும், விடுதலை இலட்சியத்தை மறுக்க முடியாத நிகழ்ச்சி நிரலாக முன்னுக்கு கொண்டு வந்தன.

இந்நிலையில் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தினார். பிராமணரல்லாதார் இயக்கம் நீண்ட காலமாக விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் வந்தால் அது பிராமண ஆதிக்க ஆட்சியாக இருக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வந்தது. எனவே ‘பாகிஸ்தான்’ தனிநாடு கோரிக்கை போன்று திராவிட நாடு கோரிக்கையை நாடு தழுவிய கோரிக்கையாக மாற்றிட ஜின்னா போன்றோரின் ஆதரவினைத் திரட்ட பெரியார் முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

விடுதலைக்கு பிறகு பாட்டாளி வர்க்கங்களின் நலன் காக்கும் கண்ணோட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் மாற்றுப்பார்வையாக முன்வைத்தது. அத்தகைய துல்லிய பார்வை ஏதும் இல்லாமல் திராவிட நாடு என்ற கோரிக்கையை திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தது.

(தொடரும்)

Related Posts