பிற

திசைகள் எட்டும் பரவட்டும் தியாக வெளிச்சம்

1929-ஏப்ரல் 8 டெல்லியில் அதிர்ந்து நின்றது பிரிட்டிஷ் பாராளுமன்றம். வெடிகுண்டுகளை வீசிய பகத்சிங்கும், கே.பி.தத்தும் அதிராமல் நின்றனர், அவர்களை பொறுத்து வரை இது அரசியல் மேடை.

கோவில் சிலைகளின் ஊர்வல புறப்பாட்டுக்கு கொளுத்தப்பட்ட வெடியா? இது – இல்லை.

சவங்களின் இறுதி நிகழ்ச்சியில் கொளுத்தப்பட்ட வெடியா? இல்லை.

சுரண்டப்பட்ட தேசத்தில் தொழிலாளர்களை மேன்மேலும் சுரண்டிடவும், வளர்ந்து வரும் சுதந்தர பொது உடமை உணர்வை தகர்த்தவிடவும், பிரிட்டீஷ் ஏகாதிபத்யத்தால் டெல்லி பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சட்ட முன்வடிவுகளான 1. பொது பாதுகாப்பு சட்டம், 2. தொழில் தாவா சட்டம் என்ற பயங்கரவாத சட்டங்களை எதிர்த்தும், ஜனநாயக முறையில் போராடியா லாலா லஜபதிராய் என்னும் தேசபக்த தலைவரை அடித்தே கொலை செய்த பிரிட்டீஷாரின் அராஜகத்தை எதிர்த்தும்.

அநீதியை கண்டு சிலையாகி போன நம் தேசத்து பெரும்பான்மை மக்களை தட்டி எழுப்பவும், இளைஞர்களின் சவமாகி போன உணர்வை மீட்டெடுத்து ஒன்றினைக்க, தேசபக்த இளைஞர் பட்டாளத்தில் தலைவர்களாக பகத்சிங் பி.கே. தத்தால் வீசப்பட்ட வெடிகுண்டு, உயிர்களை கொள்வதற்கல்ல.

மரணதண்டனை விதிக்கப்படும், கொல்லப்படுவோம் என 23-வயதான பகத்சிங்கிற்கு தெரியும். ஆனால் உயிரையும் விட மனித குலத்தின் நலனை நேசித்தான் அந்த இளம்தீர்க்க தரிசியும் அவன் தோழர்களும்.

வெடிகுண்டு பாதையை தேர்ந்தெடுத்தால் அவன் முரடன் அல்ல, அடிமை தேசத்தில், தேசம் காக்கும் பணியில் தவிர்க்கமுடியாத ஆனால் அவர்களும் விரும்பாத சில சம்பவங்களும் நடந்தேரியுள்ளன.

வெடிகுண்டு வீசப்பட்டபின், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு படை சார்பில், பகத்சிங்கால் தட்டச்சு செய்யப்பட்டு வீசப்பட்ட தாளில் உள்ள விபரம் பறைச்சாற்றும் அவர்களின் உணர்வை. இதோ…

கேளாத செவிகளை கேட்க செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது, பிரன்ஞ் அராஜகவாதி தியாகி வாலியன்ட், உதிர்த்த சாகாவரம் பெற்ற இவ்வார்த்தைகளால், எங்களது இச்செயலை வலிமையுடன் நியாயப்படுத்துகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் சீர்த்திருத்தங்களின் (மாண்டேகு-செம்ஸ்போர்டு (சீர் திருத்தங்களால்) அவமான கரமான வரலாற்றை மீண்டும் செய்வதாலும் இந்திய நாட்டிற்கு, இந்திய நாடாளுமன்றம் என சொல்லப்படும், அந்த சபையின் மூலமாக இழைக்கப்பட்டுள்ள அவமானங்களை குறிப்பிடாமலும், மீண்டும் இம்முறை சைமன் கமிஷனரிடமிருந்து, சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் மேலும் சில ரொட்டி துண்டுகளை எதிர்பார்த்து, கிடைக்கப்போவதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், எலும்புத்துண்டுகளுக்காக, மக்கள் ஒருவருக்கொருவர், சதா அடித்துக்கொண்டிருக்கக்ககூடிய சமயத்தில்

பொது பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு போன்ற புதிய ஒடுக்குமுறை சட்ட முன் வடிவுகளை இந்த அரசாங்கம் நம் மீது தினிக்க முயற்சிக்கிறது.

பத்திரிக்கை ராஜ துரோக, சட்ட முன்வடிவை அடுத்த, அடுத்த அமர்வில் அறிமுகப்படுத்துவதற்காக எடுத்து வைத்திருக்கிறது.

வெளிப்படையாக செயல்பட்டுகொண்டிருக்கும் தொழிலாளர் தலைவர்கள் வரைமுறையின்றி கைதுசெய்யப்படுவது, காற்று எத்திசை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

இத்தகைய அளவற்ற கொதிப்பை உண்டாக்கக்கூடிய சூழலில், இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு அசோசியேஷனானது மிகவும் ஆழமான அக்கறையோடு, முழு கடமைகளையும் உணர்ந்து.

இச்சிறுமை மிக்க அன்னிய அதிகார வர்க்க சுரண்டல் காரணங்களால் தாங்கள் விரும்புவதை செய்தாலும், மனித உயிருக்கு மாபெரும் புனிதத்தை உருத்தாக்கும் நாங்கள், மனித பூரணத்துமான சமாதானத்தையும், முழுமையான சுதந்திரத்தையும் அனுபவிக்கும் போற்றதலுக்குரிய எதிர்காலத்தை கனவு கானும் நாங்கள், ரத்தம் சிந்தும்படி நிர்ப்பந்திக்க பட்டுள்ளோம் என்பதை ஒப்புக்கொள்வதற்காக வருந்துகிறோம்.

ஆனால் மனிதனை மனிதன் சுரண்டுவதை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்குமான, சுதந்திரத்தை கொண்டுவரக்கூடிய மாபெரும் புரட்சியின் பலி பீடத்தில், தனி நபர்களின் உயிர் தியாகங்களை தவிர்க்க முடியாது- புரட்சி நீடுடிவாழ்க

என முடியும் இக்கடிதத்தின் உணர்வு 2014-லிலும் தேவைப்படுகிறது, உயிர் பலியும், வெடிகுண்டையும் தவிர்த்து. இந்த தியாகம் தேசம் முழுவதும் மறுபிறப்பு எடுக்க வேண்டியிருக்கிறது.

            1947-ல் விடுதலைப்பெற்ற இந்திய தேசம் இன்று 68-வது ஆண்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

            1929-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆண்ட பொழுது என்ன நிலமையோ, நாடாளுமன்றம் சுரண்டளுக்கு எப்படி பயன்பட்டதோ அதேபோல்

2014-லிலும் நிலமை உள்ளது.

            நிலமையில் ஒரு மாற்றம் மட்டுமே. இப்போது நாட்டை ஆளுவது இந்தியர்கள். ஆனால் யாருக்காக ஆள்கிறார்கள். 68 ஆண்டில் ஆட்சி நடத்திய கட்சிகளின் பெயர்கள் மாறுகிறது. செயலில் மாற்றம், முன்னேற்றம் என்ன?

            கல்வி காசாக்கப்பட்டு, அதனால் கடைக்கோடி மனிதருக்கும் மறுக்கப்பட்டும், கையெழுத்து போடுபவரை கணக்கில் எடுத்த இந்திய அரசு, கல்வி பயின்றவர் எண்ணிக்கை 67 சதம் என்றும் கல்வி பெறாதவர் சதம் 37 என்கிறது.

            இந்த நிலையிலும்       இந்தியாவில், படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தும், பதியாமலும் வேலையற்று வீதியில் விடப்பட்ட இளைஞர்கள் 40 கோடியை தாண்டிவருகிறது.

            18 வருட படிப்பு முடித்து விட்டு பட்டம் வாங்கிவிட்டோம், வேலைக்கு தகுதியான சான்றும் கிடைத்துவிட்டது, வேலை? அலைந்து திரிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் எப்போது பரிக்கப்படும் என்று தெரிவதில்லை. தாய், தந்தை மற்றும் என் உழைப்பு என எல்லாம் சேர்த்து கிடைத்த பட்டத்திற்கு இந்த தேசத்தில் என்ன மதிப்பு? வாழ்வதற்கான ஒரு வேலைகூட உத்தரவாதம் இல்லையே என ஏங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

            கிடைக்கும் சொற்பவேலையும் சமூக பாதுகாப்பு அற்றதாக… அய்யோ !!!

            அதிலும் கொடுமை வேலைக்கு செல்லவேண்டிய 24-வயதில் யதந, இந்தியாவில் இந்திய ஆட்சியாளர்களால் போடப்படும் புரிந்து உணர்வு ஒப்பந்தம், பண்ணாட்டு தொழிற்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பும், தொழிலார்களை மனிதர்களாக கூட பாவிக்காமல், 8 மணி நேர வேலை என்ற சட்டத்தை எரித்துவிட்டு, 8 நிமிட டீ குடிக்கும் வேலையிலும் கம்பெனி கூட்டம் நடத்தி வாட்டி வதைக்கும் கொடுமை.

            ஒவ்வொரு நாளும், ஒரு தகவல்தொழில்நுட்ப தொழிற்சாலையில், சுமார் 50 தொழிலாளர்கள் வேலை இழந்துகொண்டு உள்ளனர்.

            நம் கண் முன்னே கண்டோம் தமிழகத்தில், ஸ்ரீபெரும்புத்தூர் நோக்கிய ஆலையில் வேலை நேரத்தில் இயந்திரத்தில் சிக்கிய இளம்பெண், காப்பாற்ற வழியிருந்தும், இயந்திரத்தின் மதிப்பை மட்டுமே கணக்கில் எடுத்த நிர்வாகம், இளம் பெண்ணை இயந்திரத்திற்கு பலிகொடுத்ததை மறக்கமுடியுமா? இதுவரையிலும் இக்கம்பெனியால் வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர்.

            இப்பட்டியல், நோக்கியா, பாப்ஸ்கான், ஹ÷ண்டாய், பைடு, சான்மினா, என நீண்டுக்கொண்டே இருக்கிறது. எந்த கார்ப்பெரேட் கம்பெனியும் இந்திய சட்டத்தை மதிப்பதில்லை. ஆனால் இந்திய ஆட்சியாளர்கள், இந்திய பாராளுமன்றத்திலே பன்னாட்டு கம்பெனிகளின் லாபம் பெருக்க புதிய சட்டங்களை போடுவதும், இருக்கும் மக்கள் நல சட்டங்களை தூக்கி எரிவதும் என வாடிக்கையாக கொண்டுவருகின்றனர். வீடு இல்லாமல் வீதியில் வாழ்க்கையை ஓட்டும் இந்தியர்கள் 20 கோடி பேர் உள்ள நிலையில், பன்னாட்டு கம்பெனிகளுக்கு 1000 கணக்கான ஏக்கர், நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்டவைகளை இலவசமாகவும், சலுகையாகவும் வழங்கும் இந்திய அரசு, இந்திய குடிமகன் வீட்டுவரி கட்டுவது ஒருநாள் தள்ளிப்போனால் குடிநீர் இணைப்பை துண்டிக்கிறது. ஆட்டோ டேக்ஸி ஓட்டி வாழ்க்கை நடத்தும் தொழிலாளிகள் லைசன்ஸ் ரினிவல் செய்ய ஒரு மணி நேரம் தாமதம் ஆனாலும் அபராதம் விதிக்கிறது.

            ஆனால் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டு பல்வேறு வரிகளை தள்ளுபடி செய்கிறது. நல்ல வாயன் சம்பாதிக்க நாரவாயன் சாப்பிட்ட கதையாக, இந்திய நாட்டின் இயற்கை வளம் உள்ளிட்டு, உப்பு, புளி, மிளகாய் தொடங்கி, மூத்திரம் பெய்வது வரையிலும் வரி என நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்திய மக்களிடம் பிடுங்கும், இந்திய அரசு பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரி வருவாய்களை வாரி வழங்குகிறது.

            2013-14-ல் வளர்ச்சியென்று சொல்லி, பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை முத்தமிட்டு வந்த திரு.மோடி அரசு, இந்த ஆண்டு மக்கள் பயன்படுத்தும் உணவு பண்டங்கள் மீது போடப்பட்டுள்ள மறைமுக வரி மட்டும் 7525 கோடி, நியாயமா?

            அதேபோல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 2013-14-ஆம் ஆண்டில் இறக்குமதி வரிகளில் சலுகைகள் மட்டும் 2,65,000/- ஆயிரம் கோடிகள், வரிச்சலுகைகள் 76,000/- கோடி.

            மக்களுக்கு வழங்கிய சலுகைகள் என்ன?

            – 22 ஆயிரம் கோடி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு?

            – 10 ஆயிரம் கோடி ரயில் கட்டணம் உயர்வு?

            – கிராமத்தில் கால்வயிறு கஞ்சி குடிக்க உதவும், கிராமப்புற வேலை                                    திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு தேவையான உத்தேச நிதி 43000 கோடி.

            திரு. மோடி அரசு ஒதுக்கியது, 34 ஆயிரம் கோடி.

            ஆக இத்திட்டத்தில் வஞ்சனை செய்த நிதி 9 ஆயிரம் கோடி.

            ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான், ஒரு மனிதனை தற்கொலைக்கு தள்ளுவதும் கொலைதானே. ஒரு அரசே கொலை செய்யும்பொழுது அதற்கு தீர்வு என்ன? 1997 முதல் 2011 வரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 500 என்ற விவரம், சுய மரியாதை உள்ளவர்களுக்கு இடியாய் தலையில் இறங்குகிறது.

            68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் வளர்ந்தது யார்? வளமாக இருப்பது யார்? விரல் விட்டு என்னும் வகையில் சில கோடீஸ்வர்கள் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா. மனித வளம் மேம்பாட்டில் 74-வது இடத்தில், தொடரலாமா இந்த அநியாயம்?

            என்ன கொடுமை 200 ஆண்டுகால சுதந்திர போராட்டம் எத்தனை உயிர்கள் பலியானது, எவ்வளவு குறுதி சிந்தப்பட்டது, விளைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்துபெற்ற இந்திய நாட்டின் சுதந்திரத்தை அனுபவிப்பது யார் – பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதும், மக்களுக்கான சுதந்திரத்தை மீட்டுடெக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய இளைஞர் கையில் உள்ளதே என்ன செய்ய போகிறோம்.

            நாட்டின் விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த பகத்சிங் சொன்னானே

பாலுக்கு அழாத குழந்தை!

கல்விக்கு ஏங்காத மாணவன்!

பசிக்கு அழாத குழந்தை!

வேலைக்கு ஏங்காத இளைஞர்கள்!

            இவர்கள் உள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று.

            இது நமக்காக அல்லவா, நம் தேசத்தின் நலனுக்காக அல்லவா? இளைஞர்கள்தானே இந்த சிறந்த லட்சியத்தை வென்றெடுக்க முடியும்.

            1929 அக்டோர் 19 அன்று பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டிற்கு பகத்சிங் ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

            தோழர்களே இன்று, துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு, இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. தேச வரலாற்றின் சிக்கலான இக்காலக்கட்டத்தில் மிகப்பெறும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாகவேண்டும். இளைஞர்கள் தொழில்மையமான பகுதிகளின் சேரிகளிலும், கிராமப்புரங்களின் ஒட்டை குடிசைககளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்காணவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். மக்களுக்கான சுதந்திரம் அப்போதுதான் சாத்தியப்படும் என்றார்.

            ஆம் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க, மக்களுக்கான சுதந்திரத்தை மீட்டுடெடுக்க, இந்தியாவின் இளைஞர் பட்டாளம், சிந்தனையால், செயலால் தியாகத்தால் பகத்சிங்குகளாக மறுபிறப்பு எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

            செப்டம்பர் 27 இன்று அந்த மாவீரனின் 108-வது பிறந்தநாள், பகத்சிங்கின் மகத்தான தியாகத்தை, எட்டுத்திக்கும் ஏந்திச்செல்வோம். அவன் முழங்கிய

            தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும்.

            ஏகாதிபத்யம் ஒழியட்டும்.

            இன்குலாப் ஜிந்தாபாத்

            என …

            வீதிகள் தோறும் வீறு கொண்டு எழச்செய்வோம்

            இளைஞர்களின் எழிச்சியை – தேசம் காக்க.

Related Posts