பிற

தாழிடப்பட்ட கதவுகள் . . . . . . . . !

16427487_1252202934817377_4207833338751181776_n

பெருந்தீயாய் கோவையெங்கும் பதட்டம் பற்றிப் படர்ந்திருந்த சூழலில் கபரஸ்தான் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டிருந்த காலமது. காவி பாசிஸ்டுகளின் வன்மம் நிறைந்த நெடுங்கால வக்கிரம் பெரும்பனியாய் இஸ்லாமியர்களின் வாழ்வியலை உறையவைத்துக் கொண்டிருந்த நேரமது. ஒரு கிருத்துவ காவலரின் படுகொலைக்கு 19 இஸ்லாமிய உயிர்களை பதிலீடாக இந்துத்துவ யோக்கியர்கள் படையல் வைத்து மகிழ்ந்த துயரத்தின் பெருநாழிகைப் பொழுதது. கலவரத்தின் நீட்சியாய் தொடர்குண்டுவெடிப்புகளும் காக்கிகளின் வேட்டையாடலும் திறந்தவெளிச்சிறையாய் உருமாறிப்போன கோவையின் கொந்தளிப்பான காலத்தின் பதிவுகளை படைப்பிலக்கியமாக்கி இருப்பது காலத்தின் தேவையறிந்து கூவும் செயலாய் அமைந்திருக்கிறது.

1998 துவங்கி சமீபத்திய கலவரத்தில் பிரியாணி அண்டாவை தூக்கிக்கொண்டு போன கோவை கலவரம் வரையிலான நீண்டகால பதிவுகளை வெவ்வேறு காலத்தின் துயரப்பெருக்கில் கதைகளாக்கி இருக்கிறார் அ.கரீம்.

திருமணத்துக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் ஆணுறுப்பு வெட்டப்பட்டு பெட்ரோல் உற்றி கொளுத்தப்படுகிறான் ஓர் இஸ்லாமிய இளைஞன். சாப்பிட்ட கருவாட்டு குழம்பின் ஈரம் காயும்முன்பே தன் சொந்த மளிகைக்கடையை விட்டு லுங்கி அவிழ்ந்த நிலையில் விரட்டி அடிக்கப்படுகிறான் சலீம். பூர்வீக வீட்டைவிட்டு மிரட்டி வெளியேற்றப்படுகிறார் மைமூன். இன்னும் எத்தனையெத்தனை வலிகள். அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்துள் கண்டுணர்ந்துவிட முடியாது. காலத்தின் ரேகைகள் நேர்கோட்டிலேயே பயணித்துவிடுவதில்லை. அவற்றுக்கெல்லாம் இது ஒரு சாட்சியாய் நம்முன்னே வெதும்பி நிற்கிறது.

இல்லாத மகனுக்கு கடிதமெழுதும் தந்தை அதற்கு பதிலெழுதும் மகனல்லாத மகன். வாழ்வு எத்தனை மகத்தானது பாருங்கள். மனிதம் செத்துக்கொண்டிருக்கும் காலத்திலும் மானுடத்தை உயிர்பிக்கும் ஜீவநதிகள் இவர்களிடமிருந்தே ஊற்றெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதை உணரச்செய்கிறது.

நவீன காலத்தின் வளர்ச்சி பூர்வீக தொழில்களை மட்டுமல்ல மனிதர்களுக்கேயான மனிதநேயத்தையும் சாகடித்துவிட்டிருக்கிறதென்பதை டேப் பசீர் சொல்லாமல் சொல்விட்டுப்போகிறது.

ஜமாத்துக்குள் எழும் ஓர் இளம் விதவையின் கலகக்குரல் சமூகஜனநாயகத்தின் உரிமைக்குரலாய் பிரவாகமெடுத்திருப்பது அபாரம். ஆண்டிக் கோளமும் துறவரமும் காலம் மாறி, கார்பரேட் சாமியாராய் கதையளந்து, பன்னாட்டு மூலதனத்தின் மூலையுர்பத்திக்கு கால்கழுவி விட்டு, அதற்கான அடிபொடிகளுக்கு மூலை சலவை செய்து, தலித்துகளின் பஞ்சமிநிலத்தை கலவாடி சத்குருவாய் நாமகரனமிட்டுக்கொண்ட ஈஷா யோகா ஜக்கி வாசுதேவின் கதையோடு கோவையில் இன்றும் நிலவிவரும் அறிவிக்கப்படாத 144கதை சமகால அரசியலின் உக்கிரத்தை உணர்த்துகிறது.

ஐந்து நாட்களுக்கு மேலாய் பூட்டிய கதவுக்குள் உயிரை கையில்பிடித்துக்கொண்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் வதைபட்டுசாகும் அமானுல்லாவின் அழுகை யாரோ ஒருத்தனுடையது அல்ல. நம் பக்கத்து வீட்டுக்காரனுடையது, நம் சகோதரனுடையது என்கிற வேதனையும் இயலாமையும் நம்மை அந்த காட்சிகளுக்குள்ளாகவே சாகடித்துவிடுகிறது. போர்வைக்குள்ளாக வெடித்து எழும் அவனது அழுகை அவனது குடும்பத்தை மட்டுமல்ல நம்முயிரையும் பிசைந்தெடுக்கிறது.

வெடிப்புக்கு பின்காலம், எத்தனை ரணமான பதிவு அது. கைக்குழந்தையாய் தூக்கிவளர்த்த தன் மகளை பதினான்கு வருடத்திற்கு பிறகு சந்திக்கப்போகும் ஒரு தந்தையின் தவிப்பும், இளமையின் அத்தனை கணங்களையும் ஏக்கப்பெருமூச்சிலேயே இழந்துவிட்ட தன் மனைவியின் பரிதவிப்புக்கும் நடுவே திருமணத்துக்கு நிற்கிற தன் மகளிடம் தன்தரப்பு நியாத்தை எடுத்துச்சொல்லியும் புரிந்துகொள்ளவில்லையே என தந்தை மறுகுவதும் இறுதியில் பூட்டிய மௌனமுடைத்து தந்தைதோளில் சாய்ந்தழம் மகளின் அழுகையை விவரிப்புகளில் அடக்கிவிடமுடியாது. இந்து பாசிசத்தின் எழுச்சி ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த இருப்பையே எப்படியெல்லாம் நிலைகுலையச் செய்யும் என்பதற்கான சமகாலவோட்டத்தின் துயர்தோய்ந்த பதிவுகள் தான் தாழிடப்பட்ட கதவுகள்.

கரீம்…. சிவில் சமூகத்தின் முன் இக்கதைகளின் வாயிலாக நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்வி வலிமையானது. அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே.

– மதுசுதன் ராஜ்கமல்.

Related Posts