இதழ்கள் இளைஞர் முழக்கம்

தாய்மதம் திரும்புதலும் சிதம்பர ரகசியமும்

 – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பேசும் பிரதமர்

இந்திய நாட்டில் இதுவரை இருந்த பிரதமர்களில் அதிகம் பேசாத பிரதமர்கள் யார் என்றால் உடனடியாக மன்மோகன்சிங், நரசிமராவ் ஆகியோரை நீங்கள் பட்டியலிடக்கூடும். ஆனால் நரேந்திர மோடிதான் இப்பட்டியலில் முதலிடம் வைக்க வேண்டிய நபர். அவர் அதிகம் பேசுவதாக பலர் கூறுவது உண்மையா? தேசத்தின் பிரதான பிரச்சினைகளில் ஒரு பிரதமர் பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது பேசாத பிரதமர்களைவிட மிகவும் ஆபத்தான பிரதமராக இவரை முன்னிறுத்துகிறது. மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சிகள் மூலம் மாதம் ஒரு உரையை வானொலி மூலம் மக்கள் மீது தூக்கி எறிபவர். தேசத்தின் மதச்சார்பின்மை மீது சகிக்க முடியாத தாக்குதல் வரும் போது ஊமையாவது நியாயம்தானா?

சமீப நாட்களில் பாசிச இந்துத்துவ சக்திகள் விட்டெரியும் சொற்களும், அவர்களது செயல்பாடுகளும் இந்த தேசம் குறித்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது. தனி மனிதனின் உணவின் உரிமையைக்கூட கேள்விக்குள்ளாக்கும் சூழல் இதுவரை இந்த நாட்டில் நடந்ததில்லை. இந்துத்துவவாதிகளின் சந்தேகத்தின் பெயரால் உயிர்கள் பறிக்கப்பட்டாலும், முற்போக்காளர்கள் கொல்லப்பட்டாலும் சொந்த கட்சியினர் மீது கரி பூசப்பட்டாலும், “பேசும் பிரதமர்”அமைதியாகவே இருக்கின்றார். தங்களது கனவின் இறுதி ஆயுதத்தை பாசிச சக்திகள் கையில் எடுத்துள்ளனர். இந்நாட்டின் பிற மதத்தவர்களை தாய்மதம் திரும்பச் சொல்லும் ஆயுதம் அது. இந்த இறுதி அஸ்திரம்தான் அகண்ட இந்துஸ்தான் கனவின் துவக்கம்.

தாய்மதம் திரும்புதல்…

கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தாய்மதம் திரும்புதல் என்று ஆராய்ந்தால் கீழ்கண்டவாறு வருகிறது. “வீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் என்பது இந்து சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர். இதனை இந்தியாவில் செயல்படும் விஷ்வ இந்து பரிசத் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங் அரசின் விதி முறைகளை மீறி வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகள் மூலம் வேற்று மதத்தினரை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்கும் செயல் இந்திய நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதும் வீடு திரும்புதல் நிகழ்ச்சியைச் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பேசப்படுகிறது”என வருகிறது. வீடு திரும்புதல் என்ற அழகான சொல்லை அவர்கள் இப்படித்தான் அர்த்தப்படுத்துகின்றனர்.

மற்றொரு பக்கம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இணையத்தில் இந்துமத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்வது மிகவும் ஆபத்தான நிகழ்வாகும். உதாரணத்திற்கு “மத மாற்றம் தேசத் துரோகம்” என்ற தலைப்பில் மத மாற்றத்தால் சீரழிந்த நாடுகள் என அவர்கள் சொல்வது இன்னும் அதிர்ச்சிகரமானது ஆகும்.”கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென் ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%. இந்த வரிசையில் நம் நாடும் சேர வேண்டுமா சற்று சிந்தித்து பாருங்கள்.”

சரி இந்த செய்திக்கு என்ன ஆதாரம் உள்ளது? இவைகளை கணக்கிட்டவர்கள் யார்? எந்த நிறுவனம் அல்லது அமைப்பு இந்த செய்தியை வெளியிட்டது? எதுவும் யாருக்கும் தெரியாது! ஆனால் இவைகளைத் தொடர்ந்து இணைய வெளியில் புள்ளிவிபரங்கள் என்ற பெயரில் எவ்வித ஆதாரமுமில்லாமல் அவர்கள் பிரச்சாரம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

பாக்கிஸ்தான் அதிபர் மதம் மாற வேண்டும்?

இவர்கள் எந்த அளவு இஸ்லாமிய வெறுப்பை உமிழ்கிறார்கள் எனப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாத்வி பராசி 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட இந்து தம்பதியர் 20 பேருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, 11 குழந்தைகள் பெற்ற துவாரிகா சிங், 9 குழந்தைகளை பெற்ற ராம்பால் சிங், சுர்நாம் சிங் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.”சுமார் 1,400 வருடங்களுக்கு முன்னர் அனைவரும் இந்துக்களாகவே இருந்தோம். “உ.பி மந்திரி அசாம்கான், ஜமா மசூதி இமாம் புகாரி, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் மற்றும் யூசுப் ராசா கிலானி ஆகியோர் தங்களை மதமாற்றம் செய்துகொள்ள வேண்டும். அவர்கள் “கர் வாப்சி”யை (தாய் மதம் திரும்புதல்) பயன்படுத்திக் கொள்ளவேண்டும்”என விஷம் கக்கியுள்ளார்.

இத்தோடு மட்டுமல்ல”நான் இந்து மதம் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன், 40 அல்ல, இது மிகவும் முக்கியமானது, எனென்றால் இது நாட்டிற்கு தேவையானது,” இவர் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் புர்காசி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். கடந்த 2013-ம் ஆண்டு முசாபர்நகரில் கலவரம் நடைபெற்றபோது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர். இவரது பேச்சு பாஜக தலைவர்களையே வெட்கப்பட வைத்ததால் அவரை மென்மையாக கண்டித்தனர்.

இதற்கிணையாக தமிழகத்தை சேர்ந்த ஹெச்.ராஜாவும் பேசித்திரிகிறார் “1000 ஆண்டுகால ஆட்சியின் விளைவாக ஏற்கனவே 22 சதவீத முஸ்லீம்கள், 33 சதவீத நிலப்பரப்பை (பாகிஸ்தான்) கொண்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு இந்தியாவில் இருந்த 2 சதவீத முஸ்லிம்கள், இப்போது 13 சதவீதத்தினராக அதிகரித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோராம் மாநிலங்களில் பெருகிவிட்ட கிறிஸ்தவர்கள் அவற்றை தனிநாடாக அறிவிக்க கேட்டுவருகின்றனர். தமிழகத்தில் 1 லட்சம் குடும்பங்களை தாய் சமயம் திருப்புவோம். தாய் மதம் திருப்புவதற்காக திட்டம்போடுவதோ, நிதியை செலவிடுவதோ எப்படி தவறாகும்? இதற்காகத்தானே, இந்து அமைப்புகள் உள்ளன.”இது இவரால் முடிந்த கைங்கரியம்.

ஆங்கிலேயர்கலால்”கண்டறியப்பட்ட”இந்து மதம்…

எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் கற்பனைகளில் பேசுவதும், அதையே ஆதாரம் காட்டி அடுத்த தலைமுறைக்கு மத வெறியேற்றுவதும், அதை மூலதனமாக வைத்து கலவரங்களை உருவாக்குவதும் இவர்களது நிகழ்ச்சி நிரலாகும். உண்மையில் என்னதான் இவர்களது பிரச்சனையெனில் அகண்ட பாரத கனவுதான். இதற்கும் தடையாக இருப்பது “ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்ட”இந்துமதம்தான்!? அதாவது இதில் இருக்கின்ற சாதிய முறையே இதற்கு தடையாக இருக்கிறது. இதை புறம்தள்ளி அவர்கள் பிற மதத்தவர்களை எதிரிகளாக்கி இந்துமத வெறியை கிளப்ப முயல்கின்றனர். இன்னொன்று ஆங்கிலேயர்களால் “கண்டறியப்பட்ட”இந்து மதம் நம்முடைய மதமில்லை”வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம்; அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது (தெய்வத்தின் குரல் – பாகம் 1) என மகா பெரியவரே ஒப்புக்கொண்டதுதான். சரி இப்போது பிரச்சினைக்கு வருவோம்!

மனசாட்சியுடன் உரையாடல்…

“ஒரு பிராமணப் பெண் குழந்தை பெறுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போதிருந்தே அவள் தனது குழந்தைக்காக, வருங்காலத்தில் காலியாகக் கூடிய நீதிபதியின் பணியிடத்தைக் கனவுகாண்பாள். ஆனால், நமது துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெறுகிறாள் என்றால், ஒரு துப்புரவுப் பணியைத்தான் தனது குழந்தைக்காகக் கனவுகாண முடியும். இப்படிப்பட்ட விசித்திரமான அமைப்பைத்தான் இந்து மதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பில் இருந்துகொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்?

இந்துவாக நான் பிறந்திருந்தாலும் இறக்கும்போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று முன்பு சபதம் எடுத்திருந்தேன். நேற்று அதை நிறைவேற்றிவிட்டேன். மிகவும் பரவசமாக இருக்கிறது எனக்கு! நேற்று ஒரு ஆதிக்க சாதிப் பையன் என்னிடம் வந்து,”நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் செல்கிறீர்களே?” என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடை வெளியை நிரப்பிக்கொள்! அந்த இடங்களுக்காக ஆதிக்க சாதியினரிடமிருந்து எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்!” அக்டோபர் 14, 1956 நாக்பூரில் ஆயிரக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் ஆற்றிய உரை.)

அம்பேத்கர் அவர்களின் இந்த உரை பிரச்சினையின் ஒருதுளிதான். மற்ற மதங்கள் இங்கு ஏன் தழைத்தோங்கியது என இப்போது புரிகிறதா? அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் சாணார் (நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்களாக இந்து மதம் அறிவித்த 18 சாதியை சார்ந்த பெண்கள் மேலாடை அணிய முடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம். இச்சமூக மக்களின் மீசைக்கு வரி, மார்புக்கு வரி, முலைகளுக்கு வரி, முலைகளின் அளவுக்கு ஏற்ற வரி, தாலிக்கு வரி என கொடூரம் நடந்தது. வரிகட்ட இயலாவிடில் முலைகளைத் திரிகியதும், அறுத்து எரிந்த ஈனத்தனமும் நடந்ததுண்டு. அவர்களின் உழவடை பொருட்களுக்கு, அவர்கள் வீடுகளில் உள்ள மரங்களுக்கும் கூட வரி விதிகப்பட்டது. இந்தக் கொடுமைகளை கண்ட விவேகானந்தர் குமரிக்கு வந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை பைத்தியக்காரர்கள் வாழும் இடம் என குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் ஒடுக்கப்பட்ட மக்களை மற்ற மதங்கள் அரவணைத்து அவர்களுக்கு சம உரிமை கொடுத்தன. ஆலயங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் உரிமையுடன் உள் சென்று வணங்கினர். உயர்சாதி தெருக்களில் செருப்பு அணிந்து நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களில் இராணுவத்தில் சேர்ந்து பூட்ஸ் காலுடன் அதே தெருக்களில் கம்பீரமாக நடந்தனர். இந்துமதம் என அறியப்பட்ட மதம்தான் கோடிக்கணக்கான மக்களை பிர மதங்களுக்கு விரட்டிவிட்டது. ஆனால் இப்போது அவர்களை தாய்மதத்திற்கு வாருங்கள் என அழைப்பது இந்துக்களின் எளிமையான மத உணர்வை மதவெறியாக்கும் ஒரு நிகழ்வாக பாசிச சக்திகள் கையில் எடுத்துள்ளன.

சரி இப்படி வைத்துக்கொள்வோம்.. தாய்மதம் திரும்பும் ஒரு தலித் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாக அல்லது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் இரகசியத்தை திறந்து காட்டும் ஒரு தீட்சிதராக மாறமுடியுமா? இந்த இரகசியத்தை சாத்வி பராசிகளும், ஹெச்.ராஜா வகையராக்களும் சொல்வார்களா? அல்லது பேசும் பிரதமர் இதுகுறித்தாவது பேசுவாரா?

Related Posts