அரசியல்

தாத்ரி படுகொலை – உண்மையறியும் குழு அறிக்கை …

புதுதில்லி, 5/10/2015
குழு உறுப்பினர்கள்: பொனோஜித் ஹுசைன்ம, தீப்தி சர்மா, கிரன் சஹீன், நவீன் சந்தர், சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் குமார்.

கடந்த செப்டம்பர் 28 இரவு நேரம். மேற்கு உத்தரபிரதேசத்தின் பிசாரா பகுதிக்குட்பட்ட தாத்ரி எனும் குக்கிராமத்தில் அந்த கொடிய நிகழ்வு நடந்தது. முகம்மது அகலாக் என்பவர் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் பசு கன்றை கொன்று உணவாக்கி கொண்டார் என்ற புரளி அந்த கிராமத்தின் கோயிலில் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பினை கேட்ட அக்கிராமத்தின் கும்பல் ஒன்று முகம்மது அக்லாக்கின் வீட்டை நோக்கி சென்றது. அங்கிருந்த முகம்மது அக்லாக்கை கொன்றதுடன், அக்லாக்கின் மகன் தனிசையும் கொடூரமாக தாக்கியது. இதில் கடுமையான காயங்கள் அடைந்த தனீஸ் அன்றிரவு முதல் தலையில் இரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளார்.

உண்மை நிலையை கண்டறிவதற்காக நாங்கள், ஆறு பேர் கொண்ட குழுவாக தாத்ரியின் பிசாரா கிராமத்திற்கு அக்டோபர் 3 ம் தியதி சென்றோம். நாங்கள் சென்ற அன்றைய தினம் அக்கிராம பெண்கள் திரண்டு பத்திரிக்கையாளர்களை கிராமத்தின் உள்ளே விடாமல் தடுப்பதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன. அதோடு, உள்ளே நுழைய முயன்ற பத்திரிக்கையாளர்களையும் , அவர்களது வேன்களையும் கல்வீசி தாக்கினர். கிராமத்திற்கு அவப்பெயரை கொண்டு வந்து இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கின்றனர் என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

மதியத்திற்கு பின் நாங்கள் அங்கு செல்லும் போது சில ஊடக வாகனங்கள் கிராமத்தை நோக்கி செல்வதை கவனித்தோம். தொடர்ந்து நாங்கள் கிராமத்தை நோக்கி செல்ல செல்ல பாதுகாப்பிற்காக நின்ற போலீசாரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில், எங்கள் நடையை நிறுத்தி அங்கு நின்றிருந்த போலீசாரிடம் கிராமத்தில் உள்ள நிலைமையை பற்றி விசாரித்தோம். வெளியாட்கள் உள்ளே செல்வதை கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், உங்களை அவர்கள் எந்த வகையில் அணுகுவார்கள் என்பது எங்களுக்கு தெரியாது எனவும் எங்களிடம் போலீசார் சொன்னார்கள். மேலும் நாங்கள் அங்கு செல்ல கூடாது என அறிவுரை கூறிய போலீசார், மேற்கொண்டு சென்று, அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் எங்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கிராமத்தலைவரான சஞ்சீவ் ராணாவை போனில் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நாங்கள் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்ல வசதியாக ஒரு நபரை அவர் அனுப்பவே, நாங்கள் கிராமத்தினுள் சென்றோம்.சஞ்சீவ் ராணாவின் வீட்டில், அவருடன் அக்கிராமத்தை சேர்ந்த சிலரையும் கண்டோம். பின்னர் நாங்கள் முகம்மது அக்லாகின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தோம். தொடர்ந்து, மாவட்ட மாஜிஸ்திரேட்டின் அழைப்பின் பேரில் உள்ளூர் பெரியவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டோம். அங்கு கலந்து கொண்டவர்களிடையே சில விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதை மாவட்ட மஜிஸ்திரேட் புரிந்து கொண்டு பிரச்சினையை உள்ளூரிலேயே பேசி தீர்த்து கொள்வதாக கூறி எங்களை வெளியேறும்படி கேட்டு கொண்டார்.

பிசாரா கிராமத்தை பற்றிய சில உண்மைகள் :

மேற்கு உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கிராமம் தான் பிசாரா. ஒரு இடை நிலை கல்லூரி , ஒரு சந்தை மற்றும் சில தொழில் நிறுவனங்களை சுற்றிலும் கொண்ட பகுதி. கிராமத்தின் அருகில் ஒரு சானல் ஓடுகிறது. அந்த கிராமம் விவசாயம் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை மையமாக கொண்டதாக தோன்றுகிறது. எப்படியிருப்பினும், நாங்கள் போதுமான எண்ணிக்கையில் கிராமத்தின் உள்ளேயும்,வெளியேயும் உள்ள நபர்களை சந்தித்து பேசினோம். சமீபத்தில் தான் இப்பகுதி கிராம பகுதியிருந்து நகர பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, இது கிரேட்டர் நொய்டா நகர நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனால் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் இப்பகுதியில் நடைபெறப் போவதில்லை.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மொத்த மக்கள் தொகை 15000 முதல் 18000 வரை இருப்பார்கள். இவர்களில் 300 பேர் முஸ்லீம்களாக இருப்பார்கள் என கூறப்பட்டது. ராணா என்னும் துணை பெயரை வைத்திருக்கும் ராஜ்புதனர்கள் ஆதிக்கமே இங்கு அதிகம். பெரும்பாலான நிலங்களும் அவர்கள் கைகளிலேயே உள்ளது. அதோடு, சுமார் 100 யாதவ குடும்பத்தினரும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான வால்மீகி சமூகத்தினரும் வசித்து வருவதாக எங்களுக்கு கூறப்பட்டது. முஸ்லீம்கள் பெரும்பாலும் நிலமற்ற கைவினைஞர்கள்.

முகம்மது அகலாக் சொந்தமாக இரும்பு கருவிகளை பழுது பார்க்கும் கடை ஒன்றை இடைநிலை கல்லூரிக்கு முன்பு நடத்தி வந்தார்.மூன்று முஸ்லீம் குடும்பங்கள் கிராமத்தின் முக்கிய பகுதியில், குறிப்பாக கிராமத் தலைவரின் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குறுகிய சந்தில் அமைந்துள்ளன. அக்லாக்கின் வீடும் இவைகளில் ஒன்று. மற்ற அனைத்து முஸ்லீம்களும் கிராமத்தின் மற்றொரு பகுதியில் வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 70-80 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்றுள்ளது. 1947 க்கு முன்பிருந்தே இருக்க வாய்ப்புள்ள இந்த மசூதி பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்த இஸ்லாமிய ராஜ்புதனர்களுக்கு வீடாக இருந்துள்ளது. தற்போது இங்கு இருக்கும் முஸ்லீம்கள் சைபிஸ் என அறிந்து கொண்டோம்.

கிராமத்தினுள் நடந்த விவரங்கள்:

கிராமத்திற்கு வெளியே சானலோரம் நின்றிருந்த மூன்று கிராமத்து இளைஞர்களிடம் பேசினோம். அவர்கள் மிகவும் தாழ்ந்த குரலில் அக்லாக்கின் வீட்டு பிரிட்ஜில் இருந்த இறைச்சி உண்மையிலேயே மாட்டிறைச்சி தான். பெரிய குளம்புகள்,காதுகள், வெள்ளை நிறத்தோல் என அது பசுவாக மட்டுமே இருக்க முடியும். என கூறினர் . அதோடு தாங்கள் நேரடியாக பார்த்தவர்கள் கூறியதை வைத்தே கூறுகிறோம் என்றும் சொன்னார்கள். அவர்களிடையே கொலைக்காக சற்று வருத்தமும் இருந்தது.

இந்த மூன்று இளைஞர்களும் இடைநிலை கல்லூரியில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களாக இருந்தனர். நாங்கள் மேற்கொண்டு என்ன நடந்தது என அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் உடனடியாக நல்லதுவும் கெட்டதுவும் நடந்துள்ளது என்றனர். அது எப்படி என கேட்ட போது ஒருவர் தனது உயிரை இழந்தது கெட்டது எனவும், நல்லது பசுவை கொன்றதன் மூலம் அக்லாக் இந்துக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கூறினர். மசூதியும், தர்காவும் இந்து நிலத்தில் தான் உள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் இரக்கம் இருந்த போதும் அக்லாக் என்ன செய்தார் என பேசினர். மேலும் அக்லாகின் குடும்பம் புது வீடும், இழப்பீடும் அரசிடமிருந்து பெறுவார்கள். இதை தாண்டி அவர்களுக்கு வேறு என்ன வேண்டும் ? என அந்த இளைஞர்கள் உறுதியுடன் கூறினார்கள்.

b) அடுத்து பைக்கில் பால் டப்பாவுடன் அந்த வழியாக வந்த நபர் ஊடகங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பிரச்சினையை தூண்டிவிடுகின்றன என வாதிட்டார். எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல முடியவில்லை என்றும் , கிராமத்தின் உள்விவகாரத்தை தேவையின்றி பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது என்பதுவே அவரின் குற்றச்சாட்டாக இருந்தது. எவ்வாறாயினும் சில மணித்துளிகளில் 7-8 வயதையொட்டிய இரு பெண் குழந்தைகளை பள்ளிக்கூட சீருடையில் அவர்கள் புத்தகப் பையுடன் பார்த்தோம். அவர்கள் தனியார் பள்ளியிலிருந்தோ அல்லது டியூஷன் சென்டரிலிருந்து வந்திருக்ககூடும். கிராமத்தின் முக்கிய சாலையில் மிகப்பெரிய குழந்தைகள் கல்வி மையம் ஒன்று இடைநிலை கல்லூரிக்கு அருகிலேயே உள்ளது.

c) கிராம தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் எப்படி இந்துக்கள் அங்கிருக்கும் முஸ்லீம்களை கனிவுடன் கவனிக்கிறார்கள் என்பதை விளக்கினர். அங்கிருக்கும் முஸ்லீம் சமூகத்தினருக்கு போதிய பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த பணம் ரூ.40000 த்தை கிராம மசூதி சீரமைக்க உதவியதாக கிராமத்தலைவர் கூறினார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மற்ற ராஜ்புதனர்களும் அந்த பணிக்கு உதவியதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இதே கிராமத்திலிருந்து வெளியூரில் திருமணமாகி சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் சாலை விபத்தில் கொல்லப்பட்டபோது அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி இரு சமூகத்தினரிடையேயும் உள்ள நட்புறவை விளக்கி பேசினார். இன்னும் கூட அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழக்கிற்காக சென்று கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவித்தார்.

இந்த கொடிய சம்பவ இரவை பற்றி கிராமத்தலைவரிடம் கேட்டோம். அப்போது கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் தனது பண்ணையில் சம்பவம் நடந்த நேரம் தான் இருந்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து கிராம கோயிலில் அறிவிப்பு வெளியிடப்பட்டு கும்பல் அக்லாக்கின் வீட்டை நோக்கி சென்ற பின்னரே தனக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததாகவும், தான் அங்கு வேகமாக சென்ற போது அங்கு ஏற்கனவே அக்லாக் கொல்லப்பட்டிருந்தார் என்றும் கூறிய அவர் , இளைஞர்கள் மட்டுமே இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பெரியவர்கள் கொலை நடந்து முடிந்த பின்னரே சம்பவம் பற்றி அறிந்தனர் என்றும் கூறினார்.

d) ஆனால் அக்லாக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அக்லாக்கின் குடும்பம் முஸ்லீம் என்பதாலேயே குறிவைக்கப்பட்டனர் என்றே கருதினர். மஜிஸ்திரேட் கூட்டிய கூட்டத்தில் அக்லாக்கின் சகோதரர், அந்த கிராமத்தில் சிலர் குடித்துவிட்டு பிரச்சினைகள் பண்ணுவதும் அதனையொட்டி சிறு சிறு வழக்குகள் வருவதும் தினசரி நிகழ்வாகிவிட்டது எனவும், கிராம பெரியவர்கள் அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மாவட்ட மஜிஸ்திரேட் கிராம பெரியவர்களை வைத்து நடத்திய கூட்டம், குற்றவாளிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த வைக்கவே கவனம் செலுத்தியது. அவர், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் நாளை சொந்த கிராம மக்களையும், குடும்பத்தினரையும் கூட தாக்கலாம் என்று கூறினார். மேலும், நிர்வாகம் எதையோ மறைக்கிறது என்ற கருத்து பரவாமலிருக்க ஊடகங்களை கிராமத்திற்கு உள்ளே வர அனுமதித்தார். அடுத்த முதல் போலீஸ் உயர் அதிகாரியின் ஒப்புதலுடன் வருபவர்களுக்கும், அக்லாக்கின் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் வருபவர்களுக்கும் கிராமத்தின் உள்ளே நுழைய அனுமதியளிக்கப்பட்டது. நாங்கள் அந்த கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த போது மாவட்ட மஜிஸ்திரேட் உள்விவகாரம் என்பதால் எங்களை வெளியே போக சொன்னார்.

கும்பலில் இருந்தவர்களின் எண்ணிக்கை பற்றி மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. கிராமத்தலைவர் 2000 முதல் 2500 பேர் அரை இருப்பார் என கூறினார். மஜிஸ்திரேட்டின் கூட்டத்தில் இருவித கருத்துக்கள் வந்தன. ஒரு பெரியவர் 500 பேர் கொண்ட கும்பல் என்றார். மஜிஸ்திரேட் 500 முதல் 1500 பேர் வரை இருப்பார் என்றார்.

e) நாங்கள் சந்தித்து பேசிய பெரும்பாலான மக்கள் அக்லாக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு சோக நிகழ்வு என்றே கூறினர். ஆனால் அவர்கள் முகத்தில் அதற்கான வருத்தப்படுவதற்கான முகபாவனைகளை காண முடியவில்லை. துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என கூறும் அதே மக்கள், இந்த பிரச்சினையை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என்றும் 800 ஆண்டுகள் பழைமையான இந்த அமைதியான கிராமத்திற்கு அவப்பெயரை வாங்கித்தந்துவிட்டன என்றும் குற்றஞ்சாட்டினர்.

f) ஊடகங்கள் அக்லாக் மரணத்தை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் மட்டுமே செய்திகள் வெளியிடுவதில் கவனம் கொடுக்கின்றன எனவும் மறுபாகத்தை பற்றி (அதாவது இந்துக்களை) எழுதவில்லை என்பதுவே அவர்களின் முக்கிய குற்றச்சாட்டு.மேலும் இந்து இளைஞர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்வதும் கிராமத்தினருக்கு இச்சம்பவம் பற்றிய வருத்தப்படும் மனோபாவம் இல்லாமல் செய்தது.

குழுவின் கண்டுபிடிப்புகள்:

  1. முகமது அகலாக் இல்லத்திற்கு செல்லும் குறுகலான வீதியின் அகலம் சுமார் 4 அடிகள் மட்டுமே இருக்கும். ஒரு பெரிய கும்பல் அந்த வீதியில் குழுமியிருக்க வாய்ப்பில்லை. அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும். ஒரு சிறிய குழுவின் செயலாக மட்டுமே இந்த படுகொலை இருக்கமுடியும். பல இளைஞர்கள் அந்த தெருவில் அடைய முயற்சித்திருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே இந்த படுகொலையை அரங்கேற்றியிருக்க முடியும். பெரிய கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது என கூறுவது குற்றத்தில் வன்மையை குறைக்கும் செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், கொலையாளிகளை அடையாள படுத்தமுடியாத அளவிற்கு குழப்பம் எற்படுத்தவும் பெரிய கும்பல் என தொடர்ந்து விளம்பரபடுத்தப்பட்டு வருகின்றனர்.
  2. அந்த தெருவில் வீடுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. அப்படி இருக்க, ஒரு பசுவை வீட்டின் முன்வைத்து ரகசியமாக வதை செய்திருக்க முடியாது. அப்படி அவர் ரகசியமாக வதை செய்திருக்கும் பட்சத்தில், பசுவின் காதுகளையும், கொம்புகளையும் ரகசியமாக பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. இதனை உணர்ந்து கொண்டவர்கள் இப்போது, அவர் பசு வதையில் ஈடுபடவில்லை, ஆனால் இறைச்சியை வீட்டில் பாதுகாத்தார் என்ற புதிய வாதத்தை முன்வைகின்றனர்.
  3. திடீரென வன்முறையில் ஈடுபடும் கும்பல் ஒரு போதும் ஒருவரை மட்டும் குறிவைத்து தாக்க வாய்பில்லை. இந்த சம்பவத்தில், முகமது அகலாக் அவர்களின் வீட்டின் வலதுபுறம் அமைந்திருக்கும் அவரது சகோதரரின் வீடு மீது ஒரு சிறிய கல் போலும் எறியப்படவில்லை. இதன்மூலம் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை எந்த ஒரு சாமானியனாலும் புரிந்து கொள்ளமுடியும். தங்களது கும்பலை எவரும் தடுக்க துணியமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த படுகொலையை நடத்திய கும்பலின் திட்டம் என்ன என்பதை விசாரணையில் கண்டறிவது அவசியமாகிறது. பசு வதை தடுப்பு என்ற பெயரில் சில இந்துத்துவா அமைப்புகள் மிக தீவிரமாக செயல்படுவதை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. எங்களது குழு கிராமத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு வாகனத்தின் பின்புற கண்ணாடியில் “இந்து பசு பாதுகாப்பு கட்சி” என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
  4. முகமது அகலாக்-ன் குடும்பம் தனிமை படுத்தப்பட்டுள்ளதோடு என்பது மட்டுமல்ல, நடந்த படுகொலையின் பீதியிலிருந்து வெளிவரவும் இல்லை. அவரது அண்ணன், தங்கை, மருமகள், மூத்த மகன் மற்றும் சில உறவினர்களை சந்தித்தோம். அவரது அண்ணன் தவிர மற்ற அனைவரும் வெளியூரில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மகன் மற்றும் அவரது 82 வயது தாயின் நிலையை எண்ணி முகவும் துயருற்றுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலில் பலரது முகம் தங்களுக்கு தெரிந்தவை என்றும் அவர்கள் கூறினர். அவரது அக்கா, கொலைகார கும்பல் அவர் ஒளிந்திருந்ததாக கூறிய முதல்மாடிக்கு அழைத்து சென்றார். உலர்ந்த ரத்த கறை, உடைந்த கட்டைகள், வீழ்ந்து கிடக்கும் குளிர்சாதன பெட்டி என பலவற்றை காணமுடிந்தது. அந்த கும்பல், அகலாகின் மனைவி மற்றும் அம்மாவை வன்கொடுமையில் ஈடுபடுத்தவும் முயன்றுள்ளது.
  5. கிராமத்தில் வசிக்கும் அனைவரும் சமாதானத்துடன் இணைந்து வாழ வேண்டும் என ஊர் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல், தேச பிரிவினைவின் போதோ, பாபர் மசூதி தகர்கப்பட்டபோதோ, முசாபர் நகர் கலவரத்தில் போதோ கிராமத்தில் அமைதியே நிலவியதாக கூறுகிறார். இது, நடந்த படுகொலையை ஒரு சாதாரண நிகழ்வாக வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. மேலும், அகலாக் பசு வதையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று பிரபலபடுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

சுறுக்க ஆய்வு:

(a)15 ஆயிரம் ராஜபுத்திரர்கள் உள்ள கிராமத்தில் சுமார் 300 முஸ்லிம்கள் இருப்பது மட்டும் மத அடிப்படையில் மக்களை பிரிக்க போதுமானதாக இல்லை. எனவே பசுவைக் கொலை செய்ததாக பரப்பப்பட்ட வதந்தி, அதிக எண்ணிக்கையிலுள்ள விவசாய சாதியினரை முஸ்லிம்களுக்கு எதிராக திரட்ட அவசியப்பட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு முசாபர் நகரில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களில் இதே வடிவிலான போக்கு வெளிப்பட்டது.

(b) இந்த குறிப்பிட்ட சம்பவம், இந்த கிராமத்தின் முதல் சம்பவம் என தனியாக பார்க்கப்பட வேண்டியதல்ல. இந்தியா முழுவதுமே பசு வதைக்கு எதிரான பிரச்சாரம் நடத்தப்பட்டுவந்தாலும், உத்திரபிரதேசத்தில் குவிமையமாக நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு சம்பவத்தில் (சங்க பரிவாரைச் சேர்ந்த ஒரு நபர்) ஆசம்கர் பகுதியில் ஒரு கோயிலுக்குள் பசு இறைச்சியை வீசியபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதைப் போன்ற சம்பவங்களும் வதந்தியும் முசாபர் நகர் கலவரங்களிலும், தில்லி பவானா மற்றும் நஜாஃப்கர் பகுதியிலும் காணப்பட்டன. எனவே, அந்த கிராமத்தில் பல ஆண்டுகள் அமைதி நிலவியதைச் சொல்லுகிறபோது ‘முதல் முறை நடந்த இத்தகைய போக்கு’ வெறும் ‘விபத்துதான்’ அதற்கு சில இளைஞர்களின் ‘ஆத்திரம்தான்’ காரணம் என்று சொல்ல முடியாது.

(c) மற்றொரு உண்மை, அதுவும் வேறு பல சம்பவங்களிலும் காணப்பட்டதுதான் (முசாபர் நகர் பகுதி கலவரங்களை ஆய்வு செய்தபோதும் இது நடந்தது), அதாவது ஊடகங்களுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கிராமத்தின் பெண்கள் முரட்டுத் தனமாக ‘முஸ்லிம்களிடம் கனிவாக நடக்கிறீர்கள், இந்துக்களுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக’ உள்ளீர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். அமைதியை உறுதி செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என மாஜிஸ்ட்ரேட்டிடம் கோரியபோது அங்கே ஒரு பெண்ணும் இல்லை. தி இந்து நாளிதழ் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த பிரச்சனையை எவ்வாறு கையாள்வது ‘ஒருதலைப் பட்சமான’ ஊடகங்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற உத்தி பற்றி தாக்குர்களும்/ராஜபுத்திரர்களும் வெள்ளியன்று இரவு கூடி விவாதித்துள்ளதை தாத்ரியின் ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி செய்திருக்கிறார்.

இது ஒரு குற்றச் சதிதான் என்றபோதும், இந்தக் குற்றத்திற்கான பின்னணி தெளிவாக பாஜகவின் ‘மாட்டுக்கரித் தடை’ அரசியலாகும் ஒன்றாகும். பல பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த குற்றத்தின் அளவை குறைத்து மதிப்பிடும் விதத்தில் ‘விபத்து’ என்று அழைத்துள்ளனர். (நொய்டாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் ஷர்மா) அல்லது பாஜக செய்தித்தொடர்பாளர் தருண் விஜய் போன்றோர் ‘வெறும் சந்தேகத்திற்காக அடித்துக் கொலை செய்வது மோசம்’ என்று வினயமாகக் குறிப்பிடுவதன் மூலம், சந்தேகத்தில் உண்மை இருந்திருந்தால் கொலை சரிதான் என்பதுபோல தெரிவிக்கின்றனர்.

கோரிக்கைகள்:

மொஹமது அக்லாக் கொலையில் பங்குபெற்ற அனைத்து நபர்களையும் விரைவாக கைது செய்து வழக்குப் பதிய வேண்டும்.

அக்லாக் மற்றும் அந்த கிராமத்தின் முஸ்லிம் குடும்பங்களில் பாதுகாப்பை, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய மோசமான குற்றத்தை நியாயப்படுத்தி, அந்த கிராமத்தின் மக்களை மேலும் மதவாத பிளவுக்கு உட்படுத்த முயலும் மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா உள்ளிட்ட மற்ற பாஜக தலைவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனிதத்தன்மையற்ற இந்த சம்பவம் குறித்து மெளனம் காத்துவரும் பிரதமர் மோடி வாய்திறக்க வெண்டும்.

Fact Finding Report – Dadri Beef Rumour Lynching #BeefKilling

தமிழில் : மோசஸ்

Related Posts