அரசியல்

தலைவர்களின் தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ

fidel-castro

தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தவிர உலகின் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த, மக்களுடனான உறவு இருந்திருக்கவே முடியாது. அமெரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் ஒரு சின்னஞ்சிறு தீவும், அந்த தீவின் துணைத்தீவுகளாக சுமார் 300 தீவுகளும் அடங்கும் மிகச்சிறிய பூமிப் பிரதேசம். அதன் ஆட்சியதிகாரப் பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் எப்படி உலகின் உன்னதமான தலைவரானார். உலக சமூகமே மனமுவந்து அவரைத் தலைவராக கொண்டாடுவதன் மர்மம் என்ன? விடை எளிது, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயர், கம்யூனிஸ்ட், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தவர், உயிரைத் துச்சமென மதித்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமரசமற்ற நீண்ட நெடும் போராட்டத்தை நடத்தியவர். அன்பெனும் காட்டாறாக ஆர்ப்பரித்து இவ்வுலக மக்களை ஆரத்தழுவியவர், எதிரியையும் தனது நியாயமான வாதத்திறமையால் நண்பனாக மாற்றும் வல்லமை பெற்றவர், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியே இல்லாத செயல்பாட்டுக்கு சொந்தக்காரர், அநீதிக்கு எதிராக படை நடத்தியவர், எழுத்தாளர், பரந்த வாசிப்புக்கு சொந்தக்காரர், கலையை நேசிப்பவர், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் கண்ணெனக் கொண்டவர், பேச்சாளர், கருத்துக்களை உருவாக்கி எளிய மக்களிடம் நிலைகொள்ளச் செய்பவர் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…!

ஒரு போராளி எப்போதும் மக்களுடன் கலந்து வாழவேண்டும். அதிலும் ஒரு கம்யூனிஸ்ட் மக்களின் நலனையே எப்போதும் மனதில் இருத்தி செயல்பட வேண்டும். ஒரு சர்வதேசியவாதியாக தன்னை மாற்றி உலகின் எந்த மூலையில் உள்ள, எந்த பிரிவு மக்களின் பிரச்சனையாக இருந்தாலும், அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் முனைப்பு காட்டுவதும் அதற்கு தலைமை தாங்குவதுமாக, முழுவதுமாக தன்னை மக்களுக்காக அர்ப்பணிக்கவேண்டும். இவையெல்லாம் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ நமக்காக விட்டுச்சென்ற முன்மாதிரிகள்.

ஐ.நா சபையின் வரலாற்றில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை ஒரு நாடு நடத்தியது என்றால் அது சின்னஞ்சிறு கியூபாவாகத்தான் இருக்க முடியும். அதுவும் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ என்ற தலைவன் வழியில் நடந்த போராட்டமாகத்தான் இருக்கும். ஐ.நா சபையின் வரலாற்றில் நீண்ட உரைகள் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் கியூபா என்ற சின்னஞ்சிறு நாட்டுக்கும் அதன் ஒப்பற்ற தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவுக்குமே சொந்தம். சுமார் 250 தோழர். ஃபிடல் பேசிய நீண்ட உரையே இன்றளவும் ஐ.நா சபையின் மிகவும் நீண்ட உரையாகும். ‘சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்” என்ற வள்ளுவர் வார்த்தைக்கு இலக்கணமாக எதிரிகள் கூட அமைதியாக தனது உரையை கேட்கும் விதத்தில், அதே நேரம் எழுச்சியோடு உரையாற்றும் வல்லமை தோழர். ஃபிடலைத் தவிர யாருக்கு வாய்க்கும்…?

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் யூனியனிலும் சோஷலிசத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு, பொருளாதாரப்mtcastro2-20121016114814328267-620x349 பிரச்சனைகளில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்த கியூபாவை மீட்டு, இன்றைய தலைநிமிர்ந்த கியூபாவாக மாற்றிய பெருமை, பதற்றமற்ற செயலூக்கம் நிறைந்த தோழர். ஃபிடலுக்கே சொந்தம். உணவு பஞ்சத்தைத் தீர்க்க இயற்கை விவசாயம், விஞ்ஞானத்தை முடிந்தவரையில் இயற்கை முறையிலுள்ள விவசாயத்திற்கு பயன்படுத்துதல், நகர்ப்புற விவசாயம் என்று துல்லியமான திட்டங்கள். அவ்வளவு ஏன் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சிறு நிலப்பரப்பைக் கூட விட்டுவைக்காமல், விவசாயத்தை முன்னெடுத்து, இரண்டு மூன்று வருடங்களில் கியூபாவை உணவில் தன்னிறைவு நிறைந்த நாடாக மாற்றியதன் சூத்திரதாரி தோழர். ஃபிடலே ஆவார். மருத்துவத்துறையில் கியூபா நிகழ்த்திய சாதனைகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபடவேண்டிய ஒன்று. எபோலா நோய் ஆப்பிரிக்கா கண்டத்தை தாக்கியபோது, நியூ ஆர்லியன்ஸ் நகரை புயல் தலைகீழாக புரட்டிப்போட்ட போதும் எங்கும் கியூப மருத்துவக்குழு முன்வரிசையில் நின்று அரும்பணி ஆற்றியது. மருத்துவத் துறையை ஒரு எதார்த்த சேவைத்துறையாக கியூபா கட்டமைத்தது. ஆரம்பநிலை புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. போதையிலிருந்து ஏராளனமான இலத்தீன் அமெரிக்கர்களை கருணையோடு மீட்டுள்ளது. உதரணமாக உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டீன கால்பந்தாட்ட வீரர் மரடோனாவை, போதையிலிருந்து மீட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைத்த பெருமை தோழர். ஃபிடலுக்கும் அவரது கியூபாவுக்குமே சாரும்.

பொதுவாக 1990-களில் பரவலான கேள்வி ஒன்று இருந்தது…கியூபா தன்னை ஒரு சோஷலிச நாடாக நிலைநிறுத்திக் கொள்ளுமா எனபதே அந்தக் கேள்வி….ஆனால் கியூபாவில் மேலும் அதிக நம்பிக்கையுடன் சோஷலிசப் பதாகையை பட்டொளி வீசிப் பறக்கச் செய்தது மட்டுமன்றி தனது அண்டை நாடுகளிலும் அந்த நெருப்பைப் பற்றவைத்த பெருமை தோழர். ஃபிடலுக்கே சொந்தம். ஏறத்தாழ இலத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் இடதுசாரிகளின் தளமாக மாற்றிய பெருமையும் தோழர். ஃபிடலையே சாரும். சேகுவேரா என்ற மாமனிதனை, மனிதகுலப் போராளியை எப்படி பார்த்து பார்த்து செதுக்கி வடிவமைத்தாரோ அது போலவே தோழர். ஹியுகோ சாவேசையும் உருவாக்கினார். தோழர். ஹியுகோ சாவேஸ் துணையுடன் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் சோஷலிச நெருப்பை கொழுந்து விட்டு எரியச் செய்தார்.

தனது எதிராளிகள் விரித்த மரண வலையை ஒவ்வொரு முறையும் கிழித்தெறிந்து, எதிரிகளுக்கு திகிலூட்டும் கெட்ட கனவாக அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வந்தார். சுருட்டில் வெடிமருந்து வைத்து கொல்லுதல், விஷத்தை உணவில் கலந்து கொடுத்து கொல்லுதல், தாடியில் விஷத்தைத் தடவி உடலுக்குள் செலுத்துதல், விஷமாத்திரையை மருந்துகளுக்கு பதிலாக கொடுப்பது, பயன்படுத்தும் உடைகள், கைக்கடிகாரம் அனைத்திலும் விஷம் தடவி உடலுக்குள் செலுத்த முயற்சி என்று விதவிதமாக கொலை முயற்சிகள். இறுதியில் தோழர். ஃபிடல், “மரணத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் போட்டி ஒன்றை ஒலிம்பிக்கில் நடத்தினால் நான் அதில் தங்கப்பதக்கம் பெறுவேன்” என்று கிண்டலாக கூறும் அளவுக்கு, தனக்கு எதிரான 638 முறை படுகொலை முயற்சிகளை முறியடித்தார்.

அவரது சிறு சிறு வாசகங்கள் பிரசித்தமானது, போராளிகளுக்கு உணர்வூட்டுபவை..

  • ”சோஷலிச அல்லது மரணம்”
  • “நீங்கள் எனக்குத் தண்டனை கொடுங்கள் அதுபற்றி எனக்கு கவலையில்லை.ஏனெனில் வரலாறு என்னை
    விடுதலை செய்யும்”
  • “எரியும் கனலுக்கு இடம் கொடுப்போம். அணைந்து போன சாம்பலுக்கல்ல”
  • “இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையேயுள்ள மரணத்துடனான போராட்டமே புரட்சி”
  • “கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்”
  • “அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி கூறுகிறார்கள். முதலாளித்துவம் எங்கே வெற்றி பெற்றுள்ளதென்று
    சொல்லச் சொல்லுங்கள்.”

தோழர். ஃபிடல் எவ்வளவுகெவ்வளவு உக்கிரமான போராளியோ அவ்வளவுக்கவ்வளவு இளகிய மனமும் அன்பும் untitledநிறைந்தவர். பெனிசியோ டெல் டேரோ என்ற மெக்சிகோ நாட்டு நடிகர், சேகுவேராவின் வாழ்கையை திரைப்படமாக தயாரித்தார். அதில் பெனிசியோ டெல் டேரோ சேகுவேரா வேடத்தில் நடித்திருந்தார். அவர் தோழர். ஃபிடலுக்கு அத்திரைப்படத்தை, திரையிட்டுக் காண்பிக்க விரும்பினார். ஏனெனில் தோழர். ஃபிடலின் அங்கீகாரம் தான் அந்தத் திரைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும். ஆனால் தோழர். ஃபிடல் அந்தத் திரைப்படத்தை தனியாக பார்க்க விரும்பவில்லை, தனது புரட்சிப் போராட்டத்தின் சக தோழர்களோடு இணைந்து பார்க்க விரும்புவதாக கூறினார். ஹவானாவிலுள்ள கார்ல் மார்க்ஸ் திரையரங்கத்தில் சுமார் 5000 சக தோழர்களோடு, இரண்டு பாகங்கள் கொண்ட அந்த படத்தைப் பார்த்தார். திரையிடல் முடிந்த பிறகு பெனிசியோ டெல் டேரோவை கட்டியணைத்து அழுதார். தோழர். ஃபிடலுடன் மொத்த திரையரங்கமும் கண்ணீர்விட்டு அழுதது. “சேகுவேராவை ஃபிடல் எந்தளவுக்கு நேசித்தார் என்பதை சேகுவேராவின் சாயலில் உள்ள என்னை, அவர் கட்டியணைத்ததில் இருந்து புரிந்து கொண்டேன். மிகபெரும் வல்லரசான அமெரிக்காவை நடுநடுங்கச் செய்த அந்த மாமனிதர் கண்ணீர் விட்டு அழுதார் என்பதை என்னால் நம்பவே இயலவில்லை.” என்று பின்னர் பெனிசியோ டெல் டேரோ ஆச்சரியப்பட்டு கூறினார்.

மனிதநேயத்தைத் தவிர யாதொன்றும் அறியாத அம்மனிதர், நம்மைவிட்டு பிரிந்தார் என்ற சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கும் வெறுமையை இட்டுநிரப்பும் ஆளுமை நமக்குக் கிடைப்பது அரிதினும் அரிது. எனினும் ஒரு மக்கள் ஊழியர் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற உயரிய உதாரணத்தை, தோழர். ஃபிடல் நம்முன் விட்டுச் சென்றிருக்கிறார் . அவர் பாதையை பின்பற்றி அர்த்தமுள்ள அஞ்சலியை அந்த தலைவர்களின் தலைவருக்குச் செலுத்துவோம்…!

– சதன் தக்கலை.

Related Posts