அரசியல்

தலித் – வன்னியர்: விதைக்கப்படும் வெறுப்பும், அறுவடையும் …

(படம், சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நத்தம் காலனியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையின் போது எடுத்தது)

இப்போது ​நாம் ​வாட்சப் வழியாக விவாதித்து, ஃபேஸ்புக்கில் முகம் பார்த்துக் கொள்ளும் ​அளவு கையருகே வந்துள்ளது தொழில்நுட்ப முன்னேற்றம். கடந்த சுதந்திர தினத்தன்று இரவில் அப்படியொரு வாட்சப் பதிவாக, சேஷ சமுத்திரம் வன்முறைப் புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. நாம் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்கும் வடிவம் மேம்பட்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன, வேகம் அதிகரித்திருக்கிறது. ஆனால், கருத்துக்கள் மேம்பட்டுள்ளனவா, சகோதர உறவு மேம்பட்டிருக்கிறதா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

விழுப்புரம் வன்முறையின் பின்னணி:

சேஷமுத்திரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை தூண்டப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. தலித் – தலித் அல்லாதார் என்று மக்களைப் பிரிப்பதுதான் இந்த வன்முறைகளின் நோக்கம் என்பது வெளிப்படை.

விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில்​, தலித் மக்கள் தேர் அமைக்க முடிவு செய்தபோது ஒரு வன்னியர்தான் தேரை நன்கொடையாக கொடுத்தார். ஆனால், அந்தத் தேர் பொதுப் பாதையில் இழுக்கப்படக் கூடாது என்று சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு, சாதி அடிப்படையில் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பெருமிதமும், தலித் வெறுப்பும் அதற்கு அடிப்படையாகும்.

இதனால் கடந்த மூன்றாண்டுகளாக​, தேரோட்டத்திற்கு அனுமதி கிடைக்காமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவந்துள்ளது. ​ஒரு வழியாக,​ பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேரோட்டம் நடத்திக்கொள்ளவும், அசம்பாவிதம் நடக்காமலிருக்க காவல்துறை பாதுகாப்​பு கொடுப்பதென்றும் முடிவு செய்​திருந்தனர். ஆனால், அப்படி நடந்துவிடக் கூடாது என முடிவு செய்த வன்முறை எண்ணம் கொண்டோரால் முதலில் அந்த கிராமத்திற்கு மின்சாரம் கொடுக்கும் மின் மாற்றி உடைக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த நேரத்தில் தாழ்த்தப்பட்டோர் கிராமத்திற்குள் புகுந்தவர்கள் தேரைக் கொளுத்தியதுடன், வீடுகளையும் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். சம்பவம் நடந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியானது.

கள்ளக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக​ சந்தேகம் எழுந்தது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சந்தேகத்தை எழுப்பி, வன்முறைக்கு கண்டனம் செய்தனர். அதே நேரத்தில் பிற அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்தில் கடைப்பிடித்துவரும் மெளனமும், எதிர் நிலைப்பாடும் வெளிவந்தது.

மறுக்க விரும்பாத பாமக:

வன்முறை பற்றி பா​ட்டாளி மக்கள் கட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர்களின் தரப்பிலிருந்து மறுப்பு இல்லை.​ மாறாக​ பாமக சார்பில் வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளில் காவல்துறை​யின் வன்முறையைக் கண்டித்துள்ளனர். தலித் மக்களுக்கு எதிரான வன்மம்​ கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் ஏதுமில்லை. பாமகவின், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையினர் மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் ’தேரினை கூடுதலான பாதையில்’ இழுத்துச் செல்வதை பிரச்சனை என்று குறிப்பிடுகின்றனர். பொதுப் பாதையில்தான் அனுமதி கோரியிருந்தனர் என்பதையும், 3 ஆண்டுகளுக்கு பின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டிருப்பதையும் மறைத்து காவல்துறை அணுகுமுறை பற்றி​ மட்டும்​
குறிப்பிட்டுள்ளனர். பொதுப்பாதைக்கு உரிமை கேட்பது ‘சமூக விரோதிகளின் தூண்டுதல்’ என்பதுடன் “அடையாளம் தெரியாத கலவரக்காரர்களால்” தேர் கொளுத்தப்பட்டது என்கின்றனர்.

தலித் அல்லாதாரை திரட்டும் முயற்சி

​பாட்டாளி மக்கள் கட்சியினர் – தங்கள் செயல்பாடுகளை தலித் – வன்னியர் மோதலை பயன்படுத்தி, தலித் அல்லாதவர்களை திரட்டுவதற்கான விதத்தில் அமைத்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே, தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறையில், தாழ்த்தப்பட்டோர் வீடுகள் கொளுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாமக மேற்கொண்ட பிரச்சாரமும், தேர்தல் வெற்றியும் அனைவரும் அறிந்ததுதான். அதே அணுகுமுறையைத் தொடர பாமக விரும்புகிறது.

இது ஒரு உதாரணம் மட்டுமே, தமிழகத்தில் வேறு பல சாதிக் கட்சிகளும் இவ்வாறு செயல்பட்டு வெற்றியடைய விரும்புகின்றனர். சமூகத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்கி அதற்காக உழைப்பது, மக்களிடையே முன்னேற்றங்களை உருவாக்குவது என்ற பாதையில் அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, சுய சாதிப் பெருமிதத்தையும், தலித் மக்கள் மீதான வெறுப்பையும் கட்டமைப்பது வெற்றிக்கு எளிய வழி என்று கருதுகின்றனர்.

தான்தான் அடுத்த முதல்வர் என்று இணையம் தொடங்கியிருக்கிறார்கள், முகநூல், வாட்சப், ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் என தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களின் அரசியலோ சமூக நிலைமையை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுப்பதாக இருக்கிறது.

திட்டமிட்டு விதைக்கப்படும் வெறி:

சில வாரங்கள் முன் ஒரு கல்லூரி மாணவர் இணையத்தில் செய்திருந்த பிற்போக்கான பதிவுகள் காணக் கிடைத்தன. ‘தாழ்த்தப்பட்டிருந்த சாதியினரெல்லாம் நம் முன் சமமாக நடக்கத் தொடங்கிவிட்டார்களே’, ‘மரியாதையான குவளையில் தேனீர் குடிக்கிறார்கள்’ என்று​ கோபத்துடன் பதிந்திருந்த அவர்
‘சாதி கடந்து காதலிக்கும் பெண்களை கொன்று குவிக்க வேண்டும்’ என்றெல்லாம் கருத்துக்களை (இன்னும் மோசமான வார்த்தைகளில்) வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கருத்துக்களுக்கு ஏராளமான ஆமோதிப்புகளும் (லைக்குகளும்), ஆதரவான வாதங்களும் இருந்தன என்பது நம் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.

ஆதரவளிக்கும் இந்துத்துவம்:
​​
இந்தியாவில் 25 சதவீதமும், தமிழகத்தில் 20 சதவீதமும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பான்மையோர் கடும் உடலுழைப்பாளர்கள். அவர்களைப் போன்றே ஏழைகளாகவும், உடல் உழைப்பாளர்களாகவும் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள, சமூக சாதிப் படிநிலையில் சற்று மேம்பட்ட பிற்பட்ட சாதியினர். இந்த இரண்டு தரப்பையும் மோத விடும் போக்கைத்தான் இது காட்டுகிறது. இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான தத்துவமான இட்டுக்கட்டப்படும் இந்துத்துவம் இத்தகைய சாதி தர்மத்துக்கு எதிராக துரும்பையும் அசைப்பதில்லை. மாறாக, தற்போது (பிற்பட்டோர் உள்ளிட்டு) பெற்றுவரும் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி நடவடிக்கைகளை முடித்துக்கட்ட கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். சாதிப் பிளவுகளை அதிகரிக்க தார்மீக ஆதரவளிக்கின்றனர்.

இந்திய சமூகத்தில், பல நூற்றாண்டுக​ளாக திட்டமிட்டு மெல்ல மெல்ல ஏற்றப்பட்டு, பின் வர்ணாசிர சட்டங்கள் மூலம் இறுகச் செய்யப்பட்டவையாக சாதிக் கட்டுமானம் அமைந்துள்ளது. உழைப்பவர்களுக்கு இடையிலேயே மோதலை உருவாக்கும் சாதியத்தின் இயல்பு எல்லா ஆட்சியாளார்களாலும் விரும்பப்படுகிறது. இத்தகைய ஏற்றதாழ்வும், வன்மமும் படித்த இளைஞர்களிடையேயும், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரிடத்தும் தொடர்கின்றன.

இத்தகைய அபாயமான வளர்ச்சிப் போக்கிற்கு அரசியலும், அதிகார விருப்பமும் காரணமாக அமைகின்றன.

ஏழைகளுக்கு எதிராக ஏழைகள்:

தமிழக கிராமங்களில் வசிப்போரில் 94 சதவீத குடும்பங்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள் என்கிறது சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு விபரங்கள். தங்கள் வாழ்நிலைக்கான உண்மைக் காரணங்களை அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களை அப்படியே வைத்துக்கொள்ள விரும்புவோர், சாதியை ஒரு ஆயுதமாக கையிலெடுக்கிறார்கள். மற்றவர்கள் மெளனமாக ஆதரிக்கிறார்கள். பரம ஏழைகளுக்கு எதிராக பிற்பட்ட ஏழைகளின் வன்முறைதான இதன் விளைச்சலாக அமையும்.

இதனை மனதில் வைத்துதான் அண்ணல் அம்பேத்கர் ஒரு எச்சரிக்கைச் செய்தியுடன் இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்தார்.

டாக்டர் அம்பேத்கரின் அந்த எச்சரிக்கைச் செய்தி

“அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற இருக்கிறோம்…. நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கு.. தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்”

இந்த வாசகங்கள் நூறு சதவீதம் உண்மையானவை. ஆனால், அந்த எச்சரிக்கைக் குரலுக்கு எந்த அளவு மதிப்புக் கொடுத்தோம் என்பதைத்தான் நடப்பவை காட்டுகின்றன.

Related Posts