கலாச்சாரம் சமூகம் நிகழ்வுகள்

தர்மஸ்தலா.. மர்ம ஸ்தலா?

OLYMPUS DIGITAL CAMERA

மஞ்சுநாதர் கோவில்

மங்களூர் மாவட்டம், பெல்த்தங்கடி தாலுகா, உஜிரே பஞ்சாயத்துக்கு உட்பட்டது தர்மஸ்தலா. இங்கு புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது.

கோவில் நிர்வாகத்தின் தலைவர், தர்மாதிகாரி என்று அழைக்கப்படுகிற பொறுப்பு வழிவழியாக ஹெக்டே குடும்பத்துக்கு உண்டு. தற்போது வீரேந்திர ஹெக்டே என்பவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். இவர், பொதுவாக, கோவில் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தர்மஸ்தலாவுக்கே அதிபர் என்று கருதப்படுபவர்.கடந்த 12 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட மர்ம மரணங்கள் தர்மஸ்தலாவில் மட்டும் நிகழ்ந்துள்ளன. இதில் 93 பெண்களும் அடங்குவர். இதில் பிரச்சனை என்னவென்றால், ஒரு வழக்கு கூட தீர்க்கப்படவில்லை. அவ்வளவு ஏன், முறையாக விசாரிக்கக் கூட இல்லை.

1970களில் ஒரு நில மோசடியைத் தட்டிக் கேட்டதற்காக, மார்க்சிஸ்ட் கட்சி தோழர் ஒருவரின் கடை முற்றாக எரிக்கப்பட்டது. அவர் உள்ளே இருக்கிறார் என்று நினைத்தே அது நடந்தது. அதற்குப் பிறகும் பல முறை அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. 1980களில் ஒரு தோழர், உஜிரே பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வேட்பு மனுதாக்கல் செய்தார். சிலரின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய மறுத்து, உறுதியாகத் தேர்தலில் நின்றதற்காக, அவரது மகள் பத்மலதா கொல்லப்பட்டார். வேதவல்லி என்ற பெண்மணி, கல்லூரி பேராசிரியர். தகுதி இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்துக்கு வேண்டிய ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். வேதவல்லி நீதிமன்றம் சென்று, வெற்றி பெற்றார். சில நாட்களுக்குள், அவரது வீட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு பிணமாய் கிடந்தார். இணங்க மறுக்கும் பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த அநீதிகளை யாராவது தட்டிக்கேட்டால், அவர் உயிர் அவரிடம் இருக்காது. மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே இவற்றில் தலையிட்டு வந்தது. உள்ளூர் மக்கள் அச்சத்தில் தான் இருந்தனர். 1947ல் இந்தியாவுக்கு வந்த சுதந்திரம், தக்ஷிண கன்னட மாவட்டத்தை எட்டிப் பார்க்கவில்லை.

சௌஜன்யா வழக்கு

Sowjenya

சௌஜன்யா

ஒரு வருடத்திற்கு முன், பிஜேபி ஆட்சியில் 17 வயதே நிரம்பிய சௌஜன்யா என்ற இளம் பெண், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரத் துக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டாள். படித்து வேலைக்குப் போய் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவளது வண்ண வண்ணக் கனவுகள் நசுக்கப்பட்டன. அவள் வாழ்க்கை பறிக்கப்பட்டது.மக்களின் மனநிலை கொதி நிலைக்குச் சென்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் முதலில் தலையிட்ட அமைப்பு. அதன் மங்களூர் மாவட்டத் தலைவர் சொன்னார் “சௌஜன்யா கொலை நடந்து, ஒரு வருடம் முடியும் நிலையில், அவரது பிறந்த நாள் வந்தது. அன்று உஜிரே பஞ்சாயத்து அளவில் ஒரு கூட்டம் நடத்தத் திட்டமிட்டோம். ஊர் வலம் துவங்கும் போது 500 பேர் இருந் தனர். கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்த போது 3000 பேர் இருந்தனர். கூட்டம் முடியும் நேரம், எண்ணிக்கை 5000த்தைத் தாண்டிவிட்டது”. பிறகு மாணவர் சங்கம், மாதர் சங்கம், தலித் அமைப்புகள், குழுக்கள் தலையிட்டுப் போராட்டம் நடத்தின. சிபிஐ விசாரணை வேண்டும் என்பதே கோரிக்கை. இந்த ஓராண்டில், சௌஜன்யா வழக்கின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்பட்ட இருவர், அக்குடும்பத்துக்கு உதவியாய் இருந்த ஒருவர் ஆக மொத்தம் 3 பேர், சந்தேக முறையில் மரணம் அடைந்துள்ளனர். பொறுத்தது போதும் என்ற நிலைக்கு ஊர் மக்கள் வந்து விட்டனர்.

சிபிஐ விசாரணை வேண்டும்

பொதுஜன நிர்ப்பந்தத்துக்கு அடி பணிந்து, சௌஜன்யா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு, மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தர விட்டிருக்கிறார். போதாது, தீர்க்கப்படாமல் நிலு வையில் இருக்கும் அனைத்து வழக்குகளும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, கட்சியின் மங்களூர் மாவட்டக் குழு ஒரு வார கால பிரச்சார பயணம் நடத்தியது. பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்தனர். உண்டியல் வசூல் மட்டுமே ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.15000 ஆனது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நின்று பேச்சுக்களைக் கேட்டனர். பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யாவும், இக்கட்டுரை ஆசிரியரும், கட்சியின் மாநில செயலாளர் ஜி.வி.ஸ்ரீராம ரெட்டியும் பங்கேற்றுப் பேசினர். கொளுத்தும் வெயிலில் 11 மணி முதல் 3 மணி வரை மங்களூரின் பிரதான சாலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நின்றவர்கள் நின்றபடியே இருந்தனர். அனல் பறக்கும் தார் சாலையில் ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தனர். அரசியல் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ளது.

அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் கராத், சௌஜன்யாவின் குடும்பத்தை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ், பிஜேபி, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள், தர்மாதிகாரி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கட்சிகளின் கொடிகளில் வெவ்வேறு வண்ணங்கள் இருந்தாலும், சாயம் வெளுத்து, ஏழைகளுக்கும், பெண்களுக்கும் எதிரானவர்கள் என்ற ஒரே நிறம் மட்டுமே மீதமிருக்கிறது.

ஒப்புதல் வாக்குமூலம்?

வெகுஜன நிர்ப்பந்தம் எழுந்தபோது ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, காவல்துறை மனநிலை பிறழ்ந்த ஒருவரைக் குற்றவாளி என்று கூறி கைது செய்திருக்கிறது. அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாராம். மனநிலை சரியாக இருப்பவர்களே, காவல்துறை கொடுக்கும் உதையில், ‘ஒப்புதல் வாக்கு மூலம்’ கொடுத்து விடுவார்கள். எனவே, இந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே என்று உள்ளூர் மக்கள் அதை உதறிவிட்டு, நம்முடன் நிற்கிறார்கள். பாலியல் தாக்குதல்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரி மீது தண்டனை விதிக் கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை, ஏற்கனவே வர்மா கமிஷனால் ஏற்கப்பட்டு, தற்போது சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. எனவே சிபிஐ, வழக்குகளை விசாரித்தால் மட்டும் போதாது, எந்தெந்த அதிகாரிகள் விதிப் படி நடக்கவில்லையோ, அவர்களைப் பட்டியலிட்டு, அவர்கள்மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளைத் தப்பிக்கவிடுவது, மேலும் பல குற்றங்கள் செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது. ஏழை களுக்கும், பெண்களுக்கும் அதிகாரம் கொடுக் கிறோம் என்று ஆட்சியாளர்கள் கதை விடுகிறார்கள். உண்மையில் கிரிமினல்களுக்கே இவர்கள் அதிகாரம் அளிக்கிறார்கள்.

பசவண்ணா பாரம்பரியம்

வழிபாட்டுத் தலங்கள் மீது சிபிஎம் தாக்கு தல் தொடுக்கிறது என்று பிரச்சனையைத் திசை திருப்ப பிஜேபியினர் தற்போது பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது உண்மை தான். ஆனால், மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்கள் உணர்வுகளையும், வழிபாட்டு உரிமையையும் கட்சி மதிக்கிறது, மத உணர்வு வேறு அதைப் பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் அடைவது வேறு, பிஜேபியினர் பிரச்சாரத்துக்கு இரையாக வேண்டாம் என்று கூட்டத்தில் பேச்சாளர்கள் விளக்கினர்.கர்நாடக மாநிலத்தின் முக்கிய சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, “கொலபேடா, களபேடா, ஹுசியநுடியலுபேடா, இதே அந்தரங்க ஷுத்தி, இதே பகிரங்க ஷுத்தி” (கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய் சொல்லாதே, இதுவே அகத்தூய்மையும், புறத்தூய்மையுமாகும்) என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு நேர்மாறாகவே தர்மஸ்தலாவில் காரியங்கள் ஆற்றப்படுகின்றன. பசவண்ணா பாரம்பரியத் தில் வந்த கர்நாடகமக்கள் இவர்களைப் புறக் கணிப்பார்கள் என்பது நிச்சயம்.பத்மலதா, வேதவல்லி, சௌஜன்யா…….. இவர்கள் வெறும் வழக்கு எண் அல்ல. போராட்டத்தின் அடையாளமாய் மாறி நிற்கிறார் கள். உயிர் கொடுத்த இவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, நியாயத்துக்கானப் போராட்டத்தைத் தொடர்வோம் என்ற உறுதி, கூட்டத்துக்கு வந்த மக்கள் முகங்களில் தெரிந்தது.

Related Posts