அரசியல் சமூகம்

தர்மதுரைகளைத் தொலைத்துவிட்டோமே! | NEET | NEETExam | Anitha

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டியும் நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 88,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு எழுதிய அப்பாவிக் கூட்டம் நம் தமிழக மாணவர்களாகத்தான் இருக்கும். நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். தமிழக அரசின் சார்பிலும், கண்டிப்பாக விலக்கு வாங்கப்படும் என உறுதியளித்துக் கொண்டே இருந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான அரசாணையை சட்டமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றியது தமிழக அரசு. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அது அனுப்பப்படாமல், மத்திய அமைச்சகத்திலேயே பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘அந்த அரசாணை எங்க இருக்குன்னு யாருக்குத் தெரியும்’ என ஏளனமாக கேட்டுச் சிரித்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, இந்த அரசாணை வெளியிடுவதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கை என்றும், கடந்த காலங்களைப் போலவே, இதுவும் பொய்யாய்ப் போகும் என தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். அவர் சொன்னதுபோலவே நீட் தேர்வின் அரசாணையும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீட் தேர்வில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஊரறிந்த உண்மை. தமிழகத்தைச் சேர்ந்த கிராமப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் பயின்ற, நடுத்தர ஏழை எளிய மாணவர்களால் பள்ளிப்படிப்பையே கடந்து செல்ல முடியாத நிலையில், நீட்டுக்கான பயிற்சி வகுப்புகளில் எப்படி கலந்து கொள்ள முடியும்? +2 பொதுத்தேர்வில் 1190 மதிப்பெண்கள் எடுத்து, நீட் தேர்வில் தோற்றுப்போன மாணவர்களின் அறிவுத்திறனில் நம்பிக்கையில்லை என, மத்தியில் ஆளும் பாசிச அரசுக்கு ஆதரவாக தம்பட்டம் அடித்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

நீட் தேர்விற்கு எதிரான அவசரச் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் எனச் சொல்லிக் கொண்டே, தங்கள் உட்கட்சிப் பிரச்சனையால் மாநில நலனைக் கோட்டைவிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இறுதியாக ஓராண்டுக்கு மட்டும் விலக்கு பெறுவதற்கான அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சகமே ஒப்புக்கொண்ட பின், ஒரே நாளில் உச்சநீதிமன்றத்தில் மாற்றிப் பேசியது மத்திய அரசு தரப்பு.

தமிழகத்தின் சுகாதாரத் துறையில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், இந்த மாநிலத்தில் உள்ளதைப் போல தரமான மருத்துவமனைகளோ, மருத்துவக் கல்லூரிகளோ இந்தியாவில் வேறெங்கும் கிடையாது. இது பல ஒப்பற்ற போராட்டங்களால் கட்டப்பட்ட ராஜ்ஜியம். இதில் படிக்க இனி தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நிச்சயம் இடமே இருக்காது. நீட் தேர்வின் அடிப்படையிலான கலந்தாய்வின் தகுதிப் பட்டியலே அதற்குச் சான்று.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு கூடியவர்களைப் போல, நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டம் நடந்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அப்படி ஒன்று இங்கு நடக்காமல் போனது. நீட் தேர்வால் தமிழகத்தின் எதிர்கால சுகாதாரமும், மருத்துவமும் அழிவை நோக்கி செல்லும் என்ற அறிவியல் யாருக்கும் புரியாமல் போனது. விளக்காமல்விட்டது நமது தவறுமே. இதற்கு விலையாகக் கொடுத்தது அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் உயிர். நீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நிறைவேறாத தன் மருத்துவப் படிப்பு கனவை எண்ணி தற்கொலை செய்து கொண்டார் அவர்.

சமீபத்தில் வெளிவந்த தர்மதுரை படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும், அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் பணிபுரிவதைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். கிராமத்தில் ரூ.20க்கு சிகிச்சை அளிக்கும் தனது மாணவன் தர்மதுரையைக் காண, பார்வையிழந்த மருத்துவப் பேராசிரியர் காமராஜ் தேடி வருவார். நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்காமல் விட்டதால், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக உழைக்கும் நிஜமான தர்மதுரைகளை தெரிந்தே தொலைத்துவிட்டோமே நாம்!

– தேன்சிட்டு

Related Posts