அரசியல்

தயவுசெய்து பேசவிடுங்களேன்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் / கெடுப்பார் இலானும் கெடும்… என்கிறது குறள். ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு முக்கியமான பங்குண்டு. ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை விமர்சிக்கவும், செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அவர்களுக்கு உரிமை உண்டு. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிப்பதும், அவர்கள் கூற்றில் உண்மை இருக்கும் பட்சத்தில் அக்குறைகளைக் களைவதுமே ஜனநாயகப் பண்பாகும்.

ஆனால், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. முதலமைச்சரை வானுயரப் புகழ்ந்து பேசுபவர்களுக்கு மட்டுமே பேசுவதற்கான அனுமதி, குற்றம், குறைகளைக் கூறுபவர்களுக்கு அனுமதி இல்லை என்பது சட்டமன்ற செயல்பாடுகளையே அவமதிப்பதாகும். வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்களை ஓடுகாலி என்று கேலி செய்வது கொடுமையிலும் கொடுமை.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் நடுவே அவசரமாகவும், அவசியமாகவும் சில அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நெருக்கடி நேரும் போது விதி எண் 110 ஐப் பயன்படுத்தி முதலமைச்சர் சில முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்பது விதி. இவ்வறிவுப்புகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சியினருக்கு அனுமதி கிடையாது. ஆனால் இந்த விதியைப் தவறாகப் பயன்படுத்தி தமிழக முதலமைச்சர் சென்ற கூட்டத் தொடரில் மட்டும் விதி எண் 110-ன் கீழ் 41 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக 109 அறிக்கைகள் இவ்விதியின் கீழ் முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளன என்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாகும்.

இக்கூட்டத் தொடரின் போது பள்ளி மாணவர்கள் பலரும் சட்டமன்ற நடவடிக்கைகளைக் காண்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த இளம் தலைமுறையினர் நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயக வழிமுறைகளைப் பார்த்துச் சிரிக்கமாட்டார்களா? தமிழக முதல்வரே தயவுசெய்து எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதியுங்கள். நீங்கள் மதிக்கும் முன்னாள் முதலமைச்சர் கள் அண்ணா, எம்.ஜி.ஆர். வழி இதுதானா என்று சிந்தியுங்கள்.

– ஆசிரியர் குழு

Related Posts