அரசியல்

தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு மாணவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!

கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதே போன்று முதுகலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பருவத் தேர்வான செமஸ்டெர் தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு.

மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தால் மட்டும் போதுமா?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒவ்வொரு துறையும் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வரும் வேளையில்,மக்களின் பொருளாதார பிரச்சனை என்பது நாளுக்கு நாள் மிகவும் மோசமாக தான் செல்கிறது. அதிலும் தற்போது மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக தான் இருக்கிறது.

கொரோனோ ஊரடங்கின் காரணமாக மாணவர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் தங்களின் குடும்ப பொருளாதார பிரச்சனைகளும் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தமாக அமைந்திருக்கிறது.

இப்படியான சூழலில் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் , மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது, அதனால், மாணவர்களுக்கு பெரு மகிழ்ச்சி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒருபுறம் மாணவர்கள் நடப்பு பருவத் தேர்வுகளான செமஸ்டர் தேர்வுகள் ரத்து என்றால் , ஏற்கனவே அனைத்து பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்று இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள் அரியர்கள் வைத்திருப்பார்கள்.

அந்த தேர்வுகள் குறித்து எந்த விளக்கமும் முதல்வர் கொடுக்கவில்லை. அதே வேளையில் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற தகவலும் இல்லை. இது ஒருபுறம் அரியர்கள் வைத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை பாதிப்படைய செய்திருக்கிறது.. மேலும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் தேர்வுகள் குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதைத்தாண்டி நாம் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது..

மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் வசூலித்த கட்டணம். இன்று அரசு கல்லூரிகளில் மிகக் குறைவான கட்டணம் தான். ஆனால் தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு செமஸ்டர்களுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறார்கள் அது குறந்தது 20,000 ஆயிரம் ரூபாய் அளவிற்கு இருக்கிறது. இதற்கடுத்து பருவத் தேர்வு கட்டணம் என்று ஒரு தொகையை வசூலிக்கிறார்கள் அதுவும் 2500 ரூபாய் வரையில் இருக்கிறது அதற்கடுத்து அரியர்களுக்கு என்று ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படியான குறைந்தது 25000 ரூபாய் வரை ஒரு செமஸ்டெர் தேர்விற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது.

தினக்கூலிக்கு செல்லும் குடும்பங்கள், நடுத்தரக் குடும்பங்கள், கடன் வாங்கி கட்டணம் செலுத்திருக்கும் குடும்பங்கள், அதுமட்டுமின்றி அந்த கடனை இது நாள் வரை அடைக்க முடியாமல் தினறும் குடும்பங்கள் , ஆதரவற்ற மாணவர்கள் தங்களின் கட்டணத்திற்காக ஸ்பான்சர்களிடம் வாங்கி செலுத்தி இருக்கும் நிலைமை என நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அவர்களின் நிலை இருந்திருக்கிறது. அடுத்த ஆண்டும் இதே அளவிற்கு கட்டணத்தை கட்டுவதற்கு ஒவ்வொரு மாணவரின் குடும்பத்தினரும் சந்திக்க கூடிய பொருளாதர நெருக்கடி என்பது நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.

ஆனால் இன்று தேர்வுகள் மட்டும் ரத்து என்று சொன்னால் அந்த செமஸ்டெர் முழுவதும் அவர்கள் செலவழித்த கட்டணம் என்னவாகும்? அந்த கட்டணத் தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திருப்பிதருமா? அல்லது அடுத்த ஆண்டு தேர்விற்கு அந்த கட்ட்ணம் எடுத்துக் கொள்ளப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அறிவிப்பு வெளியிட்ட போதே இதுபோன்ற சிக்கல்களை ஆராய்ந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து இருந்திருக்கலாம். இனியும் தாமதிக்க வேண்டாம், இதுபோல சிக்கல்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாதவாறு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையின் நோக்கமே தமிழக முதல்வருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதே! உங்களின் கவனத்திற்கு இந்த செய்தி வருமாயின் அதற்கான நடவடிக்கைகளை இந்த முறையாவது எடுப்பீர்கள் என வழக்கம் போல அதே நம்பிக்கையில் காத்திருக்கிறோம்?

பா.விஜயலெட்சுமி.

Related Posts