இதழ்கள் இளைஞர் முழக்கம்

தமிழகத்தின் முகங்கள் – தீபா

தமிழகத்தை சேர்த்த 19 வயதான சென்னை கல்லூரி மாணவி அனு கீர்த்தி வாஸ் 2018 இந்திய அழகியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். பல ஊடகங்கள் தலையில் தூக்கிக்கொண்டு பாராட்டுகளை பொழிந்து வருகிறது. சாதாரண நடுத்தர வர்க்கத்தில் இருந்து வருவாராம். அவரின் பதில் அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாம். தோல்வியா அல்லது வெற்றியா, எது உங்களுக்கு உதவியது என்ற கேள்விக்கு இவரின் பதில், பல தோல்விகள் தான் தன்னை இந்த மேடை வரை கொண்டு வந்தது என்றாராம். இதை பார்த்த, படித்த அனைவருக்கும் மிகவும் நியாயமாக தான் படும். இந்த தேர்வின் மூலம் இவரது வாழ்க்கை இப்பொழுது தலைகீழாக மாறியுள்ளது. இனி இவரை பலப்பல விளம்பரங்களில் பார்க்க முடியும். பல பொருட்களை வாங்க நமக்கு சிபாரிசு செய்வார். இந்தியா முழுவதும் சுற்றப் போகிறார். அடுத்த ஒருவருடம் முழுவதும் பல அழகு சாதன நிறுவனங்கள், நகை மற்றும் துணிக்கடை என போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்பான்சர் செய்வதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

இனி பிரதீபா பற்றி யாருக்குக் கவலை? பத்தாம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண். பண்ணிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1125. இவர் கடந்த ஆண்டே நீட் தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் அதிக பணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லை. அதனால் இந்த வருடம் திரும்பவும் முயற்சித்துள்ளார். ஆனால் இந்த முறை தோல்வி. கல்வி கனவாக மாறிப்போக தற்கொலை செய்துகொண்டார். வசதி படைத்தவர்கள் பலமுறை தோல்வி அடைந்தாலும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும். காலம், நேரம் இருக்கும். பல வருடங்கள் காத்திருக்கலாம். எண்ணிய வாய்ப்பு போனாலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க இந்த சமூகம் அவர்களுக்கு சலுகை அளித்துள்ளது. ஏழைகளுக்கோ கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த ஒரு வாய்ப்பிற்கு பின்னால் யுகங்களின் ஒடுக்குமுறையின் வரலாறு இருக்கிறது. அந்த ஒரு வாய்ப்புக்கு பின்னால் பல உறவுகளின் தியாகங்கள் உள்ளது.

படிக்க மட்டுமல்ல போராட்டம். மலம் கூட கழிக்க முடிவதில்லை இந்த சமூகத்தில். பொள்ளாச்சியில் ஆதிக்கச் சாதியினர் ஊரில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள் பொது கழிப்பிடத்தைப் பயன்படுத்த தடைவிதித்துள்ளனர். ஆம். நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோம். ஆச்சரியப்படத் தேவை இல்லை. இதுதான் இன்னும் பல ஊர்களின் எதார்த்த வாழ்க்கை. கழிப்பிடத்திற்கு எதிரில் கோவில் கட்டப்பட்டிருப்பதால் இந்த நியதி. தலித் சமூகத்தினர் கழிப்பறை பயன்படுத்தினால் சாமிக்கு ஆகாது. பொது நிலத்தில் திறந்த வெளியில் கூட போக அனுமதி இல்லை. அது கோவிலுக்கு போகும் வழியாம்.

தலித் சமூகத்தில் பிறந்தவர் தான் நம்முடைய இன்றைய குடியரசுத் தலைவர். ஒரு தலித் குடியரசு தலைவராகக்கூட ஆக முடியும். கோவிலுக்கு போக முடியாது. சமீபத்தில் குடியரசுத் தலைவருக்கும் இது தான் நடந்துள்ளது. சட்டம் என்ன செய்துகொண்டு இருக்கிறது? இந்த கேள்வி நாம் மட்டும் கேட்டால் போதுமா? இந்த நாட்டில் உள்ள அனைவரும் கேட்கவேண்டும். சட்டங்களும் திட்டங்களும் யாருக்கு? அதன் அரசியல் பின்னணி என்ன? என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். அதன் அரசியலை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டும். இல்லை என்றால் நம்முடைய குரல் வலிமை பெறாது.

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் (2016-17) இந்த வருடம் (2017-18) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசே தகவல் வெளியிட்டுள்ளது. 2016-17 ல் 2,67,310 யூனிட்டாக இருந்தது 2017-18 ல் 2,17,891 யூனிட்டாக குறைந்துள்ளது. அதாவது 49,329 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெரும் முதலாளிகளுக்கு கிடைக்கும் வங்கிக் கடன்கள் இவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. தொழிற்சாலைகள் முடியதன் விளைவு சுமார் 5,19,077 தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்த வேலை பறிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுக்கான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான தகவல் மட்டுமே. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை இழப்பு அவர்களின் வாழ்க்கையில் எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்? குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

இது போன்ற சிறு குறு தொழில்களில் தான் அதிகமாக பெண்கள் வேலை செய்கிறார்கள். இன்னமும் பெண்களுக்கு கல்வி என்பதே எட்டாக்கனியாக தான் உள்ளது. பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் அமைவது குறைவே. அதுவும் வீட்டுக்கு அருகில் இருக்க வேண்டும். நெடுந்தூரம் பயணம் செய்வது வேலைக்கு செல்வதெல்லாம் அரிதிலும் அரிது. இது போன்ற சமூக ஏற்றத்தாழ்வு இருக்கும் பட்சத்தில் வேலை இழப்பு என்றால் இவர்களுக்கு நம் அரசின் பதில் என்ன? இவர்களின் எதிர்காலம் உத்திரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்குத் தானே உள்ளது. அது சரி, இதை பற்றி எந்த அக்கறையும் இருப்பதற்கான குறைந்தபட்ச அறிகுறியும் அழிந்து கொண்டல்லவா இருக்கிறது. தமிழகத்தின் முகங்கள் இப்படி பட்டவர்களா என்ன?

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதல் பெண் CFO (Chief Financial Officer) ஆக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா. அதுவும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில். MBA ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவராம். சாதனை பெண். இவரல்லவா தமிழகத்தின் முகம். வளர்ச்சியின் முகம். சாதனையின் முகம். ஊடகங்களில் பகட்டு மினுமினுப்புக்கு ஏற்றவர். வாய்ப்புகளே மறுக்கப்படும் போது போட்டிகள் எப்படி என்ற கேள்விக்கு அரசிடம் பதில் வருவது இல்லை. சமூகமும் மௌனமே விடையாக தருகிறது.

தன் நிலம் தன் வாழ்கை என இருந்த 85 வயது முதாட்டிக்கு 8 வழி சாலையாக நிலம் எடுக்கப்படும் போது தன் மனம் எப்படி இருந்திருக்கும்? தன் உரிமைக்காக கேள்வி கேட்டதால் கைது. போராட்டத்தில் பங்கு பெற்ற ஸ்னோவ்லினுக்கோ துப்பாக்கிக் குண்டு. பிரதீபாவின் மரணம் இந்த அரசின் மனதை உலுக்கவில்லை. யார் தமிழகத்தின் முகங்கள்? தமிழகத்தில் வரலாறாக யாருடைய வாழ்க்கை இருக்கிறது? யாரை பொதுவெளியில் சாதனையாளர்களாக தம்பட்டம் அடிக்கப்படுகிறார்கள்? எது சாதனை? யார் சாதனையாளர்? முதலாளிகளின் குரலாக, முதலாளிகளின் லாப வேட்டைக்கு உறுதுணையாக, முதலாளிகளின் பிரநிதியாக மாறுபவர்கள் தமிழகத்தின் முகங்களா?

Related Posts