இதழ்கள் இளைஞர் முழக்கம்

தமிழகத்தின் மண்ணையும் மனித உரிமையும் பாதுகாப்போம்…

 ஏ.ரவிச்சந்திரன்

மாலை நேரம், மஞ்சள் வெயில் இளம் தென்றல் காற்றோடு வரப்பில் நடந்து செல்லும் போது காலுக்கும், கண்களுக்கும், மனதுக்கும் இதமான சுகம். ஓவ்வொரு அடியாய், அடியெடுத்து நடக்கும் விவசாயியின் கண்களில் நீர், வயல் விளைஞ்சிருக்கு கதிர் வானத்தை எட்டிப் பாக்குது. அதை தொட்டு இறுகப்பிடித்து வாரி அனைத்துக் கொண்டு நெஞ்சோடு ஆனந்தம் பொங்கும் கண்ணீரோடு பட்ட கஷ்டமெல்லாம் போகப் போகுது, நெல்லு விளஞ்சிடிச்சி. கடன் எல்லாம் அடைத்துவிடலாம் என்றுதான் அந்த கண்ணீர். ஆம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு டெல்டா மாவட்ட நிலை இதுதான். காவிரி கண்ட கடைமடை பகுதி மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வளநாடு. ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது.

சம்பா, குருவை, தாளடி என முப்போகம். எப்போதும் பசுமையான விவசாயம் செழிந்த பூமி. இப்பகுதி மக்களின் பசியை போக்க சீரகசம்பா, முத்துசம்பா, கட்டசம்பா என்று நெல் விளைந்து பஞ்சம் போக்கி நெல் என்று பெயர் பெற்ற நெல் விளைந்த பூமி. காவிரி தாயும் வஞ்சனை இல்லாமல் தண்ணீரை தந்ததால், இயற்கையும் இவர்களை விட்டுக் கொடுக்காமல் தன் பங்குக்கு தேவையான நீரை மழையாக தந்தது. இவைகளை முறைபடுத்த பல நூறு ஏரிகளும், குளங்களும் நீரை தேக்கி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தினர். இதனால் விளைச்சல் அமோகமானதால் முப்போகம் விளைந்து அனைவருக்கும் உணவளித்ததால் தஞ்சை டெல்டா மாவட்டம் நெற்களஞ்சியம் என்று பெயர்பெற்றது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தற்போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் முழுவதும் விவசாயம்தான் பிரதானத் தொழில் முப்போகம் செய்யப்பட்ட விவசாயம் ஒரு போகமாக மாறியுள்ளது. இதற்கு தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களே காரணம். இதனால் மிகப்பெரிய பாதிப்பை தினந்தோறும் அனுபவிக்கும் மக்களாக டெல்டா மாவட்ட மக்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை பொய்த்ததாலும், காவிரி தண்ணீர் வரத்து குறைந்ததாலும் விவசாயம் அழிந்ததன் விளைவாக மிகப் பெரிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர் விவசாயிகள். வாங்கிய கடனை கட்ட முடியாமல். கவுரவத்துடன் வாழ்ந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். தொடர்ந்து ஏற்பட்ட வறட்சியாலும் நெருக்கடியாலும் வாழ வழியில்லாத விவசாய கூலித் தொழிலாளி குடும்பத்துடன் இரவோடு இரவாக பிழப்பை தேடி இடம் பெயர்ந்தனர். மீதம் உள்ளவர்கள் உயிர் வாழ்வதற்கு சரியான உணவு கிடைக்காமல் பசியை போக்க எலியை சமைத்து உண்டு உயிர் வாழ்ந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் அப்போதைய இடதுசாரி எம்.எல்.ஏக்கள் ஊருக்கே சோறு போட்ட விவசாயி அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் சோறு இல்லை வறட்சியால் விவசாயம் அழிந்துவிட்டது. எலி கறிதின்று உயிர் வாழும் விவசாயிகளை பாதுகாத்திட அரசு முன் வரவேண்டும் எனறு கேட்டபோது இன்றைய முதல்வரும் அன்றைய முதல்வருமான ஜெயலலிதா கிண்டல் கேலியாக பேசி விவசாயிகளை அவமானப்படுத்தியதை யாரும் மறந்துவிடமுடியாது.

தமிழக பொருளாதரத்தின் வளர்ச்சிக்கு விவசாயத்தின் பங்களிப்பு மிக பெரியது. இத்தகைய பொருளாதாரம் அழிந்து வருவதைக்கண்டு ஆளும் ஆட்சியாளர்கள் இதை பாதுகாக்க எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை. முப்போகம் குறைந்து இரண்டு போகமாக (சம்பா, குருவை) விவசாயம் நடந்தபோதே இக்காலத்திலே விவசாயம் குறித்து கவனம் செலுத்தியிருந்தால் தற்போது உள்ள ஒருபோகம்(சம்பா சாகுபடி) என்ற நிலை நிச்சயம் வந்திருக்காது. விவசாயம் குறித்தும் அதை சார்ந்துள்ள பொருளாதாரம் குறித்தும் அக்கறை கொள்ளாத அரசுகளால் மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளிகளும்தான் எதைப்பற்றியும் கவலைப்படாத ஆட்சியாளர்களால் ஏற்கனவே மிக பெரிய துன்பத்தில் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய, மாநில அரசுகள். ஆம் டெல்டா மாவட்டத்தை பாழாக்கும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. டீசூழுஊ நிறுவனமும் சில அமெரிக்க நிறுவனமும் இணைந்து இந்திய நாட்டின் டெல்டா மாவட்டத்தை பாழாக்கி செல்வங்களை கொள்ளையடிக்கத் துடிக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான ஓப்பந்தம் முடிந்து அதன் பணிகள் துவங்கப்பட்டபோது விழித்துக்கொண்ட இப்பகுதி விவசாயிகள் பெரும் தவறு செய்துவிட்டோம், சோறு போட்ட பூமி கூறு போடவா விற்றோம் என்று உணர்ந்து ஒன்றிணைந்து போராடினார்கள் நிலத்தை விட்டு கொடுக்கமாட்டோம் மீத்தேன் எடுக்க விடமாட்டோம் என்று ஜனநாயக அமைப்பினர், இடதுசாரிக் கட்சிகளின் தொடர் போராட்டத்திற்கு பின் அத்திட்டம் நிறுத்தப்பட்டது,

ஆளும் கார்ப்பரேட் கழுகுகளின் கண்களிலிருந்து டெல்டா பகுதிகள் விடுபடாமல் உள்ளது. இதனால் மீண்டும் இக்கழுகுகளின் அச்சுறுத்தல் துவங்கி உள்ளது. டீசூழுஊ என்ற நிறுவனம் அமெரிக்காவின் கொனோக்கோ பிலிப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஷேல்கேஸ் என்கிற எரிவாயு எடுக்க உள்ளது. இதற்கான அனுமதியை மத்தியில் ஆளும் மோடியின் க்ஷதுஞ அரசு கொடுத்துள்ளது. அதன் விளைவு காவிரி டெல்டாவே சுடுகாடாக மாறப் போகுது. மீத்தேன் என்ற பீதி அடங்குவதற்குள் அடுத்த பீதியால் மிக பெரிய அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள் இப்பகுதி மக்கள். ஷேல்கேஸ் திட்டம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எடுக்க உள்ளனர்.

பூமிக்கு அடியில் சுமார் 10 ஆயிரம் அடி முதல் 15 ஆயிரம் அடிவரை ஆழ்குழாய் போர் போட்டு அதற்கடியில் உள்ள கடினமான பாறைகளை இரசாயன வெடி பொருள்கள் மூலம் உருகச் செய்து இந்த எரிவாயு எடுக்கப்படவுள்ளது. இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, பிரிட்டன், செக்கேசுலோவேக்கியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமலாக்கப்பட்டு மிக பெரிய ஆபத்து ஏற்பட்டு அந்நாடுகளில் மக்கள் போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்டு, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட திட்டத்தைதான் இந்த அரசு அனுமதியளித்துள்ளது. 10 ஆயிரம் அடிக்கீழ் உள்ள பாறைகளை உடைத்து கூழாக்குவது மேலே குறிப்பிட்ட ஆழ்குழாய்க்கு பக்கவாட்டில் 2 கி.மீ ஒரு ஆழ்குழாய் அமைத்து அதன் மூலமாக 1 போர்க்கு சுமார் 20 கோடி லிட்டர் தண்ணீர் மற்றும் நூற்றுக்கணக்கான டன் மணல் கெமிக்கல் ஆகியவைகளை அதன் மூலம் செலுத்தி கடினமான பாறையை உறுக்கி கூழாக்கி மேலேற்றுவது. மேலே ஏற்றப்படும் கூழை நிலப்பரப்பில் தேக்கி வைத்து மணலையும் நீரையும் பிரித்து இரசாயனம் கலந்த அந்த நீரை வெளியேற்றுவது.

இரசாயனம் கலந்து உள்ளேயிருந்து கொண்டு வரப்பட்ட மணல்கள் நிலப்பரப்பில் நிரப்பப்படும் போதே அப்பகுதிகளில் முழுவதும் காற்றின் மூலம் இரசாயனம் கலக்கப்பட்டு மாசுபடுகிறது. அபாயகரமான இந்த இரசாயனம் நிலத்தடி நீரிலும் கலந்து விடுகிறது. மேலும் நிலத்தின் மேல் பகுதியும் இரசாயனமாக மாறி கொஞ்சம், கொஞ்சமாக நச்சுத் தன்மை அடைந்து கொடிய நோய்கள் அதாவது உடம்பின் மேல் புறத்தில் அரிப்புடன் கொண்ட தோல் நோய் முதல் இருதய நோய் வரை வரும். அபாயமான இந்த இரசாயனம்தான் அதில் பயன்படுத்தப்படுகிறது. ஆளும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கையின் காரணமாக வாழ வழியில்லாமல் தவித்துக்கொண்டியிருக்கும் இம்மாவட்ட ஏழை மக்கள் தற்போது ஏற்படும் காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு கூட வைத்தியம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு ஏன் பிறந்தோம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் இம்மக்களால் இப்படிபட்ட கொடிய நோய்க்கு என்ன ஆவார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 35 இடத்தில் ஆழ்குழாய்கள் அமைக்கபட உள்ளது ஒன்பதுக்கும் மேற்பட்ட இடத்தில் ஆழ்குழாய் தற்போது நாகை மாவட்டத்தில் அமைக்க அனைத்து ஏற்பாட்டையும் செய்கிறது டீசூழுஊ நிறுவனம். குறிப்பாக தரங்கம்பாடி வட்டம் செருங்குடி என்ற கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் முள் வேலிகள் அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த இடத்தில்தான் இரசாயன வெடிப்பொருள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க உள்ளனர். அப்பகுதி தற்போது இரண்டு போகம் விவசாயம் நடைபெறும் பகுதி இந்த நிலங்களை வாங்குவதற்கு கார்ப்பரேட் நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியோடு வாங்கி உள்ளனர். ஆனால் விவசாயிகளிடம் இடத்தை வாங்குவதற்கு அவர்கள் சொன்ன பொய் வாங்கப்படும் நிலத்தில் மாற்று விவசாயம் செய்வதற்காகத்தான் என்று சொல்லியுள்ளனர். தற்போது விலைக்கு வாங்கப்பட்ட இடத்தில் இதுபோன்று ஷேல்கேஸ் எடுக்கப் போவதாக அறியப்பட்டவுடன் நிலத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று போராடி வருகின்றனர். அதை அறிந்த டீசூழுஊ நிறுவனம் பொய்யான தகவலை சொல்லிக்கொண்டே வேலைகளை துரிதப்படுத்தி வருகிறது.

இத்தோடு இல்லாமல் நாகை மாவட்ட கடலோரத்தில் 9 அனல்மின்நிலையம் உருவாக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது ஷேல்கேஸ் எடுக்க 1000 கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் இத்திட்டம் எடுக்க முயற்சி நடக்கிறது. இத்தோடு அனல்மின் நிலைய பணியும் துவங்கிவிட்டால் இப்பகுதி மக்களின் நிலை என்ன? ஆக ஒட்டு மொத்தமாக இப்பகுதியை கார்ப்பரேட் ஆக்கிரமித்துள்ளது. இத்திட்டங்கள் நிறுத்தபடாவிட்டால் இதுவரை பூமி அதிர்ச்சியோ, நிலநடுக்கத்தையோ கண்டிடாத இப்பகுதி மக்கள் நில நடுக்கம், பூமி அதிர்ச்சி போன்ற பேராபத்தை சந்திக்க நேரிடும். மக்கள் கூண்டோடு அழிந்து டெல்டா மாவட்டமே சுடுகாடாக மாறிவிடும் எனவே மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று செப் 15ல் மன்னார்குடியிலும் செப் 22 மயிலாடுதுறையிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலுவான கண்டனப் போராட்டத்தை நடத்தியுள்ளது, மேலும் மண்ணைக் காக்கும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு போராடு அனைவரும் வாரீர் என்றும். தவறான கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய நாட்டை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம் மண்ணையும் உரிமையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

Related Posts