இதழ்கள் இளைஞர் முழக்கம்

தமிழகக் கல்வியின் உடனடித் தேவைகள் முனைவர். என்.மாதவன்

 

 

மதிப்பெண் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் ஒரு மாதிரி பள்ளி ஒன்றில் தனது மகனைப்படிக்கவைக்கும்  நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்.  ஒரு இரண்டு வருஷம் பசங்கள பிரிஞ்சிருந்து,  இரண்டு மூன்று இலட்ச ரூபாய் செலவு பண்ணி 1200 க்கு 1195 மார்க் எடுத்திட்டா அரசு  மருத்துவக்கல்லூரியிலேயே சீட் கெடைச்சுரும் அப்புறம் என்ன வேணும்,  இப்படி செய்யாம இங்கே எங்கியாவது லொகல் ஸ்கூல்ல படிக்க வைச்சா பணம் கொறைவாதான் செலவாகும் ஆனா தனியார் மெடிக்கல் காலேஜில சீட்டுக்கே 60 லட்சம் கொடுக்கவேண்டி வருதே என்றார். எவ்வளவு தெளிவான சிந்தனை என நொந்துகொண்டேன்.

தமிழகக் கல்விச்சூழலில் ஒவ்வொரு மே மாதமும் பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு வகை பதட்டத்துடனேயே எதிர்பார்க்கப்படுகின்றன.  பத்தாண்டுகள், பனிரெண்டு ஆண்டுகளின் உழைப்பை மதிப்பிடும் நோக்கில் இம்முடிவுகள் பார்க்கப்படுவதைவிட வாழ்நாளின் எஞ்சிய நாட்களை எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் இது கூடுதல் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது.

கல்வி என்பது பண்படுத்துவது, எளிமையான வாழ்க்கைக்கு இட்டுச்செல்வது என்ற கருத்தோட்டமெல்லாம் காலாவதியாகிப் போயுள்ளது. படித்து பட்டம் வாங்கி கார் பங்களாவெல்லாம் வாங்கவேண்டும் என்பது ஆண்டாண்டுகாலமாக கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த வகையில் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களே வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடுகின்றன

தமிழகம் இந்த ஆண்டு மேலும் ஒரு சவாலையும் சந்திக்கிறது. மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு.  நேற்று கூட சமூக வலைதளத்தில் ஒரு செய்தியினைப் படித்தேன். சாதாரண ஆசிரியர் வேலைக்கே தகுதித் தேர்வு எழுதணும்கிறாங்க, ஆனா டாக்டர் ஆகப் போறவங்க தகுதித் தேர்வு எழுதமாட்டாங்களாம் இது என்ன நியாயம் என்ற வகையில். இதே போல் மற்றோரு செய்தியும் காதில் விழுந்தது. இந்த ஆண்டு மாநில அளவில் இடம் பெற்ற ஒரு மாணவரின் பெற்றோர் இந்த ஆண்டு மட்டும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமென தொலைக்காட்சிக்கு பேட்டியே கொடுத்தார். .

இந்தச் சூழலில் தமிழகத்தின் கல்விச் சூழலில் குறிப்பாக அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளைப் பார்ப்போம். கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் இந்தியாவிலேயே  தமிழகம்தான் பல்வேறு வகையான கல்வி சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது. 1995 களில் எழுத்தறிவு இயக்கத்தில் பங்களிப்பு செய்த பாரத் ஞான் விஞ்ஞான் சமிதியின் உதவியுடன் இந்தியா முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்த களிப்புடன் கற்றல் (துடில டிக டநயசniபே) இயக்கத்தின் செயல்பாடுகள் பரவலானது. இதன்  தொடர்ச்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடிவமைத்த கற்பது கற்கண்டே மாதிரி திட்டத்தினை தனது அறிவொளி இயக்கத்தின் துணை அமைப்பான குழந்தைத் தொழிலாளர்களுக்கான கல்வி மையமான சிட்டுக்கள் மையங்களில் செயல்படுத்தியது. இதனை தமிழக அரசின் கல்வித்துறை கற்றலில் இனிமை என்ற பெயரில் மாநிலம் முழுமையிலுமுள்ள பள்ளிகளுக்கும் கொண்டு சேர்த்தது.  பின்னர் செயல்வழிக்கற்றல் என்ற கற்பித்தல் முறை புதுமையும் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களை மதிப்பீடு செய்வதில் தொடர்ந்து சிர்திருத்தம்  தேவை என்ற கோரிக்கை வலுப்பெற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு அமல்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறாக கற்பித்தல் முறை தொடர்பான சீர்திருத்தங்கள் தொடங்கி மதிப்பீட்டு முறை சீர்திருத்தம் வரை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. மறுபுறம் அனைவருக்கும் சமமான தரமான கல்வியை உறுதிபடுத்தும் சமச்சீர் கல்வியின் அமலாக்கம் பொதுப்பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பாடச்சுமை குறைப்புக்காக முப்பருவ கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளது.

இவ்வாறு அறிமுகமாகியுள்ள பல்வேறு சீர்திருத்தங்களையும் தமிழக அரசின் கல்வித் துறை அமலாக்கம் செய்த விதத்தில் நிறையவே விமரிசனங்கள் உண்டு. மேலும் இந்த சீர்திருத்தங்களை ஆசிரியர்கள் உள்வாங்கிக்கொண்டு தகவமைவதிலும் கோளாறுகள் இல்லாமல் இல்லை.

நிற்க  இவ்வாறான சீர்திருத்தங்களின் பலனை இன்றைய பத்தாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் காண முடிகிறது. அரசுப் பள்ளிகளின் செயல்பாடு பிரமிக்கத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. தனியார் பள்ளிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஏராளமான விதிமுறை மீறல்களைச் செய்தாலும் பொதுத் தேர்வு என்று வருகின்ற போது ஒரே விதமான வினாத்தாளை எதிர்கொள்ளும் குழந்தைகளில் தனியார் பள்ளி அரசுப்பள்ளி மாணவர்கள் இணையாக  சாதிக்க இயல்கிறது.

இந்நிலையில் அரசுப்பள்ளிகளின் செயல்பாட்டை மேலும் மெருகூட்டி அனைத்து மாணவர்களுக்கும் சமமான தரமான கல்வியினை உறுதி செய்ய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசர அவசியம். பாடத்திட்டம் போதனா முறை போன்றவற்றில் ஆரோக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதில் முழுமையான பலனைப் பெற நடைமுறைகள் சார்ந்து மட்டும் இவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

துவக்க நிலையில் குழந்தைகளின் சுயமரியாதையினை உறுதி செய்து அவர்கள் தங்கள் கற்றல் வேகத்திற்கேற்ப கற்கும் செயல்வழிக்கற்றலை ஆசிரியர்கள் ஆத்மார்த்தமாக அமல்படுத்த உதவியாக ஆசிரியர்களுக்கான சுதந்திரம் உத்தரவாதப்படுத்தவேண்டும். அவர்களின் புதுமைக்கு இடம் தர போதிய வாய்ப்பளிக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி கழிவறை, குடிநீர் போன்றவற்றின் பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலகம், உள்ளூர் ஊராட்சி மேற்கொள்ள உரிய ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களை வட்டார வளமையத்தில் அழைத்து பயிற்சி அளிப்பதற்கு பதில் பள்ளிகள் சிலவற்றை இணைத்து பள்ளி அளவிலான பயிற்சியினை அளிக்கவேண்டும்.

அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பள்ளிகளுக்கே வந்து சேரும் வண்ணம் திட்டம் தீட்டவேண்டும்.

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பில் செல்லும்போது பள்ளி பாதிக்கா வண்ணம் தற்காலிக ஆசிரியர்களையாவது நியமிக்கும் நடைமுறை கொண்டுவரப்படவேண்டும்.

உயர்நிலைக் கல்வியில் மாணவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அவர்களைக் கையாளவும், பள்ளியைத் தமது சொத்தாகக் கருதும் வண்ணம் அவர்களை வளர்த்தெடுக்க பயிற்சிகள் திட்டமிடப்படவேண்டும்.

விளையாட்டு. ஓவியம் போன்ற ஆசிரியர்களின் பங்கு உயர்நிலைப்பள்ளியில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் சிறந்த பங்களிப்பின் மூலமே மாணவர்களின் தனித்திறன்கள் கண்டெடுக்கப்பட்டு உரிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

மாணவர்களில் அறிவு ரீதியாக கடும் உழைப்பு செலுத்த இயலாதவர்களைக் கண்டெடுத்து  அவர்களைக் குழுவாகப் பிரித்து குறைந்த உழைப்பில் திறன் கொண்டு கற்கும் (ளஅயசவ றடிசம) பயிற்சிகள் வழங்கவேண்டும்.

மாணவர்களை மதித்து அவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்புவிக்கும் முறைமை வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

நாம் இக்கட்டுரையில் விவாதித்துள்ள பொருள் அனைத்தும் நிண்ட கால செயல்திட்டங்களுக்கானவை அல்ல. நம்முடைய நிகழ் தலைமுறையினை மனதில் கொண்டே விவாதித்துள்ளோம். ஆனால் கல்வியின் உண்மையான இலக்குகளுக்கான பயணம் நீண்ட நெடியது.

அனைத்துத் தொழிலையும் சமமாகப் பாவித்தல்,

மனித நேயத்தையும் இயற்கை வளத்தையும் காத்தல்,

சமூக வளர்ச்சியில் பார்வையாளர்களாக இல்லாமல் விமர்சன மனப்பான்மை கொண்ட பங்கேற்பாளர்களாதல்,

வாய்மையும், தூய்மையும் நிரம்பிய, எளிமையான வாழ்க்கைக்குத் தகவமைத்து அதனை பரப்புரை செய்வோராதல்  போன்றவை ஆகும். இதனை அரசு செய்ய முன்வரவேண்டுமானால் இவற்றை விரும்பி  வலியுறுத்தும் சமூகம் சமையவேண்டும்  நாம் இன்னும் பயணிக்கவேண்டிய தொலைவக்கு நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

Related Posts