சினிமா தமிழ் சினிமா

‘தனி ஒருவன்’ மட்டும் போதாது…

லீப்நெக்ட் மற்றும் ரகுராம் நாராயணன்

“சாட்டையெடுத்து நாட்டை திருத்து,

நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் – கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்,

தீமைதான் வெல்லும்,

நல்லது செய்றதுக்குத்தான் ஆதாரம் வேணும் – கெட்டது பண்றதுக்கு குழப்பமே போதும்,

காதல் கிரிக்கெட்டு,

நெஞ்சோரமாய் ஒரு காதல் துளிரும்போது…

என்கிற வரிகளோடு, சுவரங்களோ மெட்டுகளோ தெரியாத ஒரு குரூப் இசைக் கலைஞன் ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களை சற்றே நிமிர்ந்து பார்க்க வைத்தது. பாடல்கள் படத்தைப் பற்றின எதிர்பார்ப்பை கூட்டுச்சுன்னு சொல்லாம். இப்படி எதிர்பார்ப்போடு தியேட்டருக்குப் போன எல்லோருக்கும் படம் நல்ல தீணிதான்.

படத்துல இரண்டு கதாப்பாத்திரங்களை அதிக மெனக்கெட்டு உருவாக்கியிருக்கிறார்கள். அது வெற்றியும் பெற்றிருக்கு. கதாநாயனுக்கும் வில்லனுக்கும் சம அளவில் மெனக்கெட்டிருந்தாலும், ரசிகர்களிடம் வில்லனுக்குத்தான் அதிக கைதட்டல்.

சரி கதைக்குப் போவோம்…

தன் அப்பாவை எம்.எல்.ஏவாக்குவதற்காக தான் செய்யாத கொலைப் பலியை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்லத் துணியும் ஒரு 15 வயது சிறுவன், அந்த 15 வயது சிறுவன் கைது என்ற முதல் பக்கத்தில் செய்தியாக வெளியாகிறது. இப்படியான செய்தியைச் செய்தியாக மட்டும் வாசித்துவிட்டு பேப்பரை எடைக்குப் போடாமல், குற்றங்களுக்கிடையேயன ஒற்றுமைகளைக் கூர்ந்து கவனித்து “ஒவ்வொரு பெரிய குற்றங்களுக்கும் முன்னால் ஒரு சில சிறிய குற்றங்கள் உள்ளது” என்ற தெளிவுபெற்ற இன்னொருவன். இந்த இரண்டு பேரை இணைக்கும் புள்ளிதான் ‘தனியொருவன் கதை’.

முதலாமவன் படித்து விஞ்ஞானியாகவும், மிகப்பெரிய தொழிலதிபராகவும் ஆகிறான். இரண்டாமவன் IPS அதிகாரி ஆகிறான். மேலோட்டமாகப் படத்தைப் பார்க்கும்போது இவ்விருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்கின்ற யுத்தம் என்பதாகவே நமக்குத் தெரியும். ஒவ்வொரு காட்சிகளிலும் திரைக்கதையின் மூலம் ரசிகனை நுனி சீட்டில் உட்கார வைத்துக் கதையோடு ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.

உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்… நாம் அடிக்கடி கேட்டு, சொல்லிய வாசகத்தைச் சற்று மாற்றி “உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்று துவங்குகிறது படம். ஏன் இத்தகைய வித்தியாசமான வாசகம் என்று பின்னர் விளக்கம் தருகிறான் நாயகன்.

பல விமர்சனங்களைக் கேட்டிருப்பீர்கள். பல பேஸ்புக் மற்றும் ட்விட்டர் விமர்சனங்களையும் படித்திருப்பீர்கள். பொதுவான விமர்சனங்கள் அனைத்தும் நல்ல த்ரில்லர் படம், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையேயான அறிவார்ந்த யுத்தம், நாயகனைவிட வில்லன் அரவிந்த சாமி மிரட்டியிருக்கிறார், போலீஸ் ஸ்டோரியெனப் பலப் பல விமர்சனங்கள் உள்ளன. படமே காப்பி, உடலுக்குள் கருவி வைப்பதெல்லாம் பல படத்தில் வந்துவிட்ட சிந்தனை என்று குறிப்பிட்டு – படத்தையே மொத்தமாக ‘ஒன்றுமில்லை’ என கரித்துக் கொட்டுவோரும் ஒரு சிறு பகுதியாக உள்ளனர்.

ஆனாலும், படத்தில் பேசப்பட்ட மிக முக்கியமான அரசியலுக்கு கவனம் கொடுத்தது குறைவுதான்.  “உயிர் காக்கும் மருந்துகளின் காப்புரிமை(patent) லாப நோக்கிற்காகப் பயன்படுத்துவது, மருந்து தயாரிக்கும் பன்னாட்டு கம்பனிகளுடன் அரசியல்வாதிகளின் கூட்டு, லாபி என்று பல சமாசாரங்களை தொட்டுச்செல்கிறது படம்.

இன்றைய அரசு மற்றும் அரசியலின் நிலையைச் செங்கல்வராயன் (தம்பி ராமையா) கதாபாத்திரம் நகைச்சுவை ததும்ப நம் கண் முன் நிறுத்துகிறது. வில்லன் – பல படங்களில் நாம் பார்த்துள்ள வில்லன்களைப் போல் அல்ல. அவன் டான் அல்ல, அவன் படித்த ஒரு விஞ்ஞானி, மிகப்பெரிய தொழிலதிபர், ரியல் எஸ்டேட், மருந்து தயாரிக்கும் கம்பெனி முதலாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய முதலை.

நாம் மறந்துவிட்ட சில நிகழ்வுகள்:

120 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை கொண்டதும், வளர்ந்துவரும் நாடுமான இந்தியாவில் மருந்துகளுக்கான சந்தை மிகப் பெரியது. அந்தச் சந்தையின் மீது நடக்கும் வியாபாரப் போட்டியை நாம் விவரிக்கத் தேவையில்லை.

அர்ஜுன் சென் குப்தா கமிசன் அறிக்கையின் படி 77% இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20/- க்கும் குறைவாகவே செலவு செய்கின்ற நிலையில், அத்தகைய ஏழை எளிய மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவை இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 16,000 பேருக்கு அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நாட்டில், ஒரு சில புற்று நோய்க்கு வழங்கப்படும் க்ளிவெக் (Glivec) என்னும் மருந்தின் விலை மட்டும் ரூ 1.08 லட்சம். ஏழை எளிய மக்களுக்கு இத்தகைய விலையுர்ந்த மருந்துகள் எப்படி சாத்தியம்? இம்மருந்து தயாரிப்பின் சூத்திரம்/செய்முறையின் காப்புரிமையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த நோவார்டிஸ் என்னும் நிறுவனத்திடம் உள்ளது.

காப்புரிமை நீக்கப்படும் நிலையில், உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் அதனைத் தயாரிக்கும் நிலையில் அதன் விலை ரூ.1 லட்சத்திலிருந்து சுமார் ரூ.8000/-க்கு குறைந்துவிடும். இது போன்று பல மருந்துகள் காப்புரிமை காரணமாக மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

நோவாரிட்டிஸ் வழக்கும், தீர்ப்பும்:

க்ளிவெக் மருந்திற்கான காப்புரிமை தானாக முற்று பெரும் தருவாயில் அதன் மூலக்கூறில் சிறிய மாற்றங்களை செய்து, அதன் காப்புரிமையை மேலும் நீட்டிக்க நோவார்டிஸ் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு இந்திய காப்புரிமை அலுவலகத்தை (Indian Patent Office) அணுகியது. இக்கோரிக்கையை இந்திய காப்புரிமை அலுவலகம் நிராகரித்தது. இதனை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நோவார்டிஸ் நிறுவனம். க்ளிவெக் மருந்து தயாரிப்புக்கான காப்புரிமையை மீண்டும் பெற முயற்சித்த இவ்வழக்கின் மீது 2007 ஆம் ஆண்டு காப்புரிமையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது நோவார்டிஸ் நிறுவனம். உச்ச நீதிமன்றத்தில் காப்புரிமைகளை நீட்டிப்பதன் மூலம் இந்நாட்டில் கண்டுபிடிப்புகளை ஊக்கிவிக்க முடியும் என்று வாதிட்டது. உச்ச நீதிமன்றம் இந்திய காப்புரிமை சட்டம் 2005 இன் பிரிவு 3(d) யை மேற்கோள் காட்டி காப்புரிமையை ரத்து செய்து ஏப்ரல் 2013 இல் புகழ் பெற்ற தீர்ப்பொன்றை அளித்தது.

“(d) the mere discovery of a new form of a known substance which does not result in the enhancement of the known efficacy of that substance or the mere discovery of any new property or new use for a known substance or of the mere use of a known process, machine or apparatus unless such known process results in a new product or employs at least one new reactant.

Explanation.—For the purposes of this clause, salts, esters, ethers, polymorphs, metabolites, pure form, particle size, isomers, mixtures of isomers, complexes, combinations and other derivatives of known substance shall be considered to be the same substance, unless they differ significantly in properties with regard to efficacy;”.

விலை குறைந்தது:

இந்தத் தீர்ப்பின் மூலம் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட வந்த க்ளிவெக் மருந்து ரூ.8000/-க்கு விற்க முடியும் என உள்நாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. அவர்கள் கருத்தின் படி அதன் விலை ரூ.8000/-க்கு விற்கப்பட்டது.

“PhRMA (Pharmaceutical Research and Manufacturers of America) அறிவுசார் சொத்தை (Intellectual Property) பாதுகாப்பதுதான் புதிய மருந்து கண்டுபிடிப்புகளையும், அதன் ஆராய்சிகளையும் ஊக்குவிக்கும்” என்பதக தன் கருத்தை வெளியிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் லாபம் குறைவ்துவிடுமே என்ற தன்னுடைய மனக்குமுறலைத்தான் அப்படி வெளிப்படுத்தியது. “அறிவுசார் சொத்துபற்றி இந்தியாவின் நிலைப்பாடு வேதனை அளிப்பதாக உள்ளது” என்று சஹானி கூறினார். அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்றார்கள்.

மோடி ஆட்சியில் நடந்தவை:

ஏழை எளிய மக்களுக்கு ஓரளவுக்கு சாதமாக இருந்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு “வளர்ச்சி”, “முன்னேற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, சர்க்கரை நோய், ஏய்ட்ஸ், புற்று நோய், ரத்த அழுத்தம் முதலிய நோய்களுக்குக் கொடுக்கக்கூடிய சுமார் 108 மருந்துகளின் விலை நிர்ணய உரிமையை நீக்கியது. அதன் காரணமாக மே 2014 இன் வழிகாட்டுதலின் படி அதுநாள் வரை தேசிய மருந்து விலை ஆணையத்தின் (National Pharmaceutical Pricing Authority – NPPA) கட்டுப்பாட்டிலிருந்து வந்த மருந்துகளின் விலை நிர்ணய உரிமை ஒரே நாளில் காற்றில் பறக்கவிடப்பட்டது. “வளர்ச்சிக்கான” இந்த மாற்றம் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப் பயணத்திற்கு சற்று முன்னர் நிகழ்ந்தது. இதன் மூலம் மருந்துகளின் விலை மீண்டும் உயர்ந்து “வளர்ச்சி” அடைந்தது.

உண்மையைப் பேசும் தனியொருவன் வசனங்கள்:

மருந்து தயாரிப்புக் கம்பெனிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபி ஆகியவைகளை தனியொருவன் தெளிவாக்குகிறது.  செய்திதாளின் முதல் ஒரு சில பக்கங்கள் மற்றும் விளையாட்டு பக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வணிக செய்திப்பிரிவிற்கு கொடுப்பதில்லை என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிறது. இங்கே வியாபாரம் தான் எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறது இதனை எதிர்க்கத் தொடங்குவோம் என்பதே தனியொருவன் விளையாடும் கதைக் களம்.

ஒரு சிலரின் லாப வெறிக்காக இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டையும், நம் மக்களையும் வெறும் சந்தையாக மட்டுமே பார்க்கின்றன. ஆளும் அரசியல்வாதிகள் செங்கல்வராயன் போன்று பெரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக உள்ளார்கள். படத்தின் இடைவேளைக்குப் பிறகு நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடைபெறும் தனிப்பட்ட சண்டையாகவே காண்பித்து இது ஏதோ இருவருக்குமான தனிமனித பிரச்சனையாக சித்தரிக்கப்படும் போதிலும், உச்சகட்டம் தெளிவாக உள்ளது.

தனி ஒருவனாகப் போராடி, ஒருவனை அழித்தால், அதன் மூலம் இச்சமூகத்தை யாரும் காப்பாற்றிவிடவும் முடியாது, தனி ஒரு சித்தார்த் அபிமன்யு அழிவதால் இங்கே இந்த அமைப்பு முழுவதும் ஒரே நாளில் மாறிவிடாது என்பதே இங்கே எதார்த்தமும் வரலாறாகவும் உள்ளது. ஒரு சித்தார்த் அபிமன்யு அழியும்போது இங்கே இரண்டு சித்தார்த் அபிமன்யுக்களை கொண்டு வர ஆளும் சமூகம் எப்போதும் தயாராகவே உள்ளது. இது ஒரு மித்திரனால் சாத்தியமில்லை… பல மித்திரன்கள் ஒரு திரளாக ஒன்று கூடும் போதுதான் சித்தார்த் அபிமன்யுக்களின் சித்தாந்தம் ஆட்டம் காணும்.

“நாட்டை திருத்றதுக்கு தனி ஒருவன் மட்டும் போதாது” என்பதே படம் பார்க்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. இதுவரை தனி மனிதர்களால் துவக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் இருந்தாலும், அந்த தனிமனிதனுக்கு உத்வேகமும், சரியான வழியில் செல்லவும் பலர் வழிகாட்டியாகவும், அந்த நிகழ்வுகளுக்கு உறுதுணையாகவும், அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள் பலர் என்பதுதான் உலக வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.

தனியொருவன் – சமகாலத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறான்…

Related Posts