இதழ்கள் இளைஞர் முழக்கம்

தனியார் துறை வேலைவாய்ப்புகள் முப்பது ஆண்டுகள் – எஸ்.பாலா

உலகமயமாக்கல் எனும் பொருளாதார செயல்முறை நம்முடைய நாட்டில் நுழைந்து 30 ஆண்டுகள் கடந்துள்ளது. 1986 ஆம் ஆண்டில் புதியக் கல்விக் கொள்கை துவங்கி 2015 டிசம்பர் றுகூடீ நடத்திய நைரோபி மாநாடு வரை நடந்துள்ளது. பல்வேறு திட்டங்கள், புள்ளி விபரங்கள், கொள்கை அறிக்கைகள், விவாதங்கள், மாநாடுகள்,பிரகடனங்கள் என எல்லாம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.இதுவெல்லாம் உலகமயம் எனும் சமூக, பொருளாதார, பண்பாட்டு செயல்முறைகளை தீவிரப்படுத்திட மேலும் எத்தனித்து வருகிறது.

மூலதனம் குவியும், தொழில்நுட்பம் வரும், குறைந்த விலையில் பொருட்கள் குறையும், அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை, தனியார்கள் சிறப்பாக செய்வர், போட்டி உயரும், தரம் கூடும் எனும் வாதங்களோடு பிரதானமாக முன்வைத்த வாக்குறுதி , புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் இதன் மூலம் இளைஞகர்கள் கனவுகள் நனவாகும் என்பதேயாகும்.

மூன்று பத்தாண்டுகள் முழுதாய் கடந்துவிட்ட பின்பு வாக்குறுதி என்னவானது? கனவுகள் நனவாதா? வேலைவாய்ப்பு பெருகியுள்ளதா? என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. உலகமயமாக்கல் எனும் செயல்முறை அமலாக்கப்பட்ட பின்பு தனியார் மயமாக்கப்பட்ட பிரதான துறைகள் கல்வியும், மருத்துவமும்,சேவைத்துறையும் ஆகும். மருத்துவ துறையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள், நர்சிங், அதி நவீன மருத்துவமனைகள், துவங்கி கிளினிக் வரையும், விற்பனை என பல்கிப் பெருகி உள்ளன.இவை அனைத்தும் உயிரை பணயமாக வைத்து லாபம் கொழிக்கும் தொழிலாக மருத்துவம் முற்றிலும் மாறிப்போயுள்ளது.

வளர்ச்சிப் போக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் வளர்ச்சியும், லாபமும்,விரிவாக்கமும் கணக்கிட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய லாபத்தினை அடைவதற்கு அவர்கள் தங்களுடைய கருவியாக பயன்படுத்திய இளம் தலைமுறை என்ன பலன்களை அடைந்தனர்.

கோடிக்கணக்கில் லாபம் கொழித்த போது அவர்களுக்கு கிடைத்த மறுபயன் என்ன? தனியார் மருத்துவமனை துப்புரவு பணியாளர், பாதுகாப்பாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள்,மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் , மருத்துவர்கள் என அனைவரிமும் இருந்து பெருமளவிலான உழைப்பு என்பது பெறப்படுகிறது.

தனியார் மருத்துவத் துறை விரிவாக்கம் என்பது அரசின் பொது மருத்துவமனையை புறக்கணித்ததன் மூலம் சாத்தியமானது.

இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளில் அரசு தன்னுடைய கட்டமைப்பை விரிவுப்படுத்திட எடுத்த முயற்சிகள் சொற்பமானவையே ஆகும்.

மருத்துவ பணியாளர்களின் அபரிமிதமான உழைப்பும், அரசின் புறக்கணிப்பும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளது. இதனோடு மருத்துவமனை ஓழுங்காற்று சட்டம் முறையாக அமலாக்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய சந்தேகம் ஆகும். தனியார் மருத்துவ துறையில் லட்சக்கணக்கானவர்கள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவர்கள் துவங்கி அடிப்படை பணியாளர் வரை அவர்களின் வேலை நேரம், பணியிடச்சூழல்,ஊதியம் ,போனஸ்,விடுப்பு சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது என்பது வினாவாகும். கூடுதல் வேலை நேரம், பணிப்பளு, நெருக்கடியான பணிநிலை, குறைந்த ஊதியம், குறைந்தபட்ச போனஸ், பணிமுறைகள், பயண ஏற்பாடு, சட்டப்பூர்வமான உரிமைகள், விடுப்பு என இந்த துறையினருக்கு இல்லாத முறையே நீடிக்கிறது.

கல்வித்துறை:-

கல்வி எனும் மகத்தான கருவியை விற்பனை பொருளாக சுருக்கிய மிகப்பெரிய பணி உலகமயத்திற்கு உண்டு. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, தொழில்நுட்ப கல்வி துவங்கி மருத்துவக்கல்வி வரையும் இதில் உள்ளடக்கி உள்ளது. தமிழகத்தின் அரசியலில் இதற்கென தனி ஆதிக்கம் மறைமுகமாக உண்டு. மறைந்த எம்.ஜி.ஆர் துவங்கி கலைஞர், ஜெயலலிதா வரை இதற்கான ஆதரவு தூண்கள் என்றால் மிகையில்லை மெட்ரிக் பள்ளி துவங்க அனுமதி அளித்த எம்.ஜி.ஆர் முதல் 94 குழந்தைகள் கல்வி வியபாரத் தீயில் வெந்து மடிந்தது வரை எல்லாம் இவர்களின் சாதனைகளே. 50,000 பள்ளிகள், 1000க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 18 தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் 615 இன்ஜினியரிங் கல்லூரிகள், 2 சட்டக் கல்லூரி, நர்சிங், ஆசிரியர் பயிற்சி, பி.எட் கல்லூரிகள் ஆயிரக்கணக்கிலும் என தமிழகத்தில் விரிந்து பரந்துள்ளது இதன் சாம்ராஜ்யம் எத்தனை குழு வந்தாலும் இவர்கள் வைத்ததுதான் கட்டணம், பயிற்சி கட்டணம் துவங்கி நன்கொடை வரை விதவிதமான பெயரில் கொள்ளை நடைபெறும் கூடாரமாக இவை உள்ளது.

ஆசிரியர், அலுவலகப் பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பாளர்கள் என லட்சக்கணக்கான பேர் இந்த கல்வி நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவிற்கு உள்ளது.இதனை புதிய கல்வி நிலையங்கள் உருவாக்கம், வளர்ச்சி போன்றவற்றில் காணலாம்.

ஆசிரியர்களின் சம்பளம் 2500 ல் துவங்கி படிப்புக்கேற்ற வேலை, சம்பளம், விடுப்பு, சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் என்பது எல்லாம் கனவுகளே!

ஆரம்ப பள்ளி ஆசிரியர், பேராசிரியர் வரை இன்று சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை பணிப்பாதுகாப்பு, மிகக்குறைந்த ஊதியம், பணிப்பளு, அட்மிஷன் இலக்கு, அட்மிஷன் பணி, என ஏராளமாக எழுதலாம்.

சம்பளக் குறைப்பிற்காக வேலைக்கு உள்ள ஆசிரியரை நீக்கி விட்டு புதிய நபரை வேலைக்கு சேர்ப்பதன் மூலம் லாபத்தை கொள்ளை லாபமாக மாற்றுகின்றனர். தன்னுடைய பணியை பாதுகாத்திட உரிமைகளை பலிகொடுத்திட வேண்டிய நிலை உள்ளது. கல்வி நிலையத்தில் ஜனநாயகம் என்பது மாணவர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கே கூட இல்லாத நிலையே நீடிக்கிறது இன்னும் சில இடங்களில் கண்காணிக்கபடும் நிலையும் உள்ளது.

கல்வி, மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் இளைய தலைமுறையினர் சந்திக்கும் பணியிடச்சூழல் என்பது நிர்வாகத்தின் அதிகாரப் பிடியில் சிக்கி இருக்கும் சூழலே உள்ளது. சின்ன சின்ன விருப்பங்கள் முதல் ஊதியம், விடுப்பு , பணிபாதுகாப்பு என்பது வரை மிகப்பெரிய நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்தை உருவாக்கும், பாதுகாக்கும் மகத்தான பணியினை மேற்கொள்ளும் இவர்களை உலகமயச்சூழல் என்பது வெறும் பிழைப்பிற்கான ஒன்றாக சுருக்கிவிட்டது.

மேற்குரிய துறைகள் உதாரணம் மட்டுமே.இன்னும் ஒவ்வொரு துறையிலும் சேவை, விற்பனை, முறைசாரா ஆடை உற்பத்தி, தொழில்துறை, ஓட்டல்கள், நவீன ஷோரூம்கள், தியேட்டர்கள், பொருள் உற்பத்தி நிலையங்கள், என நீக்கமற நிறைந்து இருப்பது இவ்விதமான பணிச்சூழலே ஆகும்.இத்தகைய சூழலில் பெருகி வருவதோடு இளம்பெண்கள் பாலியல்ரீதியான பாகுபாடு சேர்ந்து தாக்குதல் தொடுக்கிறது. மேற்குரிய வேலைவாய்ப்புகள் என்பது முற்றிலும் நிரந்தரமில்லாத தன்மையும், ஒப்பந்த பணிமுறையாகவும் முற்றிலும் மாற்றப்பட்டு வருகிறது.

பணிபாதுகாப்புடன் கூடிய வேலை பணியிடச்சூழல் என்பது நெருக்கடி இல்லாத தன்மையிலும் பெண்கள் பாலியல்ரீதியான பாகுபாடு அற்றதாகவும் உள்ளடக்கி கௌரவமான வேலைக்கான போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.

எஸ்.பாலா

Related Posts