அறிவியல் இளைஞர் முழக்கம்

தண்ணீர் + அரசின் ஒரு இலவச இணைப்பு

– நக்கீரன்

11. ஃபுளோரைட் – தண்ணீருடன் அரசின் இலவச இணைப்பு

கடந்த 2014ம் ஆண்டு இந்தியா முழுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது நினைவிருக்கலாம். அதனை தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஏதோ பெரும் சாதனையைப் போல் கொண்டாடியது புகைப்படங்களுடன் பத்திரிகைகளில் வெளிவந்தது. நாடு விடுதலை பெற்று எழுபதாவது ஆண்டை நெருங்கும் நிலையில் சொந்த நாட்டு மக்களை உடல் நலத்துடன் வைத்திருப்பதில் தோல்வியுற்ற அரசுகள் இதுகுறித்து கிஞ்சிற்றும் வெட்கப்படவில்லை.

இந்நாட்டுக் குழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து இல்லாமல் போனது என்ற கேள்வியை எவரும் எழுப்பவில்லை. மாறாக அக்குறைவுக்கு அடுக்கடுக்காக மருத்துவ விளக்கங்களே சொல்லப்பட்டன. ஒரு முதன்மையான காரணியை அரசு முற்றிலும் மறைத்தது. ஏனெனில் அக்காரணி தண்ணீர்-உடன் தொடர்புடையது. டாக்டர். ஏ.கே. சுசீலா என்பவர் போட்டுடைக்கும் இந்த உண்மையை சற்றுக் கேளுங்கள்.

முன்பொருமுறை செயல்படுத்த முனைந்து தோல்வியடைந்த ஒரு திட்டத்தை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஏன் மறுபடியும் கையிலெடுத்தது என்றே தெரியவில்லை. உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஃபுளோரைட் உட்கொள்ளப்படுவது குறைக்கப்படாவிட்டால் இரத்தச்சோகையை இந்த இரும்புச்சத்து மாத்திரையால் குறைக்கவே முடியாது என்பது அக்கழகத்துக்கே நன்றாகத் தெரியும். இந்தியாவிலுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 ஃபுளோரோசசினால் பாதிக்கப்பட்டவை. இதற்குக் காரணம் நாம் மிகவும் ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துவதுதான்.

டாக்டர். ஏ.கே.சுசீலா. சர்வதேச அளவில் ஃபுளோரைட் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளவர். புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஃபுளோரோசிஸ் ஆய்வு மற்றும் ஊரக வளர்ச்சி அமைப்பின் இயக்குநர் ஆவார்

இவருடைய கூற்றுக்கு தெளிவான விளக்கம் இதுதான். ஃப்ளோரைட் கலந்த தண்ணீர் உடலுக்குள் உட்கொள்ளப்படுவது நிறுத்தப்படாவிட்டால் இப்படி இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது பலனளிக்காது. இந்த ஃபுளோரைடானது எலும்பு மஜ்ஜையிலுள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் குறைத்துவிடும். இவ்வளவு செலவு செய்து மாத்திரைகள் வாங்குவதற்கு பதிலாக ஃப்ளோரைட் நீக்கப்பட்ட குடிநீரை வழங்கத்தான் அரசு முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது? பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகள் கணக்கு வழக்கின்றி நிலத்தடி நீரை உறிஞ்சிக் காலி செய்வதை வேடிக்கை பார்க்கும் நம் அரசுகள் தம் சொந்த மக்களுக்கு ஃபுளோரைட் கலந்த தண்ணீரை பரிசளிப்பதே நடக்கிறது.

இந்திய நீரியல் மற்றும் நீர்வளத் தகவல் அமைப்பு தரும் தகவலின்படி இந்தியாவில் நிலத்தடி நீரில் ஃபுளோரைட் கலந்திருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்குள்ள 19 மாவட்டங்களில் இப்பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் ஒன்றான தர்மபுரிக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டமே கொண்டுவரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

புவிக்கு அடியில் உள்ள பாறைகள் ஃபுளோரசிசை உள்ளடக்கியுள்ளது. நாம் புவிக்குள் ஆழத்துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுகையில் அங்குள்ள நீர் குறைந்து அவ்விடத்தில் காற்று நிறைகிறது. அப்போது இக்காற்றுடன் ஃப்ளோரசிஸ் எதிர்வினை புரிந்து ஃப்ளோரைடு உருவாகிறது. நிலத்தடி நீர் மேலும் குறையக் குறைய ஃபுளோரைடின் வீரியம் அதிகமாகிறது. இந்த ஃபுளோரைட் கலந்த நீர்தான் குழந்தைகளின் உடலில் மேற்சொன்னபடி இரும்புச் சத்து கிடைக்காமல் தடுப்பதோடு பற்களையும் பாதிக்கிறது. மேலும், எலும்பு தொடர்பான நோயினை உண்டாக்கி இளைஞர்களையும் முதியவர்களைப் போல மாற்றிவிடுகிறது.

ஆனால் இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இன்னும் மெத்தனமாகவே இருந்து கொண்டிருந்ததன் அடையாளம்தான் 2012ம் ஆண்டு நடுவண் அரசின் நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிக்கை. இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரைக் குறித்த ஆய்வை மேற்கொண்டு இங்குள்ள நிலத்தடி நீரில் மூன்று வேதிப்பொருட்கள் அதிகளவில் இருப்பதைக் கண்டுப்பிடித்தது. அவை 1) ஃபுளோரைட் 2) குளோரைட் 3) நைட்ரேட் ஆகும்.

இதில் ஃபுளோரைடைப் போலவே குளோரைட் பெருக்கத்துக்கும் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதே காரணம். நைட்ரேட் பெருக்கம் என்பது பசுமைப் புரட்சியின் அன்பளிப்பு. தமிழகத்தின் 19 மாவட்டங்களில் ஃபுளோரைட் பாதிப்பு இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக, 1200 அடிகளுக்கு கீழே போனால் நிலத்தடி நீரில் ‘ஃபெரஸ் அயனி’ இருப்பதாக சொல்லப்படுகிறது. இது கடினத்தன்மையுடைய நீராகும். இதனால் தமிழகத்திலுள்ள பல இடங்களின் நிலத்தடி நீரில் மின் கடத்தும் திறன் வழக்கமான அளவைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு இதன் கடினத்தன்மை இருக்கிறது. தமிழகத்திலுள்ள பல நிறுவனங்கள் ஆயிரம் அடிகளுக்கும் கீழேயுள்ள நீரை உறிஞ்சியெடுப்பது சாதாரன நிகழ்வாக இருக்கிறது. கோக் போன்ற நிறுவனங்களும் இப்படித்தான் நீரை உறிஞ்சியெடுத்து தன் பானங்களை தயாரிக்கிறது.

நிலத்தடி நீர் குறைந்த மாவட்டங்களாக நாமக்கல், கோவை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வேணாந்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர் 1500 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது. அதாவது, ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் இது இறங்கிப் போய்விட்டது. இங்கிருக்கும் நிலத்தடி நீரைச் சுரண்டி திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு விற்றதன் விளைவுதான் இது. இவர்களுக்குரிய தண்ணீர் மூலம் கிடைத்த அந்நியச் செலாவணியால் இம்மக்களின் தாகம் ஏன் தணியவில்லை? .

சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 1990களுக்குப் பிறகு 4 மீட்டர் ஆழத்துக்கு இறங்கிவிட்டது. இதனால் குளோரைடின் அளவு இரட்டிப்பாகி விட்டதாம். நீலகிரி தேயிலைத் தோட்டம் தொடங்கி காவிரி கழிமுகம் வரை வேளாண்மை நடைபெறும் தமிழகத்தின் பல இடங்களிலும் வேதியுர பயன்பாட்டால் நைட்ரேட் பாதிப்பு அதிகமிருக்கிறது. எனவே இருப்பிலிருக்கும் நன்னீரின் தரமும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. தண்ணீரின் மீது முழுக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

தர்மபுரி மாவட்ட தண்ணீரில் ஃபுளோரைட் தாக்கம் அதிகமிருந்ததால் கொண்டுவரப்பட்ட ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன்தான் அமைக்கப்பட்டது. ஆக இங்குள்ள நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி நமக்கு ஃபுளோரைட் கலந்த நீரை அன்பளிப்பாக அளிப்பதும் கார்ப்பரேட்கள்தான். பிறகு நமக்கு ஃபுளோரைட் இல்லாத நீரை வழங்குவதும் கார்ப்பரேட்கள்தான்.

அப்படியானால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக மக்களே நடத்தும் இந்த அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? ….தொடரும்.

Related Posts