இதழ்கள் இளைஞர் முழக்கம்

தண்ணீர் அரசியல் பேசுவோம் – தண்ணீர் நாடாளுமன்றம்

 – நக்கீரன்

ஆர்வாரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்தான் ஹமிர்ப்பூர். ஆர்வாரி ஆற்றை மீட்டெடுத்தப் பின் வளமான வேளாண் கிராமமாக மாறியிருந்தது. இந்த ஊர், இங்குள்ள தடுப்பணை சிறு ஏரிப்போல் மாறி நீர் நிறைந்திருந்தது. இந்த ஊருக்கு 1996 நவம்பர் மாதத்தில் ஒருநாள் மீன்பிடி குத்தகையாளர் ஒருவர் தன் சாதனங்களுடன் வந்திறங்கினார்.

மக்கள் அவரை அணுகி விபரம் கேட்டனர். அவர் அத்தடுப்பணை நீரில் மீன் குத்தகை எடுத்திருப்பதால் மீன் பிடிக்க வந்திருப்பதாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி இங்கு மீன்பிடிக்க முடியாது என்று தடுத்தனர். அதற்கு அக்குத்தகையாளர் தான் முறைப்படி மாநில அரசின் மீன்வளத்துறையிடம் பணம் கட்டி ஒப்பந்தம் பெற்றிருப்பதாக கூறினார். இது அம்மக்களின் ஆத்திரத்தை தூண்டியது.

இத்தனை ஆண்டுகளாக ஆறு வறண்டிருந்தபோது எட்டிப்பார்க்காத அரசாங்கம், தண்ணீர் இல்லாமல் தவித்த போது கண்டுக்கொள்ளாத அரசாங்கம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த முயற்சியில் ஆற்றை மீட்டதும் பலனை மட்டும் அறுவடை செய்ய வருகிறதா? ஏனெனில் இம்மக்கள் அனைவரும் தம் சொந்த முயற்சியிலேயே கடந்த 11 ஆண்டுகளில் 161 தடுப்பணைகளைக் கட்டியிருந்தனர். சினம் கொண்ட மக்கள் அந்த குத்தகையாளரை விரட்டியடித்தனர். அக்குத்தகையாளர் அருகில்யிருந்த மற்றொரு சிற்றூரான சமராவுக்கு சென்றபோது. அங்கும் இதே கதைதான்.

திருப்பி அனுப்பபட்ட குத்தகையாளர் அரசாங்கத்திடம் புகார் செய்தார். அரசு குத்தகையாளரை தடுத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றது. காவல் துறையினரைக் கொண்டு மிரட்டியது. அஞ்சாத அம்மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் களத்தில் இறங்கினர். .

இத்தனைக்கும் இம்மக்கள் மரக்கறி உணவு உண்பவர்கள். ஊண் உணவு உண்ணாத இவர்கள் ஏன் மீன் பிடித்தலை எதிர்க்க வேண்டும்.? இவர்களுடைய புரிதல் தெளிவாக இருந்தது. இன்று மீன். நாளை நீர். இன்று மீன் பிடிப்பதை விட்டுக் கொடுத்தால் நாளை இதே அரசு நீரை உறிஞ்சிப் பயன்படுத்தும் ஒரு தொழிற்சாலைக்கு அனுமதியைக் கொடுக்கலாம். எனவேதான் தொடக்கத்திலேயே இதைத் தடுக்க அவர்கள் ஒன்றிணைந்தனர்.

இந்நிலையில் இம்மக்கள் எழுச்சியை நிரந்தரமாக ஒன்றிணைக்க நினைத்த இராஜேந்தர் சிங் ஒரு புதிய முடிவை எடுத்தார். ஆர்வாரி ஆற்றின் கரையிலிருந்த 72 சிற்றூர்களையும் ஒன்றிணைத்தார். மீட்டெடுத்த ஆற்றின் உரிமையை அரசிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள மக்களிடையே ஓர் அமைப்பு அவசியம் என வலியுறுத்தினார். அக்கருத்தை அம்மக்கள் ஏற்றுக்கொள்ள இந்தியாவிலேயே முன்னுதாரணம் இல்லாத ஓர் அமைப்பு பிறந்தது. அதுதான் ‘ஆர்வாரி ஆறு பார்லிமெண்ட்’.

1998 ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி 72 சிற்றூர்களிலிருந்து 2055 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதில் பெண்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஆறு மாதத்துக்கொரு முறைக் கூடி விவாதிக்கும் இந்த பார்லிமெண்ட் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து ஆர்வாரி ஆற்று கிராமங்களும் கட்டுப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்புக்கென விதிமுறைகளும் இயற்றப்பட்டன. இவை முழுக்க முழுக்க இம்மக்களின் நலன் சார்ந்தவையாக இருந்தன.

இந்த தண்ணீர் பார்லிமெண்டின் விதிமுறைகளில் சில:

தடுப்பணை நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகைக்கு தடை.

  • ஊர்களில் ஆழ்துளைக் குழாய், கிணறுகளுக்கு தடை.

  • நீர்வளத்தில் அனைவருக்கும் சம பங்கு.

  • அதிக நீர் உறிஞ்சும் பயிர்களை பயிரிடத் தடை.

  • பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்களை சுய தேவைக்கு மேல் பயிரிடத் தடை.

  • எவரும் சுரங்கத் தொழிலுக்கோ பிற தொழிலுக்கோ நிலத்தை விற்க தடை.

  • வேதியுர பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

  • நன்னீர் பல்லுயிரியத்தை பாதுகாக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் பங்குக் கொள்ளும் கிராம பஞ்சாயத்து போன்ற அரசு அமைப்புகள் இங்கு இயங்கினாலும் இந்த தண்ணீர் பார்லிமெண்ட் அமைப்பின் முடிவுகளை மீறி அவற்றால் எந்த முடிவும் எடுக்க இயலாதவாறு இவ்வமைப்பு சிறப்பாக இயங்கி வருகிறது. இதற்கு காரணம் நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களின் கைகளில் இருப்பதே.

தமிழகத்திலும் நீர்நிலைகள் அனைத்தும் ஆங்கிலேயர் வரும் மக்கள் சொத்தாகவே இருந்தன. கிழக்கிந்திய கம்பெனியின் மொத்த வருமானத்தில் 87 சதம் வருமானம் நிலவரி மூலம்தான் கிடைத்தது. இதனால் வெள்ளையர்கள் இதை முழுவதும் தன்வசப்படுத்த திட்டமிட்டனர். விளைவு, 1852ல் பொதுப்பணித்துறை உருவானது. மக்கள் பராமரிப்பில் இருந்த பாசன ஏரிகள் ஏரியின் அரிச்சுவடிக்கூட தெரியாத ஆங்கில இராணுவ படையின் பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டன. மக்கள் நீர் நிலைகளின் மீதான தம் அதிகாரத்தை இழந்தனர்.

ஆனாலும் இதற்கு பின்னரும் குடிநீர் வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்பிடமே இருந்தது. அன்றைய ஆங்கிலேய அரசு சென்னை குடிநீருக்காக பாசன ஏரிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டபோது உழவர்களுக்கு உரிய நட்ட ஈட்டை கொடுத்து விட்டே நீர் எடுத்தது. இந்நிலை விடுதலைப் பெற்ற இந்தியாவில்தான் மாறியது. 1967க்கு பின் குடிநீர் வழங்கல் என்பது பணம் சம்பாதிக்கும் வழி என அரசியல்வாதிகளுக்கு தெரிந்தப் பின்னர் அரசு அந்த பொறுப்பினை உள்ளாட்சிகளிடமிருந்து பறித்துக்கொண்டது. இதனாலேயே 50 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகள் செலவிட்டும் நிறைய கிராமங்களுக்கு நீரில்லாத நிலை.

இந்நிலையில் மிச்சமிருந்த மக்கள் அதிகாரமும் 1994ம் ஆண்டு பறிக்கப்பட்டது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் பஞ்சாயத்துக்களுக்கு நீர் நிலைகளில் உரிமை வழங்கிய பிரிவு நீக்கப்பட்டு பஞ்சாயத்து ஒன்றியங்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் இறுதி அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது இதன் பின்னரே ஆறுகளில் ஏரிகளில் மணல் கொள்ளை அமோகமாக நடந்தது. இந்நீர் நிலைகளை சுற்றியிருந்த கிராமங்கள் குடிநீரின்றி வறண்டன.

இப்போதும் கூட ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் நிலத்தடி நீரில் 15 சதம் அந்த கிராமங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அரசின் நிலத்தடி நீருக்கான ஆணை கூறுகிறது. ஆனால் எந்த 15 விழுக்காடு என்பதுதான் கேள்வி. கோக் போன்ற நிறுவனங்கள் ஆயிரம் அடிகளுக்கு மேல் உறிஞ்சிய பின் எஞ்சி நிற்கும் பெரஸ் அயனிகள் நிரம்பிய 15 சதம் கடினநீரா மக்களுக்கு சொந்தம்?

நாடு விடுதலை பெற்றுவிட்டது எனக் கூறிக்கொள்கிறோம். ஆனால் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நீர்நிலைகளின் மீதான உரிமை திரும்ப கிடைக்கவில்லை. இராஜஸ்தான் மக்கள் நமக்கு வழிக்காட்டுகிறார்கள். மக்களுக்கான ‘நீர் அதிகாரம்’ நோக்கி நாம் முன்னேறுவோம்.

 

Related Posts