இதழ்கள் இளைஞர் முழக்கம்

தணியாத கல்வித் தாகம் …

 – எம்.காவ்யா

பசியெடுத்தால்தான் உணவருந்த வேண்டும். இல்லையெனில் உண்ணும் உணவின் அருமை தெரியாது. தாகம் எடுத்து தண்ணீர் குடித்தால் தான் தண்ணீரும் சுவையாக இருக்கும். ஆம், எந்த ஒரு செயலும் தானாகவே நிகழாது. எதற்கும் ஒரு தூண்டுதல் தேவை. அது போல் தான் கல்வியும். எப்பொழுது ஒருவன் தேடிப் படிக்க ஆரம்பிக்கிறானோ, அப்பொழுது இன்னும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் எழும். ஆனால், இன்றைய கல்வி முறை எதையும் தேட விடுவதில்லை. எல்லாவற்றையும் திணிக்கப் பார்க்கிறது. புத்தகத்தைப் படித்தால் போதும். அதற்கு மேல் படிக்கத் தேவையில்லை என்ற நிலை. ஏனெனில் புத்தகத்தில் உள்ளதை எழுதுவதற்கு மட்டுமே மதிப்பெண்கள் வாரி வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் எப்பொழுதும் ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும். அவர்கள் தூண்டுதலாக இல்லையெனில், கல்வி என்பது முழுமையாக நடைபெறாது. ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்பொழுது மாணவர்களுக்கு அந்தத் தூண்டல் ஏற்படுத்த வேண்டும். அது பாடம் எடுத்து முடித்த பின்பு படி, படி என்று மாணவனை எரிச்சலடைய வைப்பதாக இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அது ஒரு நல்ல கல்வியாக ஒரு போதும் அமையாது. மாறாக அது ஒரு பயிற்சி கூடமாக தான் இருக்கும். பயிற்சி கூடத்தில் என்ன நிகழும், பயிற்ச்சியாளர் சொல்வது எல்லாம் அப்படியே நடைபெறும். ஏனெனில் அங்கு ஏற்கனவே இவ்வளவுதான் என்று வரையறுக்கப்பட்டு அதன்படியான பயிற்சி மட்டுமே நடக்கும்.

ஆனால், கல்வி என்பது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைப்பது அல்ல. தீக்குச்சி வைத்து நெருப்பை பற்ற வைப்பது. அது காட்டுத் தீ போல் எவ்வளவு வேண்டுமானாலும் போய்க் கொண்டே இருக்கம். ஆம், அந்த தீயை அனைக்க தண்ணீர் தேவையில்லை. மற்றொரு காட்டுத் தீ தான் தேவை. ஆனால், இன்றைய ஆசிரியர்கள் பலர் பாத்திரத்தில் நீர் நிரப்பவே காத்திருக்கின்றனர், தீப்பொறியைப் பற்றவைப்பதில்லை. இன்றைய கல்விமுறை மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாகவும், ஆசிரியர்களை மதிப்பெண் எடுக்க வைக்கும் இயந்திரத்தை இயக்கும் ஒரு தொழிலாளியாகவும் பாவிக்கிறது. இப்படி இருக்கும் கல்விமுறை மாற்றப்படாமல் நாடு எந்த விதத்திலும் வல்லரசாக மாறாது.

ஒருவனின் தனித்தன்மை வெளிப்படாமல் எப்பொழுதும் கல்வி முழுமையடைவதில்லை. தாய் மொழியிலேயே பேசி மகிழ்ந்து கொண்டிருந்த குழந்தையிடம் அயலான் மொழியில் நீ படிக்க வேண்டுமென்று திணிக்கும் கல்வி மாற்றப்பட வேண்டும். மொழியைப் படியுங்கள் தவறில்லை. ஆனால் அதை திணிக்காதீர்கள். ஆங்கிலத்தைப் பிழையில்லாமல் சற்றும் தவறில்லாமல் பேசும் மாணவர்கள் தனது தாய் மொழியின் முக்கியத்துவத்தை இழக்கிறார்கள். தாய் மொழியை மதிக்காதவனுக்கு தாய் நாட்டை மதிக்க தெரியாது.அந்த இடத்தில் மனித நேயம் மறுக்கப்படுகிறது. வல்லரசாக இருக்கும் அனைத்து நாடுகளிலும் இன்று வரை தாய் மொழிக்கல்வியே கற்றுகொடுக்கப்படுகிறது.

மிகவும் அடிப்படைத் தேவையான தரமானக் கல்வியை இலவசமாக தனது மக்களுக்குக் கொடுக்க முடியாத அரசுகள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே.

சிறு வயதிலிருந்தே தரமான, மனித நேயமுள்ள கல்வி பெற முடியாத ஒருவன் தனது மதிப்பெண் பட்டியல்களை மட்டுமே வைத்து வேலையில் சேர்ந்து விடுகிறான். அங்கு அவன் சிறுவயதில் கற்றுக்கொண்ட கல்வியைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால், அவன் அதிக செலவு செய்து ஆங்கில வழி பள்ளியில் படித்து விட்டான். அங்கு செலவு செய்த பணத்தை எவ்வாறெல்லாம் திரும்பப் பெற முடியும் என்ற வழியைத் தேடுகிறான். இவ்வாறாக ஒரு சமூகப் பார்வையுள்ள, மனித நேயமுள்ள ஒருவன் உருவாவது தடுக்கப்படுகிறது.

இவ்வாறு பணமென்னும் குறுகிய வட்டத்துக்குள் மாட்டிக் கொண்ட அவன் அதிலிருந்து வெளிவர மறுக்கிறான். ஏனெனில், அந்த வட்டம் அவன் மூன்று வயதிலிருந்து கொடுத்த நன்கொடைகளால் சூழப்பட்டு அவனை மீண்டும் மீண்டும் அதனுள் இழுத்து விடுகிறது. இப்படி ஒருவன் வாழ்கிறான் என்றால் அதற்கு அடிப்படை அவனுக்கு வழங்கப்பட்ட கல்வி. இப்படி ஒரு மனிதனை அல்ல, பல இலட்சம் மனிதர்களை உருவாக்கும் இந்தக் கல்வி தேவையா? இவன் இயற்கையின் நியதியை ஏற்க மறுக்கிறான். பிறரிடம் சுரண்டி வாழப் பழகுகிறான்.

தரமானக் கல்வியைப் பயின்றால் ஏழை மாணவனுக்கு புரியாதா? நல்லச் சோறு சாப்பிட்டால் ஏழைக்கு இறங்காதா? எல்லாம் இவர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. இவர்கள் யார்? வாழத் தகாதவர்களா? இந்த பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத, தீர்க்க மனமில்லாத அளவுக்கு அரசின் கருவூலம் காலியாகவா உள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார நிலைமையும் மேம்பட்டால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் உயரும். பில்கேட்ஸ், அம்பானிகளின் பொருளாதாரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டால், கடைக்கோடியில் கிடக்கும் ஏழைகள் நசுக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். எப்பொழுது பொதுவுடைமை சமுதாயம் உருவாகுமோ அங்கு தரமான கல்வி கொடுக்க வழி ஏற்படும். அங்கு கல்வி திணிக்கப்படாது. அந்தக் கல்வி ஏழைகளின் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்.

கட்டுரையாளர்,

11 வது வகுப்பு,

நாகர்கோவில் மாவட்டம்.

Related Posts