அரசியல் அறிவியல்

தடுப்பூசி வதந்திகளும் தவிர்க்கப்பட வேண்டிய அரசியலும் . . . . . . . !

vaccine-baby

பொன்னுக்கு வீங்கி (MUMPS), தட்டம்மை (MEASLES), ரூபெல்லா ஆகிய மூன்றும் வைரஸ் கிருமிகளால் சிறு குழந்தைகளை பாதிக்கும் நோய்களாகும். குறிப்பாக ரூபெல்லா கருவிலேயே பாதிக்கும் நோயாகும்.   பொதுவாக இந்த நோய்கள் பாதித்தால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் அதற்குண்டான எதிர்ப்பு சக்தி நோயாளிகளிடமிருந்து ஏற்படும். ஆனால் எதிர்ப்பு சக்தியே (IMMUNITY) இல்லாத நோயாளிகளுக்கு அந்த நோயால் அதிகம் பாதிப்பு ஏற்படும். பொன்னுக்கு வீங்கி நோயால் நமது கன்னத்தில் இருபக்கமும் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் அவர்களுக்கு அதிக பாதிப்புகள் மற்றைய சுரப்பிகளிலும், மூளையிலும், இருதயத்திலும், விதைகளிலும், நரம்புகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. காது கேளாத்தன்மையும், மூட்டுகளில் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தட்டம்மையிலும் காய்ச்சலும், தும்மலும், மூக்கில் நீர் வடிதலும், வாந்தியும், பேதியும் ஏற்படும். மேலும் அவர்களுக்கு தோலில் தடிப்பாக சிவப்பாக புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடைசியில் நீண்ட நாட்கள் அந்த குழந்தைகளிடம் இந்த நோய் இருந்தால் அவர்களது வளர்ச்சி குன்றும். பேதி ஏற்படும். வேறு தொற்று நோய்கள் வரும். எலும்புருக்கி நோயும் வரும். மூளை பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோய் வரும்.

ரூபெல்லா நோய் ஒரு குழந்தைக்கு ஏற்படும்போது ஆரம்பத்தில் தொண்டையில் கரகரப்பும், காய்ச்சலும் ஏற்படும். நிணநீர்க்கட்டிகள் கழுத்துப் பகுதியில் வீங்கும். மேலும் அவர்களுக்கு சிவப்பாக தடிப்புகள் புள்ளி புள்ளிகளாக ஏற்படும். குறிப்பாக இந்த நோய் பெரியவர்களையும் இளம் பெண்களையும் பாதிக்கும். மூளையை பாதிக்கும். மூட்டுகளைப் பாதிக்கும். இரத்த அணுக்களையும் பாதிக்கும். கருவுற்ற பெண்களுக்கு ரூபெல்லா நோய் பாதிக்கும் பொழுது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும். இதனால் பிறவியிலேயே ஊனமும், கண்பார்வை குறைவும் இதயத்தில் பாதிப்பும் ஏற்படும். மேலும் உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் குறைவாக இருக்கும். முக்கியமாக கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் பாதிப்பு கருவில் உள்ள குழந்தைகளையும் அதிகம் பாதிக்கும்.

இந்த நோய்களிலிருந்து பாதுகாக்க மூன்று நோய்களுக்கும் சேர்த்து எம்.எம்.ஆர் என்ற தடுப்பூசி உள்ளது. அதனை 15 முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கும், 1 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு காலத்தில் கொடிய உயிர்க்கொல்லி நோயாகிய அம்மை நோய் இப்பொழுது தடுப்பூசியினால் உலகத்தை விட்டே விரட்டப்பட்டுள்ளது. போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து மூலமாக இந்தியாவை விட்டே விரட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோய் தடுப்பு மருந்துகளை குன்னூரிலுள்ள பாஸ்டர் நிறூவனத்திலும் சென்னையிலுள்ள கிண்டி நிறுவனத்திலும் கசாலியிலுள்ள தடுப்பூசி நிறுவனத்திலும் உற்பத்தி செய்யப்பட்டு அதை இலவசமாக இந்திய மக்களுக்கு வழங்கப்படுவதை தடுக்கும் விதமாக முந்தைய மத்திய அரசு ஆட்சியில் அந்த நிறுவனங்களை மூடும் விதமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர போராட்டத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அப்பொழுதே தனியார் மூலமாக தடுப்பு ஊசிகள் வாங்கப்பட்டு அதை ஆந்திர மாநிலத்தில் குழந்தைகளுக்கு அளித்த போது சில குழந்தைகள் இறந்து போன வரலாறும் உண்டு. தடுப்பூசி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் போடுவதின் மூலமாக மிகவும் கொடிய நோய்களிடமிருந்து பாதுகாக்கப்படுவது உண்மை.

உயிரோடு உள்ள வைரஸ் கிருமிகளை வீரியமற்ற கிருமிகளாக்கி அதை உடலில் செலுத்துவதுதான் தடுப்பு ஊசியும் தடுப்பு மருந்தும். சில நேரங்களில் அதில் தவறு ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அந்த நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் அது மிக மிக அரிய ஒன்று. சில நேரங்களில் ஒழுங்கான அல்லது தேவையான குளிரில் பாதுகாக்கவிட்டாலும் தடுப்பு மருந்து வேலை செய்யாது. நோய் வர வாய்ப்பு உண்டு.

அந்த ஊசி மருந்துகளையும், சொட்டு மருந்துகளையும் இந்தியாவிலேயே தயாரித்து இலவசமாகவோ, குறைந்த விலையிலோ மக்களுக்கு வழங்க வேண்டும். வெளிநாடுகளில் வாங்கும் பொழுதுதான் இதில் அரசியல் இருக்கிறது. முதலில் அவர்கள் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ கொடுத்தாலும் இந்தியாவில் இந்த தடுப்பு ஊசி தயாரிக்கும் நிறுவனங்களை மூடவைத்த பின் அந்த தடுப்பு ஊசிகளையும் மருந்துகளையும் வெளிநாட்டு நிறுவனங்கள் சொல்கின்ற விலைக்குதான் நாம் வாங்க முடியும். தேவையான அளவு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். மற்றபடியான வதந்திகளை நம்பாமல் இருப்பதே நல்லது. தடுப்பு ஊசியை கட்டாயமாக போடுவதே சிறந்தது. அதற்காக வெளிநாட்டு கம்பெனிகளின் தடுப்பு ஊசியையும், மருந்துகளையும் தடுத்தால்தான் இந்திய குழந்தைகளுக்கு வருங்காலத்தில் நோய்த் தடுப்பு ஊசிகளும், தடுப்பு மருந்துகளும் உத்திரவாதமாக்கப்படும்.

– Dr. என். ராமகுரு.

Dean (Retired), Govt. Medical College. Tirunelveli

Related Posts