இந்திய சினிமா சினிமா மாற்று‍ சினிமா

தங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் !

dangal-750x500-jpg-pagespeed-ce-tzwbpo4mju

இந்தி திரையுலகில்  (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் எனப்பொருள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிங்க் திரைப்படம் எப்படி பெண் குறித்த பல கற்பிதங்களை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பி, கட்டுடைத்ததோ, அதே வரிசையில் சேர்ந்திருக்கிறது தங்கல். பெண் குறித்த கற்பிதங்கள் எவ்வாறு ஒரு பெண் சாதனையாளராக வருவதை தடுக்கப்பார்க்கிறது என்று இத்திரைப்படத்தில்  இயக்குனர் நிதிஷ் திவாரி மிக நுணுக்கமாக காட்டியிருக்கிறார்.

ஒரு பெண் குறித்த கற்பிதங்கள் சமூகத்தில் பிறரால் கற்பிக்கப்படுவதற்க்கு எதிராக ஒரு பெண்  போராடுவது என்பது பெண் விடுதலைக்கு இன்றியமையாதது. ஆனால் அதே கற்பிதங்களுக்கு , அந்த பெண்ணே ஆள்பட்டு போனால் என்னவாகும்? அப்போது யாருக்கு எதிராக அந்த பெண் யுத்தம் செய்வாள்? தனக்கு எதிராக தானே ஒரு யுத்தத்தை செய்யவேண்டியது வருமல்லவா? தன் சுயத்திற்க்கு எதிரான  சமூகத்தின் கற்ப்பிதங்கள் தன்னயே ஈர்த்துகொள்ளும் அளவுக்கு வரும்போது அவள் நடத்தும் யுத்தமும் சேர்ந்ததுதான் தங்கல் எனக்கூறினால் மிகையில்லை.

கதைக்கு வருவோம் , ”மகாவீர் சிங் போகாட்” ஒரு தேசிய மல்யுத்த சாம்பியன், ஆயினும் இந்தியாவிற்காக சர்வதேச அளவில் சாதிக்க முடியாமல் போனதன் வருத்தம் மனதில் எப்போதும் அவருக்கு உண்டு. எனினும் தனது மகள்களை எவ்வாறு மல்யுத்த களத்தில் வெற்றி வாகையாளர்களாக ஆக்குகிறார் என்பதே கதை.

தனது சர்வதேச வெற்றிவாகை கனவு தகர்ந்து போனாலும் மகாவீர் சிங் விடுவதாக இல்லை. ஒரு ஆண் மகன் மூலமே அவரது கணவு நிறைவேறும் என்று மகாவீர் சிங் நினைக்கிறார். ஆனால் எதிர் பாராத விதமாக அவருக்கு பிறக்கும் குழந்தைகள் அடுத்தடுத்து பெண்ணாக பிறக்கின்றனர். இதனால் மனதளவில் மகாவீர்சிங் சோர்வடைந்து போகிறார். இருப்பினும் ஒரு பாசமான தந்தையாக தன்  பெண்களுக்கு குறைவைக்காமல் படிக்க வைத்து வளர்க்கிறார் . தனது பிள்ளைகளாவது மல்யுத்த போட்டியில் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற அவரது எண்னம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கையில், சந்தர்ப்ப சூழ்நிலையால் எதிர்பாராத விதமாக தனது மகள்களின் உடல் வலிமையை கவனித்து விடுகிறார். அதுநாள் வரையில் ஒரு ஆண் மகனால் மட்டுமே மல்யுத்தப் போட்டியில் சாதிக்க முடியும் என்று நினைத்துகொண்டிருந்தவர்  தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு தனது மகள்களுக்கு மல்யுத்த பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார். இதில் அவர்கள் எப்படி தேறுகிறார்கள், எவ்விதமான பிரச்சனைகள் குறுக்கே வ்ருகின்றன, அவற்றிலிருந்து எவ்வாறு மீளுகிறார்கள் என்பதே திரைக்கதை.

இனி கதையின் உள்ளார்ந்த விஷயங்களுக்கு வருவோம். தன் மகளை மல்யுத்த வீரராக ஆக்க நினைக்கும் தந்தை சந்திக்கும் பிரச்சனைகள், உறவினர்களின் ஏசல்  ஊர் மக்களின் ஏளனம் இவை அனைத்தும்  இது போன்ற கதையில் எதிர்ப்பார்ப்பதுதான். ஆனால் தங்கலில் கூடுதலாக, சற்றே நுணுக்கமாக காணப்பட்ட விஷயம் என்னவென்றால்  கீதா, பவிதா ஆகிய இருவரும் (மகாவீர்சிங்கின் மகள்கள்)  மல்யுத்த வீரர்களாகும் நெடிய பயணத்தில் ஒரு  ஆணின் உடல் மொழிகளை எட்ட வேண்டிய சூழல் வருகிறது , அவ்வாறு உடல் மொழியில் மாற்றங்கள் வந்த பிறகு இருவரில் கீதா அதற்க்காக  மிகவும் வருந்துகிறார். ஆனால் பிற பெண்களை அவர்களது பெற்றோர்கள் ஒரு  சக மனிஷியாக கூட பாக்காமல் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், ஆணுக்கு உரிய பொருளாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் / சமூகத்தில் தமது தந்தை தம்மை அவ்வாறு பார்க்கவில்லை என்று மெதுவாக புரிந்து கொள்கிறார்கள் . ஒரு பொருளாகவோ, ஒரு சாபமாகவோ பார்க்காமல் தங்களை ஒரு லட்சியவாதிகளாக பார்க்கும் தமது தந்தையின் பார்வை அவர்களுக்கு பிடித்துப் போக, அதுவரையில் தந்தையின் சொல்லுக்காக மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தாமாக ஈடுபட முன்வருகிறார்கள். பெண்கள் மல்யுத்தத்தில் ஈடுபடுவதை முதலில் ஏளனமாக பார்த்து ஏற்கமறுக்கும் தனியார் மல்யுத்த சம்மேளன உரிமையாளர்கள், அதை ஒரு வியாபரமாக பார்க்க ஆரம்பித்ததும் பார்வை மாறுகிறது!!!

ஒருகட்டத்தில் தேசிய சாம்பியனாக வாகை சூடும் கீதா, சர்வதேச போட்டியாளராக மாறும் போது நவநாகரீக உலகத்தை சந்திக்க நேரிடுகிறது.  மீண்டுமொருமுறை அவருக்குள்  தன்னை ஒரு மல்யுத்த வீரராக   காட்டிக்கொள்வதா இல்லை இந்த உலகம் பெண்ணுக்கு வழங்கிய அடையாளங்ளை வரித்துக்கொள்வதா என தடுமாற்றம் வருகிறது. .  மீண்டுமொருமுறை தந்தைக்கும் மகளுக்கும் இடையே போராட்டம் ஆரம்பிக்கிறது. இது அவரது விளையாட்டிலும் எதிரொலிக்க அதிலிருந்து எப்படி மீள்கிறார் என அருமையாக திரைக்கதையில் காட்டியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மகாவீர்சிங்கின் மனைவி தமது மகள்களின் உடல்மொழி, வாழ்க்கை முறை அனைத்தும் இப்படியாகிவிட்டால் அவர்களை எவன் மனந்துகொள்வான் என கேட்க்கிறார். அதற்கு மகாவீர் சிங்
“ஆணுக்கு சமமாக இல்லாமல் போனதால்தானே ஆண்கள் பெண்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது, எனது பெண்கள் ஆண்களை விட ஒரு பங்கு மேலே செல்வார்கள்! ஆகையால் யாரும் அவர்களை தேர்வு செய்யவேண்டியதிலை அவர்கள் அவர்களுக்கு வேண்டிய ஆண்களை தேர்வு செய்வார்கள் எனக் கூறும் இடம் சபாஷ்!!

சண்டைகாட்சிகள், பாடல்கள் அனைத்தும் அருமை. கீதா, பபிதா ஆகியோரின் கூந்தலை கத்திரிக்கையில் பின்னணியில் முடியை கத்திருக்கும் ஓசையை மட்டும் கேட்கும்படி காட்டியிருக்கும் விதம் அது எவ்வளவு பெரிய உளவியல் சிக்கல் சம்மந்தபட்ட விஷயம் என்பதை மனதில் பதிய வைக்கிறது. இறுதி காட்சியில் போட்டியின் முடிவு தெரியாமல் தூரத்தில் இருந்து ஒலிக்கும் தேசிய கீதத்தின் வழியே அறிந்து கொள்ளும் மகாவீர்சிங் (அமீர்கான்) கண்களில் கண்ணீருடன் ஆட்களே இல்லாத அந்த அறையில் எழுந்து நிற்கிறார், இதை தொலைக்காட்சியில் காணும் அவரது குடும்பத்தினர், அக்கிராம மக்கள் என தேசம் முழுக்க எழுந்து நிற்க்கின்றனர் !!! (சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டு இவர்களை எழுந்து நிற்க சொல்லவில்லை என்பதை வாசகர்கள் கவனிக்க!!).

கடைசியாக கதாபாத்திரங்கள்!! அமீர்கான் மகாவீர்சிங்காகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தந்தையாக குருவாக அவர் படும் வேதனையை வசனமே இல்லாமல் பல காட்சிகளில் நமக்கு காட்டிவிடுகிறார். கீதாவாக நடித்திருக்கும் பாத்திமா, பபிதாவாக நடித்திருக்கும் சயனா, குறிப்பாக சிறிய வயது கீதாவாக நடித்திருக்கும் ஜயரா வசீம் என அனைவரும் மிகவும் அருமை. இரண்டாவது கோச்சாக வரும் நபர் விளையாட்டுகென்று அரசு அமைத்திருக்கும் உயர்தர பயிற்சி பள்ளிகளில் நடக்கும் தேவையற்ற அரசியல்களையும் , உயர்வு /தாழ்வு மனப்போக்குகளையும் தனது இயல்பான நடிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளார். மற்றபடி தந்தை மகள்களின் திறத்தையும், மகள்கள் தந்தையின் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் ஓரிரு காட்சிகளை் இன்னும் சற்று அழுத்தமாக  திரைக்கதையில் காட்டி இருக்கலாம். அவற்றை ஒரு குறையாக பெரிதாக கூறமுடியாது. தனது இலட்சியத்தை மகள்கள் மீது தினிக்கும் அப்பாவாக கூட மகாவீர்சிங்கை சிலர் இத்திரைப்படத்தில் பார்க்கக்கூடும். ஆனால் கதைக்களம், மகாவீர்சிங்கின் வாழ்க்கை, அவர்கள் வாழும் சமூகம் ஆகியவற்றையும் சேர்த்து பார்த்தால் அந்த இரு பெண்களின் சாதனை நமக்கு புரியும்.

ஒரு காட்சியில் அமீர்கான் தனது மகள்களிடம் கூறுவார் “நீங்கள் போட்டியில் செய்வது ஒரே ஒரு எதிராளியுடன் செய்யும் மல்யுத்தம் மட்டுமல்ல ,பெண்களின் மீது இயலாமை எனும் சொல்லை திணிக்கும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் எதிர்த்து நீங்கள் கோடானுகோடி பெண்களின் சார்பாக நடத்தும் யுத்தம்”. நான் பார்த்த திரையரங்கில் இது போன்ற வீரியமிக்க வசனங்களுக்கு, காட்சிகளுக்கு கைதட்டல் பெரிதாக இல்லை. ஓரிரு கைத்தட்டல்களை நானே முன்னெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும் முடிவில் உண்மையான மகாவீர்சிங், கீதா, பபிதா ஆகியோரை பற்றி திரையிடுகையில் பலத்த கைத்தட்டல் வந்தது சற்றே ஆறுதலளித்தது.

இவற்றை பார்க்கையில் தங்கல் திரைப்படமும் பார்ப்பவர்களின் மனதில்  பெண்னின் மீது இருக்கும் போலியான பிம்பங்களை உடைத்தெரியும் ஒரு மல்யுத்த போட்டியையே நடத்துகிறது என்றால் மிகையில்லை.

– சீதாராமன்.

Related Posts