சினிமா தமிழ் சினிமா

டிக் டிக் டிக் . . . . . . . . . . !

இயற்கையும் அறிவியலும் எப்போதுமே எனக்குப் பிடித்தவை என்பதால், அறிவியல் புனைகதை மற்றும் பேன்டஸி படங்களை காண்பதில் ஒரு அலாதி ப்ரியம் எப்போதுமே உண்டு. மார்ஷியன், இன்டர்ஸ்டெல்லர், அரைவல் இன்னும் சில படங்கள் இந்தப் பட்டியலில் உண்டு. இன்டர்ஸ்டெல்லர் பார்த்தபின்பு தான் கிராவிட்டி பார்த்தேன் என்பதால் கிராவிட்டி எனக்கு ஒப்பீட்டளவில் இன்டர்ஸ்டெல்லரை விட பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் வரிசைப்படி கிராவிட்டியை முதலில் பார்த்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.

இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்… என உப தலைப்போடு விளம்பரம் செய்யப்பட்ட டிக் டிக் டிக் படத்தை பார்க்க பேராவலுடன் தான் நானும் இருந்தேன். படத்தில் வரவேற்கவேண்டிய மற்றும் உற்சாகப்படுத்த வேண்டிய விசயங்கள் இருந்தாலும் படம் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை.

டெக்னிக்கலாக, க்ரீன் மேட், புளு மேட்… இப்படி கிராபிக்ஸ் விசயங்களைத்தாண்டி கதை சொல்லல், கதைக்குள் விவரங்கள் சொல்லுதல் என்ற வகையில் பெருத்த ஏமாற்றம். முதலில் கல் விழுந்த குழியைப் பார்க்கும்போதே… இயக்குநர் மற்றும் ஆர்ட் டைரக்டரின் சின்சியாரிட்டி மீது கேள்வி எழ ஆரம்பித்துவிடுகிறது. அதாவது எவ்வளவோ தொலைவில் இருந்து வந்து விண்கல் விழுந்து ஏற்பட்ட குழிக்கும்… தோண்டி வைத்த குழிக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா… அந்த பள்ளத்தை சுற்றிலும் தோண்டி மண் வெளியே இழுத்த சுவடுகள் அப்பட்டமாக தெரிகிறது… அதோடு கல் உருண்டையாக இருக்கிறது… சின்னதாக இருக்கிறது… கல்லைவிட குழி பெரியதாக இருக்கிறது… சரி எரிகல் எரிந்து விட்டது என்றாலும்… நீங்கள் அந்தக்காட்சியை பாருங்கள். கல் நேராக மேல் இருந்து கீழ் வரவில்லை. ஒரு அபார்ட்மெண்டுக்குள் புகுந்து சரிவாக கிடைமட்டமாகவே வருகிறது… ஆனால் தோண்டி வைக்கப்பட்டிருக்கும் குழி… நேராக செங்குத்தாக விழுந்ததுபோல தோண்டி வைக்கப்பட்டுள்ளது. என்னடா குழி பற்றி இவ்வளவு பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். இயக்குநர் மற்றும் அவரது குழுவினரும் ஆர்ட் டைரக்சன் குழுவினரும் இதற்கு விளக்கம் சொன்னால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

ஒரு அறிவியல் கதையில், கதையோடு சம்பந்தப்பட்ட நிறைய அறிவியல் தகவல்களை தரவேண்டும். இந்தப்படம் அப்படி எந்த அறிவியல் தகவலையும் தந்தது போல தெரியவில்லை. அதிலும் ஜெயம் ரவி, விண்வெளியில் இருந்தபடியே இஷ்டத்துக்கு ஏதேதோ கதவு திறந்து எங்கெங்கோ விண்வெளிக்கப்பல்களுக்குள் ரொம்ப சாதாரணமாக போகிறார். வருகிறார். பூமியில் போலிஸ் ஸ்டெசன் டெக்னிக்கையே விண்வெளியிலும் பயன்படுத்தி அவ்ளோ ஹைடெக் விண்வெளிக்கப்பலில் இருக்கும் ஏவுகணையை மறைக்கிறார். ப்ப்ப்பா ஆஆஆ.

வேறெவரிடமும் இல்லாத அபூர்வமான 200 டன் ஏவுகணையை உலக நாடுகள் யாருக்கும் தெரியாமல் விண்வெளியில் மறைத்துவைக்கும் தொழில்நுட்ப வல்லமை பொருந்திய அந்த நாடு…. வெறுமனே வாய்ப்பேச்சு பேசி… ராமராஜன் காலத்து ஃபைட் பண்றவங்களையா பாதுகாப்புக்கு வைக்கும்… ஆங்கிலமே தெரியாத ஜெயம் ரவி…. அசால்ட்டாக வால்ட்டுகளை திறப்பதெல்லாம் ஸ்ஸ்ஸ்ஸப்பா கேட்டகிரி தான். அதோட இந்த ரிச்சி ஸ்ட்ரீட் ஹேக்கர்ஸை இதோட நிப்பாட்டிக்குங்கப்பா… இதுக்கு மேல அவங்க அறிவாளிகள்னு காட்ட… இந்த டிக் டிக் டிக் படத்தைத் தவிர வேற எந்த சாட்சியும் தேவை இல்ல. அதுவும் அம்மாம் பெரிய இஸ்ரோ சயிண்டிஸ்டுகளுக்கெல்லாம் தெரியாத வித்தை… ரவிக்கும் ரமேசுக்கும் அர்சுனுக்கும் தெரியும்னு காட்டுறதெல்லாம் இந்தியாவுக்கு எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா? கேட்டா இது தேசப்பற்று படம்னு வேற கொடி பிடிப்பீங்க? நல்லா பிடிங்க.. பிடிங்க…

கடைசியில் விண்வெளிக்கப்பல் வெடித்துச்சிதறும்போது தப்பிக்கும் இவர்கள் விழும் இடத்திற்கு அட்வான்சாகவே ஆபிசர் உள்பட பெரும்படை வந்து வரிசை கலையாமல் கொட்டும் மழையில் காத்திருப்பததெல்லாம் சினிமா சினிமா சினிம்ம்ம்மா. மூணாரில் இருக்கும் ஒரே ஒரு விஞ்ஞானி குழுவினரே அனைத்தையும் கையாள்வதும் நம்பத்தகுந்ததாக இல்லை.

இன்னும் நெறைய இருக்கு… இந்த மாதிரி பட்டியல் போட…. வேண்டாம்.

புதுமையான படங்களை நிச்சயமாக வரவேற்க வேண்டும். ஆனால்அறிவியல் கதைக்கான எந்த கனமும் கனமான திரைக்கதையும் விவரங்களும் இல்லாத ஒரு படத்தை முழுமையாக கொண்டாட முடியாது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கும் கிண்டி மேம்பாலத்துக்கும் போயிட்டு வர மாதிரி துருவா 1க்கு துருவா 2 பெட்ரோல் கொண்டு போறதெல்லாம்…. ஙே…… ஏன்னா பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் (3,84,400 km) 3 இலட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்.  அதாவது மங்கள்யான் போற வேகத்துல (செகண்டுக்கு 16 கிலோமீட்டர்) போனா கூட பூமியில் இருந்து நிலாவுக்கு எவ்ளோ நேரத்துல போய் சேரலாம்னு கணக்கு போடுறதுக்கே எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. இதே மாதிரி ஒரு அறிவியல் படம் எத்தனையோ உண்மைக்கு நிகரான விசயங்களை படம் பார்க்கும் ரசிகனுக்கு சொல்ல முடியும். ஆனால் இது எதையுமே பற்றி இயக்குநர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

முன்னரே சொன்னது போல இந்த படத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை கொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள் அதற்காக நிச்சயமாக பாராட்டுவோம். அந்த தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக மற்றவர்கள் பயன்படுத்த அந்த நிறுவனமும் இந்த படத்தின் கிராபிக்ஸ் நுட்பத்தை கையாண்டவர்களும் உதவி செய்யலாம்.  ஆனால் அதற்காக மட்டுமே இந்தப்படத்தை கொண்டாட முடியாது. அப்படிப்பார்த்தால் மாற்றான் படத்தை விட இது பெரிதாக எனக்குத் தெரியவில்லை. கிராபிக்ஸ் என்ற வகையில் பாகுபலியுடன் இந்த படத்தை ஒப்பிடவே முடியாது. அது பலமடங்கு பெரிய கிராபிக்ஸ் வேலை நிறைந்த படம். பேராண்மை படத்தின் கதையும் திரைக்கதையும் இறுதி நேர பரபரப்பும் டிக் டிக் டிக் படத்தை விட பலமடங்கு பரபரப்பாக இருந்தது.

எனவே டிக் டிக் டிக் எதிர்பார்க்க வைத்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதிர்பார்ப்பை பாதியில் பாதி கூட நிறைவேற்றவில்லை என்பதே என் அளவில் உண்மை. படத்தை அநேகம் பேர் கொண்டாடும்போது மாற்றுக்கருத்துகளை தவிர்க்கலாம் தான். ஆனால், அப்படி மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் போனால்… டிக் டிக் டிக்… தமிழ் சினிமாவின் அதி அற்புதமான விண்வெளித்திரைப்படம் என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிடும். அது தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக இதுபோன்ற படங்களை உருவாக்க நினைப்பவர்களுக்கும் நல்லதல்ல என்பதற்காகவே இப்படி எழுத வேண்டியதாயிற்று.

படத்தின் பின்னணி இசை, கதைநாயகனும் கதைநாயகனும் கடைசி வரை காதலிக்கவில்லை… என்பது போன்ற படத்தில் இருக்கும் சில நல்ல விசயங்களை எல்லா விமர்சனங்களிலும் நீங்கள் பார்க்க கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதால் அது பற்றி நீளமாக சிலாகிக்கவில்லை. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜே.பி. போன்ற நடிகர்கள் எல்லாம் இன்னும் சிறப்பாக தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்த கதையிலோ திரைக்கதையிலோ இடமில்லை என்பதால் அவர்களுக்கு கொடுத்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் என்னை ரொம்ப சிரிக்க வைத்தது சகோதரன் கார்க்கியின் பாடல் வரிகள் சில. டிக் டிக் டிக் டைட்டில் டிராக் பாடலின் இடையில் வருகிறது அந்த வரிகள். மனிதர்களாகிய நம்மை தாறுமாறாக கலாய்க்கிறது அந்த வரிகள்.

 

நமக்கென

பல போர்கள் இருக்கையில்

வெளியிருந்தொரு

விண்கல் வருவதா?

 

அதை உடைத்திடு

கதவடைத்திடு

பின் நாம் போரிடுவோம்.

 

மொழி மத இன

பேதம் இருக்கையில்

நமை அழித்திட

வானம் விழுவதா?

 

அதை தடுத்திடு

கதை முடித்திடு

பின்னே நாம் அழிவோம்…

 

ஆஹா… ஹா ஹா….

ஒரு கலைஞன் சமூகத்தின் அவலங்களை பிற்போக்குத்தனங்களை கிண்டல் செய்வதில் சளைக்காதவனாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்பாடலில் சளைக்காமல் மிக சிறப்பாக மனித இனத்தை பகடி செய்துள்ளார் சகோதரன் கார்க்கி. வாழ்த்துகள் சகோ. மொழி, மத, இன பேதம் இருக்கையில்… என்ற வரியில் சாதியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான். சமீபத்தில் திரைப்பாடலில் நான் ரசித்த ஆகச்சிறந்த பகடிகளில் இதுவும் ஒன்று.

 – முருகன் மந்திரம்

 

Related Posts