கலாச்சாரம்

டப்பர் வேர் தயிர்க்காரி …

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு வேலையாக இருந்தேன். மிர்னி, ஒரு டப்பர்வேர் பாத்திரத்தில் இருந்த தயிரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தயிரு வேணுமா தயிரு…தயிரு வேணுமா தயிரு…என்று கூவியபடியே என்னருகில் வந்தாள்.

எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எனக்கும் தயிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது. அது இருபத்தைந்து வருடத்திற்கு முந்தய தொடர்பு. அந்த தொடர்பை ஒரே நொடியில் என் ஞாபகச் சிறையில் இருந்து மீட்டெடுத்து விட்டாள்.

எனக்கு பத்து வயது. அப்போது என் தாத்தா பால் அறவை மெஷின் வைத்திருந்தார். சுமார் இருபது பேர் அவர்கள் வீட்டு எருமைகளில் இருந்து கறந்த பாலை எங்கள் பால் மெசினுக்கு கொண்டுவருவார்கள். அதை தாத்தா அறைத்து கிரீம் தனியாக பால் தனியாக பிரித்தெடுப்பார். அந்த கிரிமின் அளவுக்கேட்ப அவர்களுக்கு தாத்தா பணம் கொடுப்பார்.

அரைத்த பாலை காய்ச்சி தயிர் ஊற்றி வைத்துவிடுவார். தினமும் இரண்டு டின் கிரீமும் ஐந்து ஆறு டின் தயிரும் தயாராக இருக்கும்.அதை சைக்கிளில் கட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு போய் விற்று வருவார். அரை டின் தயிரை மட்டும் வீட்டில் வைத்து விட்டு சென்று விடுவார்.

தினமும் என் அப்பத்தா காலை ஆறு மணிக்கு என்னை படுக்கையில் இருந்து எழுப்பி விடுவார். ஒரு சும்மாடு கூட்டி தலையில் வைத்து ஒரு தயிர் நிறைந்த பாத்திரத்தை அதன் மேல் வைத்து கையில் ஒரு டம்ளரை கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கள் ஊரில் “சீப்புக்கார தெரு” என்று ஒரு தெரு இருக்கிறது. ஏழை மற்றும் தலித் மக்கள் வாழும் தெரு அது. அந்த தெருவுக்கு தயிரை தலையில் சுமந்து கொண்டு செல்வேன். தயிரு…தயிரு… என்று கூவிய படியே ஒவ்வொரு வீடாகச் சென்று விற்பனை செய்வேன்.

ஒரு டம்ளர் தயிர் இருபது பைசா. ஒரு மணி நேரத்தில் தயிர் முழுதும் விற்று தீர்ந்துவிடும். ஒரு நாளைக்கு சுமார் மூன்று ரூபாயுக்கு தயிர் விற்பனை ஆகும்.அந்த காசை என் தாத்தாவிடம் அப்படியே கொடுத்துவிடுவேன்.

அந்த தெரு மக்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் குறைந்த விலையில் தயிரை கொடுக்கிறோம் என தாத்தா சொல்வார். யாராவது காசு இல்லை நாளை தருகிறேன் என்று சொன்னால் சரி என்று வந்து விட சொல்வார்.

அவர்களாக எப்போது காசு கொடுக்கிறார்களோ அப்போதுதான் வாங்க வேண்டும் நீயாக கேட்க கூடாது என்று சொல்வார்.நானும் அப்படியே செய்துகொண்டிருந்தேன்.

சுமார் நான்கு வருடம் தினமும் காலையில் எனக்கு அந்த தெருவில் தயிர் விற்பதே முதல் வேலையாக இருந்தது.

பின்னர் பால் மெசினில் வேலை பார்த்த ஒரு அண்ணன் அந்த வேலையே தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

இது என் தாத்தா காலமாகும் நாள் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

தாத்தா இறந்த அன்று அந்த தெருவே திரண்டு வந்தது. இனி எங்களுக்கு எந்த மகராசன் தயிர் கொடுப்பார் என்று சொல்லி கதறி அழுதது என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

————

தயிரு வேணுமா ? தயிரு என்று கேட்டு வந்த மிர்னியிடம்,

தயிர் வேணும் மிர்னி. என்னவிலை? என்றேன்.

“டென் ருபீஸ் டாடி”… என்றாள்.

என்கிட்ட அவ்வளவு பணம் இப்ப இல்லையே மிர்னி…என்றேன்.

பரவால்ல டாடி, உங்ககிட்ட எப்ப இருக்கோ அப்ப கொடுங்க போதும் என்றாள்.

“அடுத்த கணம் என் தாத்தா சொன்ன அதே வார்த்தைகள், என் மகளின் வாயிலிருந்து வந்ததைக்கண்டு என் கண்களில் நீர் வழிந்தது”.

அம்மா……டாடி அழறாரு இங்க வாங்க…. என்று சமையலறை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் மிர்னி.

Related Posts