பிற

ஜே.என்.யு கல்வி நிலையம் மட்டுமா?

ஊடகங்களில் எல்லாப் பரிமானங்களும் அலசப்பட்டு விட்டது. கருத்துரிமைக்கானப் போராட்டத்திற்கும் மற்றும் கருத்துக்களை ஒடுக்க நடக்கும் பாஜக ஆட்சியாளர்களுக்கு இடையில், ஒரு தொடர் கதையாக நீடிக்கும் வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தான் இசைக்கலைஞர் குலாம் அலி நிகழ்ச்சியை, சிவசேனா குழுவினரின் எதிர்ப்புக்கு அஞ்சி ரத்து செய்ததாக பாஜகவின் மாநில ஆட்சியாளர்கள் கூறினர். இதனுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பாஜகவைச் சேர்ந்த குல்கர்னி மீது கருப்பு சாயம் ஊற்றல், ஆகியவையின் போது கிடைத்த வெற்றி செருக்கு, கல்புர்க்கி கொலையின் போதும் நியாயப்படுத்தப் பட்டது.

இந்த நியாயப் படுத்தல் காரணமான திமிர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை, ஜே.என்.யு பல்கலைக் கழக மாணவர்கள் மீது தேசத் துரோக முத்திரை குத்தவும், ஒட்டு மொத்த கருத்து உரிமையைப் பறிக்கிற செயல்களுக்கும், துணை செய்திருக்கிறது. தற்போது தலையை வெட்டி காலடியில் வைக்கிறேன், என்று சினிமா வசனம் பேசுபவராக, முன்னாள் சின்னத்திரை நாயகி, மனித வளத்துறை அமைச்சர், ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில், ஆவேசமாக காட்சி அளிக்கிறார். எல்லா நிலைகளிலும் ஒரு மௌன சாமியாராக பிரதமர் மோடி காட்சியளிக்கிறார்.

JNU_Admin-jawaharlal-nehru-university

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள், ராஜ்நாத் சிங் அனுப்பிய காவல் துறை, தேசம் என்ற பெயரில், மக்களை அவர்களின் உரிமைக்கு வெளியே நிறுத்தி உள்ளது. ஒன்று இந்த செயல்கள் பாசிச சக்திகளுக்கு கை வந்த கலை. இரண்டு ஜே.என்.யு மீது தனக்கு இருந்த வெறுப்பை வெளிப்படுத்தி, ஒடுக்க காரணம் தேடிக் கொண்டிருந்த நிலையில், போலியான காரணங்கள், பாசிச சக்திகளால் ஜோடிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு வக்கிரங்களும் ஒரு சேர, பாஜகவின் ஆட்சியில், ஜே.என்.யு மானவர்கள் மீது அரங்கேற்றப் பட்டுள்ளது.

பெண் எதிர்த்தால், பாலியல் புகார் அளித்து விபச்சாரி முத்திரையை குத்து, ஆண் என்றால் தேச துரோகி வழக்கு பதிவு செய்து, அவர்களை பொது வெளியில் இருந்து தனிமைப் படுத்து, என்ற அணுகுமுறை பாசிச அமைப்புகள், கால காலமாக நிறைவேற்றி வருவதாகும். இன்று அதை அறிவு சார் ஆராய்ச்சி மானவர்கள் நிறைந்த, இந்தியாவிற்கு முன்னுதாரணமாக விளங்கும், கல்வி நிலையமான, ஜே.என்.யு மீது, பாஜக பிரயோகம் செய்துள்ளது.

கல்வி நிலையங்களைக் கைப்பற்றுவது:

இந்துத்துவா நிகழ்ச்சி நிரலில், அகண்ட பாரதம் முதன்மையானது. அதற்கு சமூகத்தின் மீது கற்பித்தல் செய்வது கருத்துருவாக்கத்தின், மையமாக இருக்கிறது. எனவே தான் பாஜக மற்ற அரசியல் கட்சிகளின் ஆட்சியில் இல்லாத செயலான கல்வித் துறை மீது கூடுதல் தலையீட்டை செய்து வருகிறது. வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், பண்பாடு சார் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற கடும் முயற்சிகளை கடந்த காலங்களில் எடுத்திருக்கிறது.

மாநில ஆட்சியைக் கைப்பற்றிய போது, ராஜஸ்தான், குஜராத், ம.பி, ஆகிய மாநிலங்களில் வரலாறு, சமூக அறிவியல், கணிதம் ஆகியவற்றில் இந்துத்துவா கருத்துக்களை திணித்து பள்ளி மாணவர்களுக்கு போதித்தது. மேகுறிப்பிட்ட ஆராச்சி நிறுவனங்களைக் கைப்பற்றுதல் மற்றும் பாடத்திட்ட மாற்றங்களின் போது, பாஜக அம்பலப்படுத்தப் பட்டது, ஜே.என்.யு பல்கலைக் கழக பேராசிரியர்கள் மூலம் ஆகும். இப்பல்கலைக் கழக மாணவர்கள், இந்துத்துவாவின் நோக்கங்களை அம்பலப் படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

இந்தப் பின்னணியில் இருந்தே, ஜே.என்.யு மீது இன்றைய பாஜக ஆட்சி தொடுத்துள்ள தாக்குதலைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தில் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை கைப்பற்ற எடுத்த முயற்சியில், சுமித் சர்க்கார் மற்றும் கே.என். பணிக்கர் ஆகியோர் பாதிப்பிற்கு உள்ளாகினர். அப்போது அறிவார்ந்த சமூகம் திருப்பித் தாக்கியதில், பாஜக வின் முயற்சி தள்ளி வைக்கப் பட்டது. இந்த அறிவார்ந்த சமூகம் முழுவதும், இடதுசாரிகள் அல்ல. ஆனால் இடதுசாரி சிந்தனையாளர்களால் அணி திரட்டப்பட்டனர்.

இதேபோல் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றின், வரலாறு மற்றும் சமூக அறிவியல் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தீவிர பங்களிப்பு செய்தனர். இன்றும் கூட பாஜக ஆட்சியின் வகுப்புவாதக் கொள்கையை அம்பலப்படுத்தும் அறிவுசார் மையமாக இவை விளங்குகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், மனித வளத்துறையின் ஆளுகையில் செயல் பட்டு வரும் நிறுவனங்களாகும்.

அன்று பாஜக ஆட்சியில் இருந்தாலும், அதற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இன்று தனிப்பெரும்பான்மை இருப்பது பாஜக வின் இந்த அடக்கு முறை மேலோங்கி இருப்பதற்கு, முக்கிய காரணம் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

கன்னையா குமார் என்ன செய்தார்?:

பல்கலைக் கழகத்தில் எந்த ஒரு குழுவும், இந்தியாவிற்கு எதிரான முழக்கம் எதையும் முன் வைக்கவில்லை. ஜீ டி.வி வெட்டி, ஒட்டி ஒளிபரப்பு செய்தது, என்பது இன்று முன்னுக்கு வந்துள்ள முக்கியமான செய்தியாகும். பொதுவாக ஜே.என்.யூ பல்கலைக் கழகம் அனைத்து வித தனிநபர் உரிமைக்கும் வழிவகை செய்துள்ள, ஒரு நிறுவனம். இங்கு தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இப்பல்கலைக் கழகத்தில், வேலூர் சிறையில் உள்ள தூக்கு தண்டனைக் கைதிகள் விடுதலைச் செய்யப் பட வேண்டும், என்ற கருத்தை முன் வைத்து, தமிழ்நாட்டு மாணவர்கள், கருத்து பிரச்சாரம் செய்த போது, மார்க்சிஸ்ட் கட்சி மீது அவர்கள் அன்று கொண்டிருந்த நிலைக்காக, கருத்து ரீதியாக தாக்குதல் தொடுத்தனர். இடதுசாரிகள் அதை கருத்து ரீதியாக மட்டுமே எதிர் கொண்டனர். எந்த ஒரு வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை.

இடதுசாரிகளால் எதிர் கொள்ள முடிந்த கருத்துப் போராட்டத்தை, பாஜகவால் ஏன் எதிர் கொள்ள முடியவில்லை. பாஜகவின் ஏபிவிபி, ஜே.என்.யுவில் தொடர்ந்து இயங்கினாலும், மாணவர் பேரவையின் தலைமை பொறுப்பிற்கு ஓரிரு முறை தவிர மற்ற எப்போதும் தேர்ந்தெடுக்கப் பட்டதில்லை. பெரும்பாலான காலங்களில் வளாகத்தில் இதர பகுதி மாணவர்களிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளனர். இதேபோல் தான் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ அமைப்பும் பெரும்பாலான காலங்களில் தோற்கடிக்கப் பட்டது. ஆனால் இடதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளனர். இது பாஜக தனது தனிப்பட்ட தோல்வியாக கருத இடம் அளிக்கிறது.

எஸ்.எஃப்.ஐ, ஏ.ஐ.எஸ்.எஃப், ஏ.ஐ.எஸ்.ஏ ஆகிய இடதுசாரி மாணவர் அமைப்புகள் மாணவர் பேரவையில் பெரும்பாலான ஆண்டுகளில் பொறுப்புகளில் இருந்துள்ளனர். இது மாணவர்களின் வளர்ச்சியில் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் காரத் மாணவர் பேரவைக்கு தலைமை ஏற்ற போது, மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இடம்பெறுவதற்கானப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதன் விளைவே அன்று, வசதியானவர்கள் மட்டுமே சேர முடிந்த ஜே.என்.யூ வில் இன்று சாதாரன குடும்பத்தின் மாணவர்கள் கூட சேர முடிந்துள்ளது.

சீத்தாராம் யெச்சூரி, இந்த பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவராக இருந்த போது தான், அஸ்ஸாம் தீவிரவாதம், பஞ்சாப் பிரிவினைவாதம், திரிபுராவில் பிரிவினைவாதம், காஷ்மீர் பிரிவினைவாதம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. இதில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் முக்கியப் பங்காற்றியது. மாணவர்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டது அரங்கேறியது. இந்த அடிப்படையில் வந்தவர் தான் கன்னையா குமாரும். அவர் எப்படி பிரிவினைவாத குரல் எழுப்பி இருப்பார். இதற்கான மூல ஆதாரம் எதுவும் இல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டிருந்த தேசதுரோக வழக்கை, பதிவு செய்ய முடிகிறது.

ஆனால் பாஜக இது போல் எந்த ஒரு மாநிலத்திலும், பிரிவினைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்பலி கொடுத்ததில்லை. மாறாக பஞ்சாபில் அகாலிதளத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அஸ்ஸாமில் அசாம் கனபரிசத் கட்சியுடன், இதர வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினை முழக்கம் இட்ட அமைப்புகள் அனைத்துடனும், பாஜக தேர்தல் உடன்பாடு கொண்டுள்ளது. இந்த விவரங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில், கம்யூனிஸ்ட்டுகளை, தேசதுரோகிகள் என குற்றம் சாட்டுவது, பாசிச வேடிக்கை ஆகும்.

ஜே.என் யூவின் பாரம்பரியம்:

1984 அக்டோபர் 31ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபோது, சீக்கியர்கள் பல ஆயிரம் எண்ணிக்கையில் டில்லி வீதிகளில் கொல்லப்பட்டனர். அன்றைய தினத்தில் தஞ்சம் புகுந்த, சீக்கியர்களை ஜே.என்.யூ மாணவர்கள் அடைக்கலம் தந்து, உயிர் பாதுகாப்பு தந்தனர். இந்த செய்தியில் உயிருக்காகப் போராடும் மனிதனுக்கு மனிதாபிமான உதவி என்பது முன்னுக்கு வருகிறது. அரசியல் அல்லது அடையாளங்கள் தோற்று போய் உள்ளது என்பதே உண்மை.

அதுவே இன்று வரை நீடிக்கிற செய்தி கொண்டதாக ஜே.என்.யு விளங்குகிறது. இது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாத, பாஜக மாணவர்கள் மீதும், அறிவார்ந்த சமூகம் மீதும் அவர்கள் முன் வைக்கும் விமர்சனத்திற்காகத் தாக்கப்படுகின்றனர். இதில் கன்னையாகுமார் என தனி ஒரு மனிதனாகவோ, ஒரு மாணவர் மீது தானே தேச துரோக வழக்கு, என குறைத்து மதிப்பிடவோ கூடாது. அப்படி குறைத்து மதிப்பீடு செய்வது, இந்தியாவின் எதிர் காலத்தை பாதிக்கும். இந்துத்துவா சக்திகளும் அத்தகைய குறைவான மதிபீட்டை செய்ய வேண்டும் என்றுதான் எதிர் பார்க்கிறது.

இந்நிலையில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. இடதுசாரிகளும், மதசார்பற்ற ஜனநாயக சக்திகளும் வகுப்புவாத பாசிச சக்திகளின் செயலை, அறவே தடுத்திட வலுவான மக்கள் அமைப்பைக் கட்டமைப்பது அவசியம் ஆகும்.

எஸ். கண்ணன்.

Related Posts