I <<< முதல் பகுதி I அடுத்த பகுதி >>> I
தமிழக வரலாற்றுச் சூழலில் திராவிட இயக்கத்தின் தோற்றத்தையும் அதன் இன்றியமையாத தன்மையையும் ஆய்வு செய்யாமல் அதற்குள் முரண்பாடு தோன்றி முற்றி அதன் அடிப்படை விஷயங்களை மறுதலித்து அது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றதை மதிப்பீடு செய்ய முடியாது. அதன் ஒரு கட்டமான ஜெயலலிதாவையும மதிப்பிட முடியாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய தென்னிந்தியர் நலஉரிமை சங்கமானது நீதிக்கட்சியாக மாறியதை இந்த இயக்கவியல் விதிகளின் வாயிலாக விளக்க முடியும். நீதிக் கட்சியானது திராவிடர் கழகமாக மாறியதை இந்த இயக்கவியல் விதிகளின் வாயிலாக விளக்க முடியும். திராவிடர் கழகமானது திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியதையும் இந்த இயக்கவியல் விதிகள் கொண்டு விளக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியதையும் இந்த இயக்கவியல் விதிகள் கொண்டு விளக்க முடியும். அஇஅதிமுக-விற்குள் எற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தலைமை மாற்றங்களையும் இயக்கவியல் விதி கொண்டு விளக்க முடியும். இப்படியெல்லாம் சொல்கிறபொழுது எதுவுமே தற்செயலாக நடக்கவில்லையா அல்லது ஏதோ ஒரு விதியின் அடிப்படையில் நடந்தேறுகின்றனவா என்கிற கேள்வி எழுகிறது. ஆம் அனைத்தும் தற்செயலாக நடைபெற்றவைதான் அந்த தற்செயல்கள் இன்றியமையாததின் வெளிப்பாடுகளே. முரண்பாடுகள் முற்றியே இன்றியமையாதவைகள் தோன்றுகின்றன. முரண்பாடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை அவை முற்றுவதும் கண்ணுக்குத் தெரிவதில்லை அது தோற்றுவிக்கும் இன்றியமையாத சூழலும் கண்ணுக்குத் தெரிவதில்லை அது தற்செயலாக வெளிப்படுவது மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரிவதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு முடிவெடுத்தால் அது தவறு.
இந்தியாவில் முதலாளித்துவம் அடியெடுத்து வைத்ததையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளை புரட்டிப் போடும் வேலையை முதலாளித்துவம் செய்யும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. அப்படிப் புரட்டிப் போடும் வேலையை செய்யும் ஏஜெண்டுகளாக சமூகமட்டத்தில் ஒரு கூட்டம் மெல்ல மெல்ல உருவாக வேண்டும். அக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற்று பழைய சமூக உறவுகளுக்கு எதிராக போராடும். இந்த நிகழ்வு போக்குகள் 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழகத்தில் நடைபெற்றது. பிரிட்டிஷ் வந்தது வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் தொழிற்சாலைகளை அமைத்ததும் அதற்காக அடித்தளமிட்டதும் வெளிப்படையாக தெரிகிறது. தொழிற்சாலை அமைப்புகள் என்பது முதலாளித்துவ உற்பத்திமுறையின் அடிப்படை அங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தோன்றியதும் வெளிப்படையாக தெரிகிறது. அது பிராமணர் அல்லாதவர்களுக்கு சமூக நிறுவனங்களில் உரியஇடம் கோரியதும் வெளிப்படையாக தெரிகிறது. அதன் கோரிக்கைகளை வலுவடைவதும் வெளிப்படையாக தெரிகிறது. தென்னிந்தியர் நலஉரிமை என்ற பெயரிலிருந்து நீதிக்கட்சி என்ற பெயர் மாற்றம் நடைபெற்றதும் வெளிப்படையாக தெரிகிறது. சமத்துவம் என்ற கோஷத்திற்கு தோதான பெயராக நீதிக்கட்சி என்பது விளங்குகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். பிராமணர் அல்லாதவர்கள் எந்த சமூக நிறுவனங்களிலும் இடம்பெறாத நிலைமை என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையில் விளைந்த பண்பாடு என்பதும் தெரிகிறது. இப்பண்பாடு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதாவது சமத்துவம் என்ற கோட்பாடு உள்ளடக்கம் பெற்ற கோரிக்கையை நீதிக்கட்சி முன் வைத்தது. இந்த இரண்டு நிகழ்வுப் போக்குகளும் ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லதாவை அவை தனித்தனியே தற்செயலாக நடைபெற்றவை என்று கூறுவதில்தான் சிரமம் உள்ளது.
சமத்துவம் என்ற கோட்பாடு முதலாளித்துவ கோட்பாடு. இது தொழிலாளர்களை சமமாக சுரண்டும் உரிமை என்ற உள்ளடக்கத்துடன் கூடிய “அனைவரும் சமம்“ என்ற முற்போக்கான உருவமுடையது. இங்கு உருவமும் உள்ளடக்கமும் என்ற எதிரெதிர் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இதுவும் இயக்கவியல் விதிதான். உள்ளடக்கத்தைப் பார்க்காமல் உருவத்தை மட்டும் பார்த்தால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாடுதான் முதலாளித்துவ சமத்துவக் கோட்பாடு. நான் இப்படிச் சொல்லும் பொழுது தொழிற்சாலைகள் அமைவதையோ, முதலாளித்துவம் என்ற பேரரக்கன் வராமல் அதற்கு முந்தைய நிலப்பிரத்துவம் என்ற அரக்கன் இருக்கட்டும் என்றோ கூறிவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலாளித்துவ கோஷமான சமத்துவத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உருவம்-உள்ளடக்கம் என்ற முரண்பாட்டில் உருவம் எனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் உள்ளடக்கமான சமமாக சுரண்டும் உரிமையை கோரும் மூலதனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக நான் சமத்துவத்தை நிராகரிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
முதலாளித்துவ நிறுவனங்கள் தோன்றுவதும் அது நிலைபெறுவதும் அது முன்னோக்கிச் செல்வதும் இயக்கவியல் விதிகளின்படிதான் நடந்தேறுகிறது. முரண்பட்ட இருஅம்சங்களை கையாளும் முதல்விதியில் எதிரும் புதிருமான இரண்டு விஷயங்களில் ஒன்று வெகுமக்களுக்கோ தொழிலாளர் வர்க்கத்திற்கோ நல்லதைப் பேசினால் மற்றொன்று அதற்கு நேர் எதிரானதாக இருக்கும். இவையிரண்டும் பிரிக்க முடியாதது. தொழிலாளி வர்க்க நலன் என்ற அம்சத்தில நங்கூரமிட்டு அது தொழிலாளி வர்க்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷயத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தொழிலாளி வர்க்கமும் அதற்கு நலம் பயக்கும் விஷயத்தில் நங்கூரமிட்டு அதற்கு எதிரான விஷயத்தை அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான விஷயத்தை முன்னெடுத்துச் செல்லும். இந்த தள்ளுமுள்ளு எப்பொழுதுமே அடிநீரோட்டமாக நடந்து வருகிறது.
தமிழக பொருளாதார-சமூக-அரசியல் வளர்ச்சிப் போக்கின் இயக்குனராக முதலாளித்துவ உற்பத்திமுறை தற்பொழுது இருந்து வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்குள் நடைபெறும் மாற்றங்களே மேல்மட்டத்தில் பொருளாதார-சமூக-அரசியல் வளர்ச்சிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படிக் கூறுவதால் மற்ற உற்பத்தி முறைகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலாளித்துவ உற்பத்தி முறையே சமூக உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்திமுறையாக இருப்பதாலும், நாட்டில் நடைபெறும் சமூக உற்பத்தியில் கணிசமான அளவு முதலாளித்துவ உற்பத்திமுறையின் வாயிலாகவே நடைபெறுகிறது என்பதாலும் நமது நாட்டில் நடைபெறும் பொருளாதார-சமூக-அரசியல் வளர்ச்சிப் போக்கை தீர்மானிப்பது முதலாளித்துவம் என்கிறேன்.
விடுதலைப் போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிறகு வந்த காலத்திலும் தமிழகத்தின் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிடுவதற்குமுன் தமிழகத்தின் சமூக உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிட வேண்டும். 19ம் நூற்றாண்டின் மையப்பகுதிவரை ஒருமுழுமையான நிலப்பிரபுத்துவ சமூகமாக இந்திய சமூகம் இருந்தது. இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. பிரிட்டிஷ் ஆட்சி கொணர்ந்த தொழில் முனைவு தமிழகத்திற்குள்ளும் வந்தது. இலாபத்திற்காக உற்பத்தி, உபரி உற்பத்தி, மீண்டும் மீண்டும் உற்பத்தி, உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கிவந்து நடைபெற்ற உற்பத்தி என்று முதலாளித்துவ உற்பத்திமுறை இங்கும் அங்குமாக ஏற்பட்டது. ஐரோப்பாவில் ஏற்பட்டது போன்று கைவினைஞர்கள் சிறு தொழிலுக்குள் உள்வாங்கப்படுவது, அது பட்டறைத் தொழிலாக மாறுவது, பட்டறைத் தொழில் ஆலைத்தொழிலாக மாறுவது, ஆலைத்தொழில் நவீன தொழிற்சாலையாக மாறுவது என்ற படிநிலை வளர்ச்சிப் போக்கிற்கு இந்தியாவில் அவசியம் இல்லை. அதற்காக இந்த அனைத்து கட்டங்களும் முற்றிலுமாக இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறமுடியாது. ஆங்காங்கே திரட்டப்பட்ட மூலதனத்திற்கு ஏதுவாகவும் உருவாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்திற்கு ஏதுவாகவும் இக்கட்டங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தது. ஆனரல் இது ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சிபெற்று நவீன ஆலைத்தொழிலாக பரிணமிக்கவில்லை. நவீன ஆலைத் தொழில் முதல், பட்டறைத் தொழில்வரை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இங்கே பார்க்க முடியும். ஐரோப்பா மாதிரி ஒன்று அழிந்து மற்றொன்று உருவாவது போல் இங்கு முதலாளித்துவ உற்பத்தியமைப்பு வளர்ச்சி பெறவில்லை.அதேபோல் முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மேல் கட்டப்பட்டதல்ல. முரண்பட்டிருந்தாலும் இரண்டும் அருகருகே இருக்கத்தான் செய்தன. பூகோளத்தின் ஒரு துணுக்கில் உருவாளாலும் அது கிளைபரப்பி ஒட்டுமொத்த பூகோள உருண்டை முழுவதும் வியாபிக்குத் தன்மையுள்ளது முதலாளித்தவம் என்று ஏங்கெல்ஸ் கூறியதை மறந்துவிடக் கூடாது. வில்லும் அம்புகளுடன் உள்ள மிகப் பெரும் சேனைக்குள் தானியங்கி துப்பாக்கியுடன் செல்லும் ஒரே ஒரு போர்வீரன் போன்றது முதலாளித்துவம்.
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் அதாவது மூலதன திரட்டல் போக்கில் உற்பத்தியமைப்பு முறையானது நவீன ஆலைத்தொழிலை நோக்கி செல்வது என்பது தவிர்க்க முடியாதது. முதலாளித்துவ வளரச்சியில் வளர்ச்சியடைந்த உலகில் பெரும்பகுதி நவீன ஆலைத்தொழில் வடிவத்தில்தான் இப்பொழுது இருக்கிறது. ஒரு வளர்ச்சிப் போக்கின் விளைவாக அங்கே வந்தது என்றால், அதே வளர்ச்சிப் போக்கின் விளைவாக இங்கேயும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த நவீன ஆலைத்தொழில் உற்பத்தி செய்த உபரியின் வாயிலாகவே இந்தியாவிற்குள் முதலாளித்துவம் வர ஆரம்பித்தது. முதலாளித்துவம் இந்தியாவிற்குள் இப்படி பரவ ஆரம்பித்தது ஒரு சீராக இல்லை. இருக்கவும் முடியாது. இதுபொதுவான விதிதான். வடகிழக்கு பருவக்காற்று என்பது மழை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழைபொழிவது அதற்கான பிரத்யேகக் காரணங்கள் உண்டு. மூன்று மாதம் ஈரப்பதம் உள்ள காற்றுவீசி மேகங்களைத் திரட்டினாலும் அது தமிழகப் பரப்பு முழுவதும் சமச்சீராக இருக்க முடியாது. முதலாளித்துவமும் அப்படி இருக்கமுடியாது. அது திட்டமிட்டு சமச்சீராக இருக்கவில்லை என்று முதலாளித்துவத்தை குற்றம் சாட்ட முடியாது. ஈரப்பதக் காற்று பரவுவதையும் மேகத்திரட்சி ஏற்படுவதையும் வெப்ப இயங்கியல் விதிகள் தீர்மானிப்பது போல் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை முதலாளித்துவ இயக்க விதிகள்தான் தீர்மானிக்கின்றன.
… தொடரும்
Recent Comments