அரசியல்

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 5

திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் அதன் ஒட்டுமொத்தப் போக்கிற்குள் செயல்பட்ட கிளைப் போக்காவே எம்ஜிஆர் விளங்கினார். திராவிட முன்னேற்றக் கழகமானது பண்பாட்டுதளத்தில் தமிழினப் பெருமையையும் சமூகதளத்தில் பிற்படுத்தப்பட்டோரின் நலனையும் பொருளியல்தளத்தில் பிரதேச முதலாளிகளின் நலனையும் அச்சாணிகளாக கொண்ட மூன்று சக்கரங்கள் மீது கட்டப்பட்டு இயங்கிவந்த  மூன்று சக்கர வாகனம். இதன் முன்வரிசைச் சக்கரம் பொருளியல் தளமே. இதுதான் வாகனம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிக்கும். பின்வரிசைச் சக்கரங்களான பண்பாட்டு தளமும் சமூக தளமும் வண்டியை இயக்கும் ஆற்றல் விசையைப் பெற்றிருப்பவை. இந்த ஆற்றவிசையே வண்டியை முன்னகர்த்தி செல்லும் பணியைச் செய்ய முடியும். எனினும் அது இயங்கிவந்த பண்பாட்டு தளத்திற்கும் சமூக தளத்திற்கும் முரண்பாடுகள் உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் வர்க்க சமூகமாக மாறிய தமிழ்ச் சமூகத்தில் பிராமணியமே அதன் திசைவழிப் போக்கைத் தீர்மானிக்கும் தத்துவமாக இதுவரை இருந்தது. இதற்குள் புகுந்து பிராமணியத்திற்கு எதிரான போக்கை அடையாளம் கண்டு அதனை பண்பாட்டுதளத்திற்குள் கொண்டு வந்தால்தான் பண்பாட்டுதளம் மற்றும் சமூகதளம் ஆகிய இருச்சக்கரங்க்ளுக்கு இடையிலான முரண்பாட்டை திமுகவால் மட்டுப்படுத்த முடியும். இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைப் பிரச்சனை. எனவே திராவிட இயக்கமானது பிராமணிய செல்வாக்கு இல்லாத வள்ளுவத்தையும்  தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும் ஐம்பெரும் காப்பியங்களையும் மீட்டெடுப்பு செய்தது. சங்க இலக்கியங்கள் பேசும் தலைவன்-தலைவி வரையறையை முன்னிலைப் படுத்தி பண்பாடு அரங்கத்தில் பணியாற்றியது. இதுவே தமிழக அரசியலில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் தனிநபர் துதிபாட்டின் துவக்கப் புள்ளியாகும். இந்தத் துவக்கப் புள்ளியாக எம்ஜிஆர் இருந்தார்.

 

திராவிட இயக்கத் திரைப்பட நடிகராக தோன்றிய எம்ஜிஆர் சங்க இலக்கியங்கள் பேசும் தலைவனாகவே சித்தரிக்கப்படுகிறார். நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு முந்தைய சமுதாயத்தின் பண்பாட்டில் வரையறுக்கப்பட்ட தலைவனுக்கும் நிலப்பிரத்துவ பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்ட தலைவனுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. பின்னதன் மேல் ஏற்றப்பட்ட முன்னதானது தனிநபர் துதிபாடாக பரிணமித்தது. திராவிட இயக்கத்திற்குள் தோன்றிய இக்கிளைப்போக்கானது வளர்ச்சிபெற்று முற்றிய நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்தது. அதே நேரத்தில் பிரதேச முதலாளித்துவ நலன் என்ற முன் சக்கரத்திற்குள் எற்பட்ட முரண்பாடு முந்தைய பாகத்தில் கூறியதைப் போல் முற்றிய நிலையும் நடைபெற்றது. இது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வாகனம் இரு வாகனங்களாக உருவெடுப்பதற்கான இன்றியமையாத சூழ்நிலையை உருவாக்கியது. ஆகவே எம்ஜிஆர் என்ற தற்செயலும் ஒரு இன்றியமையாத போக்கின் விளைவே. திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட வேண்டும் என்ற இன்றியமையாத சூழலும் மற்றொரு இன்றியமையாத சூழலில் விளைந்த எம்ஜிஆர் என்ற தற்செயலின் மூலமாக நிகழ்ந்தேறியது.

 

பிளவுபட்ட புதிய அரசியல் இயக்கமான அதிமுக அடிப்படையில் பிரதேச முதலாளிகளின் நலனை முன்னெடுத்துச் செல்வதில் புதிய பாதையில் பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. அது திமுக போல் முற்றிலுமாக தமிழினப் பெருமை பேசி பிரதேச முதலாளிகளை மற்ற முதலாளிகளிடமிருந்து தனித்துக் காட்டி அவர்களுக்குள் உள்ள பிணக்கை அடையாளப்படுத்த வேண்டிய நிலையில் இல்லை. அத்துடன் அது தோன்றிய மண்ணின் வாசனையை நிராகரித்துவிட்டு பயணிக்கவும் முடியாது. அது திமுகவிற்குள் உருவெடுத்த கிளைப்போக்காகிய தனிநபர் துதிபாடு என்ற போக்கின் தொடர்ச்சியாகவும் பயணிக்கவும் வேண்டும். இந்த வரையரையே அதிமுகவின் பயணப்பாதை. ஆகவே அது துவங்கிய பின் கடந்துவிட்ட மூன்றாவது ஆண்டில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றி பிரதேசதன்மை என்ற தன்னுடைய சட்டையை உரித்துப் போட்டது.

 

அகில இந்திய அளவில் முதலாளித்துவ சுணக்கம் ஏற்படுத்திய மக்கள் சுமையானது பல்வேறு மக்கள் போராட்டங்களை விசிறிவிட்டது. ஆளும் வர்க்கமானது இதை சமாளிக்க அரசியல் தளத்தில் யதேச்சாதிகாரப் போக்கை தெரிவு செய்தது. இந்நிலையானது மற்றொரு ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்டது. இதுவும் அளவுநிலை மாற்றமானது பண்புநிலை மாற்றத்தைக் கோரும் நிலை என்ற அளவிற்கு வளர்ச்சி பெறாத நிலையில் ஏற்பட்ட மாற்றமே. எனவே அது முதலாளித்தவ சட்டகத்துக்குள் நடைபெற்ற மாற்றமே. அகில இந்திய அளவில் ஆளும் கட்சியாக விளங்கிய இந்திரா காங்கிரஸிற்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டது. தமிழகத்திலும் இதுபோன்ற மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழகத்தில் பிரதேச முதலாளிகள் ஓரளவு இந்திய முதலாளிகளுக்குள் இடம் பிடித்துவிட்டதாலும், முதலாளித்துவ சுணக்கம் ஏற்படுத்திய மக்கள் சுமையின் விளைவாகவும் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது திமுகவிற்கு பதில்அஇஅதிமுக என்பதாக அமைந்தது வியப்பில்லை.

 

திமுகவின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சியும் அதன் உள் அம்சமாக இருந்துவந்த அமெரிக்காவில் இருப்பது போனறு மாநிலங்களுக்கு தனிக் கொடியும், ராணுவம், நிதியமைப்பு, தொலைதொடர்பு  தவிர்த்த மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்கே என்ற கோரிக்கையும் முன்வைத்து வலுவான ஆளுங் கட்சியாக திகழந்த இந்திரா காங்கிரஸை எதிர்த்து திமுகவாவால் வலுவாக போராட முடிந்தது என்றால், அரசியல் ரீதியாக வலுவாக இல்லாத மொரார்ஜி தேசாய் அரசை எதிர்த்து மக்கள் செல்வாக்கில் வலுவாக இருந்த எம்ஜிஆர் இது போன்ற எந்த குரலையும எழுப்பவில்லை மாறாக மத்திய அரசை அனுசரித்து செல்லும் பாதையையே அஇஅதிமுக பின்பற்றியது.  இது இந்திய முதலாளிகளுக்குள் ஓரளவு வளர்ந்துவிட்ட பிரதேச முதலாளிகளின் எண்ணப்போக்கு என்பதைத்தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது. இன்னொருபுறம் அதன் திராவிட இயக்க வேறை முற்றிலுமாக துண்டித்துக் கொள்ளாத நிலைபாட்டையும் அவ்வப்போது கடைபிடித்து, குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியை அவ்வப்போது விமர்சித்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் ஏற்பட்ட இருபத்தைந்தாண்டுகால வளர்ச்சிப் போக்கையும் அதன் மாற்றத்தையும் பிரதிபலித்தது.

 

திமுகவுக்குள் துளிர்த்த தனிநபர் துதிபாடு என்ற போக்கின் விளைவாக தோன்றிய அஇஅதிமுக இந்த விஷயத்தில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. எனவே தலைவன் ஒன்று என்றும் மற்றெல்லாரும் சுழியன்கள் என்றும் வெளிப்படையாக வரையறுத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றது. கொள்கை விஷயங்களையும் இவற்றைத் தீர்மானிக்கும் வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கையும் முற்றிலுமாக இது மூடிமறைத்தது. ஆளும் வர்க்கத்திற்கு இம்மாதிரியான நிலை மிகவும் வசதியாக இருந்தது. அதாவது அடிமட்டத்தில் உள்ள உற்பத்தியமைப்புமுறை கோரும் விஷயங்களை எந்தவித தங்குதடையுமில்லாமல் செயல்படுத்தும் மேல்மட்ட அரசியலமைப்பு திகழ்வதற்கு அஇஅதிமுக அரசியல் உறுதுணையாக இருந்தது. இதுவே உலகமயகாலகட்டத்தில் சிறப்பாக ஆளும் வர்க்கங்களுக்கு உதவியது.

 

இப்படிப்பட்ட பின்னணியின் தொடர்ச்சியே எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது இடத்தை பிடித்த செல்வி ஜெயலலிதா தலைமையேற்ற அஇஅதிமுக. திமுகவிலிருந்து பிரிந்து அஇஅதிமுக உருவானபின்பு அரசியல் தளத்தில் வெற்றிகரமாக அது இயங்க முடிந்தது என்ற யதார்த்தமானது திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள்ளும் மாற்றங்களை கொணர்வதற்கு வழிவகுத்தது. அதுவும் பிரதேசத்தை முன்னிறுத்தி வேகமாக இயங்கிய செயல்பாட்டை மட்டுப்படுத்திக் கொண்டு தனிநபர் துதிபாடு என்பதை மேலதிகமாக சுவீகரித்துக் கொண்டு போட்டி அஇஅதிமுகவாக தன்னைக் காட்டிக் கொண்டது. திமுகவின் இத்தகைய மாற்றம் உள்ளூர் முதலாளிகளுக்கும் மற்றும் இந்திய முதலாளிகளுக்கும் நலன் பயப்பதாகவே இருந்தது. நெருக்கடி முற்றி மக்கள் அதிருப்தி அதிகரிக்கும் நேரங்களில் எல்லாம் இந்த இரண்டையும் மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி தனது நலனை நீடிக்க இது ஏதுவாக இருந்தது. தலைவனுக்காக தீக்குளிப்பது, தலைவன் முன் மண்டியிட்டு தன்னுடைய விசுவாசத்தை காண்பித்துக் கொள்வது, தலைவனே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கையில் அவரருகில் இடம் பிடிப்பதற்கு அதிக விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொள்வது, இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளூர் மட்டங்களில் ஏற்பாடுகள் செய்வது என்ற தனிநபர் துதிபாட்டு பாதையில் இருகழகங்களும் பயணிக்க ஆரம்பித்தது.

 

அடிக்கட்டுமானமாக இருந்துவரும் முதலாளித்துவ உற்பத்தியமைப்புமுறையில் வேகமாக மாற்றங்கள் நடைபெற்று அது உலகமயமாக்கல் கட்டத்தை நெருங்குகையில் உள்ளூர் முதலாளிகள் கிட்டத்தட்ட அகில இந்திய முதலாளிகள் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டனர். எனவே பிராந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் என்பதன் தேவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. திமுக மற்றும் அஇஅதிமுக என்ற இருபெரும் அரசியல் இயக்கங்கள் உருவெடுத்து விருட்சமாக வேரூன்றி நிற்கும் பொழுது அதன் அடிமண்ணில் ஏற்பட்ட மாற்றமானது இந்த விருட்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். ஆகவே எண்பதுகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை திமுகவும் அஇஅதிமுகவும் சரியாகவே பிரதிபலித்து வந்தன.

 

உலகமயக்கட்டத்தில் இவை இரண்டும் இந்திய பெருமுதலாளித்துவத்தோடு ஐக்கியமாகிவிட்டன. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற கோட்பாட்டை கண்டுபிடித்தாக திமுக அறிவிப்பதற்கு முனபே அதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அஇஅதிமுக. இவை இரண்டின் செல்வாக்குதளம் என்பது கடந்த காலத்தில் இவர்கள் முன்னெடுத்துச் சென்ற கோஷங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட செல்வாக்கு தளத்தை நவீன காலத்திற்குள் பொருத்துவதில் பெற்ற வெற்றியே தவிற வேறு இல்லை. ஆங்கிலத்தில் Lumpen elements  என்பதை தமிழில் வெற்று ஆசாமி என்று கூறலாம். உதிரிப் பாட்டாளிகள் என்று மார்க்சியர்கள் வரையறுக்கிறார்கள். திமுகவின் அரசியல் எழுச்சியானது  உதிரப்பாட்டாளிகளில் உள்ள ஒரு பிரிவினர் கைக்கு ஓரளவு அரசியல் அதிகாரம் வந்தது. இவர்கள் இன்று குட்டி முதலாளிகளாகவும் கிராமப்புர நிலப்பிரத்துவ முதலாளிகளாகவும் இந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் இந்த 50 ஆண்டுகால மாற்றத்தையும் அதன் தோற்றத்தில் அது முன்வைத்த கோஷம் மாற்றமடைந்த இன்றைய நிலைக்கும் யதார்த்தமான பொருத்தம் இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளும் இன்றைக்கு இந்திய பெருமுதலாளித்துவத்தை ஆதரிக்கும் கட்சிகளாகவும் அத்துடன் உள்ளூர் குட்டிமுதலாளிகள் கிராமப்புர நிலப்பிரபுத்துவ முதலாளிகள் ஆகியோரின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக விளங்குகின்றன.

 

அஇஅதிமுகவை எடுத்துக் கொண்டால் அக்கட்சியானது அதன் தோற்றம் முதலே தனிநபர் துதிபாட்டு என்ற நடைமுறைத்தளத்தில் இயங்கி வந்தது. இதற்கு திரைப்படங்களின் வாயிலாக எம்ஜிஆர் மீது கட்டப்பட்ட பிம்பம் உதவியது. இருபதாண்டுகால அவரது நடிப்பு வாழ்க்கையானது அவர் நடிப்பின் மீதான ரசனை என்பது மெல்ல மெல்ல பக்தியாக மாறியது. 1967ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அவர் தொழில் பிரச்சனையால் சுடப்பட்ட பொழுது மக்களிடம் இருந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையானது அன்றைய திமுகவின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. திமுகவிற்கும் மக்களுக்கும் உள்ள உறவு என்பது ஒரு கட்டம் வரை கொள்கை கோட்பாடு அம்சங்களில் இருந்தால் அஇஅதிமுகவிற்கும் மக்களுக்குமான உறவு என்பது உணர்வு நிலை உறவாகவே இருந்து வந்தது. மக்கள் பிரிவினர் தான் நேசிக்கும் மனிதன் ஒருவனை தன்னில் ஒரு அங்கமாக பார்க்கும் உணர்வு நிலையை மெய்யான பொருள்முதல்வாதப் பார்வையில் விளக்குவது சிரமம்.

 

1845ம் ஆண்டு வசந்த காலத்தில் மார்க்ஸ் எழுதிய பாயர்பாக் மீதான ஆய்வுரையில் குறிப்பிடுகிறார், “சிந்தனைப் புறப்பொருள்களிலிருந்து (thought objects) உண்மையிலேயே வேறுபடுத்தப்பட்ட புலனுணர்வுள்ள புறப்பொருட்களை (sensuous objects) ஃபாயர்பாக் விரும்புகிறார். ஆனால் அவர் மனிதச் செயல்பாட்டை புறநிலைச் செயல்பாடாக (objective activity) கருத்தில் கொள்ளவில்லை. எனவே, கிறிஸ்துவ மதத்தின் சாரம் (Essence of Christianity) என்னும் நூலில், கோட்பாட்டு மனப்போக்கை (theoretical attitude) மட்டுமே மெய்யான மனித மனப்போக்காகக் (human attitude) கருதுகிறார். நடைமுறை (practice) என்பது அதன் அசிங்கமானயூதத் தோற்ற வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. எனவே,  “புரட்சிகரமானசெயல்பாடு, “நடைமுறைமுக்கியத்துவச் செயல்பாடு என்பனவற்றின் முக்கியத்துவத்தை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை.”  சிந்தனைப் புறப்பொருளும் (Thought Objects) புலனுணர்வுள்ள புறப்பொருளும் (Sensuous Objects) அடிப்படையில் வேறானவை என்ற கருத்து தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியில் நொறுங்கிப் போய்விட்டது. இதை நாம் கண்கூடாக பார்ப்பதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே இதன் அடிப்படையை உள்வாங்கியவர் மார்க்ஸ். பாயர்பாக் எதை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று மார்க்ஸ் குற்றம் சாட்டுகிறாறோ அதையே இன்றைய மார்க்சிஸ்ட்களில் ஒருபிரிவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா விஷயத்தில் செய்கின்றனர்.

 

இதுபோன்ற விஷயங்கள் அறிவுக்குப் புறம்பாக நமக்குப்பட்டாலும் நாம் வாழும் உலகின் யதார்த்த உலகம் என்பது இப்படிப்பட்ட அறிவுக்கு புறம்பான விஷயங்களை வெற்றியடையச் செய்து கொண்டே இருக்கின்றன. ஏன் அறிவுக்கு புறம்பான கடவுள் நம்பிக்கை இன்னும் வாழவில்லையா? இவற்றின் வெற்றிக்குப் பின்னால் அதன் உற்பத்தியமைப்புமுறையின் மறைமுக செயல்பாடு இருக்கிறது என்பதையும் உற்பத்தியமைப்புமுறைக்கும் அதன் சமூகதளத்திற்குமான உறவு என்பது மேலும மேலும் பூடகமான (Intangible) தளத்திற்குள் செல்வதால் இதை அருவப்படுத்துவது (Abstraction) மேலும்மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.  மக்களுக்கும் தனிநபருக்குமான உணர்வுபூர்வ உறவு என்பது எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தும் அறத்தின் வழியிலும் கட்டப்படலாம் அறத்தை மீறியமுறையிலும் கட்டப்படலாம். அறத்தை மீறியமுறையில் கட்டப்பட்டது நீண்டகாலம் நிற்காது. அப்பேத்கார் காந்தி போன்றவர்களுக்கும் மக்கள் திரளுக்கும் உள்ள உறவு உணர்வுபூர்வமான உறவுதான் அது இன்றைக்கும் நீடித்து நிற்கிறது காரணம் இது அறத்தை மீறி கட்டப்பட்டதல்ல. ஆனால் எம்ஜிஆர் ஜெயல்லிதா போன்றவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான உணர்வுபூர்வ உறவு அறத்தை மீறி கட்டப்பட்டது. இது நீண்டகாலம் நிற்காது. அறத்தை மீறி வலுக்கட்டாயமாக பிம்பம் கட்டப்பட்டாலும் அந்த நபர்கள் அறவழியில் செயல்பட மாட்டார்கள், அவர்களால் செயல்படவும முடியாது என்பதற்கு எம்ஜிஆரும் ஜெயல்லிதாவும் உதாரணம். அடுத்த பத்தாண்டுகளில் அல்லது அடுத்த தலைமுறையினரிடம் ஜெயலலிதா மெல்ல மெல்ல மறைந்தே போவார்.

 

முற்றும்

Related Posts