அரசியல்

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -3

I <<< முதல் பகுதி I >>>> இரண்டாம் பகுதி I

தமிழக நிலப்பரப்பில் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவமும் ஆரம்பகட்ட முதலாளித்துவமும் அருகருகே இருந்தது. இரண்டுக்கும் முரண்பட்ட பண்பாடுகளின் மோதலும் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தினர் தங்களின் வர்க்க எதிரியாக பிரிட்டிஷ் ஆட்சியை அடையாளம் கண்டபொழுது இதர வர்க்கங்கள் அப்படி அடையாளம் காணவேண்டிய அவசியம் இல்லை. சமத்துவம் பேசிய முதலாளித்துவத்தின் பின்னால் இதர வர்க்கங்கள் அணிதிரள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. இதுவே இங்கே நீதிக்கட்சியானது அரசியலில் மையத்திற்கு வருவதற்கு வழிகோலியது.

தொழில் வளர்ச்சியடைய அடைய தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது. இந்த வர்க்கமானது பண்ணையடிமைகளிலிருநது தோன்றிய வர்க்கமாகும் ஆகவே பண்ணையடிமைகளில் புதிய பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் முதலாளித்துவம் முன்னகர்த்திய சமத்துவத்திற்கான போராட்டம் வேரூன்ற ஆரம்பித்தது. தொழிலாளி வர்க்கத்தின் கணிசமானபேர் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான அரசியல் போராட்டமாக சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்து அதனுடன் இணைகையில் மக்கள் திரளில் கணிசமான பிரிவினர் சமத்துவத்திற்கான போராட்டத்தை மட்டும பிரதானப்படுத்திய நீதிக்கட்சி அரசியல் பின்னால் சென்றனர்.

 

நீதிக்கட்சி சமத்துவம் பேசினாலும் அது முதலாளித்துவ பண்பாட்டு அம்சங்களை முன்னெடுத்துச் செல்வதாகக் தென்பட்டாலும் அதன் தலைமை என்பது நிலப்பிரபுத்துவத் தலைமையாகும்.

நிலப்பிரபுத்துவப் பண்பாட்டிற்கு எதிரான விஷயத்திற்கு நிலப்பிரபுத்துவத் தலைமையா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. வரலாற்றில் இதுபோன்ற ஆச்சரியங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன. ஒரு சமுகத்தில் இருக்கும் வெவ்வேறு வர்க்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று முட்டிமோதிக் கொண்டு முரண்பாடுகளை தீர்க்க முயலும் போது அந்தந்த வர்க்கங்கள் அந்தந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டிலிருந்து விலகும் நிலைமையும் ஏற்படும். அப்படி விலகினாலும் அதுநிரந்தரமாக இருக்க முடியாது. அதுவே ஒரு முரண்பாடாக வளரும். இங்கிலாந்தில தொழிற்சாலைச் சட்டத்தை வலுக்கட்டாயமாக கொண்டுவந்தபின் சிறுமுதலாளிகளின் பட்டறைகளில் தொழிலாளிகள் கடுமையாக சுரண்டப்படுவதை எதிர்ப்பதாகவும் அங்கும் தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலனுக்காக “கண்ணீர் வடித்த“ பெருமுதலாளிகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆகவே நீதிக்கட்சியின் உள்முரண்பாடு இதுவே. இந்த முரண்பாடு முற்றியதன் விளைவே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றலுக்குள்ளாயிற்று இது வெறும் பெயர் மாற்றல் மட்டுமல்ல அதாவது உருவமாற்றமல்ல அதன் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது. ஆம் நீதிகட்சிக்குள்ளேயே நடந்த அமைதிப் புரட்சியின் வாயிலாக நிலப்பிரபுத்துவ தலைமை செல்வாக்கிழந்தது. சாதிய எதிர்ப்புப் போர் முழக்கம் சமத்துவத்திற்கான போராட்டம் என்று வீறு கொண்டு இயங்கிவந்த திராவிடர் கழகத்தின் தலைமையானது கண்டிப்பாக நிலப்பிரபுத்துவத் தலைமையாக இருக்க முடியாது.

 

அப்படியென்றால் அதன் தலைமை எந்த வர்க்கத்தின் கைக்குச் சென்றது என்ற கேள்வி எழுகிறது. அதற்குமுன், இந்த மாற்றம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழகப் பரப்பில முதலாளித்துவத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தை எட்டியிருந்தது என்று பார்க்க வேண்டும். இந்தக் கட்டத்தில் தமிழகப்பரப்பில் நடைபெற்றுவந்த சமூக உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்திமுறையின் பங்கு கணிசமாக கூடியிருக்கும் என்று மட்டும் கூறமுடியும். அதாவது தமிழகப் பரப்பு பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வந்ததாக கூறலாம். இன்னொருபுறம் முதலாளித்துவ உற்பத்திமுறை என்றதுமே பொதுவாக மூலதனத்தின் சுற்றோட்டம் அதிகரித்து அதுபெருத்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் மூலதனச் சுற்றோட்டம் என்று பொதுவாக பேசினாதும் அது தனிப்பட்ட மூலதனங்களின் சுற்றோட்டமே ஆகும். அந்த தனிப்பட்ட மூலதனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மத்தியில் மூலதனச் சுற்றோட்டம் வளர்ச்சி பெறும். அந்த முரண்பாடுகள் போட்டியின் வாயிலாக வெளிப்படும். அப்போட்டிகள் சமூக-அரசியல்தளத்திலும்  வெளிப்படும். ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சியில் பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் முக்கியமானது. அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பூகோளப்பகுதியில் இம்மாதிரியான ஏற்றத்தாழவுகள் ஆச்சரியமானதல்ல. ஆகவே முதலாளித்துவ முரண்பாடுகளில் பிரதேச முதலாளிகளுக்கிடையிலான முரண்பாடுகள் முக்கியமானவை. நீதிக்கட்சியின் தலைமையில் நிலப்பிரத்துவ செல்வாக்கு மங்கியவுடன் அந்த இடத்தை பிரதேச முதலாளிகளின் நலன் ஆக்கிரமித்தது.

 

நிலப்பிரத்துவ அமைப்பு உருவாக்கிய ஒரு ஆழமான பண்பாட்டுச் சூழலில் குறிப்பாக பிராமணியப் பண்பாட்டுச் சூழலை உடைப்பதை அடிநோக்கமாக கொண்டதே திராவிடர் கழகம். இதேபோன்று இந்தியாவின் பிற இடங்களில் ஏன் நடைபெறவில்லை?

மிகவும் பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியும் நிலப்பிரபுத்துவத்தின் கைஓங்கிய நிலையும் இருக்கும் இடங்களில் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. முதலாளித்துவ வளர்ச்சி ஓங்கியும் நிலப்பிரத்துவமானது முதலாளித்துவத்தின் கட்டுக்குள் வந்த இடங்களிலும் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு நாட்டின் வடமேற்கு பகுதியானது இப்படிப்பட்ட இடமாகும். அங்கே அசுரவேக மூலதனத் திரட்டல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நிலப்பிரபுத்துவப் பண்பாடும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அங்கே தொழில் முனைவுக்கு இடைஞ்சலில்லாத நிலப்பிரத்துவப் பண்பாடுகள் எல்லாம் சிரமமின்றி நீடித்தன. அதே நேரத்தில் தொழில் முனைவுக்கு எதிராக இருக்கும் நிலப்பிரத்துவப் பண்பாடுகள் மறையத் துவங்கின. மொத்தத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கான தேவை மட்டுப்பட்டது.

 

முதலாளித்துவ வளர்ச்சியில் ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் நிலப்பிரத்துவ ஆதிக்கமும் ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் இருக்கும் இடங்களில் வளர்ந்துவரும் பிரதேச சமூக மூலதனமானது ஒட்டுமொத்த இந்திய மூலதனத்தில் தனது வளர்ச்சியை துரிதப்படுத்தும் கோரிக்கை வைக்கவே செய்யும்.

அது மற்ற பகுதி மூலதனம் இங்கே வந்து செயல்படுவதை எதிர்த்து கோஷமிட்டு அதன் மூலம் பேரம் பேசி சமரசம் செய்து கொள்ளும். அப்படிப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படும் கோஷமே பிராந்திய நலன். இப்படிச் சொல்வதால் இந்திய நாட்டிற்குள் இருக்கும் தேசிய இனங்களின் அபிலாஷைகளைப் பற்றியோ, இதர பிற அம்சங்களை புறக்கணிப்பதாகவோ எடுத்துக் கொள்ள கூடாது. இவைகள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக பிரதேச முதலாளிகளின் நலன் என்பதற்குள் உள் வாங்கப்படும் நடைமுறை உத்தியை கண்டுபிடித்து கையாளும்பொழுதுதான் அது வெற்றிபெறும். இந்த விஷயத்தைச் மிகச்சரியாக செய்தது பிரதேச மூலதனம். ஆம் தேசிய இன அபிலாஷையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தேசிய இன அடையாளத்துடன் உருவெடுத்த தொழிலாளி வர்க்கத்தை தன்பின்னால் இருத்திக் கொள்ள முடிந்தது. முற்போக்கு கோஷங்களை முன்வைத்தன் மூலம் தொழிலாளி வர்க்கமாக மாறவேண்டிய மக்கள் திரளை தன் பின்னால் இருத்திக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பெற்ற பலத்தை வைத்து இந்தியப்பகுதியின் இதர மூலதனத்துடன் பேரம் பேச முடிந்தது. இதன் அரசியல் வெளிப்பாடாகவே திராவிடர் கழகம் தனது சமூக சீர்திருத்த ஒப்பனையிலிருந்து பிரதேச நலன் பேசும் ஒப்பனையைச் செய்து கொண்ட அரசியல் இயக்கமுமாகவும் பிரிந்து நின்றது. இந்த இரண்டில் பின்னது வேகமாக முன்னேற முன்னது சுருங்கிய தளத்துடன் நடைபோட்டு வந்தது.

 

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் முதலாளித்துவத்தின் ஏற்றகாலம் (Boom Period) என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது சுணங்காமல் முதலாளித்துவம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் என்று வரையறுக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கும் பொருந்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்.

ஏற்றமிகு காலங்களில் முதலாளித்துவ உள்முரண்பாடுகள் மட்டுப்பட ஆரம்பிக்கும். இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் மூலதனத் திரட்டல் என்பது வலுவான அரசு தலையீட்டின் பேரில் நடைபெற்றுவந்த காலமுமாகும் இது. ஆகவே பிரதேச முதலாளிகள் தங்கள் பங்கை வலுவாக கோரிவந்த காலமும் இது. சுதந்திரம் அடைந்து பெருமுதலாளிகள் கைகளில் இந்திய அரசு அமைப்பு வீழ்ந்த பிறகு பிரதேச முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஒருஅமைப்பு வெறும் சமுக அமைப்பாக மட்டும் இருக்க முடியாது. அது அரசியல் அதிகாரத்தில் பங்கைகோரும் நிலையை உண்டாக்கும். இதுவே திராவிடர் கழகமானது திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணமித்ததின் இன்றியமையாத நிலை. அது பெரியாரின் திருமணம் என்ற தற்செயல் வாயிலாக வெளிப்பட்டிருக்கலாம். ஆக, பிரதேச முதலாளித்துவத்தின் செய்கையால அரசியல் தளத்தில் வெளிப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோற்றமானது ஏற்றகாலத்திற்குள் அடியெடுத்து வைத்த இந்திய முதலாளித்துவத்தின் வயிற்றில் கட்டிய பிள்ளைப் பூச்சியாய் அமைந்தது.

 

… தொடரும்

Related Posts